சிறப்புக்கட்டுரைகள்

மண்ணின் சாமிகள்!

மணா

ஊனாகி உயிராகி'' என்று துவங்கும் பிரயோகங்கள் தமிழகத்தில் ‘சிறு தெய்வங்கள்' என்கிற அடைமொழிக்குள்  அடங்கியபடிப் பரவிக்கிடக்கும் மண்ணின் சாமிகளுக்கு மிகவும் பொருந்தும்.

அந்த அளவுக்குத் தமிழக மக்களோடு பிணைந்து கிடக்கும் சாமிகளுக்கு அவர்கள் தங்கள் மனதில் கொடுத்திருக்கும் இடம் நெருக்கமான ஒன்று. அதற்காகத் தங்களை வருத்திக் கொண்டு விரதம் இருக்கிறார்கள். அலகு குத்திக் கொள்கிறார்கள். தீ மிதிக்கிறார்கள். அக்னிச்சட்டி ஏந்துகிறார்கள். தலையில் தேங்காய் உடைபட வலி தாங்குகிறார்கள். உயிரோடு இருக்கும்போதே பாடையில் படுத்து ஊரை வலம் வருகிறார்கள். ஆடு,கோழி,பன்றிகளைப் பலி கொடுக்கிறார்கள். விதவிதமான நேர்த்திக்கடன்களைச் செலுத்துகிறார்கள்.

திருவிழாக்களின் மூலம் மூத்தோரின் அடையாளங்களை மீட்டெடுத்து வணங்குகிறார்கள். தோல்வியுற்றதாகக் கருதும் பொழுதுகளில் நேசித்த சாமிகளைக்

கொச்சையாகச் சபிக்கிறார்கள். ஊர் கடந்தோ, வாழ்ந்த நிலம் கடந்தோ

செல்லும்போது, கோவில் முன்னிருக்கிற மண்ணை தங்களுடன் எடுத்துச் செல்கிறார்கள். வெளிநாடுகளுக்குப் போனாலும், அந்தச் சாமிகளின் நினைவு அவர்களுடன் வேரடி மண்ணைப் போல ஒட்டிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் இம்மாதிரிப் பல்வேறு மாவட்டங்களில் பரவிக்கிடக்கும் சாமிகளைப் பற்றிய தொலைக்காட்சி தொடருக்காக சுமார் ஆயிரம் கோவில்களைப் பதிவு செய்ய வாய்ப்புக் கிடைத்தபோது கிடைத்த சில அனுபவங்கள் விசித்திரமானவை.

ஆவேசமும், தீராத பிடிப்பும் கொண்ட சாமிகளுக்குப் பின்னால் பல உக்கிரமான நிகழ்வுகள். இன்னொரு விதத்தில் சொன்னால்& சாதி, மதம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்திருந்த சமூகத்தில்- வீரத்துடன் எதிர்க்கேள்வி கேட்டவர்கள், வேறொரு சாதிப்பெண்ணைக் காதலித்தவர்கள்

எல்லாம் மிக மோசமான தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு உயிர்களை இழந்திருக்கிறார்கள். சில குழந்தைகள் குரூரத்துடன் பலி வாங்கப்பட்டிருக்கின்றன. இப்படி உயிர்கள் அநியாயமாகப் பறிக்கப்பட்டிருக்கின்றன.

அப்படிப் பட்ட உயிரிழப்புக்குப் பிறகு ஒரு சமூகம் கொள்ளும் குற்ற உணர்வும் இந்த சாமிகளின் வழிபாட்டுக்குப் பின்னணியில் இருக்கிறது. ஆதிக்கச் சாதியின் வன்மம் இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி கிராமம். குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த பெண் இன்னொரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞனை விரும்பிய காரணத்தால், அந்தப் பெண்ணுடன் பிறந்தவர்கள் கல்லால் அடித்தே, அந்த இளம்பெண்ணைச் சாகடிக்கிறார்கள். உயிர் போன பிறகு அதே பெண்ணைத் தெய்வமாக இப்போதும் வழிபடுகிறார்கள்.

அந்தக் கோவிலில் ஆண்டுக்கொரு முறை நடக்கும் கொடை விழாவின்போது, ஆடுகளைப்பலியிடாமல், கல்லால் அடித்தே கொல்லும் பழக்கம் இன்றைக்கும் இருக்கிறது.

பூச்சியம்மன் கோவில். ஐப்பசி மாதத்தில் இங்கு நடக்கும் கொடையின் போது ஆடுகளின் நெஞ்சுப் பகுதியைக் கத்தியால் கீறிக் கொல்கிறார்கள். அதற்கும் கொடூரமான காரணம் இருக்கிறது. பூச்சி என்ற பெண் தன்னுடைய பிறசாதிக் காதலனுடன் ஓடிக் காட்டுப்பகுதியில் அவனுடன் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். அதைக் கண்டுபிடித்த அந்தப் பெண்ணின் சகோதரர்கள் அவர்களைப் பிடித்ததும், முதலில் அந்த இளைஞனின் நெஞ்சைக் கத்தியால் கீறிக் கொன்றிருக்கிறார்கள். பிறகு சொந்தத் தங்கையையும் அதே விதமாகக் கொன்றிருக்கிறார்கள். அந்தப் பெண்ணைத் தான் தற்போதும் கோவில் எடுத்தும், விழா நடத்தியும் கொண்டாடுகிறார்கள்.

திருவாரூருக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணும், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த இளைஞனும் காதலித்திருக்கிறார்கள். இருவர் குடும்பத்திலும் பிரச்சினை. ஊரைவிட்டுவந்த பிறகும் அவர்களைத் தேடிப்பிடித்து, ஈட்டியால் குத்திக் கொன்றிருக்கிறார்கள். அவர்கள் குத்திக் கொன்ற மரத்தடியில் இப்போதும் பூசை நடக்கிறது. அருகில் அவர்களுக்கான கோவில். அதில் திருவிழா. அதற்கு இரு மதம் சார்ந்தவர்களும் பக்தர்களாக வருகிறார்கள். வணங்குகிறார்கள். கால மாற்றத்திற்குப் பிறகே புரிதல் உருவாகியிருக்கிறது.

நிறைய இடங்களில் பெண்கள் தீயில் தங்களை மாய்த்துக் கொள்வது நடந்திருக்கிறது. அப்படித் தீப்பாஞ்ச அம்மன்கள் பல இடங்களில் இருக்கின்றன. குமரி மாவட்டத்தில் உள்ள பஞ்சலிங்கபுரம். இங்கு ஒரு வீட்டில் இளம் பெண் தீயில் கருகி உயிரை விடுகிறார். இறந்த பெண்ணின் கூந்தல் மட்டும் மீதமாகி இருக்க, அதை வைத்துக் கோவில் எழுப்பியிருக்கிறார்கள்.

கேரள எல்லையில் இன்னொரு கோவில். இளம்  சிறுமியின் கூந்தலும், சிறுமியின் தாயாரின் கூந்தலும் விரிந்திருக்கிறபடி அம்மன் சிலை. கேரள பாணியில் இருக்கும் இந்தக் கோவிலுக்குப் பின்னே ஒரு சம்பவம்.

உயர்சாதிக்குடும்பம். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு மலைச்சரிவில் பசுமையான இடத்தில் வீடு. வெளியூர் போய்விட்டு ஊர் திரும்பியிருக்கிறது அந்தக் குடும்பம். அப்போது தீப்பெட்டி இல்லாத காலம். அடுப்பைப் பற்ற வைக்க அடுத்த வீட்டிலிருந்து தான் நெருப்பை வாங்கிவர வேண்டும். எதிரே இருந்த இன்னொரு சாதியினர் வசித்த வீட்டுக்குத் தங்கள் வீட்டுச் சிறுமியை அனுப்பியிருக்கிறார்கள். அந்தச்

சிறுமி போய் நெருப்புக்கங்கை அதற்கான கிண்ணத் தில் வாங்கிவரும்போது, சூடு தாங்க முடியவில்லை சிறுமிக்கு. வலி தாங்கமுடியாமல் கை விரலை வாயில் வைத்து ஈரப்படுத்தியிருக்கிறார். இதைப் பார்த்துவிட்டார்கள் வீட்டில் இருப்பவர்கள்.

‘‘ அவர்கள் வீட்டில் என்ன வாங்கிச் சாப்பிட்டுவிட்டு வாயில்விரலை வைத்தபடி வருகிறாய்?''& கேட்டு வதைத்திருக்கிறார்கள். அந்தச் சிறுமி உண்மையைச் சொல்லிக் கதறியிருக்கிறார். விடவில்லை அந்தக் குடும்பத்தினர். வதை தாங்கமுடியாமல் அருகில் இருந்த விரிந்த குளத்தில் போய்க் குதித்திருக்கிறார். பின்னாலேயே வந்த

சிறுமியின் அம்மாவும் அதே குளத்தில் விழுந்திருக்கிறார். சற்று நேரம் கழித்து இரண்டு உயிர்களின் விரிந்த கூந்தல் மட்டுமே குளத்தின் மேற்பரப்பில் மிதந்திருக்கிறது.

உயிர்கள் நழுவிய அந்தக் குளத்தங்கரையில் அவர்களுக்குக் கோவில் எழுப்பப்பட்டு, எந்தக் குறிப்பிட்ட பிரிவினர் மீது அன்று சந்தேகப்பட்டு, தங்கள் குழந்தையை வதைத்தார்களோ, அதே சமூகத்தினர் தான் அந்தக் கோவிலில் பூஜை செய்கிறார்கள். திருவிழா நடக்கையில் அவர்களுக்குத் தனி மரியாதை செலுத்துகிறார்கள். இப்போதும் குளத்தில் விரிந்த அந்தக் குடும்பத்துப் பெண்கள் சிலை வடிவில் கூந்தலை விரித்தபடி இருக்கிறார்கள்.

இதே மாவட்டத்தில் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அங்கு புலம் பெயர்ந்து வந்த  வணிக சமூகத்தைச் சேர்ந்த இரு சகோதரிகளை விரும்பித் திருமணம் செய்ய முனைந்திருக்கிறார். ஆனால் பெண்ணின் குடும்பத்தினருக்க அதில் விருப்பமில்லை. இரண்டு பெண்களையும் அவர்களே உயிரிழக்க வைத்திருக்கிறார்கள். அழகாக இருந்த இளம் பெண்கள் அதன் காரணமாகவே, சாதீய நோக்கில் பலியாகி இருக்கிறார்கள். இன்று அந்தப் பெண்கள் மறைந்த இடத்தில் கோவில் இருக்கிறது. அவர்களைப் போற்றித் திருவிழாவும் நடக்கிறது.

இங்கே சுட்டிக்காட்டியிருப்பது சில உதாரணங்கள் மட்டுமே.

 சாதிய ஆதிக்கத்தின் தீவிரத்தை சில உயிரிழப்புகளுக்குப் பிறகே காலத்தின் இன்னொரு அடுக்கில் உணர்கிறார்கள் அதே குடும்பத்தினர் அல்லது அதே சமூகத்தினர். மதமோ, சாதியோ அன்றைக்கிருந்த அழுத்தத்தை இன்றும் உணர்த்திக் கொண்டிருக்கின்றன நம் கிராமத்து வெளியில் செப்புச்சிலையாக, மண் சிலையாக, கருங்கல்லாக, மரமாக, நடுகல்லாக, மரப்பெட்டியாக வெவ்வேறு வடிவங்களில் வணங்கப் பட்டுக் கொண்டிருக்கும் சாமிகள்.

ஏப்ரல், 2020.