சிறப்புக்கட்டுரைகள்

மண்டேலாவின் சொற்கள்!

அந்திமழை இளங்கோவன்

அகமதாபாத்திலிருந்து பீகாருக்கு சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ரயிலில் அர்பீனா (Arbeena)  என்ற பெண், பச்சிளம் குழந்தையான தனது மகன், தங்கை மற்றும் தங்கையின் கணவனுடன் பயணித்தார். தொடர்ச்சியாக உணவு கிடைக்காததால் ஏற்பட்ட சோர்வு, எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மையின்  கவலை என்ற பல காரணங்களால் பயணத்தின் போது உயிரை விட்ட அர்பீனாவின் உடலை முசாபர்பூர் (Muzaffarpur) ரயில் நிலையத்தில் கிடத்தி பழைய போர்வையால் போர்த்தி இருந்தனர்.

 தாய் இறந்து போனதை அறியாமல் இரண்டு வயது மகன் போர்வையை விலக்கி தாயை எழுப்ப முயற்சிக்கும் காட்சி பார்ப்பவர்களின் மனதை நொறுக்கிவிட்டது!

 இந்த மரணத்திற்கும் பொருளாதாரத்திற்கும் தொடர்பு இருக்கிறதா ?

ஆம்.

Keynesianism என்றொரு  பொருளாதார தத்துவம் உண்டு.  ஜான் மேனார்ட் கெயின்ஸ் என்ற பிரிட்டன் பொருளாதார  அறிஞரின்  தத்துவத்தின்படி ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் அரசின் தலையீடு

இருந்துகொண்டே இருக்கவேண்டும். அவர் முன்வைப்பது Counter cyclical fiscal policy.  அதன்படி ஒரு நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலைக்குப் போகும் போது அரசாங்கம் பணத்தை தாராளமாக புழக்கத்தில் விட வேண்டும்.  நாட்டின் பொருளாதாரம் சீராக செல்லும் போது அரசு பணத்தை சிக்கனமாக செலவு செய்ய வேண்டும்.

பொருளாதார முடிவுகளை(Economic decision) தயாரிப்பாளர்களும், நுகர்வோர்களும் முடிவு செய்யக்கூடாது.  மாறாக நாட்டில் உள்ள அனைவரும் பயன்பெறும் விதமாக அரசு முடிவு செய்ய வேண்டும் என்பது கார்ல் மார்க்ஸ் முன்வைக்கும் தத்துவம்.

சந்தைப் பொருளாதாரம் லாப நோக்கில் உற்பத்தி, தேவை அடிப்படையில் இருந்தால் சமூகம் பயன்பெறும். அரசாங்கத்தின் தலையீடு

இருக்கக் கூடாது அல்லது குறைந்த அளவில் இருக்க வேண்டும் என்பது ஆடம் ஸ்மித் முன்வைக்கும் பொருளாதார வடிவம்.

தற்போதைய உலக நாடுகளில்  பலவும் மேற்கூறிய மூன்று வடிவங்களுக்குள்தான் தமது பொருளாதார கொள்கையை கட்டமைக்கின்றன. பெரும்பாலான அரசுகள் பேச்சில் ஒரு வடிவத்தையும், செயல் வடிவில் மற்றொரு தத்துவத்தையும் பின் தொடரும் காட்சியையும் காண்கிறோம்.

இந்தியாவின் பொருளாதாரம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கான விடை எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஏப்ரல் 2020 ல் ஏற்றுமதி 60 சதவீதம் குறைந்து முப்பது ஆண்டுகளில் மிக மோசமான மாதம் என்ற நிலையில் உள்ளது. மருந்து விற்பனை 12 சதவீதம் குறைந்துள்ளது என்று துறை வாரியாக அடுக்கிக் கொண்டு போகலாம் .

இந்த வருடம்(20-21) நாட்டின் ஜிடிபி நிலை எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு  '' இந்த ஆண்டு ஒற்றை இலக்க எதிர்மறை  வீழ்ச்சி இருக்கும்.  அதாவது மைனஸ் ஒன்பது அல்லது மைனஸ் இரட்டை இலக்கத்தில் கூட வீழ்ச்சி இருக்கலாம்'' என்று  பாரத ஸ்டேட் வங்கி  குழும பொருளாதார ஆலோசகரான டாக்டர்.சௌமியா காண்டி கோஷ்  கூறியுள்ளார். இந்தியாவைப் பொருத்தமட்டில் பொருளாதார வீழ்ச்சியில் 1979-80க்கு பின் இது ஒரு மோசமான ஆண்டாக இருக்கலாம்.

கொரானா பற்றி தேவைக்கு அதிகமாக பீதியை கிளப்பியதன் விளைவு வரும்  மாதங்களில் கோரதாண்டவம் ஆடலாம். புலம்பெயர் தொழிலாளர்கள் தேவையை உணர்ந்த சில முதலாளிகள் அவர்களை பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைத்துள் ளனர்.  அதில் ஒருவர் ,‘‘புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இல்லாவிட்டால் இந்திய நகரங்கள் சுமூகமாக இயங்க முடியாது, ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் இருந்து மட்டும் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர்.  இவர்கள் ஒவ்வொரு மாதமும் தமது

சொந்த மாநிலத்திற்கு சராசரியாக 7000 ரூபாய் அனுப்பி வந்தனர். சுமார் 10,500 கோடியை பெற்ற மாநிலத்தில் பலரது வாழ்வு சுமூகமாக ஓடிக் கொண்டிருந்தது.  இப்போது வருவாயும் இல்லை அவர்களுக்கு சொந்த கிராமத்தில் வேலையும் இல்லை,'' என்கிறார்.

சாமானிய மக்கள் படும் துயரத்தைக் கண்டு பதறும் போது அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதி தாமஸ் ஜெபர்சனின் ‘Money, not morality, is the principle commerce of civilized nations'' என்ற வார்த்தைகள் ஞாபகத்திற்கு வருகிறது. அதாவது நாகரீகம் அடைந்த தேசங்கள் பணத்தைப் பற்றித்தான் கவலைப்படும். நீதியைப் பற்றி அல்ல!

இந்தியாவில் பணம் யாரிடமும் இல்லை என்றால் நம்ப வேண்டாம்.  ஒரு வேளை சரிபாதியான ஜனத்தொகையிடம் இல்லை என்று வைத்துக் கொள்ளலாம். இந்த புள்ளி விவரத்தைக் கவனியுங்கள்: 27 மார்ச் 2020க்கும், 8 மே 2020 &க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்திய வங்கிகளில் 2,80,000 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது (அதில் 1,24,000  கோடி ரூபாய் நிரந்தர வைப்புத் தொகையாக). இதே காலகட்டத்தில் வங்கிகள் கடன் கொடுக்காததால் அவற்றில் பணம் மிகுதியாகியுள்ளது.

மற்றொருபுறம் 5000 ரூபாய் இல்லாமல் தற்கொலை செய்தவர்களும் உள்ளனர்.  ‘‘மேல் தட்டு மக்களை விட அடிமட்ட மக்களை ஒரு நாடு எப்படி நடத்துகிறது என்பதை வைத்துத்தான் அந்த நாட்டை எடைபோடவேண்டும்'' என்ற நெல்சன் மண்டேலாவின் வார்த்தைகளை மந்திரமாக பின்பற்ற வேண்டிய காலம் இது.

இந்தியாவின் பொருளாதாரத்தை விரைவாக எப்படி மேம்படுத்தலாம் என்று நமக்குப் பரிச்சயமான பொருளாதார மேதை ஒருவரிடம் கேட்டபோது ‘‘ஜூன் -1 முதல் அத்தனை தடைகளையும் தளர்த்தி, வியாபாரத் தளங்களை திறந்துமக்கள் வெளியே வந்து கொள்முதல் செய்யும் சூழல் உருவாகவேண்டும்.  அப்போது உற்பத்திக்கான  தேவை வரும். தொழிலாளர்களை நிறுவனங்கள் தேடும். பணமுள்ள மக்களிடமிருந்து ஒரு பகுதி காசு, பணமில்லாத மக்களிடம் கைமாறும்.  நாடும் சகஜ நிலையின் முதல் படியை தொடும்'' என்றார்.

கொரோனாவை விட பசி கொடியது என்ற உண்மையை இந்த ஊரடங்கு நமக்கு உணர்த்தியிருக்கிறது.

ஜூன், 2020.