நா கர்கோயிலில் இருந்து 1972-&ல் புறப்பட்டு, சென்னை - மும்பை - கோவை வழியாக முதல் முறை காரைக்குடியில் கால் வைக்க பதினேழு ஆண்டுகள் ஆகிவிட்டன. அன்று என் பணி, நூற்பாலைகளுக்கு இயந்திரங்கள், உதிரிபாகங்கள் விற்பது. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரக்கடவுள் இருக்கும் இடம் என்பார்கள், இந்தியாவில் நூற்பாலைகள் இருக்கும் இடம் எல்லாம் காலடிகள் படிந்த இடம். சும்மா வருவதில்லை சுய அனுபவம் என்பது!
என்றுமே ஈரம் உலராத, உழுபடைக் கொழுமுனை தொடுமுனம் கூசும் நாஞ்சில் நாட்டில் மட்டுமே இணையடிகள் படியில் தோய்ந்தன என்று இல்லை, நீரற்று வறண்டு, அனல் பறந்து, ஹோ ஹோ எனக் காற்று மாயாமாளவ கௌளை இராகத்தில் ஆரோகணமாக எழுந்து வீசும் இடம் எல்லாம் நம் கால்கள் படியில் பட்டன . படி எனில் நிலம். கம்பன் ஆண்டான், 'அரவிந்த மலரின் நீங்கி அடியிணை படியில் தோய' என்று.தாமரை மலரில் இருந்து இறங்கி, இணையடி நிலத்தில் பதிய என்பது பொருள்.
காளையார் கோயில், சிவகங்கை, அரண்மனை
சிறுவயல், கல்லல், திருவாடானை, பள்ளத்தூர், கானாடுகாத்தான், திருமயம், கோட்டையூர், ஆறாவயல், திருப்பத்தூர் என்று கண்டமேனிக்கு அலைந்திருக்கிறேன். விற்பனைப் பிரதிநிதியின் பயண அலைச்சல் என்பது காலை ஆறுமணிக் காட்சிக்கு இரண்டாயிரம் கொடுத்து முன்பதிவு செய்து சூப்பர் ஸ்டார், இண்டர்நேஷனல் ஸ்டார், யுனிவர்சல் ஸ்டார் சினிமா பார்ப்பதல்ல. வெயில், தாகம், புழுதி, கரடு முரடான சாலை என நடக்க வேண்டும்,
பசித்த வேளைக்குத் தின்னக்கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை, பல சமயம் பன்னும்,
சாயாவும் தான் பகலுணவு. சில சமயம் நூற்பாலை மேலாளர் பண்டகக் காப்பாளர் தயவில் தால்& ரொட்டி, தால் & சாவல், அல்லது பொட்டலச்சோறு வகை ஏதும் கிடைக்கும்.
காலையில் குடித்தும் குடிக்காமலும் துவங்கும் ஓட்டம், மதியம் கும்பி காயாமல் ஏதோ கிடைத் ததை உண்டு, இரவு நல்ல வாட்டமான உணவு விடுதியாக மனம் தேடும். மதுரைக்கு வழி வாயிலே என்பார்கள் பண்டு நாஞ்சில் நாட்டில். அன்று மதுரை அவர்களுக்குப் பெரிய பட்டணம். எந்தச்
சிறு நகரமானாலும் , சிறியதாகவேனும் நல்லதோர் சாப்பாட்டுக் கடை இருக்கும். சில சமயம் வீட்டு முகப்பின் திறந்த வெளியாகக் கூட. சுத்தமும்
சுவையும் பரிவும் விலையும் கணக்கில் கொள்ளப்படும் .
ஒருமுறை கோவையில் இருந்து ஈரோடு புத்தகக் கண்காட்சிக்கு நண்பர் கனகராஜ் காரில் போனோம். இரவு திரும்புகையில் ஒரு
மெஸ்சில் சாப்பிடப்போனோம். நண்பர்கள் கனகு, லிங்கம், பாதசாரி, தோழர் விஸ்வநாதன் என ஐந்து பேர். பணியாரம் ஒரு தட்டு கொண்டுவரப் பணித்தோம். குழிப்பணியாரம் ஆறு இருந்தன. தலைக்கு ஒன்று எடுத்தபின் தட்டில் ஒன்று மிச்சமிருந்தது, நமக்குதான் ஆங்கிலேயர் கற்றுத் தந்த Table Manners தெரியுமே! எல்லோரும் கை கழுவ எழத் தயாரானோம். அப்போது இலை எடுக்க, எச்சித் தட்டுகள், கிண்ணங்கள், டம்ளர்கள் பொறுக்க ஓர் அம்மா வந்தார். எங்கள் உணவு மேசையைப் பார்த்துச் சொன்னார், ''ஏஞ்சாமி! இந்த ஒரு பணியாரத்துக்கு யாரு வயத்திலேயும் இடமில்லையா?'' என்று . எங்கள் ஐவருக்கும்
செவளை, செவளை என்று அறைந்தது போலிருந்தது, அந்த ஆறாவது பணியாரத்தை எவர் எடுத்திருப்பார் என நீங்கள் யூகிக்கலாம், உங்கள் யூகம் சரிதான்!
பல சமயம் நாம் பிழைப்புக்காகப் புனையும் வேடம் பலரையும் ஏமாற்றிவிடும். ஏதோ நகர்மன்ற உறுப்பினரின் தம்பி என்றும் எண்ணவைக்கும். நல்ல உணவு விடுதி எங்கே என்று கேட்டால், நகரில் இருப்பதிலேயே ஆடம்பரமான இடத்தைக் கைகாட்டி விடுவார்கள், எனவே ஒன்றுக்கு நான்கு பேரிடம் கேட்க வேண்டும். கை ரிக்ஷாக்காரர், பான் கடைக்காரர், பேருந்துக்கு நிற்பவர், சௌகிதார், சாலையோரம் கூறு வைத்து மேத்தி, முளைக்கீரை விற்பவர் என விசாரித்துப் போனால், பத்துக்கு ஒன்பது பழுதுபடாது.
ஆனால் ஒன்று, வேற்று மாநிலங்களில், வேற்று உணவுப் பண்பாட்டுச் சூழலில்,
சரவணபவன்களைத் தேடலாகாது. சைவமோ, அசைவமோ, எதையும் உண்ண முனையும் போது திறந்த மனது வேண்டும். காக்கா பிரியாணியும், நாய் போன்லெஸ் பெப்பர் வறுவலும் இன்னதென அறியாமலேயே தின்னத்தானே செய்கிறார்கள்! நாகர்கோயில் ஆரியபவன் மணித் கொழுக்கட் டையை பாராபங்கியில், இச்சல்கரஞ்சியில் போய்த் தேடக் கூடாது.
முதன் முறை காரைக்குடி போனபோது, பழைய பேருந்து நிலையம் சமீபம் அறை எடுத்திருந்தேன், தனியறை, குளிமுறியும் கழிமுறியும் பொது. பதினெட்டு பணம் தின வாடகை, விற்பனைப் பிரதிநிதி என்ற தரத்திலும், எழுத்தாளன் என்ற நிரக்கிலும், நமக்கது போதும். 'அப்பம் தின்னவோ, அலால் குழி எண்ணவோ?'
முதல் பயணம் , காலம் - இடம்- தோது பிடிபடாத சூழல். எல்லாமுமாக மதிய உணவு கொள்ள வாய்க்கவில்லை. மதிய உணவு நேரம் தாண்டிவிட்டது. இரவு உணவுக்கு நேரமும் இருந்தது. அறைக்குத் திரும்பிய போது மாலை நான்குமணி இருக்கும். கை கால் முகம் கழுவி விட்டு, பட்டமங்கலம் போகலாம் என்று திட்டமிருந்தது, நமக்கு குரு சற்று கோணலாகப் பார்த்தது. பசியும் இருந்தது என்பதால், எங்காவது பஜ்ஜியோ , போண்டாவோ, தின்று
சாய் பருகலாம் என்று எண்ணினேன். கண்ணில் பட்ட கடைகளில் போலீஸ் சௌக்கி பக்கத்தில் இருந்த, நம்பகத்தன்மை தந்த சிற்றுண்டி விடுதி ஒன்றினுள் நுழைந்தேன். நம்பத் தகுந்தது என்று எப்படி அறிவாய் என்று கேட்பீர்கள்.. அதெற்கென சில அடையாளங்கள் உண்டு, அனுபவப் பாடம், அபூர்வமாக ஏமாந்து போவதுமுண்டு.
''சூடா கந்தரப்பம் இருக்கு, தரவா?''என்றார். பெயர் புதியதாகத் தெரிந்தது. கந்தன் தெரியும், கந்து தெரியும், கந்தரப்பம் கேட்டதில்லை. அஃதோர் இனிப்பு அப்பம், சுவையாக இருந்தது. ''வெள்ளையப்பம் தரவா?'' என்றார். காரச்
சட்டினியுடன் அபாரமாக இருந்தது. ''பால் பணியாரம் தரவா?'' என்றார். ''சுய்யன் தரவா?'' என்றார் . தோலுடன் சிறுபயறு வேகவைத்து, சர்க்கரைப் பாகில் விரவி, ஏலக்காய் பொடித்துப் போட்டு, பல் பல்லாய் நெற்றுத் தேங்காய்க் கீறல் வறுத்துப்போட்டுப் பிசைந்து மைதா மாவுக் கரைசலில் முக்கி எடுத்துத் தேங்காய் எண்ணெயில் பொரித்து எடுப்பதை மலையாளத்தில் சிஜியன் என்பார்கள். நாஞ்சில் நாட்டில் சுசியன் என்பர். மோதகம் என்பாரும் உளர். பூரணம் வைத்து அவித்த மோதகம் என்ற கொழுக்கட்டை
வேறு, இந்த சுசியன் என்ற மோதகம் வேறு. தாய்க் கம்பன் கழகம் நிறுவி எண்பதாண்டுகளாகத் தமிழ் வளர்க்கும் காரைக்குடி நகரத்தார் சுஜியனைச் சுய்யம் என்று மொழிபெயர்த்தனர். கம்பன் அம்புஜத்தையும், பங்கஜத்தையும் அம்புயம் பங்கயம் என்று தமிழ் செய்த இலக்கண விதியின் சார் நின்று. தொடர்ந்து கண்டும் காணாததற்கு குழிப்பணியாரம் ,காரச் சட்டினி என தின்று முடித்தபோது வயிறு கிண்ணென்று இருந்தது. வயிற்றில் பேன் வைத்துக் குத்தலாம் என்பாள், எங்கள் அம்மை நெடுமங்காட்டுகாரி.
ஐயா உமக்கு நீரிழிவு இல்லையா என்பீர்கள்! அது கிடக்கிறது சவம், முப்பதாண்டாக என்பேன். அன்று முதல் , கடந்த முப்பதாண்டுகளாக காரைக்குடிப் பயணங்களில் & தொழில் நிமித்தமோ, தமிழ் வளர்க்கவோ & மதிய உணவைத் தவிர்த்துவிட்டு,நேரடியாக நான்கு மணிக்கு மேல் செட்டி நாட்டுப் பலகாரங்கள்தான் மதிய உணவும் இரவு உணவும். பெரும்பாலும் அதுவும் குறிப்பாக, 2010க்குப் பிறகு மருத்துவர் சுனீல் கிருஷ்ணன் நட்பு கிடைத்த பிறகு, அஃதோர் நியமம். சுனீல் கிருஷ்ணன் அரிமளம் ஆயுர்வேத வைத்திய
சாலையின் மூன்றாவது கண்ணி. அவர் மனைவி மானசாவும் ஆயுர்வேத வைத்தியர். மகன் சுதீர் என்னவாக வடிவெடுப்பானோ, இப்போது மூன்று வயதே ஆகிறது. சுனீல் மருத்துவர் என்பது ஒரு வசம் எனில், மறுவசத்தில் தீவிர காந்திய ஆய்வாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் , நவீன சிறுகதையாளர். அவரது 'அம்புப் படுக்கை'
சிறுகதைத் தொகுப்புக்கு, சாகித்ய அகாதமியின் 2018ம் ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது கிடைத்துள்ளது. 'எழுத்து' அமைப்பின் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றவர் . 'பதாகை' என்றொரு இணைய இதழ் நடத்துபவர். அண்மையில் வெளியான 'அன்புள்ள புல்புல்' என்ற நூல், காந்திபற்றி அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.
சுனில் கிருஷ்ணனுடன், சிலமுறை, திருப்பத்தூரில் பெரும்புலவர் பேராசிரியர் பா.நமச்சிவாயம் வீட்டு மதிய உணவைப் புறக்கணித்துவிட்டு, எப்போது நான்குமணி ஆகும் என்றும், செட்டிநாட்டுப் பலகார உணவு விடுதி எப்போது திறக்கும் என்றும், காய்ந்து கிடந்திருக்கிறோம். கோவைக்குத் திரும்பும் போது, செட்டி நாட்டுப் பலகாரங்கள் செய்து விற்பனை செய்யும் வீடுகள் தேடிச் சென்று வாங்கும் அதிரசம், போளி , சீப்புச் சீடை, சீடை, மனகாவலம், முறுக்கு, மாலாடு பற்றி ஈண்டு நாம் விளம்பப் புகவில்லை.
கடந்த முப்பதாண்டுகளில் நகரத்தார் திருமண விருந்து பல தரம் உண்டிருக்கிறேன். காரைக்குடியிலும், தேவகோட்டையிலும், கோவையிலும். குறிப்பாக, கல்கத்தா கவித்தென்றல் கா.சு.மணியன் வீட்டுத் திருமணங்கள், அகவை அறுபது சாந்திகள். செட்டிநாட்டு உணவும் உபசரிப்பும் தனித்துவமானது என்பதை நிறுவ இந்தக்கட்டுரை எழுதவில்லை. எந்தப் பிரதேசுணவுக்கும் சற்றும் இளைத்திராத உணவுப் பண்பாட்டில் திளைத்த நாஞ்சில் நாட்டுக்காரனாகிய நான், செட்டிநாட்டு மத்தியானச் சாப்பாட்டின் போது மிகவும் ருசித்து, கேட்டு வாங்கி உண்பவை சில. கவுணி அரிசி என்ற இனிப்பு, வாழைப்பூ வடை, கெட்டிக்குழம்பு, மண்டி என்பன அவை.
அதென்ன மண்டி என்பீர்கள் ! இப்போது நாம் கட்டுரையின் மையப்பகுதிக்கு வந்துவிட்டோம். பந்தியில் அமர்ந்து, இரண்டு முறையாவது குறைந்தது கேட்டு வாங்கி உண்பேன், அதைக் கூட்டு என்று கொள்ளத்தகாது. பச்சடி என்றலும் ஆகா!
வற்றல் மிளகாய் வறுத்து அரைத்து, அரிசி களைந்த நீரில் ஊறவைத்த புளிக்கரைசல் ஊற்றி, சின்ன வெங்காயம் வதக்கிப் போட்டு செய்யப்படுவது மண்டி. எக்காரணம் கொண்டும் தேங்காய்
சேர்க்கக்கூடாது. மணக்க மணக்க இருக்கும் மண்டியில் பயன்படுத்தப்படும் பயறினங்கள், முழுதாக, மொச்சை, கொண்டைக்கடலை, பெரும்பயறு எனப்படும் தட்டைப்பயறு, காய்கறிகள் வெண்டை, சுண்டை, கத்தரியும், மாங்காயும் என ஏதோ ஒன்று. முழுதாய் உரித்த
சின்ன வெங்காயம், பூண்டு சேர்ப்பதுண்டு. பச்சை மிளகாயும், முருங்கைக்காய் அல்லது வாழைக்காயும் சேர்க்கிறார்கள். வத்தல் வடகங்கள் சேர்த்தும் செய்கிறார்கள்.
மண்டி பற்றிய தயாரிப்பு விவரங்களைத் துல்லியமாக அறிய விரும்புவோர், எந்த செட்டிநாட்டு
சமையல் புத்தகத்திலும் தெரிந்து கொள்ளலாம். செட்டி நாட்டுச் சமையல் என புத்தகக் கடைகளில் பத்துக்கும் குறையாத புத்தகங்கள் கிடைக்கும். நான்
சாப்பிட்ட மண்டி வகைகள் பெரும்பாலும் ஆத்தங்குடி பெருமாள் குழுவினரால் செய்யப்பட்டவை, ஏனெனில் கவித்தென்றல் கா.சு.மணியன் வீட்டு விசேடங்களில் நான் அதிகம் சாப்பிட்டிருக்கிறேன். அவரும் ஆத்தங்குடிக்காரர், ஆத்தங்குடி பெருமாளும், கவித்தென்றல் கா.சு.மணியனும் நண்பர்கள்.
பலமுறை கோவை விஜயா பதிப்பகத்து அண்ணாச்சி வேலாயுதம் அவர்கள் பக்கலில் அமர்ந்து
சாப்பிட்டிருக்கிறேன். எனது பட்டறிவு சொல்வது, அண்ணாச்சியும் மண்டிப் பிரியர் என்று.
முதன் முறை, பந்தி விளம்புகிறவர், ''மண்டி , மண்டி'' என்று பரிமாறும் வாளியும் தவியுமாகத் திரிந்த போது, அந்தச் சொல் நூதனமாகப் பட்டது எனக்கு. பிறகு அறிந்து கொண்டேன், நான் விரல்களால் வழித்து வழித்து நக்கிக் கொண்டிருந்த
சாதனமே மண்டி என்று.
இந்த சந்தர்ப்பத்தில் ஒரு குறுக்கீடு. எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும், இந்திய அரசாங்கம் கோடிகள் கொண்டு அம்மானை ஆடும் சினிமாக்காரர்களை மட்டுமே கலைஞர் என்று கருதுகிறது. அலவை நெரித்து வைத்துக்கொண்டு பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண், பாரத ரத்னா வரை ஆசையாசையாகத் திணிக்கிறது. தமிழ்நாடு கலைமாமணியை கையில் வைத்துக்கொண்டு ஆள்பிடிக்க அலைகிறது. பாரத மணித்திருநாட்டில் , இன்றளவும் இந்திய நாட்டின் எந்தப் பிரதேசத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், ஆய கலைகள் அறுபத்து நான்கினுள் ஒன்றான சமையல் கலை விற்பன்னர் எவருக்கேனும் சிறப்பு செய்ததுண்டா? சும்மா நளபாகம், வீமபாகம், என்று கூவித் திரிவதோடு சரி! இதில் வாயில் விரலை
வைத்தாலும் கடிக்கத் தெரியாத இந்திய இலக்கிய
சாதனையாளர்களைப் பற்றி நாம் என்ன விளம்புவது?
மறுபடியும் மண்டிக்கு வரலாம். எங்களூரில் சுக்கும் மிளகும் மல்லியும்,ஏலக்காயும் நொய்ய நொறுங்கத் தட்டி, மண்பானையில் போட்டு ஆற்று நீரூற்றி, பாதிக் கருப்பட்டியும் உடைத்துப் போட்டு காப்பி போடுவார்கள். அவரவர் தேவைக்கு ஊற்றி, ஆற்றிக்குடித்துக் கொள்ளலாம். எல்லோரும் குடித்ததுபோக, காப்பிச்சட்டியில் இறுதியில் கலங்கலாக கிடப்பதை மண்டி என்போம் . என் கடைசித் தங்கை அதையும் இறுத்து வடிய வைத்துக் குடிப்பாள் . அவளுக்கு காப்பி மண்டி என்று காரணப்பெயர். இன்று அவளுக்கே அறுபத்து மூன்று வயதாகிறது. என்றாலும்; நாங்கள் 13 பேரில், குழூஉக் குறியாக அந்தப் பெயர் வாழ்கிறது.
மத்தியானச் சாப்பாட்டுக்கு ரசம் வைக்கும்போது, அடியில் வண்டலாகப் படிவதையும் ரசத்து மண்டி என்போம். வேறு பகுதிகளில் அதனை ரசத்து வண்டல் என்பார்கள். எமது மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் ரசத்து வண்டல் என்று ஆண்டிருக்கிறார். ஆக எமக்கு மண்டி என்றால் வண்டல்.
மலையாளத்தில் மண்டன் என்றால் மடையன். நாம் மண்டு என்று சொல்கிறோம் அல்லவா? மண்டனின் பெண்பால் மண்டி. 'எந்தோடா மண்டா?' அல்லது எடீ மண்டி' என்று மலையாள சினிமாவில் கேட்டிருக்கலாம். நமக்கோ மண்டு என்றால் பொதுப்பால். பேராசிரியர் அருளியை கலந்து கொண்டால் மண்டி எனும் சொல் உருது என்கிறார். அவர் தரும் பொருள்கள்: விற்பனையகம், பெரு விற்பனையகம், பெருவணிகர் பண்டகம் என்பன. நாம் மண்டி எனும் உருதுச்சொல்லைப் பயன்படுத்தியே தேங்காய் மண்டி, வாழைக்காய் மண்டி, வெல்ல மண்டி, என்கிறோம். மொழியைச்
சுத்தப்படுத்த முனையும் 'ஸ்வச் பாஷா' ஆட்கள் என்ன திட்டம் வைத்திருக்கிறார்களோ?
வட மொழிப் பிறப்பாக , மண்டிகை என்றொரு
சொல்லும் உண்டு. அப்பம் என்ற பொருளில் . மண்டு என்று இயல்பாக இன்று நாம் வழங்கும்
சொல் , மண்டூகம் எனும் வட சொல்லின் குறுக்கம் என்பார், அருளி. மண்டூகம் என்றால் தவளை . மண்டூகத்தின் குறுக்கம் மண்டு என்றால், மண்டன் எனும் சொல்லும் அவ்வாறே ஆகலாம். மண்டூகம் எனும்சொல் , தவளை குறித்துப் பேசப்படுகிறது. விவேக சிந்தாமணி எனும் நூலில் ஒரு பாடலின் முதல் இரண்டு அடிகள் பின் வருமாறு பேசும்.
'தண்டாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம் வண்டோ கானத்து இடையிருந்து வந்தே கமல மது வுண்ணும்' என்று.
பாடலைப் பிரித்து எழுதினால் பொருள் துல்லியமாகிவிடும்.
'தண் தாமரையின் உடன் பிறந்தும், தண்தேன் நுகரா மண்டூகம்!
வண்டோ , கானத்து இடை இருந்து வந்தே கமல மது உண்ணும்!'
கமலம் என்றாலும் தாமரையே. தாமரை மலர் இருக்கும் தடாகத்தில் வாழ்ந்தாலும் தவளை அம் மலரின் தேன் உண்ணாது என்பது கருத்து.
வடமொழி மூலத்தில் இருந்து தமிழ்ப் பிறப்பான மண்டூகை எனும் சொல்லுக்கு, பரத்தை என்று பொருள். சென்னைப் பல்கலைக்கழகத்துப் பேரகராதி இல்லை என்றால் எனது கட்டுரை எழுத்து வறண்டு போயிருக்கும். பேரகராதி குறிக்கிறது, மண்டி என்றால் கால் மடக்கி முழந்தாளில் நிற்பது என. அதைத்தான் மண்டியிடுதல் , மண்டி போடுதல் என்கிறோம். நாம் எவரிடமும் மண்டியிட மாட்டோம் என்று வீர வசனம் பேசி, சில நூறு கோடிக்கும் கையளவு M.P.சீட்டுக்கும் மண்டியிடுபவரை நாம் அறிவோம். டயர் நக்குதல் என்றொரு புது அரசியல் வசவு புழங்குகிறது. நீ எதையடா நக்கினாய் ? என்று கேட்கும் எல்லைக்குத் தமிழ் அரசியல் பண்பாடு பாதாளம் ஏழினும் கீழாய்ப் பாய்ந்து கொண்டிருக்கிறது. மண்டியிட்டால் மண்டி மண்டியாகக் கொள்ளைப் பணத்தில் பங்கு கிடைக்கும்.
பேரகராதி, மண்டிக்குத் தரும் இரண்டாவது பொருள், வண்டல் . தெலுங்கும் கன்னடமும் மட்டி என்றொரு சொல்லை, வண்டல் எனும் பொருளில் கையாள்கின்றன. மண்டி என்றாலும் மட்டி என்றாலும் வண்டல் என்றாலும் அது sediment. மூன்றாவது பொருள், தானியம் மிகுதியாக விற்கும் இடம். அதாவது பெரு வியாபாரம் நடக்கும் பண்டக சாலை. தமிழ்நாடு என்றாலே அது சினிமா மண்டிதானே! புறநானூறும், அகநானூறும் மண்டி எனும் சொல்லை, நெருங்கிய எனும் பொருளில் பயன்படுத்தியுள்ளன. புதர் மண்டிக் கிடந்தது, களை மண்டி விட்டது, காடுபோல் மயிர் மண்டிக் கிடந்து எனச் சொல்கிறோம் அல்லவா?
மண்டி வேறு மண்டிலம் வேறு, மண்டிலம் தான் மண்டலம். சூரிய மண்டலம், சந்திர மண்டலம் என்கிறோமே! மண்டிலமெனும் சொல்லைப் புறநானூறும், புறப்பொருள் வெண்பா மாலையும், இன்னா நாற்பதும் குறுந்தொகையும், பெரும்பாணாற்றுப்படையும் , கலித்தொகையும், மணிமேகலையும், தொல்காப்பியமும் சிலப்பதிகாரமும் பயன்படுத்தியுள்ளன. மண்டிலம் எனும் சொல்லுக்கு அவை கொண்ட பொருள்கள் & மண்டலம், வட்டமாக ஓடுதல் , குதிரை , பூமி, சூரியன்,சந்திரன், ஒரு நாட்டிய நிலை என்பன.
மண்டு எனில் செறிவு , மிகுதி , plenty, abundance என்று பொருள். மண்டி, மண்டு என்று தொடர்ந்து போனால் மண்டை எனும் சொல்லுக்குள் நுழையலாம். மண்டை என்றால் தலை, தலை ஓடு&மண்டை ஓடு , தென்னை பனை முதலாய தாவரங்களின் கொண்டை பகுதி, இரப்பவர் கையில் இருக்கும் கலம், திருவோடு. மண்டை என்பதுவும் சங்க இலக்கியச் சொல் . மண்டை என்றால் கபாலம், ஆதி சிவன் மண்டை ஓடுகளைக் கழுத்தில் மாலையாக அணிந்தவன். கபாலம் அணிந்தவன் எனவே கபாலி. கபாலீசுவரன். கபாலம் எனும்
சொல்லே காபாலிகன் என்னும் சொல்லைத் தருகிறது. தமிழனுக்கு கபாலி என்றால் ஓகே, மண்டை என்றால் அருவருப்பு. தென் மாவட்டங்களில் தலைவலிக்கு மாற்றுச்சொல் மண்டையிடி. 'மத்தியானத்தில் இருந்து ஒரே மண்டையிடி' என்பார்கள்.
தமிழ்ச் செய்யுள் இலக்கணத்தில் 'நிலை மண்டில ஆசிரியப்பா' என்றொரு பாவினம் உண்டு. அதற்கும் மண்டிக்கும் தொடர்பில்லை. அது என்ன பாவினம், இலக்கணம் என்ன, எடுத்துக்காட்டுச் செய்யுள் என்ன என்பதை அறிய வேண்டுமானால் மாதம் 125 ஆயிரம் ஊதியம் பெறும் பள்ளித் தமிழாசிரியரைக் கேளுங்கள். அவர்கள் வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்ய மாட்டார்கள்.
என் மனமோ, மண்டி எனும் தொடுகறியைப் பற்றி நிற்கிறது. எவனாவது பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனம் அதை patent right செய்து கொள்வானோ என்று கவலையும் இருக்கிறது. எதுவும் நடக்கும் பாரத மணித்திரு நாட்டில்.
அடுத்த நான் கலந்து கொள்ளும் நகரத்தார் கல்யாணம் என்று வருமோ இன்று பஸ்காரமான நகரத்து ஆடம்பர உணவு விடுதிகள், கொழுக்கட்டை எனும் பெயரில் வறண்டு போன இட்டிலியை நீள் உருண்டையாக, cylindrical ஆக, தருவதைப்போல நாளை எவரேனும் மண்டி எனும் பெயரில் ஒரு கூட்டுக் கறி பரிமாறலாம்.
பிள்ளையார்ப்பட்டி கற்பகக் கன்று காக்க!
மே, 2019.