சிறப்புக்கட்டுரைகள்

“மக்களுக்குப் புரியலைன்னா நாம் தான் மாத்திக்கணும்!”

மணா

நாங்க.. நாடகத்திலே நடிச்சு சினிமாவுக்குள் வந்தவங்க.. அப்போ நடந்திக்கிட்டிருந்த தெருக்கூத்தை ஆரம்பிக்கிறப்போ மேடைக்கு வர்ற கலைஞருங்க ஜனங்களுக்கு முன்னாடி வந்து ‘நாங்க நடத்துறதுலே ஏதாவது குத்தம் இருந்தா, உங்க  வீட்டுப் பிள்ளைகளைப் போல நினைச்சு எங்களை மன்னிச்சுரணும்' என்று கேட்டுவிட்டுத்தான் ஆரம்பிப்பாங்க..

நாடகங்களிலும் அப்படித்தான்.. மக்களுக்காகத் தானே நாம நாடகம் போடுறோம்.. அவங்களோட எண்ணத்துக்கு மதிப்பு கொடுக்கணும்ல'' - இப்படி எம்மிடம் பேசிக் கொண்டிருந்தவர்கள், நாடகத்திலிருந்து
சினிமாவுக்கு வந்த கலைஞர்களான எஸ்.வி.
சகஸ்ரநாமமும். டி.என்.சிவதாணுவும். அவர்களுடன் பேசியவாறே அவர்கள் தங்கியிருந்த அறை நோக்கி நடந்தோம்.

சகஸ்ரநாமம் அப்போது சுமார் இருநூறு படங்களுக்கு மேல் நடித்துப் பிரபலமான நடிகர். மதுரையில் நிஜ நாடக இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்த நண்பர் மு.ராமசுவாமி நடத்திய நாடக விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு வந்திருந்தார்கள்,
சகஸ்ரநாமமும், சிவதாணுவும். சகஸ்ரநாமம் ஏற்கெனவே மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த நாடகக் கருத்தரங்கில் கலந்து கொண்டு நீண்ட உரையாற்றி தனிப்புத்தகமாகவும் வெளியாகியிருந்தது. நாடக அனுபவங்களை அவர் விவரித்திருந்த விதம் அலாதியானதாக இருந்தது.

சகஸ்ரநாமத்தின் உரையாடல் மொழி ரசனையோடும், முகபாவனைகளுடனும் இருந்ததால் பலரையும் ஈர்க்கும்படி இருந்தது. கோவை சிங்காநல்லூரில் எளிய குடும்பத்தில் பிறந்து கடையில் வேலை செய்து கொண்டிருந்தபோது பாய்ஸ் கம்பெனியில் பொய்
சொல்லிச் சேர்ந்த அனுபவமே ஒரு மெல்லிய
சிறுகதை.

நாடகத்தில் அவர் காட்டிய ஈடுபாடு நாடகம் நடத்தியவர்களின் கவனத்தைத் திருப்பியது. ஒரு நாடகத்தில் கழுத்தில் உயிருள்ள பாம்பைத் தொங்கவிட்டபடி சிவன் வேடத்தில் வந்தபோது, முழுக்கவனமும் இவர் மீது விழுந்திருக்கிறது.

"கந்தசாமி முதலியார், டி.கே. சண்முகம், கலைவாணரின் நாடகக் குழுக்களில் கிடைத்த வாழ்வியல் அனுபவத்தை எந்தப் பெற்றோரும் தரமுடியாது,'' என்று
சொல்லும் இவருக்கு, ஆஸ்தான குரு
 சங்கரதாஸ் சுவாமிகள். பாரதியும், வ.ரா.வும் இவரிடம் எழுச்சியையும், உயர்
ரசனையையும் விதைத்தவர்கள்.

நாடக ஈடுபாட்டால்'சேவா ஸ்டேஜ்' என்கிற நாடகக்குழுவை ஆரம்பித்தவர் சமூக,அரசியல் உணர்வுகளை நாடகத்தில் புகுத்தினார். அப்போது இருந்த நாடகசூழலில் நவீனத்தைக் கொண்டு வந்தார். பாரதியின் பாஞ்சாலி சபதத்தையும், குயில் பாட்டையும் நாடகமாக்கினார்.

பொதுவுடமைத் தலைவர்களான ஜீவா போன்றவர்களுடன் உருவான நட்பு நாடகத்தின் இயல்பையே மாற்றியது. தமிழில் மாற்றத்தை விளைவித்த எழுத்தாளர்களான கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன்,பி.எஸ்.ராமையா போன்றவர்களை நாடகத்தின் பக்கம் திருப்பி நாடகங்களை எழுத வைத்து மாறுபட்ட நாடகங்களை நிகழ்த்தினார்.

'தூக்குக்கயிறு' நாடகத்தில் உரத்த குரலில்
சகஸ்ரநாமம் பேசும் வசனம் பிரபலம்.

"சுதந்திரத்திற்காகப் பாடுபடுவது ஒரு குற்றம் என்றால் அந்தக் குற்றத்தைச் செய்து கொண்டு தானிருப்பேன்''.

வாழ்க்கை, நல்லதம்பி, மணமகள், இழந்த காதல், பைத்தியக்காரன், நாம் இருவர், குலதெய்வம்& இவையெல்லாம் சேவா ஸ்டேஜின் சில நாடகங்கள். குலதெய்வம் ராஜகோபால், முத்துராமன், பண்டரிபாய், மைனாவதி, தேவிகா, வசந்தா& இவர்கள் சேவா ஸ்டேஜுடன் வளர்ந்த திரைக்கலைஞர்கள்.

நாடகத்தின் மீது இவர் கொண்டிருந்த உணர்வுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் இவருக்கு இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது கிடைத்தது.

1936 ஆம் ஆண்டில் வெளிவந்த'மேனகா' இவருடைய முதல் திரைப்படம். விக்கிரமாதித்தன், கண்ணகி, சந்திரஹரி என்று பல படங்களில் நடித்தாலும்,'பராசக்தி' இவரை கவனிக்க வைத்தது. அதில் சிவாஜிக்கும், எஸ்.எஸ்.ஆருக்கும் மூத்த அண்ணனாக, நீதிபதியாக நடித்திருப்பார். மர்மயோகி, நல்லதம்பி, குலதெய்வம், போலீஸ்காரன் மகள்,
செல்வம் என்று இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சகஸ்ரநாமம் ஸ்ரீதரின் இயக்கத்தில் எம்.ஜி.ஆருடைய அண்ணனாக நடித்த படம்'உரிமைக்குரல்'.

"1957 ல்'சேவா ஸ்டேஜ் கல்வி நிலையம் 'என்கிற பெயரில் சென்னையில் நடிப்புப் பயிற்சிக்காகவே ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தபோது, அதில்
சேர்ந்தவர்கள் 24 பேர். இதில் ஒருவர் பெண்.
சென்னை அரசாங்கம் அப்போது மூவாயிரம் ரூபாய் அளித்து உதவியது. ஆனால் அதைத் தொடர்ந்து நடத்த பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை. அதையும், நான் நடத்தி வந்த சேவா ஸ்டேஜ் குழுவையும் மூட வேண்டியதாகிவிட்டது.''

குரலில் சலிப்பேறிய நிலையில் உதட்டைப் பிதுக்கியபடியே சொன்னார்.  "இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இத்தனை பாய்ஸ் கம்பெனிகள்.  சங்கரதாஸ் சுவாமிகளைப் போன்று நாடகத்திற்காகவே அவதாரம் எடுத்ததைப் போல எத்தனை பேர்? நடிக்க, தமிழைச் சரியாகப் பேச, பாடவைத்து, ஆட வைத்து, ஊர் ஊராய்ச் சென்று நாடகங்களைப் போட்டுக் கொண்டு அவ்வளவு பெரிய குழுவை நிர்வகித்துக் கொள்வது
 சாதாரணமானதல்ல. மிகச் சாதாரணமான குடும்பத்துப் பிள்ளைகளுக்கு நடிப்புச்சொல்லிக் கொடுத்து வாழவும் வைத்த பாய்ஸ் கம்பெனியின் மகிமையைப் பற்றித் தமிழகத்திலேயே பலருக்கும் தெரியவில்லை.

பி.யு.சின்னப்பா, தியாகராஜ பாகவதர், கலைவாணர், எம்.ஜி.ஆர், சிவாஜி என்று எத்தனையோ நடிகர்களைத் தந்தவை இந்த பாய்ஸ் கம்பெனிகள் தானே. டி.கே.சண்முகம் குழுவை நடத்தியதைப் போல, கலைவாணர் நடத்தியதைப் போல இப்போதெல்லாம் நாடகம் நடத்தமுடியாது. இதில் என்னுடைய பங்கு ரொம்பவும் சின்னது தான்.''

தங்கும் அறைக்குப் போய் படுக்கையில் அமர்ந்தார். பக்கத்தில் இன்னொரு மூத்த கலைஞரான சிவதாணு.

"கல்கத்தாவில் தாகூரோட நூற்றாண்டு விழா நடந்துச்சு. தலைவர் ஜீவாவுடன் அதுக்குப் போயிருந்தேன். தங்களுக்காக வாழ்ந்தவரை வங்காளிகள் எப்படிக் கொண்டாடுறாங்க.. தெரியுமா? கலை மக்களுக்கானதுதான். அந்த மக்களுக்குப் புரியலைன்னா நாம தான் நம்மை மாத்திக்கணும். மக்களைக் குறை சொல்லக்கூடாது. எங்க அனுபவத்திலே நாங்க உணர்ந்தது இதைத்தான்.''

தன்னையே எப்போதும் சுமந்து கொண்டிருக்காத எளிமை தெரிந்தது அந்தப் பேச்சில்.

ஜுன், 2019.