சிறப்புக்கட்டுரைகள்

மகளிர் மார்க்கெட்

கோம்பை.எஸ்.அன்வர்

‘இயற்கை விவசாயத்தில் ஏதாவது ஆலோசனை சொல்ல முடியுமா?’ என்பது எங்களிடம் அவர்கள் வைத்த கேள்வி. எங்கள் குழுவில் இருந்த தமிழகத்தின் இயற்கை விவசாய இயக்கத்தின் முன்னோடி அரச்சலூர் செல்வம்  பணிவுடன் அளித்த பதில் இதுதான்:  ‘உங்களிடம் இருந்து நாங்கள்தான் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. எங்களிடம் போய்க் கேட்கிறீர்களே?’.

ஆச்சரியமாக இருக்கிறதா? அதுதான் உண்மை. நாங்கள் இருந்த இடம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில் உள்ள  ஸிசாமி கிராமம். மலைப்பிரதேச விவசாயம்.

சோளமும் அரிசியும் காய்கறிகளும் பயிரிடப்படும் இடம். மூங்கிலால் வேயப்பட்ட வீடுகள் கொண்ட இயற்கை எழில் கொஞ்சும் இடம்.

அண்மையில் வடகிழக்கு மாநிலங்களுக்கு, அவர்களின் இயற்கை சார்ந்த வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளவும், எமக்கு தெரிந்தவற்றை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும், தமிழகத்தில் இருந்து  பெரும்பாலும் இயற்கை வேளாண்மையில் ஆர்வமுள்ளவர்கள் அடங்கிய பத்து பேர் கொண்ட  குழு, ஹெச் எம் ஐ என்ற அமைப்பின் ஏற்பாட்டில் பயணமானோம். அப்போதுதான் ’பழங்குடி மக்கள்’ என்று நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் அம்மக்களின் அருமையான இன்னொரு பக்கம் எங்களுக்குத் தெரிய வந்தது. வயலிலும் பெண்கள், கடைகளை நிர்வகிப்பதிலும் பெண்கள் என்று பெண்களின் ராஜ்ஜியமாகவே அது எமக்குப்பட்டது.  விவசாயம் என்பது அவர்களைப் பொறுத்த வரை இயற்கை விவசாயம்தான். இரசாயன உரங்களை அவர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. ஒவ்வொரு கிராமமும் கிட்டத்தட்ட ஒரு தன்னிறைவு அடைந்த  சுயாட்சியாகவே செயல்படுகிறது. ஊருக்கு அருகிலிருக்கும்  மலைப் பகுதியிலேயே விவசாயம். அவர்களுக்கு உணவுக்கு தேவையான அனைத்தும் கிட்டத் தட்ட அங்கேயே கிடைத்து விடுகிறது. பாரம்பரிய விதைகளை ஒவ்வொரு வீடும் இன்றளவும் பாதுகாத்து வருகிறது. அடுத்த ஆண்டு நடவுக்குத் தேவையான விதைகளை அறுவடை முடிந்தவுடன் தனியாக எடுத்து வைத்து விடுகின்றனர். சந்தையிலிருந்து விதைகள் வாங்குவது இல்லை. அரிச்சலூர் செல்வத்தின் பதிலுக்கான காரணம் புரிகிறதா?

அஸ்ஸாம், நாகலாந்தில் உள்ள விவசாய நடை முறைகளைப் பார்த்துவிட்டு, இறுதியாக மணிப்பூர் சென்றடைந்தோம். 1891ல் தான் மணிப்பூர் ஆங்கிலேயருக்கு அடிபணிந்தது, பின்னர் சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவின் அங்கமாகிவிட்டது. இதன் தலைநகர் இம்பாலில் உள்ள  ‘ஈமா கெய்த்தல்’ அல்லது  ‘தாய் சந்தை’  என்கிற இடம் பற்றிச் சொல்லவேண்டும். இது பெண்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் சந்தை. நடுத்தர வயதுள்ள பெண்களே நிரம்பி இருந்தார்கள். அதனால்தான் தாய் சந்தை என்று பெயர் பெற்றதோ என்னவோ. ஆசியாவிலேயே மிகப் பெரிய, முழுக்க பெண்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் சந்தையும் இதுதான். கிட்டத் தட்ட 100 வருடங்களுக்கும் பழமையான,  திறந்த வெளி சந்தையாக இருந்த இடம் இது. 1950களில் அரசாங்கத்தால் கான்க்ரீட் கட்டிடங்களாக மாற்றப்பட்டது. இன்று இச்சந்தை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு  செயல்படுகிறது. சாதி மத பேதமின்றி  4000 பெண்கள் காய்கறி, பூக்கள், மீன், மிட்டாய், பலகாரம், துணிமணி என்று பல்வேறு பொருட்களை  அங்கு விற்கின்றனர்.  நங்கள் காலை ஏழு மணியளவில் சென்ற போது வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. வியாபாரம் முடிந்த பெண்கள் ஓய்வெடுக்கவும், காலை உணவருந்தவும், செய்தித்தாள் படிப்பதுமாக இருந்தனர். வியாபாரத்திற்கிடையில் நாட்டு நடப்பு, அரசியல் என்று சகலமும் அலசப்படுவதாகக் கூறினார் நம்மோடு வந்த நண்பர். அத்திபூத்தாற் போல் ஆங்காங்கே சந்தையில் வாடிக்கையாளர்களாக ஆண்கள். கூச்சல் குழப்பங்கள் ஏதுமின்றி  பெண்களுக்கே உரிய கலகலப்புடன்  சந்தை இயங்கிக் கொண்டிருந்தது. பெண் சுதந்திரத்தைப் பற்றி நாம் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறோம், பழங்குடி சமூகம் சப்தமில்லாமல் செய்து கொண்டிருக்கின்றது!

ஜூலை, 2017.