சிறப்புக்கட்டுரைகள்

போட்டியாளர்களை வணங்க வேண்டும்

இரா. கௌதமன்

திருப்பூரிலுள்ள வைகை கார்மெண்ட்ஸ் அலுவலகத்திற்குள் நுழையும் போதே தன்னம்பிக்கை வாசகங்கள்  நம்மை வரவேற்கின்றன. புன்னகையுடன் எதிர்கொள்கிறார் வைகை கார்மெண்ட்ஸின் நிர்வாக இயக்குநர் நடராஜன்.

 அந்திமழை புத்தகத்தை புரட்டிக் கொண்டே புத்தகங்கள் தான் என்னை இங்கு வந்து கொண்டு அமரச்செய்திருக்கிறது என்றார். மேலும் “ எம். எஸ். உதயமுர்த்தியால் உத்வேகம் பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களில் நானும் ஒருவன்” என்று தன்னடக்கத்துடன் அறிமுகம் செய்து கொள்கிறார்.

முதன் முதலில் வியாபாரம் தொடங்க அப்பா கொடுத்த ஒரு லட்ச ரூபாயை வியாபாரத்தில் இழந்து கண்ணீரோடு பைக்கில் திரும்பி வந்தது, சிறுநீரக கோளாறால் உயிருக்குப் போராடியது, துக்கம் தாளாமல் மனைவி தற்கொலை செய்து கொண்டது என எல்லாவற்றையும் பற்றி ஒளிவு மறைவில்லாமல் பேசுகிறார் நடராஜன்.

அந்திமழைக்காக அவரிடம் உரையாடியதில் இருந்து.

“பல்லடம் பகுதியில் விவசாயக் குடும்பம் எங்களோடது. இன்னிக்கு தஞ்சாவூர்ல இருக்கற பிரச்னை அன்னைக்கே எங்களுக்கு வந்து விட்டது. விவசாயம் செய்ய தண்ணீர் இல்லை. மாற்றுத் தொழிலாக கோழிப் பண்ணை அல்லது தறி நெய்தலை செய்யச் சொல்லி அரசாங்கமே எங்களை ஊக்குவித்தது. அப்பா சின்னதா கோழிப்பண்ணையை ஆரம்பித்தார். கோழிப் பண்ணைக்கும் குறிப்பிட்ட அளவு தண்ணி தேவை. அதுவே இல்லாமல் போக நான் திருப்பூரை நோக்கி வந்தேன். தொழில் தொடங்குவதற்காக அப்பா ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். அதன் அர்த்தம், இத வச்சி பொழக்க முடியும்னா பொழச்சிக்க, இல்லன்னா கோழித் தொழிலுக்கே வந்துடுங்கிறது. திருப்பூரில் அப்போதே டையிங், பிளீச்சிங் எல்லாம் நல்ல வளர்ச்சி அடைந்திருந்தது. நான்கு நண்பர்கள் சேர்ந்து 1989-ல்  பிளீச்சிங் பேக்டரி தொடங்கினோம். தொழில் நல்ல வளர்ச்சி அடைந்தது. அப்போது சுற்றுசூழல் பிரச்னை வந்தது. தொழிலில் பெரிய முடக்கம்.

பிளீச்சிங் பேக்டரிய 1992 ல் மூட வேண்டியதாகி விட்டது. போட்ட பணம் அத்தனையும் போச்சு. வீட்ல சொல்லலை. சொன்னா வியாபாரம் செஞ்சது போதும் கோழிப் பண்ணையைய பாத்துக்க வான்னு சொல்லிடுவாருங்கற பயம். கவலையோட கண்களில்

நீர் வழிய பைக்ல வந்திட்டிருக்கேன். முன்னாடி போற லாரில ‘ உன்னால் முடியும் தம்பி’ ன்னு எழுதியிருக்கு. முன்னாடியே எம்.எஸ். உதயமூர்த்தி மற்றும் பல தன்னம்பிக்கை புத்தகங்களை படிச்சிருந்தாலும் அன்னிக்கு அந்த வரி எனக்காக  சொல்லப்பட்டதாவே தோணிச்சி. என்ன ஆனாலும் சரி இந்த தொழில்ல ஒரு கை பாக்காம விட கூடாதுன்னு அப்பத்தான் முடிவு செஞ்சேன்.

அந்த சமயத்துல, திருப்பூர்ல ஸ்டாக் லாட் வியாபரம் பெரிய அளவில் நடக்கும். ஸ்டாக் லாட்ங்கிறது எக்ஸ்போர்ட் ஆர்டர் கேன்சலானாலோ அல்லது எக்ஸ்போர்ட் செய்ய முடியாம போனாலோ தேங்கும் பொருட்களை குறிப்பிடறது. 92-93 ல அந்த மாதிரி கோடிக்கணக்கான பீஸ்கள் தேங்கியிருந்தது. அதுக்கு ஆர்டர் பிடிச்சி விற்கிற வேலையை தொடங்கினேன். கடுமையான போட்டி. முதலீட்டுக்கு பணமில்லை. என்னோட உடல் உழைப்பை மட்டுமே மூலதனமா வச்சி தொழில் நடத்தினேன். அந்த சமயத்துல போலந்து, ரஷ்யாவிலிருந்தெல்லாம் வாடிக்கையாளர்கள் வருவாங்க. ஸ்டாக் லாட் இருந்தா இந்த ஹோட்டல்ல வந்து மாடல் காட்டுங்கன்னு பேப்பர்ல விளம்பரம் கொடுப்பாங்க. அவங்கள சந்திச்சு சரியான விலையை பேசுவேன். லட்சக் கணக்கான ரூபாய சாக்குல கட்டி பொருள் வாங்குறதுக்காக எங்கிட்ட கொடுப்பாங்க. என்னோட நேர்மையையும் வாக்கு தவறாத நடத்தையையும் பார்த்துட்டு நிறைய வாடிக்கையாளர்கள் வெளி நாடு மட்டுமில்லா இந்தியாவின் மற்ற பகுதிகள்ல இருந்தும் என்னைத் தேடி வர ஆரம்பிச்சாங்க. ஏறக்குறைய நூத்துக்கு மேற்பட்ட பார்ட்டிங்க எங்கிட்ட இருந்தாங்க. நல்லா போச்சு. ஒரு கட்டத்துல ஸ்டாக் லாட் பிரச்னை தீர்ந்து விட்டது. பொருள் கெடைக்கறதுல பிரச்னை ஆனவுடன் நீங்களே தயாரிச்சு கொடுங்கன்னு என்னுடைய வாடிக்கையாளர்கள் கேட்க  ஆரம்பிச்சாங்க. அதுவரைக்கும் எனக்கு சின்னதா ஆபிஸ் கூட கிடையாது. ஆபிஸ பார்க்க வர்றேன்னு சொல்ற வீட்டு ஆட்கள் கிட்ட கூட அப்புறம் பார்க்கலாம். இப்ப நான் பிஸியா இருக்கேன்னு சொல்லி வச்சியிருந்தேன்.

வாடிக்கையாளர்களை விட்டுட கூடாதேன்னு முதல்ல எனக்கு தேவையான டிசைன்கள் கொடுத்து தேவையான தரத்துல வேணும்னு ஆர்டர் குடுத்து வாங்கி சப்ளை செய்தேன். பிறகு சொந்தமா யூனிட் அமைத்து, நமக்கான பிராண்ட் இருக்கணும்னு முடிவு செய்து பெண்களுக்காக ‘ நியூ லண்டனர்’ பிராண்டையும் ஆண்களுக்காக ‘இன்பார்மல் வேர்’ஐயும் தொடங்கினேன். சொந்தமா பிராண்ட் செய்யறதுல உள்ள பிரச்னை நிறைய பேர் வாங்க மாட்டாங்க. புது பிராண்டெல்லாம் விக்காதுன்னு சொல்வாங்க. அதனால திருப்பூர்ல உள்ள சில பெரிய கம்பெனிங்க கூட மற்றவங்க பிராண்டுக்கு தயார் செஞ்சி குடுக்கற வேலையை மட்டும் பார்த்துட்டு இருந்தாங்க. ஆனா அப்படி செஞ்சா அந்த பிராண்ட் போச்சுனா நம்ம தொழிலும் போயிடும். நமக்குன்னு அடையாளம் வேணும்னு முடிவு செய்தேன். பேஷன் டிசைனிங் படிக்கலைன்னாலும் எனக்கு பெரிய ஈடுபாடு இருந்தது. அதனால என்னோட டிசைன் வாடிக்கையாளர்களுக்கும் பிடிச்சது, மக்களுக்கும் பிடிச்சது. அதனால வியாபாரம் தன்னால வளர ஆரம்பிச்சிட்டுது.

ஒவ்வொரு மூணு மாசத்துக்கொரு முறை வெளி நாடு போவேன். இத்தாலி, லண்டன், சீனா, தாய்லாந்து என்று பல வகையான நாடுகளில் பேஷன் டிசைனிங் எப்படி இருக்கிறது என்பதை நேரில் பார்த்தறிந்து நம் நாட்டிற்கேற்றவாறு  இங்கு அதை முயற்சிப்போம். அந்த மாதிரி பண்றதால வைகை கார்மெண்ட்ஸ் இந்த தொழில்ல ட்ரெண்ட் செட்டராக ஆகிவிட்டது. நம்ம பார்த்து திருப்பூர்லயும், இந்தியாவின் மற்ற பகுதிகள்ளயும் டிசைன்ஸ் செய்ய ஆரம்பிச்சது நம்முடைய வெற்றி. இப்ப    சரவணா ஸ்டோர்ஸிலிருந்து, பிக் பஜார், செண்ட்ரல், மெட்ரோ என்று இந்தியாவின் அனைத்து சங்கிலித் தொடர் கடைகளுக்கும், இலங்கை, குவைத், துபாய் என்று வெளிநாடுகளுக்கும் வியாபாரம் விரிவடைந்திருக்கிறது. வியாபாரத்தில் எப்போதுமே விவேகானந்தரின்  சொற்களைத்தான் நினைத்துக் கொள்வேன். உன்னை தண்ணீரில் நான்கைந்து பேர் சேர்ந்து அமிழ்த்தும் போது உயிர் பிழைக்க எவ்வளவு தீவிரமாக முயற்ச்சி செய்வாயோ அது போலத்தான் ஒவ்வொரு செயலிலும் முயற்ச்சி செய்ய வேண்டும் என்பார். அர்ப்பணிப்போடு தீவிரமாக செய்யப்படும் எந்த விவேகமான முயற்சியும் தோற்காது’ என்னும் நடராஜனிடம் அவரின் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகளைக் கேட்டோம்.

“97-ல் வியாபாரத்த முழு மூச்சா கவனிச்சிட்டு இருந்தப்ப உடம்பை கவனிக்காம விட்டுட்டேன்.

சிறுநீரகம் கெட்டுப் போய்விட்டது. அறுவை சிகிச்சை செய்யணும், செஞ்சா லும் ரொம்ப நாளைக்கு உயிரோட இருக்க முடியாதுன்னு ட்ரெயினிங் டாக்டர் ஒருவர் சொன்னார். என்னுடைய மனைவியால அதை தாங்கிக்க முடியல. இரண்டு வயது பெண் குழந்தை எங்களுக்கு. மனசுடைஞ்சு போன என் மனைவி 99 -ல தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல. மொத்தமா ஒடஞ்சி போய்ட்டேன். எம் மேல அவ்வளவு அன்பா இருந்தவங்க இன்னிக்கு இல்ல. பிரச்சனை மேல பிரச்சனை வரும் போது மனச கொஞ்சம் மாற்றணுமில்லையா.. ஈஷா யோகா மையத்துல சேர்ந்து யோகா, பிராணயாமம் என்று மனச திசை திருப்பிக்கிட்டேன்.

 2003-ல் சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். கபால பாத்தி என்று ஆசனம் ஒன்றுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அதை செய்ய வேண்டாம்னு ஆசிரமத்திலேயே சொன்னாங்க. ஆனா, முதல்ல 10 செஞ்சேன். படிப்படியா அதிகரிச்சு நூறு வரை செய்ய ஆரம்பிச்சுட்டேன். மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு டாக்டர் கே.எஸ்.ராமலிங்கம் என்னிடம் வியாபாரத்தை குறைத்துக் கொள்ளச் சொன்னார். அதிக அளவில் உடலை வருத்தாத எளிதான செயல்களை மட்டுமே செய்ய வேண்டும்னு சொன்னார். ஆனால் இன்று அவரே சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு என்னை வகுப்பெடுக்க  சொல்கிறார். 15 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. நன்றாகத்தான் இருக்கிறேன்.

இந்த பிரச்னையின் போது வியாபாரத்தில் சின்ன தொய்வு வந்தது. ஏற்கெனவே நம்பிக்கையான ஆட்களை சரியான இடத்தில் அமர்த்தி இருந்ததனால் எளிதாக அதை கடந்து வர முடிந்தது. சிகிச்சைக்கு முன்னாடி நாள் வரை போன் பேசிக் கொண்டுதான் இருந்தேன். சிகிச்சை முடிந்து சில நாட்களிலேயே போன் பேச வேண்டும் என்று டாக்டரிடம் அனுமதி கேட்டேன். என்னுடைய இயல்பு தெரிந்த அவர் ’ வேலை செய்யாம இருந்தா உன்ன மாதிரி ஆட்களுக்கு பைத்தியம் பிடிச்சிக்கும். தைரியமா பேசு’ ன்னு உற்சாகம் கொடுத்தார். பிறகு ஹாஸ்பிட்டலுக்கே துணி  சாம்பிள்களை கொண்டு வருவார்கள். என்ன மாதிரி செய்ய வேண்டும் என்று நான் சொல்லி அனுப்புவேன். பெரிய அளவுல பாதிப்பு வராம பாத்துகிட்டேன்,”என்கிறார்.

ஆரம்பத்தில் மூன்று பேருடன் எந்த முதலீடும் இல்லாமல் தொடங்கிய இவரது நிறுவனம் இன்று 1500 பணியாளர்களுடன் 100 கோடிக்கு மேல் வியாபாரம் செய்கிறது. அடுத்த நான்கைந்து ஆண்டுகளில் 500 கோடி வியாபாரம் என்ற இலக்கை வைத்து இயங்கிக் கொண்டிருக்கும் வைகை கார்மெண்ட்ஸ் தன்னுடைய பிராண்டை மட்டுமே கொண்டியங்கும் சங்கிலித் தொடர் வியாபார மையங்களையும் எதிர்காலத்தில் நிறுவ திட்டமிட்டிருக்கிறது.

தன்னுடைய வியாபாரத்தில் அனுபவமில்லா இளைஞர்களுக்கே முன்னுரிமை கொடுப்பதாக இவர் சொல்கிறார் “எல்லா இடத்திலும் எக்ஸ்பீரியன்ஸ் கேட்டா புதுசா வர்றவங்க எங்க போவாங்க. புதுசா படிச்சு முடிச்சி வர்றவங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவங்களுக்கு அருகில் இருந்து தொழில் சொல்லிக் கொடுப்பேன். உலகின் புதுப் புது பேஷன் டிசைன்களை அறிந்து கொள்ள அவர்களை ஊக்கப்படுத்துவேன். புது ரத்தங்கள் தான் மாற்றத்தைக் கொண்டுவருவார்கள்,” என்று நம்பிக்கை மிளிர  பேசுகிறார்.

மாறி வரும் சூழலில் போட்டியாளர்களை எதிர் கொள்வதைப் பற்றி “போட்டி இருந்தாத்தான் நாம் வளர முடியும். போட்டியாளர்களை நாம் வணங்க வேண்டும். போட்டியாளர்கள் தான் புதுப் புது விஷயங்களை செய்ய, மேலும் உத்வேகத்துடன் போராட நம்மை தூண்டுகிறார்கள்” என்று வித்யாசமான பார்வையுடன் முடிக்கிறார் நடராஜன்.

பிப்ரவரி, 2017.