சிறப்புக்கட்டுரைகள்

பொறியியல்: பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?

முத்துமாறன்

அந்த மார்க்கெட்டிங் நிறுவனத்தில் இருந்து ஆர்டர் பெறுவதற்காக எங்களிடமிருந்து இளைஞனை நிறுத்தி என்ன படித்திருக்கிறாய் என்று விசாரித்தேன். பி.இ எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் என்றான். எட்டாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்ப்பதாகச் சொன்ன அவன் அரசு மின்சாரவாரியத்தில் வேலைக்கு ஆட்களை எடுக்கும்போது அதில் எப்படியும் சேர்ந்துவிட முடியும் என்று நம்புவதாகச் சொன்னான்.

அது பெரிய வர்த்தக நிறுவனம். வாசலில் நின்ற செக்யூரிட்டிகளில் ஓர் இளைஞனை எதேச்சையாக அதிகாரி ஒருவர் என்ன படித்திருக்கிறாய் என்று கேட்டார். அவன் சொன்ன பதில் பி.இ.!

பதறிப்போன அவர் அவனைப் பற்றி உயரதிகாரிகளிடம் சொல்ல, அவனுக்கு வேறு வேலை போட்டுக்கொடுத்தார்கள்!

 சில ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரக்கணக்கில் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தார்கள். அணிவகுப்பின்போது உயரதிகாரி இதில் எவ்வளவு பேர் பொறியியல் பட்டதாரிகள் என்று கேட்டார். கைதூக்கியவர்களின் எண்ணிக்கையைக் கண்டு தலையில் அடித்துக்கொண்டார். அந்த அதிகாரியும் பொறியியல் படித்துவிட்டு ஐ.பி.எஸ் தேர்வானவர்தான்!

இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் என் எதிரே அமர்ந்திருக்கும் இளைஞர் எம்.ஈ படித்திருக்கிறார். மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்த அவருக்கு வேலை கிடைக்கவில்லை. எம்.ஈ படித்துவிட்டு அடுத்ததாக பி.எச்.டி படிக்கவேண்டும் என்கிறார். இளைஞரின் முகத்தில் மெல்லிய கவலை ரேகைகள்.

அமெரிக்காவில் 30 சதவீதம் இளைஞர்களும், இங்கிலாந்தில் 30 சதவீத இளைஞர்களும் பொறியியல் படிக்க ஆர்வம் தெரிவிக்கிறார்கள். இந்தியாவில் இந்த எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 89 சதவீதம்!

இந்தியாவில் ஆண்டுக்கு 15 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் வெளியாகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் இரண்டு லட்சத்துக்கு அதிகமானோர் ஆண்டுதோறும் படித்துமுடித்துவிட்டு வெளியே வருகிறார்கள். இவர்களுக்கெல்லாம் வேலை?

வேலை ஒருபுறம் இருக்கட்டும். தரம்?

‘‘ பெரும்பாலானோருக்குத் தேவையான திறன்களே இல்லை. அடிப்படை அறிவே இல்லாமல் பர்ஸ்ட் கிளாஸ், டிஸ்டிங்க்ஷன் என்றெல்லாம் தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள். பெற்றோர்கள் பொறியியல் படிப்புக்குப் பின்னால் தங்கள் பிள்ளைகளை ஓடவைப்பதை நிறுத்தவேண்டிய நேரம் இது,'' என்று கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார் எல் அண்ட் டி நிறுவன மனிதவளத்துறை அதிகாரி டாக்டர் சுனில் ஜெஜித்.

‘‘ நிறைய பொறியியல் பட்டதாரிகளுக்கு

சாதாரண கணிதம், பேச்சுத்தமிழ், ஆங்கில உரையாடல் திறன்களே இல்லை என்பதைக் காண்கிறேன்,'' வருத்தத்துடன் கூறுகிறார் கிழக்கு பதிப்பக உரிமையாளரும் சென்னை ஐ.ஐ.டி- யின் முன்னாள் மாணவருமான பத்ரி சேஷாத்ரி.

அமெரிக்கா 16 டிரில்லியன் டாலர் பொருளாதார மதிப்புள்ள நாடு. அந்நாடு ஆண்டுக்கு ஒரு லட்சம் பொறியாளர்களை மட்டுமே உருவாக்குகிறது. நம் நாட்டின் பொருளாதார மதிப்பு 2 டிரில்லியன் டாலர்கள்தான். ஆனால் நாம் உருவாக்குவதோ 15 லட்சம் பொறியாளர்கள்.

‘‘முன்பெல்லாம் நாட்டின் தயாரிப்புத்துறைதான் பொறியாளர்களுக்கு அதிகம் வேலை கொடுத்துக்கொண்டிருந்தது. மெக்கானிகல், எலெக்ட்ரிகல், சிவில் போன்ற அடிப்படை துறைகளைச் சேர்ந்தவர்கள் அதில் பணிபுரிந்தனர்.  ஆனால் கடந்த இருபது ஆண்டுகளாக தயாரிப்புத்துறையில் வளர்ச்சி இல்லை. அதனால் வேலைவாய்ப்புகளும் குறைந்துவிட்டன'' என்று குறிப்பிடுகிறார் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஈ. பாலகுருசாமி. தயாரிப்புத்துறை 17% ஜி.டி.பி&யில் பங்களிக்கிறது. அதற்குமேல் அது வளராமல் போய்விட்டது. அப்படியானால் வேறு எந்த துறை பொறியாளர்களுக்கு வாழ்வளித்தது?

அது தகவல் தொழில்நுட்பத் துறை. குறைந்த காலத்தில் இந்தியாவின் ஜி.டி.பி&யில் 5% பங்களிக்கும் அளவுக்கு வளர்ந்தது. லட்சக்கணக்கான பொறியாளர்களை அது வேலைக்கு எடுத்துக் கொண்டது. ஆனால் சில ஆண்டுகளாக அதுவும் நிரம்பி வழிகிறது.

‘‘ ஆட்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் அதற்குத் திறமையான பட்டதாரிகள் கிடைப்பதில்லை. அவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் அவர்களால் முடிவதில்லை. எனவே பிற நிறுவனங்களில் வேலை பார்த்து அனுபவம் பெற்றவர்களையே எடுக்க ஆரம்பித்துள்ளனர்,'' என்கிறார் பத்ரி சேஷாத்ரி.

அதுமட்டும் இல்லாமல் சில ஆண்டுகள் வரைக்கும் ஆட்களை இலக்கு வைத்து எடுத்துக்கொண்டிருந்த ஐ.டி நிறுவனங்கள் இப்போது தங்கள் நிறுவனங்களில் பணிபுரிவோரை இலக்கு வைத்து வீட்டுக்கு அனுப்பிக்கொண்டிருக்கின்றன. 40 வயதைத் தாண்டியோர், குறிப்பிட்ட சம்பளம் பெறுவோர் என வேலை இழப்புகள் ஆண்டுதோறும் லட்சத்தைத் தொடுகின்றன. இந்நிலை இன்னும் சில ஆண்டுகளுக்குத் தொடரும் என்கிறார்கள்.

கடந்த ஆண்டு பேருந்தில் பக்கத்தில் அமர்ந்து பயணம் செய்த ஒருவரிடம் பேச்சுக்கொடுத்தேன். அவர் ஐ.டி பொறியியலில் முதுகலைப் பட்டம் படித்துவிட்டு சென்னை அருகே ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். கணினிப் பொறியியலில் வேலை கிடைப்பதில்லை என்று தெரிந்தவுடன் மாணவர்கள் அத்துறையில் சேரவில்லை. அவரது கல்லூரியில் அத்துறையை மூடிவிட்டார்கள். இப்போது டியூஷன் சொல்லிக்கொடுத்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பதாகச் சொன்னார் அவர். ஐ.டி துறையில் ஏற்பட்ட வீழ்ச்சி இப்படி பல்வேறு முனைகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுகாதாரம், சுற்றுலா, கல்வி, ஹோட்டல்கள், நிதித்துறை, விவசாயம் போன்ற பிற துறைகளுக்கு பொறியாளர்கள் தேவையே இல்லை. அப்படித் தேவை இருந்தாலும் மிகக்குறைவு. நாட்டின் 50% ஜி.டி.பி இதுபோன்ற துறைகளில் இருந்து வருகிறது. இருப்பினும் இவற்றுக்குப் பொறியாளர்கள் தேவை இல்லை.

அப்படி இருக்க இவ்வளவு பொறியாளர்கள் படித்துமுடித்துவிட்டு என்ன செய்கிறார்கள்?

சம்பந்தமே இல்லாத துறைகளில்  பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அரசு வேலைகளுக்கு கடுமையாகப் போட்டியிடுகிறார்கள். வங்கி வேலைக்கு தேர்வு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஊடகங்களில் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சாலையில் செல்லும்போது நாம் தடுக்கி விழுந்தால் ஒரு பொறியாளர் மீதுதான் விழவேண்டும் என்கிற அளவுக்கு அவர்கள் எண்ணிக்கை அதிகம். இதற்கு என்ன அர்த்தம்? பொறியியல் படிக்க வைத்து நம் மாணவர்களை வீணடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதானே?

ஒவ்வொரு மாணவனும் பொறியியல் படித்து முடிக்க 10,15 லட்சம் செலவாகிறது. கிட்டத்தட்ட 15 லட்சம்பேருக்குக் கணக்குப் போட்டால் 1.3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வருகிறது. இது அவ்வளவும் வேறு வழியில் செலவிடக்கூடியதே. நமது நாட்டின் மொத்த பட்ஜெட்டின் மதிப்பு 21. 47 லட்சம் கோடிகள்தான் (2016) என்பது இதை ஒப்பிட்டால் புரியும்.

இன்னொரு முக்கியமான விஷயமாக பொறியாளர்களை அச்சுறுத்துவதும் அவர்களின் எதிர்காலத்துடன் விளையாட இருப்பதும் ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் எனப்படும் தானியங்கி அறிவுத்  தொழில்நுட்பம். பல இடங்களில் பொறியாளர்களும் மனிதர்களும் செய்துகொண்டிருக்கும் வேலையை இது செய்யவிருக்கிறது. ஒருவேளை இப்போது செய்துகொண்டிருக்கும் வேலைகள் மாறி வேறுவிதமான வேலைகள் கிடைக்கலாம் என்று ஆறுதல் சொல்லப்பட்டாலும் மரபுரீதியான பொறியியல் வேலைகளுக்கு அடி விழும் என்கிறார்கள். ஆனால் ‘‘ இதனால் பத்து சதவீதம் பொறியாளர்களுக்கு வேலை வாய்ப்பு கூடும்‘‘ என்கிறார் எஸ்கேபி பொறியியல் கல்லூரி தாளாளர் கே.கருணாநிதி.

2018 - ல் மட்டுமல்ல மேலும் சில ஆண்டுகளாகவே பொறியியல் படிப்பின் மீதான மோகம் குறையத்தொடங்கி, வணிகவியல் சார்ந்த படிப்பின்மீதான கவனம் இந்தியாவில் கூடி இருக்கிறது. சென்னையில் முக்கியமான கலைக்கல்லூரிகளில் பிகாம் சீட் வாங்குவது அவ்வளவு குதிரைக் கொம்பு. மேலும் சில ஆண்டுகளில் கலைக்கல்லூரிகளில் இடங்களுக்கான போட்டி அதிகரிக்கும். இடங்களை அதிகரிக்கவேண்டியது நம் ஆட்சியாளர்களின் பொறுப்பு.

பொறியியல் அல்லாமல் வேறு என்னென்ன படிப்புகளுக்கு வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன?

1.  அனிமேஷன், வி.எப்.எக்ஸ், மல்டிமீடியா

2.  பேஷன் டிசைனிங், ஈவெண்ட் மேனேஜ்மெண்ட், இண்டீரியர் டெகரேஷன்

3.  ஏரோநாட்டிகல் மற்றும் ஏவியேஷன் தொடர்பான படிப்புகள்

4.  திரைத்துறை சார்ந்த கல்வி

5.  கணிப்பொறியில் கிளவுட் மற்றும் டேட்டா சயன்ஸ்

6.  நெட்வொர்கிங், தகவல் பாதுகாப்பு

7.  அழகுபடுத்தல், மாடலிங், காஸ்மெட்டாலஜி

8.  பிட்னெஸ், உணவூட்டம்

9.  வெளிநாட்டு மொழிகள்

10.        இசை, நடனம்

இன்னும் எதிர்காலத்தில் வாய்ப்புகள் அதிகம் கிடைக்க உள்ள அல்லது வளர்ச்சி அடைய உள்ள துறைகள் என்று பார்த்தால் பின் வரும் துறைகளைக் கூறுகிறார்கள்.

மெய்நிகர் துறையில் வன்பொருள் மற்றும் மென்பொருள் தயாரிப்புக்கு திறமையான ஆட்கள் தேவைப்படுவார்கள். லட்சக்கணக்கில் வேலைவாய்ப்புகள் அதில் உருவாகும். நேனோடெக்னாலஜி துறையிலும் புதிதாக வாய்ப்புகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இ மார்க்கெட்டிங் துறை வளர்ச்சி அடையும். விண்வெளித்துறை சார்ந்த பயிற்சிகள் படிப்புகளுக்கு மதிப்பு கூடும். வயதானவர்களின் எண்ணிக்கை  பெருக இருப்பதால் அவர்களுக்கான சேவை செய்யும் துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். எரிசக்தி, மற்றும் எல்லாவிதமான துறைகளுக்கு பயிற்சியாளர்களின் தேவை வளர்ச்சி ஆகிய Akzu கட்ட வளர்ச்சிக்கான துறைகள்.

இப்போதைக்கு பொறியியல் படிப்பில் சேராமல் வணிகம் சார்ந்த படிப்பை முடிக்கும் எந்த மாணவருமே தன் பெற்றோருக்கு வேலைக்குப் போவதற்கு முன்பே பத்து லட்சரூபாய் வரை சேமித்துத் தந்துள்ளனர் என்று சொல்கிறார் ஒரு கல்வியாளர்.

ஆனால் பொறியியலே படிக்கவேண்டாம் என்று சொல்வதற்கில்லை. நல்ல தரமான கல்லூரியில் இடம் கிடைத்தால், உங்களுக்கு ஆர்வம் இருந்தால் படியுங்கள். இல்லாவிட்டால் ஆர்வமுள்ள படிப்பாகத் திட்டமிட்டு சேருங்கள்!

ஜூலை, 2018.