நெடுஞ்செழியன் 
சிறப்புக்கட்டுரைகள்

பொறியியல்: தொலைநோக்கு அற்ற கல்வித்தலைமைகள்!

நெடுஞ்செழியன்

பொறியியல், மருத்துவம் இவை இரண்டும்தான் வாழ்க்கை என்பது இல்லை. இதைத் தாண்டி வளர்ச்சிக்கு எத்தனையோ வழிகள் உள்ளன. இன்று மாணவர்களையும் பெற்றோர்களையும் சுரண்டும் நிலையில்தான் கல்வித்துறை உள்ளது. மாணவர்கள் நன்றாக அறிவு பெற்று எதிர்காலத்தில் சமூகத்துக்கு வளம் சேர்க்கவேண்டும் என்ற எண்ணம் உள்ள கல்விநிலையங்கள் குறைந்துவிட்டன.

இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்களைத் தயாரிப்பதன் மூலம் நாம் ஒரு டைம் பாமை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். இவ்வளவு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்காவிட்டால் அவர்கள் நிச்சயமாக சமூகவிரோதிகளாகவே உருவெடுப்பார்கள்.

இவர்களில் பெரும்பாலானோர் கல்லூரிகளில் படிப்பது பொறியியலே கிடையாது என்று சொல்வேன். இங்கே ஐந்துவிதமான பொறியியல் பாடத்திட்டங்கள் புழக்கத்தில் உள்ளன. ஐ.ஐ.டி&யில் படிக்கும் பொறியியல் சர்வதேச தரத்தில் இருக்கும். என்.ஐ.டி. போன்ற கல்லூரிகளில் படிக்கும் பொறியியல் கேட் (GATE)தேர்வு சிலபஸை உள்ளடக்கி இருக்கும். அரசு உதவிபெறும் கல்லூரிகளின் பாடத்திட்டம் கேட் சிலபஸுக்கு சற்றுக்குறைவாக இருக்கும்.

 அரசுக் கல்லூரிகள் மற்றும் காரைக்குடி ஏ.சி.டெக் போன்ற கல்லூரிகளில் வேறு மாதிரியான சிலபஸ். இதைத்தாண்டி இருக்கும் 550 தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஒரே மாதிரியான சிலபஸ்தான். இவை அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக்கு மட்டுமே சொல்லித்தரும் கல்லூரிகள். இது மாணவர்களின் எதிர்காலத்தை வெகுவாகப் பாதிக்கிறது. இதனால் கேட் என்கிற தேர்வுக்கு நம் மாணவர்கள் போவதே இல்லை. அகில இந்திய அளவில் கேட் எழுதுவதில் தமிழகம் 36 - வது இடத்தில் இருக்கிறது.

கல்விக்கு சம்பந்தமில்லாமவர்கள் கல்லூரிகளை ஆரம்பித்து அவர்கள் பணம் சம்பாதிக்க குறுக்குவழியில் மாணவர்களின் திறமைகளை வீணடிக்கிறார்கள். அதனால்தான் டாக்டர் அப்துல்கலாம், டாகடர் சிவன் போன்றவர்கள் போல் பத்து ஆண்டுகளாக நாம் யாரையும் உருவாக்கி அனுப்பவில்லை! நமது அரசியல் ஆதிக்கம், அதிகாரம் எல்லாவற்றையும் இழக்கவேண்டிய சூழல் இதனால் உருவாகும்.

  ஒரு இளைஞனின் திறமைக்குப் பத்து லட்சரூபாய் 22 வயதில் கிடைக்கவேண்டும் என்றால் அவர் தன் கல்வியின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் அவர் ஒரு சின்ன வேலையில் இரண்டரை லட்சரூபாய் 3 லட்சரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்கிறார். ஆனால் அவரது மதிப்பு பத்து லட்சம் என்பது அவருக்கே தெரியாது. அதே சமயம் அவரைப்போன்ற இன்னொரு மாணவர் நல்லக்கல்லூரியில் படித்திருந்து பதினைந்து லட்ச சம்பளத்தில் ஆரம்பித்திருப்பார். இவருக்கும் அவருக்கும் திறமைகள் ஏறக்குறைய ஒரே மாதிரிதான். ஆனால் இவர் அந்த பதினைந்து லட்சத்தைப் பிடிக்க பத்து ஆண்டுகள் உழைக்க வேண்டியிருக்கும்! கூகுளில் டெல்லி டெக்னாலஜிகல் யுனிவெர்சிட்டியின் வேலைவாய்ப்புகளின் சம்பள விகிதத்தைத் தேடிப்பாருங்கள்!  ஆண்டு சம்பளம் 93 லட்சம், 70லட்சம், 25 லட்சம் என்று இருக்கிறது. அதுபோன்ற சம்பள விகிதம் தமிழ்நாட்டில் எந்தக் கல்லூரியிலும் கிடையாது. சென்னை ஐ.ஐ.டி தவிர. எல்லாமே பொறியியல்தான். ஏன் அங்கே மட்டும் இவ்வளவு சம்பளம்? இங்கே இல்லை? யோசித்துப்பாருங்கள்.

நான் மாணவர்களைக் குறை சொல்லமாட்டேன். சரியாக முழுமையாக பாடங்களைச் சொல்லித்தராத கல்லூரியில் இருந்து வரும் மாணவன் எந்தப் போட்டித் தேர்வுகளிலும் வெல்ல முடிவது இல்லை. நம் தோல்விக்கு அதுதான் முக்கியக் காரணம். இதற்கு கல்வித்தலைமை தாங்குபவர்கள் முக்கியமான பங்களிப்பாளர்கள். துணைவேந்தர்களின் தொலைநோக்கும் மிக அவசியம்.

(கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன், நமது செய்தியாளரிடம் கூறியது)

ஜூலை, 2018.