சிறப்புக்கட்டுரைகள்

பொறந்ததுலேருந்து பாக்காத மழ

எஸ்.எஸ். சிவசங்கர்

அமைதியாகப் பரந்து விரிந்து காட்சியளிக்கிறது பெருமாள் ஏரி. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் அளிக்கும் ஏரி. இந்த ஏரி தான் கடந்த நவம்பர் மாதம் பல கிராமங்களை மூழ்கடித்த ஏரி. கடலூர் மாவட்டத்தில் குள்ளஞ்சாவடி அருகில் இருக்கிறது. பத்து கிலோமீட்டர் நீளமுள்ள கரை. அதன் மேல் கரையில் இருக்கும் கிராமம் இடங்கொண்டான் பட்டு.

அந்த ஊர் தீவு போலவே இருக்கிறது. ஆமாம், மெயின் ரோட்டில் இருந்து போகும் பாதையே பயமுறுத்துகிறது. சிங்கிள் ரோட். இன்னொரு வாகனம் வந்தால், ஒதுங்க இடம் இல்லை. இரண்டு புறமும் வயல் வெளி தான்.

குறிஞ்சிப்பாடி தாண்டி, கடலூர் சாலையில் வலப்புறம் திரும்புகிறது சாலை. நீண்டப் பயணம் போல் ஆயாசமளிக்கிறது. 6 கிலோமீட்டர் இருக்கும். ‘வேறு சாலை இருக்கிறதா?‘. ‘இருக்கு. அதுவும் இது போல தான்’. வழியில் ஓடை குறுக்கிடுகிறது. ஓடையில் ஆளுயரம் தாண்டி நீர் போன அடையாளம்.

ஊரை அடைவதற்குள் இயற்கையின் கோரத் தாண்டவங்களை பார்த்துக் கொண்டே சென்றோம். நாங்கள் சென்றது டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில். ஆனால் இந்தப் பகுதி பாதிக்கப்பட்டது நவம்பர் துவக்கத்தில் இருந்தே. நாற்பது நாட்களுக்கு விடாத மழை, ஒரு நாள் புயற்காற்று.

மழை வெள்ளம் வருடா வருடம் நடக்கும் சித்திரவதை. சுனாமி, தானே புயல் என சூறையாடல்கள். இந்த வருடம் கன மழை, தொடர் மழை வெள்ளம் என மக்களின் வாழ்க்கையே சீர்குலைந்து போனது. 

விவசாயம், குடியிருப்பு என எல்லாம் பாதிக்கப்பட்டு இன்னும் சில ஆண்டுகளுக்கு சிக்கலான வாழ்க்கையை எதிர் கொள்ள போகின்றனர்.

பண்ருட்டி அருகில் இருக்கும் விசூர், காட்டுக்கொல்லை கிராமங்களில் இந்த மழை பாதிப்பு புதிது. பக்கத்தில் ஓடும் காட்டாற்றில் நினைவு தெரிந்த நாட்களாய் அவர்கள் தண்ணீரையே பார்த்ததில்லை. அந்த மழை நாளில் அவர்கள் சுதாரிப்பதற்குள் வீடுகள் மூழ்குமளவுக்கு தண்ணீர்.

இருளர் காலனியில் ஓடி ஒளிவதற்கு கூட அதிக கான்கிரீட் வீடுகள் இல்லை. அதிக உயரம் தண்ணீர் வராது என நினைத்து, கூரை வீட்டின் பரணில் ஏறி அமர்ந்தனர். நீரின் உயரமும், வேகமும் அதிகரிக்க, அதிகரிக்க தாக்குப்பிடிக்க முடியாமல் மண் சுவர் கரைந்து, கூரையைக் கவிழ்த்துப் போட்டது. பரணில் உட்கார்ந்திருந்த ஒன்பது அப்பாவிகளின் உயிரும் பறி போனது.

அரசு கட்டிக் கொடுத்த சில கான்கிரீட் வீடுகள் இருந்த சுவடே தெரியாமல் போய் விட்டது. அந்த காட்டாற்றில் இப்போது நீரே இல்லை. இந்த கோரத்தை நிகழ்த்திய குற்றவாளி என்பதற்கான தடயமே இல்லை. பக்கத்தில் புரட்டிப் போடப்பட்டிருந்த மின்மாற்றி மாத்திரமே மௌன சாட்சியமாகக் கிடந்தது.

தினமும் கூலி வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்தும் இந்த இருளர் சமுதாய மக்கள் இந்தப் பெருந்துயரத்தில் இருந்து மீள வெகு காலம் ஆகும். தனியாட்கள், தொண்டு நிறுவனங்கள், வர்த்தக ஸ்தாபனங்கள் இவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி உதவினர். நீண்ட கால வாழ்வாதாரம் இவர்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும்.

கொஞ்சம் தூரத்தில் இருக்கும் வல்லம் கிராமத்திற்கு சென்றிருந்தோம். முற்றிலும் முந்திரிக் காடுகள். 600 அடி போர் போட்டால் தான் தண்ணீர் கிடைக்கும். நெய்வேலியை ஒட்டி உள்ள ஊர். அங்கு பெய்தது போலவே இங்கும் ஒரே நாளில் 46 செ.மீ மழை.

கணுக்கால் மழை தண்ணீர் பார்த்திராத ஊரில் இடுப்புயரம் தண்ணீர் கரைபுரண்டு ஓடி இருக்கிறது. நிவாரணம் வாங்க வந்த எண்பது வயது முதியவர் சொன்னார்,‘பொறந்ததுலேருந்து நான் பாக்காத மழ. நாப்பது நாள் நிக்கவே இல்ல. விடிஞ்சா மழ, பொழுது போனா மழன்னு இருந்துச்சு. அவ்ளோ தாம் போலன்னு நெனச்சுட்டோம்‘.

‘அந்த காலத்துல பஞ்சம் பொழைக்க போனது போல, வெள்ளம் பொழைக்க தூர தேசம் போற மாதிரி ஆயிடுமோன்னு சனங்க பேச ஆரம்பிச்சிட்டாங்க. இப்ப மழ உட்டுட்டாலும், பொழப்புக்கு இனிமே சின்னப் பசங்க வெளியூர் தான் போவனும் போல‘,என்ற முதியவர் கவலையில் மூழ்கிப் போனார்.

நிவாரணப் பொருட்கள் வாங்க ஊரே அந்த சின்ன ரேஷன் கடை கட்டிடம் முன்னால் திரண்டிருந்தது. பணக்கார, ஏழை, படித்த, பாமர மக்கள் என்ற பாகுபாடு காணவில்லை. எல்லாவற்றையும் அடித்து சென்ற வெள்ளம் இதையும் அடித்து சென்றிருக்கிறது.

தாமதமாக வந்தார் ஒரு பெண் கைக்குழந்தையோடு. மற்றவர்கள் வழி விட்டு அவரை முன்னே அனுப்பினர். மனிதம் பிழைத்திருக்கிறது.

(கட்டுரையாளர், குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்)

ஜனவரி, 2016.