சூரரைப்போற்று படம் வெளியாகி பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. இதில் ஆச்சரியத்துக்குரிய விதத்தில் அமைந்திருந்தது நாயகியான அபர்ணா பாலமுரளி ஏற்று நடித்த பாத்திரம். அத்துடன் அவரது நடிப்பும் பலரையும் கவர்ந்துள்ளது. அபர்ணாவிடம் பேசியதிலிருந்து.
நீங்கள் தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்கிறீர்கள். எப்படி?
மிக்க நன்றி! நான் நடிப்புத் துறைக்குள் நுழைந்ததே ஒரு ஆச்சரியமான விஷயம் தான். 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்திற்குப் பின் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்வதும் என் மீதான எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதும் பொறுப்பென நினைத்தேன். மலையாளத்தில் சில படங்களில் நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தன, தமிழிலும் மூன்று சிறப்பான படங்களில் நடித்துள்ளேன்.
முதல் படவாய்ப்பு எப்படி கிடைத்தது? முதல் முறை கேமரா முன் நின்ற போது எப்படி உணர்ந்தீர்கள்?
பள்ளியில் 8&ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது முதல்முறையாக, மலையாள குறும்படம் ஒன்றில் நடித்தேன். குழந்தை நட்சத்திரமாக ஒரு மலையாள படத்தில் நடித்தேன். ஆனால், திரைத்துறையில் ஒரு நடிகையாக அங்கீகாரம் பெற்ற படம் 'ஒரு
செகண்ட் க்ளாஸ் யாத்ரா'. அதன்பின் எனது ஆசிரியை ஒருவரின் வழிகாட்டுதலின் படி ‘மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் ஆடிஷனுக்குச் சென்றேன். அந்தப் படத்திற்குப் பிறகு நடிகையாக அடுத்தடுத்த கட்டங்களுக்கு என் திரைவாழ்க்கை பயணமாகி வருகிறது.
முதல் முறை கேமராவின் முன் நின்ற போது முற்றிலும் புதியதொரு அனுபவமாக இருந்தது. ஆனால், எனது இயக்குநர்களின் வழிகாட்டுதல்கள் இருந்ததால் கேமராவை பார்த்து பயமேதும் ஏற்படவில்லை. மகிழ்ச்சியாகத் தான் இருந்தது.
இந்நிலையில் சூரரைப்போற்று வாய்ப்பு ஜி.வி.பிரகாஷ் சாரால் கிடைத்தது. அவர் என்னிடம் சுதா மேம் பற்றி சொல்லியிருந்தார். நான் சுதாவின் தீவிர ரசிகை. எனக்கு அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. படத்தில் நடிக்கவோ, ஆடிஷன் என்றோ நான் அங்கு செல்ல நினைக்கவில்லை. அவரை சந்திக்க வேண்டும் என்பது மட்டுமே எனது எண்ணம். அப்படித் தான் அவரை பார்க்கச் சென்றேன். அதற்கு முன்பாகவே நாங்கள் போனில் பேசிய போது என்னை அவர் சல்வார் அணிந்து வரச்
சொன்னார். நாங்கள் சென்றோம். அங்கே எனக்கு ஆடிஷன் நடந்தது. சூரரைப் போற்று படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இயக்குநர் சுதா கொங்காராவுடன் பணிபுரிந்தது எப்படி இருந்தது?
சுதா மிகவும் கண்டிப்பானவர். அவரது குழுவையும் ஒழுக்கமாக வைத்திருந்தார். ஸ்கிரிப்டில் இருப்பதை படப்பிடிப்பிற்கு முன் படித்திருக்க வேண்டும் என்பதில் இயக்குநர் உறுதியாக இருந்தார். ஏனெனில், படப்பிடிப்பில் என்ன செய்யப்போகிறோம் என்பதை நாங்கள் முன் கூட்டியே தெரிந்திருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். அதனால் படப்பிடிப்பின் போது காட்சியின் சூழல் மற்றும் வசனங்கள் எங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். அவர், ஒரு காட்சி திரையில் எப்படி வரவேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தார்.
சூர்யா, உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். அவருடன் நடித்த அனுபவங்கள் பற்றி பகிர்ந்து கொள்ள முடியுமா?
சூர்யா சார் மிகவும் எளிமையானவர், சூப்பர் ஸ்டாரான அவருக்கு தமிழிலும் மலையாளத்திலும் ரசிகர்கள் அதிகம். தனிப்பட்ட மனிதராக சூர்யா மிகவும் அழகான குணங்களைக் கொண்டவர். குழுவில் இருக்கும் அனைவரையும் மரியாதையுடன் நடத்தினார். அவரிடம் இருந்து இந்த பண்பைக் கற்றுக்கொண்டேன். அவரது இந்த இயற்கையான சுபாவத்தால் அவருடன் பணிபுரிவது எங்கள் அனைவருக்கும் எளிமையானதாக இருந்தது. குறிப்பாக எனக்கும் அவருக்கும் இடையே நிறைய காட்சிகள், எமோஷனலான வசனங்கள் இருந்தன. அவருடைய பொறுமையான குணத்தால் என்னால் பயமில்லாமல் நடிக்க முடிந்தது. படப்பிடிப்புத் தளத்தில் அவருடன் சேர்ந்து பணிபுரிந்தது அற்புதமான தருணமாக இருந்தது.
அர்ப்பணிப்புடனும், கடினமாகவும் உழைக்ககூடிய மனிதர் சூர்யா என்பதை அவரது படங்களில் நாம் பார்த்திருக்கிறோம். நான் அவரை மிகவும் மதிக்கிறேன்.
சூரரைப் போற்று பார்த்த பிறகு, பலரும் சுந்தரி பற்றி பேசி வருகின்றனர். அந்த அளவிற்கு வலுவாக சுந்தரி மக்களிடம் சென்று சேர்ந்துள்ளார். சுந்தரி கதாபாத்திரத்திற்கான உங்கள் மெனக்கெடல் என்னென்ன?
சுந்தரி கதாபாத்திரத்திற்கு மிகவும் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. அதிகம் என்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. நீங்கள் பார்த்தீர்களா என்று தெரியவில்லை. சமீபத்தில் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியிருந்தது. அதில் பல நபர்களின் பங்களிப்பு இருக்கிறது.
குறிப்பாக எனக்கு வசனங்கள் சொல்லித் தந்தவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டும். முதன்மையானவர் சுதா மேம் தான். ஆனால் கதாபாத்திரத்தை இன்னும் சிறப்பாக செய்வதற்காக, வசனங்களைக் கற்றுக்கொடுக்க விருமாண்டி மற்றும் செந்தில் ஆகியோரை ஏற்பாடு செய்தார். அதுமட்டுமல்லாமல், மிகவும் தேடிப்பிடித்து சத்யா என்ற மதுரைப் பெண்ணை அழைத்துவந்தார்கள். அவர் டப்பிங் முழுவதிற்கும் எனக்கு உதவியாக இருந்தார். கலைராணி அம்மா ஒரு சகாப்த நடிகை! அவருடைய நடிப்பு பயிலரங்கத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். இவையனைத்தும் சேர்ந்தது தான் திரையில் நாம் பார்க்கும் சுந்தரி. இந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய உதவிய இவர்கள் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
சூரரைப் போற்று வெளியான பிறகு சுந்தரி கதாபாத்திரம் குறித்து கோபிநாத் மற்றும் அவரது குடும்பத்தினர் என்ன கூறினார்கள்?
படத்தைப் பார்த்துவிட்டு கோபிநாத் சார் நிறைய கருத்துகளை தெரிவித்திருந்தார். அவருக்குப் படம் மிகவும் பிடித்திருந்தது. அதேசமயம் அவரையோ அவரது புத்தகத்தையோ நேரடியாக சூரரைப்போற்று பிரதிபலிக்கவில்லை. அதனுடைய சாராம்சம் மட்டும் தான் படத்தின் கதை. ஆனால், நாங்கள் எதிர்பார்த்த பாராட்டுகளில் ஒன்றாக கோபிநாத் சாருடைய பாராட்டு கிடைத்தது. அவருடைய மகள் சமீபத்தில் எனக்கு டெக்ஸ்ட் மெசேஜ் மூலம் வாழ்த்துதெரிவித்தார். பார்கவியாக நான் நடித்திருந்த கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தாகச் சொன்னார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
சுந்தரி கதாபாத்திரம், 8 தோட்டாக்கள் மீராவை விடவும், சர்வம் தாள மயம் சாராவை விடவும் அதிக பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இந்த வரவேற்புக்கான காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்?
சூரரைப்போற்று பெரிய ஹீரோவுக்கான படம். அதுதான் காரணம் என்று நினைக்கிறேன். படத்தின் ஹீரோ, இயக்குநர் மற்றும் படக்குழு என அனைத்துமே முந்தைய படங்களை விடப் பெரியது. எனவே மக்களிடம் எதிர்பார்ப்புகள் இருக்கும். இதில் நான் கதாநாயகியாக நடிக்கும் போது கண்டிப்பாக அவர்களிடம் ஏன் என்ற கேள்வி எழும். நான் இப்போது தான் நடிக்க ஆரம்பித்துள்ளேன். அதனால் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். அதிலும் சூர்யா சார் படம் எனும் போது அதற்கென ஒரு பெரிய பெயர் உண்டு. ரசிகர் கூட்டம் உண்டு. மேலும், படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் வலுவாக இருந்தது. சாராவும், மீராவும்கூட வலுவான கதாபாத்திரங்களாக இருந்தாலும் கூட சூரரைப் போற்று படத்துடன் ஒப்பிடும்போது, இந்த படம் சூர்யா சாருடையது. அவர் போன்ற ஒரு பெரிய ஸ்டார் இருக்கும் படத்தில் சுந்தரி மாதிரியான கதாபாத்திரம் இருப்பது இன்னும் பெரிய விஷயம். எங்கள் இருவருக்கும் நேருக்கு நேராக சண்டையிடும் காட்சிகள் இருந்தன. இதன் காரணமாக தான் சுந்தரி கதாபாத்திரம் மிகவும் பிரபலமடைந்தது என சொல்லலாம்.
நீங்கள் இசைக்குடும்பத்தைச் சார்ந்தவர். நீங்களே கூட ஒரு பாடகிதான். நீங்கள் நடிப்பைத் தேர்வு செய்த போது உங்கள் குடும்பத்தினர் ஆதரித்தார்களா?
சொல்லப்போனால் நான் நடிப்பு தான் என்று தேர்வு செய்யவில்லை. நான் திரைத்துறையில் இருப்பதை விரும்புகிறேன; எனக்கான குழு சரியாக அமைந்ததால் நான் தொடர்ந்து நடிக்கிறேன். என் பெற்றோரும் கலைஞர்கள் தான், எனவே எந்த வடிவத்தில் கலை இருந்தாலும் அதனை ஆதரிக்கக்கூடியவர்கள். அவர்கள் நான் இன்னும் நன்றாக பாட வேண்டும், பாடகியாகவும் என்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டனர். ஆனால், நான் நடிப்பதில் என் குடும்பத்தார் அனைவருக்குமே மகிழ்ச்சி தான். நான் எனது இசையையும் மேம்படுத்திக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். எனது குடும்பத்தார் எனக்கு ஆதரவாக உள்ளனர்.
கனவு கதாபாத்திரம்?
நான் சுந்தரி போன்ற நன்றாக வடிவமைக்கப்பட்ட, வலுவான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். வில்லியாக கூட நடிக்கத் தயார்.
டிசம்பர், 2020.