சிறப்புக்கட்டுரைகள்

பைக் வீரனின் காதல்

புதுக்கவிதை

ஜெ. தீபலட்சுமி

திரைக்கு வந்த எந்த சினிமாவையும் விடாமல் பார்த்த 'காதல் காலத்'தில் வந்தது தான் காதல்.

தூள், சாமி, காக்க காக்க போன்ற மசாலாக்களுக்கு இடையே காதல் உருவாக்கப்பட்டிருந்த விதம் எதார்த்தமாய், படு வித்தியாசமாய்த் தோன்றியது. அதற்கே அந்தப் படத்துக்கு ஒரு சபாஷ் சொல்ல வேண்டும். படம் வந்த போது திரைச்சானல்கள் எல்லாம் பரத் சந்தியாவைக் கொண்டாடின. நடனத்தில் மட்டுமே பெயர் வாங்கி இருந்த பரத் இதில் முருகனாய் வாழ்ந்திருந்தார். நாயகி சந்தியா முதல்படம் என்று நம்பவே முடியாதபடி நடிப்பில் அசத்தி இருந்தார். தொடர்ந்து டிஷ்யும் படம் போன்ற ஓரிரு படங்கள் தவிர சொல்லிக் கொள்ளும்படி இவருக்கு அமையாதது வருத்தமே.

அவரது சேட்டைகளும், சும்மா இருந்த சங்கை ஊதி ஊதிக் கெடுத்தது போல் பரத்திடம் வம்புக்குச்

சென்று  காதலில் விழச் செய்ததும் 'அடிப்பாவி!' என்று எரிச்சல் வந்தாலும், அவர்களுக்கு இடையே வளர்ந்த காதல் ரொம்பப் பிடித்திருந்தது.

‘உனக்கென இருப்பேன்‘ பாடலும் அது காட்சிப்படுத்தப்பட்ட விதமும் நெஞ்சம் பதைபதைக்க வைக்கும்படி இருந்தது. அதுவும் காலத்தால் அழியாத இனிய பாடல்.

ஆனாலும், இறுதியில் படுகோரமாக முருகனுக்கு ஏற்படும் முடிவும், அவனை அக்கதிக்கு ஆளாக்கிய சாதி பற்றி எந்தக் குறிப்பும் படத்தின் இறுதியில் இயக்குனரின் குரலாக வெளிப்படாததும் பிற்பாடு

சாதி குறித்த புரிதல்கள் ஏற்பட்ட போது நினைவில் வந்து உறுத்தியது.

நெஞ்சில் இடியாய் இறங்கிய இந்தப் படைப்புக்குக் காதல் என்பதை விட சாதி என்ற தலைப்பு தான் பொருத்தமாய் இருந்திருக்கும்.

நவம்பர், 2018.