நடுராத்திரி ஆகிவிட்டது. வீட்டில் அமர்ந்திருக்கிறீர்கள். ஒரு சிப்ஸ் பாக்கெட், ஒரு குளிர்பான பாட்டில் தேவைப்படுகிறது. ப்ச்ச்.. எங்கே யார் போய் வாங்கிவருவது என்று யோசித்து விட்டு பலர் சும்மா இருந்துவிடுகிறார்கள். இப்படி ஏன் சும்மா இருக்கவேண்டும்? எவ்வளவோ பேருக்கு இப்படி இரவில் பொருட்கள் தேவைப்படுமே அதை நாமே வாங்கி கொடுக்கலாமே? என்று ஒருவர் யோசித்ததன் விளைவு மும்பையில் உருவாகி உள்ளது ப்ளை பை நைட் என்ற இணையதளம். என்ன வேண்டுமோ இணையத்தில் ஆர்டர் செய்யலாம்! அல்லது போன் செய்து சொல்லலாம்! 45 நிமிடத்தில் விடியற்காலை 4 மணிவரை உங்களுக்கு வேண்டியது கிடைக்கும்!
கூகுள் நிறுவனத்தில் செய்த வேலையை போர் அடித்ததே என்று விட்டிருந்தார் நேஹா. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது இந்த யோசனை தோன்றியதாக அந்திமழையிடம் கூறுகிறார் அவர்.
“கூகுள் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது ஏதாவது வித்தியாசமான வேலை செய்ய வேண்டும் என்று தோன்றியது. கூகுளை விட்டால் யாஹூவுக்கோ அல்லது வேறு ஒரு ஐடி கம்பெனிக்கோ போகமுடியும். அல்லது இங்கேயே இன்னும் ஐந்தாண்டுகள் வேலை செய்துவிட்டால் இவ்வளவு அனுபவத்தை வைத்துக் கொண்டு வேறு துறைக்குச் செல்வது பற்றிய குற்ற உணர்ச்சி ஏற்படும். எனவே நான் எனக்கான வேலையைக் கண்டு பிடிக்கவேண்டும் என்று பார்த்துக் கொண்டிருந்த வேலையை உடனே விட்டேன். டிசைனிங் கோர்ஸ் படித்தேன். மின் வணிகத் துறையில் ஏதாவது செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். எல்லாம் பழைய யோசனைகளாக இருந்தன. புதிதாக ஏதும் இல்லை. அப்போது சஞ்ஜீவ் என்ற நண்பர் சொன்னதுதான் இந்த ஐடியா. இரவில் பதினொரு மணிக்கும் மேல் மக்களுக்குத் தேவைப்படும் ஸ்நாக்ஸ் ஐட்டங்களை வீட்டுக்கே போய் டெலிவரி செய்வது. எனக்குப் பிடித்திருந்தது. பெரிதாக முதலீடு இல்லை. சில லட்சங்கள் போட்டு ஆரம்பித்துவிட்டேன்.”
ஆனால் இதே தொழிலை தெற்கு மும்பையில் இவர் ஆரம்பிக்கும் நேரத்தில் ஒரு மாதம் முன்பாக ‘நைட் கால்’ என்ற பெயரில் ஜூட் என்ற இளைஞரும் ஆரம்பித்திருந்தார். அவர் சிகரெட், கோலாக்கள் மட்டும்தான் சப்ளை செய்வார். நேஹா போல் பல்வேறு வகைப்பட்ட உணவுப் பண்டங்களும் சப்ளை செய்வதில்லை. நேஹா ஜூடை சந்தித்தார். இருவருக்கும் ஒத்துப் போகவே இப்போது ப்ளை பை நைட்டில் ஜூட் பங்குதாராக இணைந்துள்ளார்.
‘’ஜூடை நான் போட்டியாகப் பார்க்கவில்லை. அவர் தெற்கு மும்பையில் நடத்திக் கொண்டிருந்தார். நான் வடக்குப் பகுதியில் இருந்து செய்துகொண்டிருந்தேன். வெறும் சிகரெட், கோலாவிலிருந்து மாறி எல்லாவற்றையும் சேர்த்து சப்ளை செய்யும் பிசினசாக இதை மாற்றினோம். அவ்வளவுதான்.”
கம்பெனி ஆரம்பித்ததும் மும்பையில் வரவேற்பு எப்படி?
“ புது ஐடியா. தெரிந்தவர்களை எல்லாம் தொடர்பு கொண்டோம். எனக்கு இருந்த ஆன்லைன் அனுபவம் உதவியது. எல்லா செய்தித்தாள்களும் தொலைக்காட்சிகளும் ஆதரவு அளித்து செய்தி வெளியிட்டன. எனக்கு கிடைத்த முதல் ஆர்டர் என்ன தெரியுமா? சிப்ஸ் பாக்கெட்டும் சிகரெட் பாக்கெட்டும்தான்! இப்போது இரவில் தினமும் 20-25 ஆர்டர்கள் வருகின்றன. ஐம்பது ஆர்டர்கள் வரை எங்களால் சர்வீஸ் செய்யமுடியும்.”
500 ரூபாய்க்கு குறைவான பொருள்களை வாங்கிச் சென்று கொடுக்க 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். அதற்கும் மேல் ஆர்டர் செய்தால் ஃப்ரீ டெலிவரி!
அதெல்லாம் சரி இரவில் பொருட்களை வீடு தேடிக் கொண்டுபோய்க் கொடுப்பதில் நிறைய சிக்கல் உண்டல்லவா?
“பிரச்னை இல்லாமல் எதாவது உண்டா?ஆகப் பெரிய சிக்கலே இரவில் வேலை செய்ய ஆள் கிடைப்பதுதான். இது பகுதி நேர வேலைதான். நல்ல துட்டுதான் கொடுக்கிறோம். ஆனாலும் டெலிவரிக்கு சரியான ஆட்கள் கிடைப்பதுதான் இதில் உள்ள சவால். அப்புறம் வாடிக்கையாளர்களை இம்ப்ரெஸ் பண்ண சூப்பர் மேன் காஸ்ட்யூம் போட்டுக்கொண்டு எங்கள் டெலிவரி பையன்கள் போனார்கள். அதற்கு வரவேற்பும் அதிர்ச்சியும் கலந்த ரியாக்ஷன் இருந்தது. சில சமயம் மற்றவர்கள் பேரில் யாராவது ஆர்டர் செய்துவிட்டால் அதையும் சமாளிக்கவேண்டும்.”
இரவில் 11 மணிக்கு வேலை ஆரம்பித்து காலை ஐந்து மணிக்கு மூடுவீர்கள். தனிப்பட்ட முறையில் உங்களுக்குத் தூங்க நேரம் கிடைக்கவேண்டுமே?
“ஆரம்பத்தில் நானே அலுவலகத்தில் இருப்பேன்.இப்போதெல்லாம் ஆட்களைப் போட்டுவிட்டோம். எனவே ராத்திரி பூரா ஆந்தை போல முழிச்சிருக்க வேண்டியதில்லை. இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள எல்லா நகரங்களிலும் இந்த தொழிலை விஸ்தரிக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு” அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் நேஹா.
இப்போது சுமார் 32 ஐட்டங்கள் கிடைக்கின்றன. சாக்லேட்கள், சூடான பிரியாணி, பாவ்பாஜி, சோடா, காண்டம், ஈனோ என்று பல. மேலும் இவற்றை விரிவுபடுத்தவேண்டும் என்று திட்டமிடுகிறார் இவர். அத்துடன் இரவில் பணிசெய்வது பற்றிய சட்டரீதியான தகவல்கள், அதற்கான சட்ட ஆலோசனை போன்றவை புதிய விஷயங்கள் என்பதால் எளிதில் கிடைப்பதாக இல்லை என்கிறார். நிறைய பேர் எங்களை வரவேற்கிறார்கள். இது மகிழ்ச்சியாக இருக்கிறது; திருப்தியாக இருக்கிறது என்னும் நேஹாவிடம் இது போன்ற நிறுவனம் ஏதாவது வெளிநாட்டில் இருக்கிறதா? என்று கேட்டோம்.
“சாப்பாட்டு ஐட்டங்களைக் கொடுக்கும் நிறுவனங்கள் ஒன்றிரண்டு இருக்கலாம். ஆனால் எங்களைப் போல பலவகைப்பட்ட பொருள்களைத் தரும் நிறுவனம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை”.
பெங்களூருவில் கிறிஸ் கல்லூரியில் ஜர்னலிசம் படித்தவர் நேஹா. 27 வயதாகிறது. நிறுவனத்தின் பங்குதாரரான ஜூட் டிசௌசா அமெரிக்காவில் பொருளாதாரம் படித்தவர். 26 வயது இளைஞர்.
வித்தியாசமாக யோசித்து தொழில் செய்யும் இளைஞர்களுக்கு எப்போதும் வெற்றி காத்திருக்கிறது!
ஜூலை, 2013.