ஓவியம் மோகனசுந்தரம்
சிறப்புக்கட்டுரைகள்

பெருமழைப் புலவர் - அறிஞர் அறிவோம்

மு.இளங்கோவன்

தமிழுக்கு ஒவ்வொரு வகையில் காலந்தோறும் அறிஞர்கள் பணிசெய்துள்ளனர்.அதில் பழம்பெரும் நூல்களுக்கு உரைவரைந்த பெருமழைப்புலவரும் ஒருவர். அவர் அக்காலத்திலேயே புலவர் பட்டம் பெற்றிருப்பினும் ஊரில் இருந்து விவசாயம் செய்தவர். காலம் அவரை மறந்துவிட்டாலும் சமீபத்தில் அவர் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டு வறுமையில் வாடிய அவரது வாரிசுகளுக்கு தமிழக அரசு சிறப்புச் செய்தது.

பொ.வே.சோமசுந்தரனார் என்கிற பெருமழைப் புலவர்   திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த மேலைப்பெருமழை என்னும் ஊரில் 1909 இல் பிறந்தவர். தந்தையார் உழவர். திண்ணைப்பள்ளி வரை கற்றவர். தம்மகனும் திண்ணைப்பள்ளிவரை கற்க இசைந்தார்.

பொ.வே.சோமசுந்தரனார் திண்ணைப்பள்ளியில் அரிச்சுவடி, ஆத்திசூடி, வெற்றிவேற்கை, நிகண்டுநூல்கள், நைடதம், கிருட்டிணன்தூது, அருணாசலப்புராணம் முதலான நூல்களைக் கற்கும் வாய்ப்பினை முதல் ஐந்தாண்டுகளில் பெற்றார். அதன்பிறகு சோமசுந்தரனார்க்குக் கற்கும் ஆர்வம் இருந்தாலும் தம் மகனை உழவுத்தொழிலில் ஈடுபடுத்தவே தந்தையார் விரும்பினார். எனவே தந்தையாரின் கண்ணில்படாமல் தமிழ் நூல்களைப் படிக்கும் வழக்கத்தைக் கைக்கொண்டார்.

சோமசுந்தரனார்க்குப் பத்து அகவை ஆகும்பொழுது இவர்தம் அன்னையார் மறைந்தார். தந்தையார் மறுமணம் செய்துகொண்டதால் சோமசுந்தரனார் தம் தாய்மாமன் இல்லத்தில் தங்கியிருந்தார். அங்கும் இவர் கல்வி பயில ஒத்துழைப்பில்லாமல் போனது. மேலைப்பெருமழைக்கு அருகில் உள்ள ஆலங்காடு என்னும் ஊரில் வாழ்ந்த சர்க்கரைப்புலவரிடம் தம் புலமைநலம் தோன்ற சில பாடல்களை எழுதிச்சென்று காட்ட, சோமசுந்தரனாரின் கவிபுனையும் ஆற்றலையும் கல்வி ஆர்வத்தையும் கண்ட சர்க்கரைப்புலவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சென்று பயிலப் பரிந்துரைக் கடிதம் வழங்கினார்.

தமிழின்மீதும் தமிழ்இலக்கியங்களின் மீதும் அளவிலா ஈடுபாடு கொண்டிருந்த சோமசுந்தரனார்க்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மிகப்பெரிய அமுதசுரபியாகத் தமிழறிவை வழங்கியது. இவர் பயின்ற காலத்தில் சோழவந்தான் கந்தசாமியார், விபுலானந்தர் அடிகள், பண்டிதமணி கதிரேசன் செட்டியார். பொன்னோதுவார், பூவராகன் பிள்ளை முதாலான பேரறிஞர்கள் தமிழ்பயிற்றுவிக்கும் பணியில் இருந்தனர்.

அண்ணாமலைப் பல்கலையில் பயிலும் பொழுது பன்னிரண்டு ரூபாய் உதவித்தொகையைக் கொண்டு நம் புலவர் படிக்க வேண்டியிருந்தது. கல்விபயிலும்பொழுது குடும்பத்தினரின் அரவணைப்பு இல்லாமல் போனது.

எனவே பல்கலைக்கழகத்திலிருந்து மூன்றுகல் தொலைவிலிருந்த நண்பர் ஒருவருடன் தங்கித் தாமே சமைத்துண்டு ஐந்தாண்டுகள் வறுமையோடு தமிழ் படித்தார். அக்காலத்தில் சோமசுந்தரனார்க்குப் பேராதரவாகப் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் இருந்துள்ளதைப் பண்டிதமணி வரலாறு எழுதும்போது சோமசுந்தரனார் நன்றிப்பெருக்குடன் பின்வருமாறு எழுதுவார்:

...யான் பண்டிதமணியவர்கள் இல்லத்தே இரண்டாண்டுகள் ஊடாடிப்பழகும் பேறுபெற்றேன். என்பால் பண்டிதமணியவர்களும் திரு. ஆச்சியார் அவர்களும் பிள்ளைமுறைகொண்டு அன்பு பூண்டொழுகினர்...(பக்.46) ...அக்காலத்தில் யான் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தே ஒரு தமிழ்மாணவனாக இருந்தேன். பண்டிதமணியவர்கள் அரசர் வேண்டுகோட்கிணங்கிப் பல்கலைக்கழகத்திற்கு வரப்போகிறார்கள் என்ற செய்தி பரவியபொழுது என்போன்ற மாணவர்களும் ஆசிரியர்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை....( பக்.50)

சோமசுந்தரனார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவராகத் தேறினார். சோமசுந்தரனார் தமிழறியவே கல்வி கற்க வந்தாரேயன்றி வேலைக்குச் செல்லும் வேட்கையில்லாதவர். எனவே தமிழறியாத அந்நாளைய ஆளுநர் எர்சுகின் பிரபு கைகுலுக்கி வழங்கிய புலமைச் சான்றை(டிப்ளமோ)க் கிழித்துக்காற்றில் பறக்கவிட்டு ஊர்சென்றார்.

சோமசுந்தரனார் ஊரையடைந்து தம் முன்னோர் தொழிலான வேளாண்மைத்தொழிலில் ஈடுபட்டார். தம் மாமன் மகளான மீனாம்பாள் என்பவரை மணம்செய்துகொண்டு இல்லறவாழ்வில் ஈடுபட்டார்.

அண்ணாமலை நகரில் இருந்த தம் ஆசிரியப்பெருமான் பண்டிதமணியாரைப் பார்க்க ஒருமுறை சென்றபொழுது அவர் வரைந்த திருவாசக உரைப்பணியில் இவரை ஈடுபடுத்தினார். நாற்பது ரூபாய் ஊதியத்திற்குப் பண்டிதமணியார் உரைசொல்லவும் அதனை எழுதிவழங்கும் பணியில் புலவர் ஈடுபட்டார். இவ்வாறு பண்டிதமணியாருடன் பணிசெய்து உரைவரையும் போக்கினைத் தெரிந்து-கொண்ட சோமசுந்தரனார்க்குப் பின்னாளில் உரைவரையும் வாய்ப்புத்-தேடி வந்தது. கருப்பக்கிளர் சு.அ.இராமசாமி என்பவர் வழியாகத் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகத்தின் தொடர்பு அமைந்ததும் அதுநாள்வரை எரிமலைபோல் உள்ளுக்குள் இருந்த புலமைநலம் யாவும் பல்வேறு உரை நூல்கள் வழி உலகெங்கும் பரவின.

முதலில் சோமசுந்தரனாரின் படைப்புநூல்களான செங்கோல்(நாடகம்), பண்டிதமணி, பெருங்கதை மகளிர், மானனீகை(நாடகம்) முதலியன வெளிவந்தன. சு.அ.இராமசாமி அவர்களுடன் இணைந்து சூளாமணிக்கு உரை வரையத் தொடங்கினர். அதன்பிறகு சங்கநூல்களுக்கும் பிறநூல்களுக்கும் சோமசுந்தரனார் உரைவரையவும், விளக்கவுரை வரையவும் வாய்ப்பினைப் பெற்றார்.

அவ்வகையில்1.மணிமேகலை,2.சிலப்பதிகாரம்,3.அகநானூறு,4.பெருங்கதை,5.உதயணகுமாரகாவியம், 6.வளையாபதி, 7.குண்டலகேசி, 8.ஐங்குறுநூறு, 9.புறப்பொருள்வெண்பாமாலை, 10.கல்லாடம், 11.பட்டினத்தார் பாடல், 12 .  பரிபாடல், 13. குறுந்தொகை, 14.நற்றிணை ( பின்னத்தூர் நாராயணசாமி உரைக்கு விளக்கம்), 15.ஐந்திணையெழுபது, 16.ஐந்திணைஐம்பது, 17.சீவகசிந்தாமணி, 18.கலித்தொகை (நச்சினார்க்கினியர் உரைக்கு விளக்கம்), 19.திருக்கோவையார் (பேராசிரியர் உரைக்கு விளக்கம்) முதலிய நூல்களுக்கு இவர்தம் உரையும், விளக்கமும் அமைந்துள்ளன.

அடியார்க்குநல்லார், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பேராசிரியர், பின்னத்தூர் நாராயண சாமியார், உ.வே.சாமிநாதையர், இரா. இராகவையங்கார் முதலான உரையாசிரியப் பெருமக்கள் விளக்கம் கூறாத பல இடங்களை விளக்கிச் செல்வதும், பொருத்தம் இல்லாத இடங்களை எடுத்துரைப்பதும், கூடுதல் விளக்கம் தருவதும், சரியான விளக்கம்தர முயன்றுள்ளமையும் எண்ணி எண்ணி வியப்புறும் தகுதிப்பாடுகளாம்.

சோமசுந்தரனார் பல ஆண்டுகளாக உரைவரைந்ததால் உடல்நலம் போற்றவில்லை. உடல் பாதித்தது. ஏறத்தாழ நான்காண்டுகள் வலக்கையில் கடுப்பு ஏற்பட்ட அந்த நேரத்திலும் தாம் உரைசொல்லப், பிறரை எழுதச்செய்து அனுப்பி வந்தார். பக்கவாத பாதிப்பில் புதுவை சிப்மர் மருத்துவமனையில் 1972இல் இயற்கை எய்தினார்.

புலவருக்குப் பிறந்த ஊரில் நினைவுப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நினைவுமண்டபம் அமைக்கும் முயற்சியில் தமிழன்பர்கள் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழத்தின் தமிழ்த்துறைக்குப் பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் தமிழ்த்துறை எனப் பெயரிடுமாறு தமிழறிஞர்கள் பல்கலைக்கழகத்தை வேண்டிவருகின்றனர்.

பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்களின் பழுத்த தமிழறிவு இரண்டு அறிஞர்கள் வழியாக இத்தமிழகத்திற்குக் கிடைத்துள்ளதை இங்கு நினைவிற்கொள்ளவேண்டும். மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனார் ஒருவர். மற்றவர் நம்புலவர் பெருமான் பெருமழைப்புலவர் பொ.வே.சோம சுந்தரனார். இவ்விரு அறிஞர்களின் எழுத்துகளையும் ஆராய்ச்சிகளையும் ஊன்றிக் கற்றால் இவர்களின் மிகச் சிறந்த தமிழாளுமை தெரியவரும்.

பிப்ரவரி, 2013.