சிறப்புக்கட்டுரைகள்

பூவுலகின் பெருந்தோழன்!

ப.திருமாவேலன்

எனது புதையல்களில் இருந்து தேடியெடுக்கிறேன் அந்தப் புத்தகத்தை. எனது கல்லூரிக்காலக் கையெழுத்தில் 28.12.90 என்று நாளைக் குறித்திருக்கிறேன்.

புத்தகத்தின் பெயர்: ‘இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை' !

ஆமாம்! இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை. அத்தகைய நம்பிக்கையை விதைத்துப் போன தமிழகப் புரட்சியாளன் ‘பூவுலகு' நெடுஞ்செழியன்!

உலகத்தின் வனத்தினிடையே

மௌனமாக

பஞ்சம் கால் நீட்டிப்படுத்திருக்கிறது.

ஒட்டி உலர்ந்த குழந்தையின் பசிக்குரல் போல

அது தீனமாக ஒலிக்காதுதான்.

ஆனால் அதற்காக அதன் கொடூரத்தை

குறைத்து மதிப்பிட்டு விட

முடியாது.

ஒரு நாள்

அது விசுவரூபமெடுக்கும்.

உலகம் முழுவதையும் தன் காலடியில் போட்டு

நசுக்கும்.

குரூரமாகச் சிரிக்கும். - என்ற அந்தக் கவிதை வரிகள் 1990 இல் கல்லூரி மாணவனாக இருந்த எனக்கு அவ்வளவாகப் புரியவில்லை. இப்போது புரிகிறது. கொரோனா காலத்தில்,வெ.சாமிநாத சர்மாவின் வலிநிறைந்த வலிகளாய் பர்மாவில் இருந்து நடந்து வந்தவர் கால் ரணத்தை இன்றும் பார்த்தோமே.

சாலையில் வரும் வாகனத்தைக் குனிந்து பார்த்து, ஏதாவது தரமாட்டார்களா என்று ஏக்கமாய் கேட்ட குழந்தையின் முகத்தைப் பார்த்தோமே. என் வீட்டு வாசலில் நிற்கும் ஒரு பெண்ணிடம், பணம் கொடுத்தால், பணம் வேண்டாம் அரிசி பருப்பாக கொடுங்கள் என்று கேட்டு வாங்குவதைப் பார்த்தோமே. வெளிநாடும் கசந்து, வெளிநாட்டவரும் கசந்து, வெளியூர் உறவுகளும் கசந்து, ‘ஏன் அவர்கள் வருகிறார்கள்?' என்று

சொந்தங்களைத் தள்ளி வைக்கும் மனநிலை வந்தக் காலத்தைப் பார்த்தோமே!

இப்படி ஒரு காலம் வரும் என்று நெடுஞ்செழியன் சொன்னபோது புரியவில்லை தான். ‘எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறது' என்று மனது நினைத்தது தான். நான் தான் அறிவியலை அதிதீவிரமாக எதிர்க்கிறோமோ, நமக்குள் இருக்கும் மா.லெ. கம்யூனிஸ்ட் ஒருவன் தேவையில்லாமல் பிணாத்துகிறானோ என்றும் நினைத்துக் கொண்டிருந்த காலத்தில், இப்படி ஒரு காலம் வரும் என்பதைத் தீர்க்கமாகச் சொன்னவர் நெடுஞ்செழியன். பூவுலகு அவருக்கு இன்னொரு பெயர். அவரே பூவுலகின் பெருந்தோழன்!

1988 ஆம் ஆண்டு சட்டம் படிப்பதற்காகச் சென்னைக்கு வந்தேன். சட்டக்கல்லூரி விடுதியில் தங்கி இருக்கிறேன். அது ஒரு கொள்கைச் சந்தை. எல்லாக் கொள்கைவாதிகளும் அழுக்கு லுங்கிகளோடு தங்களது தத்துவாசானுக்கு பாடம் எடுக்க வந்தவர்களைப் போல பேசிக் கொண்டு இருப்பார்கள். இதில் முக்கியத் தலைகளில் ஒன்று ‘முன்னோடி' நடராசன். அவர் பலவற்றுக்கும் முன்னோடி. உலகப் பிரச்னைகளைக் கூட  சர்வசாதாரணமாகப் போட்டுப் பந்தாடுவார். அவர் மூலமாகத்தான் பூவுலகு நெடுஞ்ச்செழியன் அறிமுகம் ஆனார் என்று நினைக்கிறேன். அன்று அதிகம் பேசிக் கொள்ளவில்லை. அதன்பிறகு ஒருநாள் நானும் நண்பன் விசயகுமாரும் (இப்போது மதுரையில் மாபெரும் வழக்கறிஞர்!) செழியனைத் தேடி அண்ணாசாலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்குச் சென்றோம். ஆனந்த விகடன் அலுவலகத்தை அடுத்து நெடுஞ்சாலையில் இருக்கும். அவரது அலுவலகம் சென்றதுமே அவர் எங்களை அழைத்துக் கொண்டு வெளியில் வந்துவிட்டார். நெடுநேரம் பேசிக் கொண்டு இருந்தார். நாங்கள் கேட்டுக் கொண்டு இருந்தோம். அன்றைய வயதுக்கு முழுமையாகப் புரிந்தது என்று சொல்ல இயலாது. ஆனால் அவர் பேசுவது அனைத்தும் உண்மை என்று உணரும் வகையில் அவரது பேச்சின் தன்மை இருந்தது.

கூடங்குளம் அப்போதுதான் ஆரம்பமாக இருக்கிறது. அணு உலை என்ற அடிப்படையில் அதனை எதிர்ப்பதில் உறுதியாக இருந்தோம். ஆனால் அதன் பின்னணியில் சோவியத் இருப்பது நெருடலாக இருந்தது. அப்போதுதான் செழியன், ‘அது சமூக ஏகாதிபத்தியம்' என்று சொன்னார். அணு, மக்களைக் கொல்லும் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், அதன் அபாயத்தை அறிவியல் தன்மையோடு சொல்வதற்கு கூர்மை வேண்டும். அந்தக் காலக்கட்டத்தில் நாகார்ஜூனன், ஞாநி, எஸ்.வி.இராஜதுரை, நெடுஞ்செழியன், அ.ஜ.கான் ஆகியோர் (பலரை நான் விட்டிருக்கலாம்!) அதனை அறிவியல் பூர்வமாக விளக்குபவர்களாக இருந்தார்கள்.

அணு உலையை எதிர்ப்பவர்கள் அரைவேக்காடுகள், தொழில் நுட்பம் தெரியாதவர்கள், விஞ்ஞானப்பார்வையற்றவர்கள், மக்களுக்கான வேலைவாய்ப்பை மறுதலிப்பவர்கள், தேசவிரோதிகள் என்று சொல்லப்பட்டபோது ஹிரோசிமா, நாகசாகி கொடூரத்தை விவரித்து அதன் அபாயத்தை வெளிப்படுத்தினார் செழியன். 'உயிரை விட நீங்கள் சொல்லும் எதுவும் மேலானது அல்ல' என்று சொல்லித்தந்தார். யுரேனியம்& நியூட் ரான் - புளுட்டோனியன் என்று சிலர் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தபோது, 'எல்லா நாடும் கைவிட்ட அணுஉலையை எங்கள் தலையில் கட்டாதே' என்று புரியும் மொழியில் சொன்னார்.

சட்டக்கல்லூரி விடுதிக்கு அவரை அழைத்து கலந்துரையாடல் கூட்டம் நடத்தினோம் என்று நினைக்கிறேன். கூட்டம் முடிந்து வெளியில் கிணற்று மேடையிலும் சிறு கூட்டம் நடந்தது. அவரோடு நெருக்கமாக அது அடித்தளம் அமைத்தது. அவர் வெறும் சூழலியல் பிரச்னைகளை மட்டும் பேசியவர் அல்ல. மனித உரிமை& சமூகநீதி & பொதுவுடமை ஆதரவு& உலகமய, தாராளமய, தனியார் மய எதிர்ப்பு& இந்துத்துவ எதிர்ப்பு& ஈழவிடுதலை ஆதரவு & தமிழ்வழிக் கல்வி & சாதி ஒழிப்பு & தலித் விடுதலை ஆகிய அனைத்தும் உள்ளடக்கிய ஒரு மனிதராக இருந்தார். பின்பற்றத் தக்க போராளியாக இருந்தார். உதாரணம் காட்டத்தக்க வழிகாட்டியாக இருந்தார். இவை அனைத்துக்கும் மேலாக, தன்னைப் பின்னே வைத்து தனது கொள்கையை முன்னே வைக்கும் இயல்பினராக இருந்தார்.

நிறைய கூட்டங்களை அவர் நடத்தி இருக்கிறார். அண்ணா சாலை தேவநேயப்பாவாணர் கட்டடம் அதற்காகவே நேர்ந்துவிட்டது போல அன்று இருந்தது. அக்கூட்டங்களை நடத்துவதில் முன்னே நிற்பாரே தவிர, பேசுவதில் கர்ஜிப்பதில் சவால் விடுவதில் அவருக்கு ஆர்வம் இருக்காது. மேடைக்கு கீழே, வெளியே, வாசலில் மணிக்கணக்கில் பேசுவார். ஆனால் மேடையில் பேச மாட்டார்.

அவர் வெளியிட்ட புத்தகங்கள் தான், தமிழகத்தில் புதிய நோக்கை விதைத்தவை. பெரும்பாலும் அவை மொழிபெயர்ப்பு நூல்கள். அவரால் மொழிபெயர்க்கப்பட்டவை என்றால் தன்னுடைய பெயரைப் போடாமல் ‘பூவுலகின் நண்பர்கள்' என்ற பொதுப்பெயரைப் போடுவார். நண்பர்கள் சேர்ந்து மொழிபெயர்த்தது என்றால் அவர்கள் அனைவர் பெயரோடு தன் பெயரையும் சேர்த்து போடுவார்.

தமிழில் நெடுஞ்செழியன், புருஷோத்தமன், குமாரசாமி, செந்தில்குமரன் என்றும், உருவாக்கம் புருஷோத்தமன், பிரபாகர், நெடுஞ்செழியன், நீலகண்டன், குமாரசாமி என்றும் கூட்டம் கூட்டமாகத்தான் அவர் பெயர் பொதிந்திருக்கும். தான் தனிமனிதனல்ல, கூட்டம் என்பதை அவர் சொல்லிக் கொண்டே இருப்பார். பெரும்பாலும் அவரது புத்தகங்களை சென்னை புக்ஸ், சவுத் ஏசியன் புக்ஸ் தான் வெளியிடும். எம்.பாலாஜி இல்லை என்றால் இந்தளவுக்கு சூழலியல் & உலகமயமாக்கல் & ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு தமிழ்மண்ணில் விதைக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே. இன்றைக்கு எல்லாப் பதிப்பகங்களும் இந்தச் சிந்தனையை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் விற்கும் என்பதற்காகவாவது வெளியிடுகின்றன. ஆனால் அன்று விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் தான் இருந்தார்கள். அதில் சென்னை புக்ஸ் பாலாஜி மிகமிக முக்கியமானவர். சென்னை புக்ஸ் என்பது திருவல்லிக்கேணி எல்லீசு சாலைக்கு அருகில் இருந்தது. தாயார் சாகிப் தெரு இரண்டாவது சந்தில் இருந்தது. (தேவி திரையரங்கம் பின்புறத்தில் இருந்தும் வரலாம்!) நானும் எனது நண்பர்களும் தங்கி இருந்தது தாயார்சாகிப்  முதல் சந்தில். சுமார் பத்தாண்டு காலம் (1991 - 2000) அங்கே வாழ்ந்தேன் நண்பர்கள் குழாமுடன். அதனால் அடிக்கடி செல்லும் வாய்ப்பு இருந்தது. அப்போதும் எம்.பாலாஜி, கணேசன் (சுட்டி கணேசன் என்று இப்போது அழைக்கப்படுகிறவர்!) பஷீர், இரவி இளங்கோவன் நட்பு வாய்த்தது.

கதை,கவிதை, நாவல் படிப்பதைத் தாண்டிய வேறொரு பக்கத்தைக் காட்டியவர்களாக இவர்களை அடையாளப்படுத்தலாம். அரசியல் & இலக்கியம் என்பது சமூகப் பொருளாதார பண்பாட்டு வெளியே என்பதைத் திரும்பத் திரும்ப உணர்த்துபவராக செழியன் இருந்தார். எந்தப் பிரச்னையையும் உள்ளூர் பிரச்னையாக மட்டுமல்ல, உலகப் பிரச்னைகளோடு சேர்த்துப் பார்க்க வேண்டும் என்றார். சூழலியல் என்பது மரம் நடுவது மட்டுமல்ல, உலகத்தோடு தொடர்புடையது என்றார். ஆம்னஸ்டி இண்டர்நேஷனலின் இந்தியப் பிரிவுத் தலைவராகவும் சில காலம் இருந்தார் என்று நினைக்கிறேன். இந்திய இலங்கை ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தார். ‘தலித்முரசு' புனிதப்பாண்டியனுடன் இணைந்து செயல்பட்டார். ஏராளமான மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்கினார். பாமயன், போப்பு ஆகியோர் இதிலிருந்து வந்தார்கள்  என்று நினைக்கிறேன்.  அந்தக் காலத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இறால் பண்ணைகள் உருவாக்கப்பட்டது. இதனால் நிலம் பாழாவதைச் சுட்டிக் காட்டினார். கும்மிடிப்பூண்டியில் தாபர் டூபாண்ட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்தார். இப்படி ஒரு போராட்டத்திற்கான முன்னேற்பாடுகளுக்காக மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள ஓயாசீஸ் புத்தகக் கடைக்கு வரச் சொல்லி இருந்தார் செழியன். இடம் தெரியாமல் மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் இருந்து, கச்சேரி சாலை கடைசிக்கு நடந்து போன காலத்தை இன்று நினைக்கிறேன். அங்கு பிரபலன் இருந்தார். சமூக நோக்கு என்பது பன்முகப் பரிணாமம் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்திய காலமாக அது இருந்தது. கல்லூரிக் காலம் முடிந்து பத்திரிகை உலகுக்கு நான் அடியெடுத்து வைத்தபோது செழியன் எடுத்த பாடங்கள் அதிகம் பயன்பட்டன.

செழியனோடு இணைந்திருந்த அசுரன் பங்களிப்பு மகத்தானது. செழியனும் அசுரனும் அடுத்தடுத்து மரணம் அடைந்தார்கள். அசுரனுக்காக சென்னை தியாகராயர் நகர் சி.டி.நாயகம் பள்ளியில் நடந்த நினைவுக்கூட்டத்தில் பங்கெடுத்தேன். செழியனும் அசுரனும் இணைந்தே நினைவுகூரப்பட்டார்கள். ஆமாம் செழியனைத் தனித்துப் பேச முடியாது. அவரது நினைவில் இருந்து பல உயிர்கள் முளைத்தன. இன்றைக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு பூத்துக்குலுங்குகிறது. 2008 ஆம் ஆண்டில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு  பொறியாளர் சுந்தர்ராசன், மருத்துவர் சிவராமன், தேவநேயன்,   வழக்கறிஞர் சுந்தர்ராசன், ஆர்.ஆர்.சீனிவாசன், வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், ஆதிவள்ளியப்பன்.... என்ற ஏழு  தோழர்களால் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டது.

இவர்கள்  செழியனின் தடத்தில் நடந்து செல்கிறார்கள். அவர்களுக்கு பின்னால் எத்தனையோ பேர் இன்று போய்க்கொண்டிருக்கிறார்கள்.

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் எப்போதும் தேனீக்களென மொய்த்திருக்கும் புத்தகக் கடையாக பூவுலகு மாறியிருக்கிறது என்றால் செழியன் காணவிரும்பிய கனவு இது. அது அவரது மரணத்துக்குப் பின் வாய்த்துள்ளது. வ.உ.சி.க்கு மட்டும்  அவர் வாழ்ந்த காலத்தில் கிடைத்துவிட்டதா என்ன? அப்படித்தான்!

‘இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை' என்று

சொன்னார் செழியன். ஆமாம் அவர் நம்பிக்கை வீண் போகவில்லை. நம்பிக்கை, பெரும் நம்பிக்கையை விதைத்து வருகிறது. அவர் நிலத்துக்குள் வேராக இருக்க வேண்டும் என்று நினைத்தாரே தவிர, மரத்தில் அனைவரும் பார்க்கும் பூவாக இருக்க நினைக்கவில்லை. அந்த வேர், புகழை மறுத்தது. ஆனாலும் எல்லாப் புகழும் வேர்களுக்கே என்பதை பூவுலகு சொல்லிக் கொண்டு இருக்கிறது. அப்படிச் சொல்ல வேண்டியவர் செழியன்! 

1980 சூழலியல் நெருக்கடிக்கு உள்ளாகிறது. 1990 நிதி நெருக்கடிக்கு உள்ளாகிறது. 2000 சமூகம் நெருக்கடிக்கு உள்ளாகிறது. 2010 அரசுகள் நெருக்கடிக்கு உள்ளாகின்றன. 2020 மனித உயிர் நெருக்கடிக்கு உள்ளாகிறது. இவை இப்படித்தான் நடக்கும் என்பதை 1980 - 1990 இல்  சொன்னவர்களை என்ன சொல்வீர்கள்? செழியனை அந்தப் பெயரால் அழையுங்கள்! அப்படி நீங்கள் அழைக்கும் பெயரால் அவரை மட்டுமே அழைக்க முடியும்!

ஜூலை, 2020.