விநாயகனே வினைத் தீர்ப்பவனே, வேழ முகத்தோனே ஞான முதல்வனே‘ என்று பாட்டு ஆரம்பித்தால், படம் போடப் போகிறார்கள் என்று அர்த்தம். அது வரை சினிமாப் பாடல்கள் ஓடும். அந்த சினிமா பாடல்களை கேட்க, ஒரு ரசிகப் பட்டாளம் நிற்கும் தியேட்டர் முன். அது தான் பாட்டு கேட்க வழி. அப்போது ஆண்டிமடம் ஒரு பெரிய கிராமம். இரண்டு சினிமா தியேட்டர்கள், அருணா, சண்முகா என. அருணாவில் தான் இந்தப் பாடல். தியேட்டருக்கு முன்னால் பாட்டுப் புத்தகம் விற்கப்படும்.
தியேட்டரில் சினிமா ஆரம்பிப்பதற்கு முன் ஒலிபரப்பப்படும் பாடல்களை கேட்டு மகிழ்வது ஒரு பொழுது போக்கு. அதை விட்டால் திருமண வீடுகளில் ஒலிபரப்பாகும் பாடல்கள். முதல் நாள் இரவில் இருந்து, மறுநாள் காலை திருமணம் முடிந்து மதியம் வரை பாடல் அதம் பறக்கும்.
அதில் சிச்சுவேஷன் சாங் வேறு. மணமகள் வரும்போது ‘மணமகளே மணமகளே வா, வா. உன் வலது காலை எடுத்து வைத்து வா, வா‘பாடல் தான் கட்டாயம் ஒலிக்கும். அப்புறம் ‘புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே‘ பாடல். இவை எல்லாம் எங்கள் தலைமுறைக்கு மனப்பாடமாக இருக்கும்.
ரேடியோவில் பாட்டு கேட்பது தான் தனி நபர் ரசனைக்கான வழி. ஆல் இண்டியா ரேடியோவின் பல்வேறு வானொலி நிலையங்கள் தான் இந்த ரசனைக்கு கொஞ்சம் ஆறுதல் அளித்தவர்கள். அவர்களும் ரேஷன் போல குறைவான எண்ணிக்கையிலேயே திரைப்படப் பாடல்களை ஒலிபரப்புவார்கள். திருச்சி ஸ்டேஷனில் மாலை, சென்னை ஸ்டேஷனில் காலை, விவிதபாரதியில் இரவு, ’முத்துப்பந்தல்’ நிகழ்ச்சியில் ஒரு நேயர் தேர்ந்தெடுத்து வழங்கும் அருமையானப் பாடல்கள் என டைம்டேபிள் போட்டு, பாட்டு கேட்ட காலம் ஒன்று உண்டு.
இதெல்லாம் பெரிய ரேடியாக்களில் குடும்பமே பாட்டு கேட்ட காலம். அப்புறம் தான் கையடக்க டிரான்சிஸ்டர் வந்தது. காதுக்கு அருகில் வைத்து, தலையணைக்கு கீழ் வைத்து என பாட்டு கேட்க உதவியது.
அதே நேரம் இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தின் தமிழ் ஒலிபரப்பு, தமிழ் நேயர்களின் நெஞ்சங்களில் முதலிடம் பிடித்தது. காலை ஆரம்பித்து இரவு வரை தெவிட்டாமல் தேனிசை வழங்குவார்கள். அதன் அறிவிப்பாளர்கள் கே.எஸ்.ராஜா, அப்துல் ஹமீது ஆகியோர் தமிழர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகிப் போனார்கள்.
விதவிதமான தலைப்புகளில், விதவிதமான தொகுப்பாக திரைப்படப் பாடல்களை ஒலிபரப்புவார்கள் சிலோன் ரேடியோவில். தமிழ்த் திரை இசைப் பிரியர்களுக்கு சரியான தீனிப் போட்டவர்கள் அவர்கள் தான். அப்போது தான் டேப் ரெக்கார்டர் உள்ளே நுழைந்தது. அதே சமயம் இலங்கையில் ஈழப்போர் வலுப்பெற்றது. அதனால் இலங்கை வானொலியில் தமிழ் ஒலிபரப்பின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது.
வாக்மேன் வந்து கொஞ்சம் இசை தழைத்தது. பிறகு எப்.எம். அடுத்து செல்போன் வந்த பிறகு பாடல்கள் கேட்பது இன்னும் எளிதாகி விட்டது. சமீபத்தில் ஒரு காட்சிக் கண்டேன். ஒரு கிராமத்தில் மாட்டுவண்டியை ஓட்டிக் கொண்டு சென்றவர் தன் செல்போனில் சினிமா பாடலை ஸ்பீக்கரில் போட்டு ரசித்துக் கொண்டு போனார்.
ஒவ்வொரு இசைப் பிரியருக்கும் மனதில் ஒரு பாடல் ஓடிக் கொண்டே இருக்கும். சிலருக்கு தருணத்திற்கு ஒன்றாக ஓடும். எனக்கும் அந்த அனுபவம் உண்டு. +2 படிக்கும் காலம். பள்ளிக்கு அருகிலேயே சண்முகா தியேட்டர். மேட்னி ஷோ ஆரம்பிக்கும் முன் பாடல் ஒலிபரப்பாகும். அப்போது கமலின் ‘காக்கிச் சட்டை’ ரிலீஸ். ‘பூப்போட்ட தாவணி‘ பாட்டு வகுப்பில் இருக்கும் எங்கள் காதுகளை கட்டி இழுக்கும். இப்போது கேட்டாலும் +2விற்கே போய்விடுவேன்.
படித்து வேலைக்கு போன காலத்தில் வாழ்வின் திசையை திருப்பிய படம் ’அண்ணாமலை’. தொழில் செய்து முன்னேற தூண்டியது. அதில் ’வெற்றி நிச்சயம், இது வேத தத்துவம் ’பாடலின் பங்கு பாதி. நாம் நம்மை ரஜினியாகவே நினைக்க வைத்து முறுக்கேற்றும் பாடல். இன்று கேட்டாலும் அப்படி தான்.
நீங்களும் உங்களுக்கு ஒரு பாடலைத் தேடிக் கொள்ளுங்கள். இசை ஆற்றுப்படுத்தும்.
செப்டெம்பர், 2015.