சிறப்புக்கட்டுரைகள்

புதைந்திருக்கும் தமிழன் வரலாறு

சஞ்சனா மீனாட்சி

கல் பதுக்கைகள்

மதுரைக்கு அருகே மூவாயிரம் ஆண்டுகளுக்கு முட்பட்ட ஈமக்கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தமிழர்களின் தொன்மைக்கு இன்னுமொரு சான்றாக உள்ளது.

 சங்க கால ஈமக்காடுகள் குறித்த ஒலிச்சித்திரம் ஒன்றைத் தயாரித்து வரும் மதுரை அகில இந்திய வானொலி நிலையம் சில மாதங்களுக்கு முன்பு கல்பதுக்கைகள் குறித்த ஆய்வில் இறங்கியது. இவர்களுடன் தானம் அறக்கட்டளை மேம்பாட்டிற்கான சுற்றுலா அணியின் திட்டத்தலைவர் பாரதி, வரலாற்றுப் பேராசிரியர் முனைவர் வெங்கட்ராமன், தொல்லியல் அறிஞர் வேதாசலம், சித்தர்கள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டு வரும் கௌதம் சித்தார்த், தொல்லியல் ஆர்வலர் இரா.சிவக்குமார் ஆகியோர் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் குழு தான் மதுரைக்கு அருகில் அமைந்துள்ள நரசிங்கம்பட்டி என்ற கிராமத்தில் பல ஏக்கர் பரப்பளவில் விரிந்து பரவியுள்ள ஈமக்காட்டை  கண்டு பிடித்தது.

நரசிங்கம்பட்டி பெருமாள்மலையின் அடிவாரத்தில் அடர்ந்த முட்புதர்களைக் கொண்டுள்ள இந்த ஈமக்காட்டில் எங்கு திரும்பினாலும் கற்களாகவும், கற்குவியலாகவுமே தென்படுகின்றன.

பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இக்கல்லறைகள் அனைத்தும் நமது முன்னோரின் ’நீத்தார் வழிபாட்டு’ முறையை சொல்கின்றன. சங்ககாலத்திற்கு முற்பட்ட இனக்குழு காலத்தில் வாழ்ந்த மக்களின் நம்பிக்கையை இக்கல்லறைகள் வெளிக்காட்டுகின்றன. புதிய கற்கால மக்களின் வளர்ச்சி அடைந்த நிலையையே ‘பெருங்கற்காலம்‘ என்றழைக்கிறோம். பெருங்கற்காலத்தில் அவர்களுடைய குழுக்களை சேர்ந்தவர்கள் இறந்து விட்டால் அவர்களை அடக்கம் செய்து வழிபடுகின்ற வழக்கம் இருந்தது. இறந்தவர்களின் ஆவி, கால்நடை வளர்ச்சிக்கும், வேட்டைத் தொழிலுக்கும் உதவியாக தங்களுடன் இருக்கும் என்று அக்கால மக்கள் நம்பினர். இரும்பின் பயனை கொஞ்சம் அறிந்திருந்தனர். மேட்டு நில விவசாயத்தையும் இவர்கள் தெரிந்து வைத்திருந்தனர். மட்பாண்டங்கள், மணிகள் போன்றவை செய்யும் தொழில்நுட்பத்தை இவர்கள் அறிந்திருந்தனர்.

இக்காலத்தில் அமைக்கப்பட்ட கல்திட்டை, கல்வட்டம், தாழி போன்ற ஈமச் சின்னங்களின் அடிப்படையிலும் வாழ்விடங்களில் கிடைத்த தொல்பொருட்களின் அடிப்படையிலும் இதன் காலம் கி.மு.300க்கும் கி.பி.300க்கும் இடைப்பட்டது என்று அறிஞர்களால் கருதப்படுகிறது. இதனையே சங்க இலக்கியங்களின் காலம் என அறிஞர்கள் கருதுகின்றனர். தமிழகத்தின் வரலாற்றுக் காலம் இச்சமகாலத்தில் தான் தொடங்குகிறது.

‘மரம், மலை, ஆறுகளை வழிபடுவதற்கு முன்பாக பண்டைய மனிதர்கள் இறந்துபட்ட தங்களின் முன்னோர்களை வழிபட்டனர். உடல்களை எரித்த பின்பு மீதமிருக்கும் எலும்புகளை, இறந்தோர் பயன்படுத்திய பொருட்களை ஓரிடத்தில் அவர்களின் நினைவாகப் புதைத்தனர். அவ்விடத்தை அடையாளம் கொள்வதற்காக செதுக்கிய பாறைகளைக் கொண்டு கல்லறைகளை ஏற்படுத்தினர். அவையே கல்திட்டைகள், கல்பதுக்கைகள் என்று அழைக்கப்பட்டன. இறந்துபோன நமது முன்னோர்களை வணங்குகின்ற மரபு இன்றளவும் தொடர்ந்து நீடித்து வருகிறது. தை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் இறந்து போன முன்னோர்களை நினைத்து ஆறுகளில் குளித்து வருவது இந்த நம்பிக்கையின் தொடர்ச்சியெனக் கொள்ளலாம்’ என்றார் வரலாற்றுப் பேராசிரியர் முனைவர் இரா.வெங்கட்ராமன்.

“ஈமச்சின்னங்கள் குறித்த கட்டமைப்பு உலகம் முழுவதும் ஒரே மாதிரியாகப் பின்பற்றப்பட்டுள்ளது வியப்பிற்குரிய ஒன்றாக உள்ளது. ஓரிடத்திலிருந்து புலம் பெயர்ந்த மக்கள் கூட்டம், பிரிந்து பிரிந்து ஆங்காங்கே வாழத் தொடங்கியபோது, தாங்கள் பின்பற்றிய பழக்கவழக்கங்களை உள்ளவாறே அப்படியே கடைப் பிடிக்கத் தொடங்கியிருக்கக்கூடும் என்பது ஒரு சாரார் கூற்று. மற்றொரு சாரார், கல்பதுக்கைகளை ஒரே வடிவமைப்புடன் செய்யக்கூடிய கற்கலைஞர்கள் தொகுதி தொகுதியாக ஓரிடத்திலிருந்து பிரிந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றிருக்கக்கூடும் என்றும் அவர்களால்தான் உலகம் முழுவதும் ஒரே மாதிரியான அமைப்பு தற்போது காணக் கிடைக்கிறது என்றும் கருதுகின்றனர்’ என்கிறார் தொல்லியல் அறிஞர் முனைவர் வெ.வேதாசலம்.

மதுரை வானொலி நிலைய நிகழ்ச்சி நிர்வாகியான இராஜாராமன் “யுனெஸ்கோவின் மரபுப் பெருமைக்குரிய இடங்களாக இவற்றை அறிவிக்கச் செய்ய நாங்கள் எடுத்துள்ள முயற்சிக்கு, தமிழக அரசும், இந்திய நடுவணரசும் துணை நிற்குமானால், நமது தொன்மையைப் பாதுகாப்பதற்கு இயலும். பொதுமக்களும் இம்முயற்சியில் கைகோக்க வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்’ என்கிறார். இது கல்லறைகளும் தமிழ் வரலாற்றைப் பேசும் காலம்.

ஜூன், 2013.