சிறப்புக்கட்டுரைகள்

புதிய கலிபா

உலகம்

முத்துமாறன்

ஈராக்கின் வடபகுதியில் இருக்கும் மொசூல் அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம்.  சென்ற ஆண்டு ரமலான் மாதத் தொடக்கத்தில் அந்நகரை ஐஎஸ்ஐஎஸ் எனப்படும் இஸ்லாமிக் ஸ்டேட் என்ற அவ்வளவாகக் கேள்விப்பட்டிராத ஒரு  தீவிரவாத இஸ்லாமிய அமைப்பு கைப்பற்றியது. தற்போது ஓராண்டுகள் ஆன நிலையில் ஐஎஸ்ஐஎஸ் அல்காய்தாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முக்கிய தீவிரவாத அமைப்பாக வளர்ந்துவிட்டது. அல்காய்தாவுக்கு நாடு இல்லை. ஐஎஸ்ஐஎஸ்ஸுக்கு நாடு இருக்கிறது. மொசூலைக் கைப்பற்றியதும் பழங்காலத்தில் இருந்ததுபோது கலிபாவைத் தலைவராகக்கொண்ட இஸ்லாமிய அரசை ஐஎஸ்ஐஎஸ்ஸின் தலைவர் பாக்தாதி அறிவித்தார். அதன் கலிபாவாக தன்னை அறிவித்தும் கொண்டார்.

பல இடங்களில் இருக்கும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் ஐஎஸ்ஐஎஸ்ஸுக்கு ஆதரவை அளித்து தங்களுக்கு அங்கீகாரம் அளிக்குமாறு கோரி உள்ளன. பாக்தாதி, எல்லோரையும் அங்கீகரிக்கவில்லை. ஒரு சில அமைப்புகளை மட்டும் தமது அரசின் கிளைகளாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

பாக்தாதியின் பின்புலம் பெரிதாக யாருக்கும் தெரியாது. ஈராக்கில் பாக்தாத் அருகே பிறந்து, அங்குள்ள பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியக் கல்வியில் பிஎச்டி செய்தவர் என்று சொல்லப்படுகிறது. ஈராக்குக்குள் அமெரிக்கா ஊடுருவிய ஆண்டில் உருவான பல்வேறு தீவிரவாதக்குழுக்களில் ஒன்றை உருவாக்கிய இவர், ஒரு கட்டத்தில் ஈராக்கில் இயங்கிய அல்காய்தாவில் செயல்பட்டார். அமெரிக்கர்களால் கைது செய்யப்பட்டதாகவும் பின்னர் சாதாரண கைதியாக விடுவிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதன்பின்னர் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போராளிகளைச் சேர்த்துக்கொண்டு இவரது இயக்கம் வளர்ந்தது.

சிரியாவில் இருந்த ஒரு இயக்கத்தை இவர் அந்த இயக்கத் தலைவரை மீறி ஐஎஸ்ஐஎஸ்ஸுடன் சேர்த்துக்கொண்ட போதுதான் இவரை அனைவரும் கவனித்தார்கள். அல்காய்தா, ‘ சிரியாவுக்குள் வராதே, நீ ஈராக்கிலேயே இரு’ என்று எச்சரித்தபோது அதைப் புறக்கணித்து, சிரியாவின் அல் ரக்கா நகர், ஈராக்கின் மொசூல் என்று இரு நகர்களில் இஸ்லாமிய அரசைக் கட்டமைத்து, உலக இஸ்லாமியர்களின் தலைவராக தன்னை அறிவித்துக்கொண்டார் அல்பாக்தாதி. ’உலகெங்கும் இருக்கும் இஸ்லாமியர்கள் இங்கே இடம்பெயர்ந்துவரவேண்டும். ரோம், ஸ்பெயின் உள்ளிட்ட பெரும் இஸ்லாமிய அரசைக் கட்டமைப்போம்’ என்று முழங்கியிருக்கிறார் பாக்தாதி. தன்னை கலிபாவாக ஏற்கவேண்டும் என்று அல்காய்தாவின் தற்போதைய தலைவரான ஜவாஹிரிக்கும் கூறி உள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் நாற்பதுக்கும் மேற்பட்ட நகரங்களைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதில் மொசூல் பெரிய நகரம். அதுபோல் அன்பார் மாநிலத் தலைநகரான ரமாதியும் பெரும் நகரம் ஆகும். பாக்தாத்தில் இருந்து இந்த படையினர் 80 கிமீ தொலைவில் உள்ளனர்.

சவுதி அரேபியா, ஜோர்டான் ஆகிய நாடுகளின் எல்லைவரையில் இது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. சிரியாவில் கிழக்கு, வடக்கு, மத்தியப் பகுதிகளைக் கைப்பற்றி உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் மூன்று அணைகள் உள்ளன. இதன்மூலம் தண்ணீரும் இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

இப்படியே சில ஆண்டுகள் தாக்குப்பிடித்தால் இந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ஒரு நாடாக உலகில் சில நாடுகள் அங்கீகரிக்கலாம் என்பதுதான் நிலைமை. எனவே தான் ஐஎஸ்ஐஎஸைப் பார்த்து மேற்கத்திய நாடுகள் அஞ்சுகின்றன.

அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் ஐஎஸ்ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் குண்டுகளை வீசித்தாக்கிவருகின்றன. பாக்தாதி பலமுறை காயம்பட்டதாகத் தகவல்கள் வந்துகொண்டே உள்ளன.

ஐஎஸ்ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இஸ்லாமிய ஷரியா சட்டம் கடைப்பிடிக்கப்படுகின்றது. திருடினால் கையை வெட்டுதல், தவறுகளுக்கு கசையடி, எந்தநேரத்திலும் பெண்கள் முகத்தை மூடி இருக்கவேண்டும் போன்ற விதிகள் வழக்கத்தில் உள்ளன. மொசூல் நகரில் மக்களிடையே ஐஎஸ்ஐஎஸ்ஸுக்கு எதிர்ப்பும் இருக்கிறது. பலத்த ஆதரவும் இருக்கிறது. அங்கிருக்கும் மாற்று மதத்தவர்கள் வெளியே தப்பிச் சென்றுவிட்டார்கள்.

பாக்தாதி மொசூல் நகரில் ஒரு மசூதியில் கடந்த ஆண்டு தோன்றி உரையாற்றுவதற்கு முன்பு அவருடைய இரண்டு புகைப்படங்கள் மட்டுமே அரசுகளிடம் இருந்தன.

அவரது தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர்கள் விலை வைத்துள்ளது. இந்தக் கட்டுரை எழுதும் சமயத்தில் மூன்று கண்டங்களில் ஒரே நாளில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 60 பேர் செத்தனர். பின்னணியில் ஐஎஸ் ஐஎஸ் என்பதுதான் சந்தேகம்!

ஜூலை, 2015.