சிறப்புக்கட்டுரைகள்

பிரிக்க முடியாதது எதுவோ?

கலாப்ரியா

பொங்கல் பாட்டாளிகளின் பண்டிகை என்றால், தீபாவளி பாமரர்களின் ‘பண்டியல்'. ஆண்கள் பெண்கள், நண்டு, நாழி, சுண்டு சுளுவான் எல்லார் கையிலும் காசு நடமாடும் திருநாள், தீபாவளி.

இப்பொழுது அந்தக் காசைப் பிடுங்கும் பெருமையை டாஸ்மாக் தட்டிச் சென்றாலும், ஒரு காலத்தில் சினிமாதான் தலையாய கொண்டாட்டம். கொட்டகைகள் நிரம்பி வழியும். இங்கே டிக்கெட் இல்லயென்றால் அங்கே போவோம், அங்கேயும் இல்லையா, அது என்ன படமானாலும் பரவாயில்லை, எந்த டிக்கெட்டானாலும் பரவாயில்லை இன்னொரு தியேட்டருக்கு ஓடு என்று கூட்டம் அங்குமிங்கும் அலை மோதும். அதனால், எங்களின் காலமான 1960, 70 களின் நாயகர்களான இரண்டு பெரும் தலைகளின் படங்கள் தீபாவளி அன்று எப்படியும் வெளியாகி விடும். அவற்றுடன் போட்டியிட்டாலும் பரவாயில்லை என்று இரண்டாவது கட்ட நாயகர்களின் படங்களும் கூட்டத்தோடு கோவிந்தா போடுகிற மாதிரி வெளியாகி, முடிகிற வரை கல்லாக் கட்டும். சமயத்தில் அவையே மாபெரும் வெற்றி பெறவும் செய்யும்.

சிவாஜியின் முதல் படமான பராசக்தி 1952 தீபாவளிக்கு வந்த நினைவு. அன்று புறப்பட்ட அவரது ராக்கெட் கீழே விழவே இல்லை. அதிகமான தீபாவளி நாட்களில் இரண்டிரண்டு படங்கள் வெளியிட்டது அவர்தான். 1960 தீபாவளிக்கு பாவை விளக்கு, பெற்ற மனம் ஆகிய இரண்டு படங்கள். 1964 தீபாவளிக்கு நவராத்திரி, முரடன் முத்து, 1967 தீபாவளிக்கு இருமலர்கள் - ஊட்டி வரை உறவு, 1970 இல் சொர்க்கம் - எங்கிருந்தோ வந்தாள். இவையிரண்டுமே நூறு நாட்கள் ஓடின. இது சரியோ தவறோ இதை எம்.ஜி.ஆர் செய்ய மாட்டார். தயாரிப்பாளர்களுக்கு வீணான நஷ்டம் என்பார். உண்மையில் பந்துலு, முரடன் முத்து படத்தை சிவாஜியின் 100வது படமாக தீபாவளியன்று வெளியிட நினைத்தார். ஆனால் அந்தப் பெருமை ‘நவராத்திரி'க்கே சேர வேண்டுமென்று சிவாஜி விரும்பியதால் (முரண்டு பிடித்ததால்), பந்துலு அவர் முகாமை விட்டே வெளியேறி விட்டார். அதெல்லாம் கிளைக்கதைகள்.

என்னைப் பொருத்தவரை தீபாவளி என்றால் எம்.ஜி.ஆர் படங்கள்தான். அப்போது பத்து வயது. எல்லார் வீட்டிலும் காலை ஏழு மணிக்குள் தீபாவளிப் பூசையெல்லாம் முடிந்து புது டிரெஸ் போட்டு, வெடிகளைக் கொளுத்தி தெரு, வீட்டு வாசலையெல்லாம் குப்பையும் கரியுமாக்கிய பின் படத்துக்குக் கிளம்புகிற மும்முரங்கள் ஆரம்பமாகி விடும். என் வீட்டில் பூசை முடிய

சற்று தாமதமாகும். அன்றைக்கு (1960) மன்னாதி மன்னன் ரிலீஸ். தீபாவளியென்றால் வழக்கமாக வாங்குகிற தினமணி நாளிதழோடு, தினத்தந்தியும் வாங்கி வருவார் என் அண்ணன் ஒருவர்.ஏகப்பட்ட விளம்பரங்களோடு பேப்பர் கனமாயிருக்கும்.

‘‘கலையில் நிலா, களத்தில் புலி, குணத்தில் தங்கம், கொதித்தால் சிங்கம்'' என்று மன்னாதி மன்னன் படத்திற்கு முழுப்பக்க விளம்பரம் வந்திருந்தது. நண்பர்கள் வீட்டுக்கு வெளியே வந்து தெருவில் நின்று ‘‘ஏல சீக்கிரம் வாலே'' என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் வரத் தாமதமாகவே, அவர்கள் கிளம்பிப் போய் விட்டார்கள்.

நான் போனபோதுதான் தரை டிக்கெட் கேட் திறந்து விட்டிருந்தார்கள் கூட்டம் ‘சனக்காடு பொணக்காடாக' நெருக்கிக் கொண்டிருந்தது. முந்திப்போயிருந்த சேக்காளிகள் சிலர் கேட்டை ஒட்டி நின்றிருந்தார்கள். என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்கள். கேட் திறந்த வேகத்திலும் கூட்டம் நெருக்கியதிலும் கீழே விழுந்து அவர்கள் மேல் மிதித்து நாலைந்து பேர் ஓடி விட, மூச்சு நின்று விடுவது போலத் தவித்த ஒருவனை யாரோ வெளியே இழுத்து விட்டார்கள்.

நான் தாமதமாகப் போனதால் அதிலிருந்து தப்பித்தேன். நான் ஆள் ஒல்லியோ ஒல்லி என்பதால் எப்படியோ ஒரு ஓரமாகப் புகுந்த என்னை கூட்டமே வரிசைக்குள் அள்ளிக் கொண்டு போய் விட்டது. தூரத்து உறவு மாதிரி தூரத்துச் சேக்காளிகளில் ஒருவன் எப்படியோ வந்து விட்டான். எனக்கு ஐம்பது பேருக்குத் தள்ளி வரிசையில் நின்று கொண்டிருந்தான். என்னை விட மூத்தவன். வரிசையும் ஒழுங்காயில்லை. இடையிடையே சிலர் புகுவதும், பலர் சத்தமிட்டு அவர்களை விரட்டுவதுமாக இருந்தனர். குழப்பத்தில் அந்தத் தூரத்துச் சேக்காளி மட்டும் எனக்குப் பின்னால் வந்து நின்று கொண்டான். அவனை தியேட்டரில் கேட் திறப்பவர் வெளியே இழுக்க அவனுக்குப் பின்னால் நின்றவர், இவன் அப்பவே நிக்கிறான் என்று பொய் சாட்சி சொல்ல, அவன் தப்பித்தான். ஆனால் அவர் அவனுக்குத் தந்த தொந்தரவுகள் கொஞ்சமல்ல. அவன் என் காதுக்குள் சொன்னான், ஏல இந்த மோசமான ஆளு பக்கத்தில எப்படிலே நின்னே... பதில் சொல்வதற்குள் டிக்கெட் கவுண்டர் அருகே வந்து விட்டது.

டிக்கெட் கைக்குக் கிடைத்து கூண்டை விட்டு பரந்த வெட்ட வெளிக்கு வந்ததுதான் தாமதம், அவர் வேட்டியைப் பற்றிக் கொண்டு நாலு கெட்ட வார்த்தைகள் உதிர்த்து,

‘‘வேட்டியை உருகிட்டு விட்டிருவேன் பெரிய மனுசனாவே நீரு,'' என்று போட்டானே ஒரு சத்தம். அந்த ஆள் தியேட்டருக்குள் ஓடியே விட்டார். ஆனாலும் வேடிக்கை பார்த்த கூட்டமும் ஓடினவரின் மீறிய உருவமும் அவனைப் பயமுறுத்தி விட்டது. படம் பார்த்த திருப்தியே இல்லை. படத்தின் பின் பகுதியும் முன்பகுதியைப் போல வேகமாயில்லை. டிக்கெட்  கிடைக்காமல் போனவர்கள், எதிரே உள்ள தியேட்டரில் ‘யானைப்பாகன்' படத்திற்கு ‘வாங்க வாங்க' என்று கூப்பிட்டாங்கலே என்று போனார்களாம். படமும் பாட்டும், சிறுத்தைக்கும் கரடிக்கும், புலிக்கும் யானைக்கும், ஆட்டிற்கும் புலிக்கும், முதலைக்கும் மலைப்பாம்பிற்கும் எனக் காட்டு மிருகங்கள் சண்டை, பி.எஸ்.வீரப்பா உதயகுமார் என மனிதர்கள் சண்டை, குழி வெட்டி யானை பிடிக்கும் ‘கெத்தா' டெக்னிக்குகள் என தேவர் ஃபார்முலாக்கள் நிறைந்த படமாக நல்ல ரிசல்ட் வந்தது. சரோஜாதேவியின் அழகை மெச்சாதவர்கள் கிடையாது. அதே தீபாவளிக்கு வந்த சரோஜாதேவியின் வெற்றிப்படம் கைராசி.

அடுத்த வருடமான 1961 தீபாவளியின் கதாநாயகியும் சரோஜா தேவிதான். தாய் சொல்லைத் தட்டாதே, எம்.ஜி.ஆரின் திரைப்பட வரலாற்றில் பெரிய திருப்பு முனை. அவருக்கும் சரித்திரப் படங்களுக்குமான உறவை சொல்லாமல் கொள்ளாமல் முடித்து வைத்தது. பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டு பிரமாதமாக சிவாஜி நடித்த கப்பலோட்டிய தமிழனை வசூலில் புறங்கண்டது. ‘தா.சொ. தட்டாதே' முதல் காட்சிக்குப் போக வாய்க்கவில்லை. அப்புறமான காட்சிகளுக்கு கூட்டம் எவ்வி விட்டது. ஐந்து நாட்கள் கழித்து சனிக்கிழமை காலைக் காட்சிக்குத்தான் படம் போக முடிந்தது. செவ்வாய்க்கிழமை வந்து வெற்றி பெற்ற படங்கள் என தாய் சொல்லைத் தட்டாதே கப்பலோட்டிய தமிழன், பணம் பந்தியிலே மூன்றையும் சொல்லலாம். கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன்& ராமமூர்த்தி இசை மழையில், உடன் வந்த பாக்கியலட்சுமி படம் ஓடும் பாக்கியம் பெறவில்லை.

1962 தீபாவளிக்கு விக்கிரமாதித்தன். அப்போதெல்லாம், சமயத்தில் சிறுவர்களை பெண்கள் டிக்கெட்டில் அனுமதித்து விடுவார்கள். பெண்கள் டிக்கெட்டில் இரண்டு பேர் ஒரு பெரிய புதுத்துண்டை விரித்துப் பிடித்துக் கொள்ள, ஐம்பது பைசா வைப் போட்டு விட்டு தரை டிக்கெட்டில் போய் அமர்ந்து கொள்ள விட்டு விட்டார்கள். தரையென்றால் பெஞ்சு போட்டிருப்பார்கள். ஆனால் பெஞ்சில் எல்லாம் இடம் இல்லை. திரைக்கு முன்னால் உள்ள மேடையில் படுத்துக் கொண்டே பாதிப்படம் பார்த்தேன். இடைவேளைக்கு அப்புறம் நைசாக பேக் பெஞ்சில் போய் உட்கார்ந்து கொண்டேன். அன்று கணக்கில் வராமல் துண்டில் மூட்டை கட்டிக் கொண்டு போன காசே ஏகப்பட்டது இருக்கும். படம் பார்த்து விட்டு வருகையில் நன்றாகப் பசித்தது. ஆனால் வழியில் உள்ள தியேட்டரில் ‘அழகுநிலா' படம். ஆளே இல்லை. பசியாவது ஒன்றாவது, நுழைந்தாயிற்று. ஐந்து மணிக்கு வீட்டிற்குப் போனதும் அப்பா முதுகில் சாப்பாடு வைத்ததோடு, சுடு சோற்றில் தண்ணீரை ஊற்றி விட்டார் கோபத்தில்.

அம்மா ரகசியமாக இரண்டு ரச வடை தந்தாள். தின்று விட்டுத் தெருவுக்கு ஓடி, சங்கத்தைக் கூட்டி ஆளுக்கு ஆள் பார்த்த படங்களை விமர்சிக்க ஆரம்பித்தோம். அந்த வருடம் வந்த படங்களில் விக்கிரமாதித்தனும்,  சிவாஜியின் பந்தபாசமும் சங்கப்பலகையில் ஏற முடியவில்லை. அந்த வருடத்திய ஹிட்  எஸ்.எஸ்.ஆரின் ‘முத்து மண்டபம்' 1963 இல் பரிசு. முதல் காட்சிக்கு ஹைகிளாஸ் டிக்கெட்டுக்கு வரிசையில் நின்றும் டிக்கெட்  கிடைக்கவில்லை. மாட்னிக்கும் மழையில் தொப்பலாய் நனைந்து ஓடி வந்து கெஞ்சு கெஞ்சு என்று கெஞ்சியும் ஹைகிளாஸ் டிக்கெட் கிடைக்கவில்லை. என் இரண்டு படையெடுப்பையும் கெஞ்சலையும் பார்த்து பரிதாபப் பட்ட மேனேஜரே பெஞ்சு டிக்கட்டில் போக அனுமதித்தார். அது அந்தத் தியேட்டர் வரலாற்றிலேயே நடந்திராத அதிசயம். மேனேஜர், வரிசையில் வராத யாருக்கும் டிக்கெட்டே தரமாட்டார். 1963 இல் யாரும் எதிர்பாராமல் கே.ஆர்.விஜயாவின் முதல்படம் ‘கற்பகம்' சூப்பர் டூப்பர் ஹிட்டாகி, பரிசு, அன்னை இல்லம் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளியது. நல்ல கதையின் முன் ஸ்டார் வேல்யூவெல்லாம் நிற்காது என்பதற்கு ஒரு உதாரணம் அது.

1964இல் படகோட்டி. முதன் முறையாக ஐந்து காட்சிகள். முதல்காட்சி காலை எட்டு மணிக்கே துவங்கி விட்டது. அதற்கு டிக்கட் ரிசர்வேஷன் கொடுத்தார்கள். அதனால் அடி பிடி இல்லை. ஆனால் அந்த ரிசர்வேஷன் டிக்கெட்டை மணி பர்ஸில் பத்திரப்படுத்தி கையிலேயே வைத்துக் கொண்டு நாலு நாட்கள் அலைந்தேன்.

இந்த ஐந்து வருட வேடிக்கைக் கதையே இந்தத் தலைமுறையினருக்கு எங்கள் காலத்திய சினிமா வெறியைச் சொல்லும். அப்படி ஒரு சினிமாக் கிறுக்கு எல்லாருக்கும். பிரிக்க முடியாதது எதுவோ என்று யாரும் இன்று கேட்டாலும் தயங்காமல்  சொல்லுவேன். தமிழனும் சினிமாவும்தான்.

தீபாவளி ரிலீஸ்!

1956 ரங்கோன் ராதா, பாசவலை.

1957- முதலாளி, அம்பிகாபதி.

1958 மாயமனிதன், நான் வளர்த்த தங்கை.

1959- பாகப்பிரிவினை, தெய்வமே துணை.

1960 பாவை விளக்கு, மன்னாதி மன்னன், பெற்ற மனம்,

கைராசி, சோலைமலைராணி, யானைப்பாகன்.

1961- தாய் சொல்லைத் தட்டாதே, கப்பலோட்டிய

தமிழன், பாக்கியலட்சுமி, பணம் பந்தியிலே.

1962 -பந்தபாசம், முத்துமண்டபம், விக்கிரமாதித்தன்,

அழகு நிலா.

1963- பரிசு, அன்னை இல்லம், கற்பகம்,துளசி மாடம்.

1964 படகோட்டி, முரடன் முத்து, நவராத்திரி,

உல்லாசப்பயணம்.

1965 தாழம்பூ, பூ மாலை, நீர்க்குமிழி.

1966 பறக்கும் பாவை, செல்வம், கௌரி கல்யாணம்,

மேஜர் சந்திரகாந்த் வல்லவன் ஒருவன்.

1967- விவசாயி, ஊட்டிவரை உறவு, இருமலர்கள், நான்,

காதலித்தால் போதுமா.

1968 காதல் வாகனம், எங்க ஊர் ராஜா, ஜீவனாம்சம்.

1969 நம்நாடு, சிவந்தமண், செல்லப்பெண்.

1970 சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள், காவியத்தலைவி

நவம்பர், 2020.