சிறப்புக்கட்டுரைகள்

பிஞ்சு சாதனையாளர்கள்

சிலிக்கான் சிந்தனைகள்

குமரன் மணி

அந்த பையனுக்கு வயது 16. பள்ளிக்-கூடத்தை விட்டு படித்ததுபோதும் என்று வெளியேறிவிட்டான். இனிமையான கொண்டாட்ட வயது. தோழிகள் பின்னால் சுற்றலாம். சினிமா, விளையாட்டு என்று ஜமாய்க்கலாம்! ஆனால் பையன் பிசினஸ் ஆரம்பிக்க முடிவுசெய்தான். ஞிடூடிஞிடுச்ஞ்ஞுணtண் என்ற ஆன்லைன் கம்பெனியை 1998-ல் ஆரம்பித்தான். விளம்பரத்துறை தொடர்பானது அது! 18 மாதங்களில் அதை வேல்யூ கிளிக் என்ற நிறுவனத்துக்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்றுவிட்டான்! அதாவது பாஸ் 200 கோடி ரூபாய்! பதினெட்டு வயதில் 200 கோடிரூபாய்!!! அவன் பெயர் குருபக்ஷ்

சஹால்! நண்பர்கள் செல்லமாகக் கூப்பிடுவது ‘ஜி’

அப்புறம் நான்கு ஆண்டுகள் கழித்து 2004-ல் குருபக்ஷ் புளுலித்தியம் என்ற இன்னொரு ஆன்லைன் கம்பெனியை ஆரம்பித்தார். இது என்ன என்று கேட்கிறீர்களா? இதுவும் விளம்-பரம் தொடர்பானதுதான். ஆன்லைனில்

நீங்கள் நுழைந்தவுடன் உங்களுக்குத் தொடர்-பான விளம்பரத்தை மட்டும் காட்டக்கூடிய டெக்னாலஜி அது! நீங்கள் என்னவெல்லாம் இணையத்தில் பார்க்கிறீர்கள், செயல்-படுத்து-கிறீர்கள் என்பதெல்லாம் கவனித்துப்-பார்த்து உங்களுக்கு ஏற்ற விளம்பரங்களை முன்னிலைப் படுத்தும்.

இணைய விளம்பர உலகில் இது மிகப்பெரிய கண்டுபிடிப்பாகக் கருதப்பட்டது. அப்புறம் கேட்கவேண்டுமா? 2007-ல் புளு லித்தியம் கம்பெனியை யாஹூ வாங்கிவிட்டது! எவ்வளவு ரூபாய்க்கு? யாரங்கே கால்-குலேட்டரை எடுங்கள்! 300 மில்லியன் அமெரிக்க டாலர் இந்திய ரூபாயில் எவ்வளவு?

சுமார் 1500 கோடிகள்!!!!

முப்பது வயது ஆவதற்குள் 1700 கோடிகள் சம்பாதித்துவிட்டார் குருபக்ஷ்!

பஞ்சாபில் உள்ள தார்ன் தரான் என்ற இடத்தில் 1982-ல் பிறந்தவர் குருபக்ஷ். அப்பா அவ்தார் சிங், அம்மா அர்ஜிந்தர் சாஹல். 85-ல் பெற்றோருக்கு அமெரிக்கா வர விசா கிடைத்தது. ஐந்துவயதில் பெற்றோருடன் சான் ஜோஸ், கலிபோர்னியாவில் செட்டில் ஆனார் குருபக்ஷ்!

இப்போது ரேடியம் ஒன் என்ற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி-வருகிறார். இதுவும் ஆன்லைன் விளம்பரங்கள் தொடர்பானது. இதன் சந்தை மதிப்பு இப்போதைக்கு 500 மில்லியன் டாலர்கள் என்கிறார்கள். ஓபரா வின்ப்ரேயின் நிகழ்ச்சியில் தோன்றக்கூடிய அளவுக்கு எல்லோரும் இவரை வியந்து பார்க்கிறார்கள். ‘நம் கிரகமான பூமியின் மிகவும் இளமையான, பணக்கார தொழிலதிபர் இவர்தான்’ என்று நிகழ்ச்சியின்போது ஓபரா அறிமுகப்படுத்தினார். ஸ்கூல் படிப்பை முடிக்காத இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வந்து சேர்ந்துள்ளது. அவார்டுகள், பாராட்டுகள் என்று குவிகின்றன. தி ட்ரீம் என்ற பெயரில் இவர் புத்தகமும் எழுதி பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார்.

சீக்கியர் என்பதால் சின்னவயசில் அமெரிக்காவில் பள்ளிக்குப் போகும்போது டர்பன் அணிந்திருப்பார் குர்பக்ஷ். பிற மாணவர்கள் வித்தியாசமாகத் தெரியும் இவரைக் கடுமையாக கிண்டல் செய்திருக்கிறார்கள். வீட்டுக்கு வந்து பாட்டியிடம் சொல்லி அழுவதுதான் அப்போது இவருக்கு ஒரே ஆறுதல். ஆனால் சின்னவயதில் எதிர்கொண்ட அந்த விஷயங்கள்தான் தன்னை உறுதியான ஆளாக மாற்றின என்று அவர் இப்போது கருதுகிறார். ஓபரா வின்ப்ரே பேட்டியின் போது இவரிடம் உங்களை சின்ன வயதில் படுத்தி எடுத்த சக மாணவர்களுக்கு இப்போது என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. சற்று தடுமாறிய குருபக்ஷ், “ஒன்றுமில்லை. உங்கள் ஷோவில் கலந்துகொண்டிருப்பதே அவர்களுக்கான செய்திதான்” என்றார்.

சின்ன வயதில் இணைய உலகில் பட்டையைக் கிளப்பிய இன்னொரு நம்ம ஊர்க்காரர் சுஹாஸ் கோபிநாத். கர்நாடகாவைச் சேர்ந்த இந்த இளைஞருக்கு பள்ளியில் படிக்கும்போது கால்நடை மருத்துவர் ஆகவேண்டும் என்று ஆசை. ஆனால் 14 வயதில் இணையத்தை முதல்-முதலாக ஒரு நெட்செண்டரில் பார்த்தார். திசை மாறிவிட்டது! அதே வயதில் ஒரு வெப்சைட்டை வடிவமைத்தார். உலகம் முழுக்க பலருக்கு இணைய தளங்-கள் வடிவமைத்துக்கு கொடுக்க ஒரு நிறுவனத்தையும் தொடங்கினார். உலகின் இளம் சிஇஓ ஆனார். இந்தியா-வின் பில்கேட்ஸ் என்று அவரைப் பாராட்டு-கிறார்கள்! இப்போது அவருக்கு 26 வயது. உலகெல்லாம் அவரது குளோபல் இன்க் கம்பெனிக்கு அலுவலகம் இருக்கிறது.

இதுவரையில் இந்த பகுதியில் இணையம் தொடர்பான பல வெற்றிக்கதைகளைப் பார்த்து-வருகிறோம். எல்லாவற்றிலும் ஒரு மையச்சரடு ஒன்று இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். அது வேறுபட்டு யோசிப்பது!

ஆன்லைன் விளம்பரங்களை மேலும் பயனுள்ளதாக்கக் கூடிய இணையதளத்தைத் தொடங்கவேண்டும் என்பதுதான் இந்த பஞ்சாபி சீக்கியரிடம் சின்ன வயதில் இருந்தபொறி. இணையத்தைப் பார்த்த-வுடன் மற்றவர்களுக்கு அதை விற்கலாமே என்ற ஐடியா சுஹாசுக்கு. இதை ஊதிப் பெரிதாக்கும் அளவுக்கு தகவல் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. ஆகவே வித்தியாசமாக சிந்தியுங்கள். இணையத்துக்குள் வாருங்கள்!

கடைசியாக: கூகுள் தன்னுடைய மூன்றாவது காலாண்டு வருவாய் விவரங்களை அறிவித்துள்ளது. 14 பில்லியன் அமெரிக்க டாலர்கள்!  அதில் 45 சதவிகித வருவாய் வளர்ச்சி இருக்கிறது என்று கூறியுள்ளது. கூகுளுக்கு எப்படி வருவாய் கிடைக்கிறது? கூகுள் இமெயில் உள்ளிட்ட சுமார் 100 சேவைகளை இணையத்தில் ஒரு காசு கொடுக்காமல் பயன்படுத்த நமக்குக் கொடுத்துள்ளது. அதில் வரும் விளம்பரங்கள் மூலமே அவர்கள் சம்பாதிக்கிறார்கள். சுமார் 97% சதவிகிதம் இதுதான். அடுத்த மாதம் இது பற்றி விவரமாகப் பார்ப்போம்!

டிசம்பர், 2012.