சிறப்புக்கட்டுரைகள்

பாரதிமணி வாழ்க்கைக்குப் பின்னும்

அந்திமழை இளங்கோவன்

தில்லியில் இருந்தவரை சுமார்  இருநூறு  தடவைகளாவது  நிகம்போத் சுடுகாட்டுக்குப் போயிருப்பேன். சாவு சொல்லிக் கொண்டு வருவதில்லை.

வீட்டிலிருக்கும் மற்றவர்களுக்கு தனக்கு நெருக்கமானவர் சாவைப்பார்ப்பது முதல் அனுபவமாகத்தான் இருக்கமுடியும். அதிலும் கணவன் மனைவியாக வேலை நிமித்தம் தில்லிக்குவந்து தனிக்குடித்தனமாக வாழ்ந்துவருபவர்களுக்கு இந்தச் சோகம் அணுகினால் உடைந்துபோய் இருப்பார்கள்.

இன்னும் வேர்பிடிக்காத, மொழி தெரியாத புதிய ஊரில், விபத்திலோ நோயிலோ தன் ஒரே துணையான கணவனைப்பறிகொடுத்த அந்தப் பெண்மணியின் நிலையை சற்று நினைத்துப் பாருங்கள். அந்த சமயத்தில் செய்தியறிந்து, அப்போ திருந்த என் ஓட்டை ஸ்கூட்டரில் அங்கே போய் சொந்தூரில் யார்யாருக்கு தொலைபேசியில் தகவல் சொல்லவேண்டுமென்பதைத் தெரிந்துகொண்டு, இந்த சோகச்செய்தியை பக்குவமாக தெரிவிப்பது எளிதல்ல. கைபேசிகளும், எஸ்டிடியும் வராத காலத்தில், ட்ரங்க் கால் புக் பண்ணி, அவர்கள் குக்கிராமத்தில் தொலைபேசி இருக்கும் ஒரே வீட்டுக்கு தகவல் சொல்லி உறவினர்களைக் கூப்பிட வேண்டும். அவரவர் மத சம்பிரதாயப்படி, இறந்தவரை புதுத்துணியால் போர்த்துவது, தலை தெற்குப்பக்கம் வைத்து,   தலைமாட்டில் தெற்கே பார்த்து விளக்கேற்றுவது, உள்ளூரில் இருக்கும் அவர்களது நண்பர்கள் உறவினர்களுக்கு தகவல் சொல்வது, இறந்தவரின் மரண சான்றிதழ் கேட்டுவாங்கி, அதற்கு நாலைந்து  நகல் எடுத்து, ஒரிஜினலை பத்திரமாக வைத்திருப்பது, மந்திர் மார்க்கில் இருக்கும் தில்லி கார்ப்பொரேஷன் ஆபீசுக்குப்போய் ரூ.50 கட்டி நிகம்போத் போக அமரர் ஊர்திக்குப்பதிவு செய்வது, அவர்களுக்கு சடங்குகளில் நம்பிக்கையிருந்தால், அதற்கான புரோகிதரை வரவழைப்பது, அவர் வருமுன்பே, யூஸப் ஸராயிலிருக்கும் ஒரே கடையில், பாடை,காடாத்துணி, பானைகள், கயிறு, வறட்டி, நெய் போன்றவை வாங்கித் தயாராக வைப்பது, நெருங்கியவர்கள் சென்னையிலிருந்து விமானத்தில் வருவதாக இருந்தால் அவர்களுக்கு வண்டி அனுப்புவது என்று நான் ஒரு தடவை கூட சாகாமல், செத்தவர்களுக்கு என்னாலான மரியாதையை தொடர்ந்து செய்திருக்கிறேன். இறந்தவர்களுக்கு பசி இருக்காது. துக்கத்திலிருக்கும் மற்றவர்களுக்கு அந்த 'இடும்பைகூர்' வயிறு இருக்கிறதே!

அவர்களுக்கு தேவையான காபி, டிபனுக்கு பக்கத்திலுள்ள தெரிந்தவர் வீட்டில் சொல்லி ஏற்பாடு செய்யவேண்டும். அந்தக்காலத்தில், தில்லியில் எங்கே தமிழர் வீட்டுச்சாவு நிகழ்ந்தாலும், உடனே 'மணியைக்கூப்பிடு, அவனுக்குத்தான் எல்லாம் தெரியும்'என்று சொல்லுமளவுக்கு ஏறக்குறைய நான் ஒரு 'சவண்டிப்பிராமணன்' ஆகியிருந்தேன்! பாடை கட்டுவதில் எனக்கு இணையேயில்லை. கயிறு எங்கெங்கே இறுகவேண்டும் எப்படி முடிச்சுப்போடவேண்டுமென்பது தெரியாவிட்டால், அமரர் ஊர்தியில் போகும்போதே கயிறு தளர்ந்து, சடலம் ஆட ஆரம்பித்துவிடும்!

என் வேலை இத்துடன் முடிவதில்லை. நம்பிக்கையான இருவரை முன்கூட்டியே சுடுகாட்டுக்கு மரணச் சான்றிதழ் நகல், பணத்துடன் அனுப்ப வேண்டும். வாழும்போது மனிதனை வாட்டும் க்யூவரிசை அவன் இறந்தபிறகும் விடுவதில்லை! நிகம்போத் சுடுகாட்டில் போனவுடன் இறப்பு  பதிவேட்டில் பதிவு செய்ய க்யூ, விறகு வாங்க பணம் கட்டி,முண்டுமுடிச்சு இல்லாத நின்று எரிகிற விறகை, விறகுக்குவியலில் நாமே மேலே ஏறி பொறுக்கியெடுத்து எடைபோட்டு தள்ளுவண்டியிலேற்றுவதற்கு க்யூ, சடலத்தை எரிப்பதற்கான இடத்தை பதிவு செய்வதில் க்யூ, இப்படி க்யூ வரிசை இறந்த பிறகும் தொடரும்!

-இது தில்லியில் நிகம்போத் காட் (சுடுகாடு) என்ற பாரதி மணி எழுதிய கட்டுரையின் ஒருபகுதி.

பாரதி மணியின் இந்த கட்டுரையை படித்த போது அவரது கடைசி நாளன்று அவருடன் இருக்க வேண்டும் என்று தோன்றிற்று.

மிகவும் சினேகமான அவரது வார்த்தைகள் மனதிற்கு இதமானவை. அவரது 80வது பிறந்த நாளன்று பெங்களூர் கொரமங்களாவிலிருந்த மகள் வீட்டிற்கு என் மகன்களோடு போய் வாழ்த்து சொன்னேன்.அந்திமழையோடு தனிப் பிரியம் கொண்டிருந்தார்.

அவர் காலமான செய்தி தெரிந்தபின் கடைசி மரியாதை செலுத்த கிளம்பிக் கொண்டிருந்த போது தான் பின் வரும் செய்தி வந்தது.

‘‘எங்கள் அன்புக்குரிய தந்தையார் ஸ்ரீ எஸ்.கே.எஸ்.மணி என்ற பாரதி மணி நேற்று மாலை ஐந்து மணிக்கு காலமானார். நீண்ட காலமாக புற்றுநோயுடன் மிகுந்த தைரியத்துடன் வீறார்ந்து போராடிக்கொண்டிருந்த அவர் என் கரங்களில் அமைதியாக உயிர் நீத்தார். அவரை நீண்ட காலமாக அறிந்திருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் அவர்மீது காட்டிவந்த உங்கள் அன்புக்காகவும் ஆதரவுக்காகவும் நானும் என் குடும்பத்தினரும் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம். தனது உடலை மரணத்துக்குப்பின் அறிவியல் ஆய்வுக்காக தானம் செய்வதென்று மூன்று வருடங்களுக்கு முன் முடிவெடுத்திருந்தார். அவர் விருப்பப்படியே அவரது பூதவுடலை செயிண்ட் ஜான் மருத்துவக் கல்லூரிக்கு வழங்கியுள்ளோம். இதன் காரணமாக, எங்கள் இல்லத்தில் எந்தவிதமான பூசைகளோ, சடங்குகளோ நிறைவேற்றப் போவதில்லை.

மிகவும் நடைமுறைவாதியான அவர், தனது மரணத்துக்காக நாங்கள் துக்கம் அனுஷ்டித்துக்கொண்டு முடங்கியிருக்கக்கூடாதென்றும், எங்கள் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ளவேண்டுமென்றும் எங்கள் குடும்பத்தினரிடம் வலியுறுத்திக் கூறியிருந்தார். அவர் சொல்லுக்கு மதிப்பளித்து கனத்த இதயங்களுடன் நாங்கள் அனைவரும் எங்கள் பணியிடங்களுக்குத் திரும்பியிருக்கிறோம். எனவே தனிமையில் கழிக்க விரும்பும் எங்கள் துக்க நேரத்தை மதிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் அழைப்புகளை எங்களால் ஏற்க இயலாது. தயவுசெய்து அவருக்காக பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். நம் எல்லோருடைய இதயங்களிலும் வாழ்ந்துகொண்டிருப்பவர் அவர்.

மாயா ஏஞ்சலூ ஒருமுறை சொன்னது:‘‘என் வாழ்வின் நோக்கம் உயிர்த்திருப்பதல்ல, ஆக்கப்பணியாற்றுவதுதான். அப்பணியை சற்று பேரார்வத்துடனும், சற்று பரிவுணர்வோடும், சற்று சுவாரஸ்யத்தோடும், சற்று நளினத்தோடும் செய்வது.'' என் தந்தை எனும் மகத்தான மானுடனை கச்சிதமாக வர்ணிக்கும் கூற்று இதுதான். அப்பா, நீங்கள் ஒரு பேராளுமை! உங்கள்மீது நாங்கள் கொண்டிருக்கும் அன்பு வானிலும் உயர்ந்தது.

நீளமைதி கொண்டிருங்கள் அப்பா.

 - அனுஷா - ரேவதி. ‘

வாழ்ந்தபோது மட்டுமல்லாமல், வாழ்க்கைக்குப் பின்னும் பாரதிமணி தனித்துவமானவர்தான்.

டிசம்பர், 2021.