நாஞ்சிலார் ஓவியம் : ஜீவா
சிறப்புக்கட்டுரைகள்

பாட்டுப் போர்த்திய பட்டத்து யானை

ப.திருமாவேலன்

அரும்பு மீசை,சுருள் முடி, கறுப்புக் கண்ணாடியில் இருந்து வெளிப்படும் வெள்ளை விழிகள், சிவந்த உதடுகள், நெஞ்சை அழுத்தும் சந்தன நிற ஜிப்பா சட்டை, பட்டு வேட்டி, பட்டுத் துண்டு, கையில் ஒரு மந்திரக் கோல்.

 ( அதுவும் சந்தனக் கட்டை. நடைப்பயிற்சிக்குச் செல்லும் போது ஒரு பிடிமானம் வேண்டும் என்பதற்காக வைத்துக் கொள்ள ஆரம்பித்தவர், பின்னர் அதுவே அவரது அடையாளம் ஆனது!). இதுதான் நாஞ்சிலார்.

சிரிக்கும் போது பல் தெரியாது. சாப்பிடும்போது நாக்கு தெரியாது. நடக்கும் போது பாதம் தெரியாது. பேசும்போது உடல் அசையாது.கொந்தளிக்கும்
சொற்பொழிவாகவே இருந்தாலும் குரலில் நளினம் மட்டுமே இருக்கும். நடுக்கம் இருக்காது. 'நாஞ்சிலார் பேச்சு பட்டத்து யானை பவனி வருவது போல இருக்கும்' என்பார், கலைஞர். ஆமாம், பட்டுப் போர்த்திய பட்டத்து யானை அவர். அந்த வெள்ளை யானைக்கு முன்னால் நான் உட்கார்ந்து இருக்கிறேன்.

ஜூனியர் விகடன் ராவ் அவர்கள், நாஞ்சிலாரை மாலை 5 மணிக்கு சந்திக்க வருவதாகச் சொல்லி இருந்தார். அவரால் செல்ல முடியவில்லை. அப்போது நான் விகடன் பேப்பர் மாலை நாளிதழின் நிருபராக இருக்கிறேன். என்னை அழைத்தார் ராவ்.'நாஞ்சிலாரை பார்க்க வருவதாகச் சொல்லி இருந்தேன். போக முடியவில்லை. காத்திருப்பார்.
நீங்க போயி என்னன்னு கேட்டுட்டு வாங்க' என்றார். 1998ம் ஆண்டு அது. நாஞ்சிலார் அப்போது வருவாய்த்துறை அமைச்சர். 'நான் போய் அவரிடம் என்ன பேசுவது?' என்றேன்.‘நான் அனுப்பினேன்னு
சொல்லுங்க' என்றார். புரசைவாக்கம் மூக்காத்தாள் தெரு வீட்டுக்குச் செல்லும் போது எத்தனையோ நினைவுகள்.

பள்ளி மாணவனாக நான் இருந்தபோது'தராசு' வார இதழில் நாஞ்சிலார் எழுதி வந்த'மேடும் பள்ளமும்' தொடர் நினைவுக்கு வந்தது. அவரது எழுத்து நடையே, சிலுக்கு நடையாக இருக்கும்.

தடித்த தோள்கள், மரத்துப் போன மண்டைகள், நரம்பற்ற நாக்குகள், கயிறு திரிப்பதில் கைதேர்ந்தவர்கள், நடமாடும் அவமானச்
சின்னங்கள், சுயநலத்தை
சுட்டெரித்தவர்கள், பொதுநலனுக்காகவே பிறப்பெடுத்தவர்கள், எட்டப்பன் எவ்வளவோ மேல், ஜூடாஸ் தங்கமானவன், புரூட்டஸை பழிக்க நான்  விரும்பவில்லை, சந்தர்ப்பவாத சழக்கர்கள், விஷ விவசாயிகள், பூந்தோட்டத்தில் புகுந்த கருநாகங்கள், விஷத்தை கொடுக்கில் சுமந்து செல்லும் தேள்கள்... இப்படி அவரது சொற் கற்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.'தராசு'வில் வாரந்தோறும் வார்த்தை விளையாட்டுகளாக அரசியல் பாடம் எடுத்துக் கொண்டு இருந்தார், நாஞ்சிலார். தனது வாழ்க்கைப் பயணத்தில் வந்து போன மனிதர்களின் மூலமாக தமிழைத் தவழவிட்டுக் கொண்டு இருந்தார். அவருக்கும் பிரதமர் இந்திராவுக்கும் நடந்த உரையாடல் அந்த வயதில் ஈர்ப்புக்குரியதாக இருந்தது.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் கோட்& சூட்&டை உடையில் நாஞ்சிலார் நின்று கொண்டு இருக்கிறார். அன்றைய தினம் அவரது நண்பர் கொடுத்த ஒரு ரோஜா மலரை தனது கோட் &இல் மலர விட்டிருந்தார் அவர். லாபியில் பிரதமர் இந்திரா நடந்து வருகிறார்.'மனோகரன், மிகவும் ஸ்மார்ட்டாக இருக்கிறீர்கள்' என்கிறார், இந்திரா. நம்ம ஆள் எப்படி? 'நான் எப்போதுமே ஸ்மார்ட் தான் ' என்கிறார், நாஞ்சில்.'இருந்தாலும் இன்று மேலும் ஸ்மார்ட்டாக இருக்கிறீர்கள்' என்கிறார், இந்திரா. ஆஹா! நம்ம ஆள், இந்திராவையே மலைக்க வைத்தவர் என்பது எவ்வளவு பெருமை! இந்தச்
சித்திரம் மனதில் இருந்தது.

தினகரன் அதிபர் கே.பி.கந்தசாமி நடத்திய ஐம்பெரும்விழா, அறிவாலயம் கலைஞர் மண்டபத்தில் நடக்கிறது. தலைவர்கள் வரிசையாக வந்து கொண்டு இருக்கிறார்கள். கே.பி.கே.குடும்பத்தினர் வாசலில் நின்று வரவேற்றுக் கொண்டு இருக்கிறார்கள். என்னோடு படித்த  சட்டக்கல்லூரி மாணவர்களோடு  அங்கு சென்றிருந்த நான் வெளியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறேன். நாஞ்சிலார் வந்து இறங்குகிறார். வணக்கம் வைக்கிறார் கே.பி.கே. அப்போது நாஞ்சிலார், தனது கையில் இருந்த மந்திரக்கோலால் ஸ்டைலாக கே.பி.கே.யை ஒரு தட்டு தட்டுகிறார். அது தான் அவர் வைத்த வணக்கம். இந்திரா சொன்ன வெரி வெரி ஸ்மார்ட் காட்சி அது. (அந்த விழாவுக்கு வைகோ தான் நன்றியுரை. அந்த நாள் இரவில் தான், ஈழத்துக்கு ரகசியப் பயணம் மேற்கொள்கிறார் வைகோ!)

ராவ் அவர்கள் சொல்லி நாஞ்சிலார் வீட்டுக்குப் போனேன் அல்லவா? அங்கே இருந்தார், அண்ணன் சின்னி கிருஷ்ணன். நாஞ்சிலாரின் நிழல். அன்று முதல் அவரது நிழலை நீங்காதவன், நான்..இன்றுவரை.'ராவ் சார் சொன்னார்' என்றேன். நாஞ்சிலாருக்குப் பக்கத்தில் உள்ள இருக்கை தரப்பட்டது.'எந்த ஊர்?' என்பதில் தொடங்கி நாஞ்சிலார் விசாரித்தார்.

அவரே கேட்காமல், மேலே சொல்லிய இந்திரா, கே.பி.கே. காட்சிகளை நான் சொன்னேன். ஆள்
காட்டி விரலால் இரண்டு உதடுகளையும் மறைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டார். கழுத்துக்கு வலிக்காமல் தலையை அசைத்துக் கொண்டார். சூடான சூப் வந்தது. கொதிக்க கொதிக்க டம்ப்ளரில் துண்டு சுற்றிக் கொண்டு ஊதி ஊதிக் குடித்தபடியே கேட்டுக் கொண்டார்.'நேருவின் மகள் மட்டுமல்ல, நேருவின் அறிவை மொத்தமாகப் படித்தவர் இந்திரா' என்றார்.

மொழி தொடர்பாக ஒரு ஆலோசனைக் கூட்டம் பிரதமர் இந்திரா தலைமையில் நடந்துள்ளது. அதில் கலந்து கொண்ட நாஞ்சிலார், "இந்தி வளர்ச்சி பெறாத மொழி, அதை எங்கள் தலையில் கட்டாதீர்கள்'' என்று சொல்லி இருக்கிறார். பிரதமருக்குக் கோபம் கொப்பளித்துவிட்டது. "உங்கள் மொழியை எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திக் கொள்ளுங்கள். மற்ற மொழிகளைத் தாழ்த்தாதீர்கள்‘ என்றார். இதைக்கேட்டதும் இவர் கோபம் ஆகிவிட்டார். "அப்படியானால் உங்களோடு பேசிப் பயனில்லை''என்று சொல்லி அந்தக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்துவிட்டார். அதாவது இந்திராவின் நட்புக்காக கொள்கை சமரசம் செய்து கொள்ளாதவர்.

இதேபோல்தான் பிரதமராக நேரு இருந்தபோதும் மொழி பற்றிய விவாதம்.'நான் இருக்கும் வரை இந்தி திணிக்கப்படாது' என்று நேரு சொல்லி இருக்கிறார். உடனேயே,'நீங்கள் எவ்வளவு காலம் இருக்க முடியும், அரசியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அது சாத்தியமா?' என்று கேட்டவர் நாஞ்சிலார். நேருவும் தானும் ஒன்றாக சிகரெட் பிடிக்கும் அளவுக்கு நட்பு இருந்ததாகச் சொல்லி இருக்கிறார்.'இலங்கைக்கு தூதராக நியமிக்கப்படுபவர் தமிழராக இருக்க வேண்டும்' என்று நேருவிடம் சொன்னவர் இவர்.'தூதர்கள் நியமனத்தில் மொழித்தகுதியை வைக்க முடியாது' என்று மறுத்திருக்கிறார் நேரு. பிரதமராக சாஸ்திரி இருக்கும்போது தமிழகத்தில் மொழிப்போராட்டம் நடந்தது. காங்கிரஸ் ஆட்சி காவல்துறையை வைத்து அடக்கியது. சாஸ்திரிக்கு போன் செய்து,'ரத்த வெறி கொண்ட முதலமைச்சரை எப்போது மாற்றப் போகிறீர்கள்?' என்று கேட்டவர் நாஞ்சிலார்.

இந்தி மொழி வெறியராகவே செயல்பட்டவர் ராம்மனோகர் லோகியா. அவரிடம் ஆங்கிலத்துக்காக வாதாடினார் நாஞ்சிலார்.'இந்தியாவில் 2 சதவிகிதம் பேர் பேசும் ஆங்கிலத்தை சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் எப்படிச் சேர்ப்பது?' என்று கேட்டார், லோகியா.'560 பேர் மட்டுமே பேசும் சமஸ்கிருதத்தை எப்படி எட்டாவது அட்டவணையில் சேர்த்தீர்கள்?' என்று கேட்டவர் நாஞ்சிலார். அதாவது வடநாட்டுக்கு, தென்னாட்டின் கொள்கையை நேரில் உணர்த்தியது தான் நாஞ்சிலாரின் சாதனை.

 அதற்கு அவரது ஆங்கில அறிவு அடித்தளமிட்டது. அதை விட முக்கியமானது கொள்கை உறுதி, சமரசம் செய்யாத தன்மை, யாருடைய தயவையும் எதிர்பார்க்காத உள்ளம். ஆகியவை தான் முக்கியமானவை.

பள்ளி மாணவனாக இருந்தபோது தோழர் ஜீவா நடத்தி வந்த பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது பெரியார் முன்னிலையில் பேசியவர். நாகர்கோவிலில் நாஞ்சிலார் பேச்சைக் கேட்டு அவரை நெல்லைக்குப் பேச அழைத்துக் கொண்டு சென்றார், பெரியார். அதற்கு அடுத்த ஆண்டு அண்ணாவின் அறிமுகம்
கிடைத்தது. திராவிடர் கழகம் உருவான 1944 முதல் தீவிர அரசியலில் இருந்தார். திமுக தொடங்கியபோது அண்ணாவுடன் இருந்தார். முதல் மாநாட்டில் செயலாளர்கள் இருவரில் ஒருவர். தேர்தலில் கழகம் நிற்கலாம் என்ற முடிவெடுத்த பிறகு நடந்த முதல் தேர்தலில் 1957ல் நாகை நாடாளுமன்றத் தொகுதியில் இவரை நிறுத்தினார், அண்ணா. தனக்கு எதிராக பள்ளி மாணவனை நிறுத்தியதாக கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி சொல்லிக் கொண்டார். 1962 தேர்தலில் தென் சென்னை தொகுதியில் இவரை நிறுத்தினார், அண்ணா. அந்தத் தொகுதியைத் தனது கட்சிக்குக் கேட்டார் இராஜாஜி. அண்ணா மறுத்தார்.'மனோகரன் வீக்கான வேட்பாளர்' என்றார் ராஜாஜி.'ஆனால் வலிமையான கட்சியின் பிரதிநிதி' என்றார், அண்ணா. தேர்தலில் நின்றார் நாஞ்சிலார். வென்றார். பின்னர் ராஜாஜியைப் பார்த்தார். இருவருக்கும் நடந்த ஆங்கில உரையாடல் விறுவிறுப்பானது. நாஞ்சிலார் என்ன சாதி என்பதை அறிந்து கொள்ள இராஜாஜி துடித்திருக்கிறார்.

நாஞ்சிலார்

‘நான் அதை மறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அதனால் உடனே என்னால் சொல்ல இயலவில்லை. நினைவுபடுத்திப் பார்க்கக் கொஞ்சம் காலஅவகாசம் கொடுங்கள்' என்று நழுவியிருக்கிறார். அந்தளவுக்குத் தனித்தன்மையைக் காப்பாற்றுவார். கழகத்துக்குள் பிரச்னை. செயற்குழுவில் இது சம்பந்தமான விவாதம்.'நம் கட்சிக்குள் நமக்குள் தானே பிரச்னை? நாம் சண்டை போடாமல் வேறு யார் சண்டை போடுவது?' என்று அண்ணா சொல்லி இருக்கிறார்.'நம் வீடு என்பதற்காக கரியால் கிறுக்கிக் கொண்டே இருந்தால் நன்றாகவா இருக்கும்?' என்று கேட்டவர் அவர்.

எம்.ஜி.ஆரை திமுகவில் இருந்து நீக்கக் கூடாது என்று கலைஞரிடம் வாதாடியவர்கள், நாஞ்சிலாரும்
முரசொலி மாறனும் தான். எம்.ஜி,ஆரை சமாதானம் செய்யப் போனவர்கள் இவர்கள் இருவரும் தான். அவசர நிலையை எம்.ஜி.ஆர். ஆதரித்தபோது,'முந்திரிக்கொட்டை மாதிரி எதற்காக ஆதரிக்க வேண்டும்?' என்று கேட்டவர் இவர். இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை எம்.ஜி.ஆர். கொண்டு வந்தபோது, 'இது மிக மோசமான விளைவை தமிழ்நாட்டில் உருவாக்கும்' என்றவர்  மட்டுமல்ல, திருவாரூர் மாநாட்டில்  எதிர்த்தவரும் அவர் தான்.எம்.ஜி,ஆர். அவருக்குத் தொல்லை கொடுத்தபோது,'நான் மரக்கட்டை அல்ல' என்று
சொல்லிவிட்டு வெளியேறியவர். திமுகவில் இணைந்தபிறகு கலைஞரிடம் தனது கருத்தை தைரியமாகச்
சொன்னவர்.'சொல்லுங்க நாஞ்சில்' என்று கேட்பார் கலைஞர். யாருக்கும் அஞ்சாமல் நாஞ்சிலார்
சொல்வார் என்று கலைஞருக்குத் தெரியும்.
‘நெஞ்சில் நஞ்சு இல்லா நாஞ்சிலார்' என்று கலைஞர் சொல்வார். அவர்கள் இருவருக்கும் கவிதைச்
சண்டை நடந்துள்ளது. சவால் சண்டை நடந்துள்ளது. எல்லா சண்டையும் சுபத்தில் முடிந்துள்ளது.

ஒரு முறை முதல்வர் கலைஞர் அனுப்பிய கடிதம் ஒன்றை நாஞ்சிலார் காட்டினார். அமைச்சர் என்ற வகையில் தன்னிடம் வந்த மொத்த கோப்புகள் எத்தனை, அதை எத்தனை நாட்களில் பார்த்து அனுப்பினேன் என்று, முதல்வர் கலைஞருக்கு அமைச்சர் நாஞ்சிலார் ஒரு கடிதம் அனுப்பினார். அதை பார்த்த கலைஞர்,'வாழ்த்துகள், வாழ்க' என்று எழுதி அனுப்பினார். அதை ஒரு குழந்தையைப் போலக் காட்டினார்.‘அவர் அளவுக்கு நம்மால் முடியாது, ஒரளவுக்கு முடிந்தது' என்றார். இதை அமைச்சரவைக் கூட்டத்தில் அனைவரிடமும் முதல்வர் சொன்னதாகவும் நாஞ்சிலார்
சொன்னார்.

காவல்துறை அதிகாரி வைகுந்த் தனது அனுபவங்களைப் புத்தகமாக எழுதி இருந்தார். அதில் நாஞ்சிலார் பற்றிய ஒரு நிகழ்வை எழுதி இருந்தார், உயர்வாக. நாஞ்சிலாரை சந்திக்கச்
சென்றபோது நான் அந்தப் புத்தகத்தை எடுத்துச்
சென்றேன்.'வாசி' என்றார். வாசித்தேன். அப்படியே வாங்கி வைத்துக் கொண்டார். அப்போது நான்கைந்து எம்.எல்.ஏ.க்கள் வந்தார்கள். அவர்களோடு எனக்கு அறிமுகம் இல்லை. வெளியில்
செல்வதற்காக நான் எழுந்தேன். இடது கையால் இருக்கச் சொன்னார். உட்கார்ந்துவிட்டேன். சுமார் மூன்று மணி நேரம் ஒரு அமைச்சரும் ஐந்து எம்.எல்.ஏ.க்களும் பேசிக் கொண்டு இருந்தார்கள் என்றால், எவ்வளவு ரகசியத் தகவல்கள் இருக்கும்? அதையே பத்துப் பக்கம் எழுதலாம். பேசியவை அனைத்துமே ஸ்கூப்கள் தான்.

அவர்கள் போன பிறகுதான் நான் அவரிடம் இருந்து விடை பெற்றேன்.'நீங்க ஏதாவது பெர்சனலாக பேசுவீங்க... அதுனால எழுந்தேன்' என்றேன்.'நீ எதையும் எழுதமாட்டாய் என்று எனக்குத் தெரியும், ஆனால் அப்சர்வ் பண்ணு என்பதற்காகத்தான் இருக்கச் சொன்னேன். டெல்லியில் எல்லாம் எங்களோடுதான் நிருபர்கள் இருப்பார்கள். நடப்பதைத் தெரிந்து கொள்வார்கள், ஆனால் எழுத மாட்டார்கள். என்ன மாதிரி எல்லாம் நடக்கிறது, நடக்கும் என்பதை உணர்ந்து கொள்பவன் தான் உண்மையான பத்திரிகையாளன். எழுதுவதற்காக மட்டும் தெரிந்து கொள்ளக் கூடாது. தெரிந்து கொள்வதில் தேவையானதை மட்டும் எழுத வேண்டும்' என்றார்.

அரசு பற்றிய ஒரு தகவல் சரியானதா எனக் கேட்கச் சென்றேன். கோப்பு வரவழைத்துப் பார்க்காமல், அதிகாரிகளிடம் கேட்காமல் 'தவறு' என்றார்.'சரியானது என்ன?' என்று கேட்டபோது,'தவறு என்று சொல்லும் அளவுக்குத்தான்  எனது பதவிப் பிரமாணம் இடம் கொடுக்கிறது' என்றார்.'சூப் சாப்பிடு... இதற்கும் பதவிப் பிரமாணத்துக்கும் சம்பந்தம் இல்லை' என்றார். கோட்டையில் அவரது உள் அறையில் நடந்தது இந்த சந்திப்பு.

அமிர்தானந்தமாயி மையத்தை சேர்ந்தவர்கள் அவரை வந்து சந்தித்தார்கள்.'ஏதாவது ஒரு கெட்ட பழக்கத்தை நீங்கள் விடவேண்டும்' என்று
சொல்லி கையில் கயிறு கட்டினார்கள்.'இப்போதைக்கு எதுவும் இல்லை' என்று சிரித்தார். இது அவரது புரசைவாக்கம் வீட்டில் நடந்தது.

எனது திருமணத்தின் போது நான் நேரில் சென்று அழைப்பு கொடுத்த ஒரே அரசியல்வாதி நாஞ்சிலார் மட்டும் தான். கலைஞருக்கு அழைப்பிதழை எனது தந்தையார் அஞ்சலில் அனுப்பி இருந்தார்கள்.கலைஞர் வாழ்த்து அனுப்பி இருந்தார்.'என்ன செய்ய வேண்டும்' என்றார், நாஞ்சிலார்.'வந்தால் போதும்' என்றேன். தனது நிழலான சின்னி கிருஷ்ணனை பார்த்தார். 'உங்களுக்கு மட்டும் தான் கொடுத்திருக்கார்' என்றார்.
சின்னி சொல்லி விட்டால் நாஞ்சிலார் தட்டமாட்டார்.  பாம்குரோவ் ஹோட்டலுக்கு நாஞ்சிலார் வந்திருந்தார். பிப்ரவரியில் திருமணம் நடந்தது எனக்கு. ஆகஸ்ட் மாதம் நாஞ்சிலார் மறைவு.

அப்போது கோவில்பட்டியில் இருந்தேன். அன்று மாலையில் புறப்பட்டு சென்னை வந்தேன். நேராக புரசைவாக்கம் போகிறேன். அந்தப் பட்டத்து யானை படுக்க வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மயானக்கரையில் சின்னி அண்ணன் உருக்குலைந்து இருந்தார். தொடர்ச்சியாக இரண்டு மூன்று நாட்கள் நாஞ்சிலார் வீட்டுக்குப் போனேன். அதன் பிறகு
சின்னியை சந்திக்கவும் நாஞ்சிலார் இல்லம் செல்வேன். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நாஞ்சிலார் வீட்டுக்குப் போய் சில மணிநேரம் அங்கு இருப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். நாஞ்சிலார் இருந்தால் எப்படி
கட்சிக்காரர்கள் வந்து உட்கார்ந்திருப்பார்களோ அதேபோலவே அவர் மறைவுக்குப் பிறகும் நிர்வாகிகள் வந்து முன் அறையில் கூடிப் பேசிச் செல்வார்கள். அமைச்சராக இருக்கும் போது பி.ஏ.க்கள் இருப்பார்கள். பதவி போனதும் பறந்து விடுவார்கள். ஆனால் அமைச்சரே பறந்து போனபிறகும் சின்னி போன்றவர்களால் தான்,'இருக்கின்றார்' என்பதைப் போலவே நினைத்து வாழ முடியும்.'சின்னியைப் போல உதவியாளர் இருக்க வேண்டும்' என்றார் கலைஞர். நாஞ்சிலாரால்
சின்னிக்குப் பெருமையா? சின்னியால் நாஞ்சிலாருக்குப் பெருமையா? விடை காண முடியாத கேள்வி.

'என் கண்ணீரைக் காண்பதற்கு உனக்கும் ஓர் ஆசை, அதை நிறைவேற்றிக் கொண்டாய்' என்று நாஞ்சிலார் இறந்தபோது எழுதினார், கலைஞர். அண்ணா இறந்தபோது,'சிறிது காலத்திற்கு
அண்ணாவின் காலடியை வங்கக் கடலே நீ கழுவாதே, என் கண்ணீருக்கு அந்த வாய்ப்பைத் தா' என்று எழுதினார் நாஞ்சிலார். அவரின் உடல் கழுவும் கண்ணீர் வாய்ப்பே இந்தக் கட்டுரை.

மறக்காத முகங்கள்

மணா

“மக்களுக்குப் புரியலைன்னா நாம் தான் மாத்திக்கணும்!”

நாங்க.. நாடகத்திலே நடிச்சு சினிமாவுக்குள் வந்தவங்க.. அப்போ நடந்திக்கிட்டிருந்த தெருக்கூத்தை ஆரம்பிக்கிறப்போ மேடைக்கு வர்ற கலைஞருங்க ஜனங்களுக்கு முன்னாடி வந்து ‘நாங்க நடத்துறதுலே ஏதாவது குத்தம் இருந்தா, உங்க  வீட்டுப் பிள்ளைகளைப் போல நினைச்சு எங்களை மன்னிச்சுரணும்' என்று கேட்டுவிட்டுத்தான் ஆரம்பிப்பாங்க..

நாடகங்களிலும் அப்படித்தான்.. மக்களுக்காகத் தானே நாம நாடகம் போடுறோம்.. அவங்களோட எண்ணத்துக்கு மதிப்பு கொடுக்கணும்ல''& இப்படி எம்மிடம் பேசிக் கொண்டிருந்தவர்கள், நாடகத்திலிருந்து
சினிமாவுக்கு வந்த கலைஞர்களான எஸ்.வி.
சகஸ்ரநாமமும். டி.என்.சிவதாணுவும். அவர்களுடன் பேசியவாறே அவர்கள் தங்கியிருந்த அறை நோக்கி நடந்தோம்.

சகஸ்ரநாமம் அப்போது சுமார் இருநூறு படங்களுக்கு மேல் நடித்துப் பிரபலமான நடிகர். மதுரையில் நிஜ நாடக இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்த நண்பர் மு.ராமசுவாமி நடத்திய நாடக விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு வந்திருந்தார்கள்,
சகஸ்ரநாமமும், சிவதாணுவும். சகஸ்ரநாமம் ஏற்கெனவே மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த நாடகக் கருத்தரங்கில் கலந்து கொண்டு நீண்ட உரையாற்றி தனிப்புத்தகமாகவும் வெளியாகியிருந்தது. நாடக அனுபவங்களை அவர் விவரித்திருந்த விதம் அலாதியானதாக இருந்தது.

சகஸ்ரநாமத்தின் உரையாடல் மொழி ரசனையோடும், முகபாவனைகளுடனும் இருந்ததால் பலரையும் ஈர்க்கும்படி இருந்தது. கோவை சிங்காநல்லூரில் எளிய குடும்பத்தில் பிறந்து கடையில் வேலை செய்து கொண்டிருந்தபோது பாய்ஸ் கம்பெனியில் பொய்
சொல்லிச் சேர்ந்த அனுபவமே ஒரு மெல்லிய
சிறுகதை.

நாடகத்தில் அவர் காட்டிய ஈடுபாடு நாடகம் நடத்தியவர்களின் கவனத்தைத் திருப்பியது. ஒரு நாடகத்தில் கழுத்தில் உயிருள்ள பாம்பைத் தொங்கவிட்டபடி சிவன் வேடத்தில் வந்தபோது, முழுக்கவனமும் இவர் மீது விழுந்திருக்கிறது.

"கந்தசாமி முதலியார், டி.கே. சண்முகம், கலைவாணரின் நாடகக் குழுக்களில் கிடைத்த வாழ்வியல் அனுபவத்தை எந்தப் பெற்றோரும் தரமுடியாது,'' என்று
சொல்லும் இவருக்கு, ஆஸ்தான குரு
 சங்கரதாஸ் சுவாமிகள். பாரதியும், வ.ரா.வும் இவரிடம் எழுச்சியையும், உயர்
ரசனையையும் விதைத்தவர்கள்.

நாடக ஈடுபாட்டால்'சேவா ஸ்டேஜ்' என்கிற நாடகக்குழுவை ஆரம்பித்தவர் சமூக,அரசியல் உணர்வுகளை நாடகத்தில் புகுத்தினார். அப்போது இருந்த நாடகசூழலில் நவீனத்தைக் கொண்டு வந்தார். பாரதியின் பாஞ்சாலி சபதத்தையும், குயில் பாட்டையும் நாடகமாக்கினார்.

பொதுவுடமைத் தலைவர்களான ஜீவா போன்றவர்களுடன் உருவான நட்பு நாடகத்தின் இயல்பையே மாற்றியது. தமிழில் மாற்றத்தை விளைவித்த எழுத்தாளர்களான கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன்,பி.எஸ்.ராமையா போன்றவர்களை நாடகத்தின் பக்கம் திருப்பி நாடகங்களை எழுத வைத்து மாறுபட்ட நாடகங்களை நிகழ்த்தினார்.

'தூக்குக்கயிறு' நாடகத்தில் உரத்த குரலில்
சகஸ்ரநாமம் பேசும் வசனம் பிரபலம்.

"சுதந்திரத்திற்காகப் பாடுபடுவது ஒரு குற்றம் என்றால் அந்தக் குற்றத்தைச் செய்து கொண்டு தானிருப்பேன்''.

வாழ்க்கை, நல்லதம்பி, மணமகள், இழந்த காதல், பைத்தியக்காரன், நாம் இருவர், குலதெய்வம்& இவையெல்லாம் சேவா ஸ்டேஜின் சில நாடகங்கள். குலதெய்வம் ராஜகோபால், முத்துராமன், பண்டரிபாய், மைனாவதி, தேவிகா, வசந்தா& இவர்கள் சேவா ஸ்டேஜுடன் வளர்ந்த திரைக்கலைஞர்கள்.

நாடகத்தின் மீது இவர் கொண்டிருந்த உணர்வுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் இவருக்கு இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது கிடைத்தது.

1936 ஆம் ஆண்டில் வெளிவந்த'மேனகா' இவருடைய முதல் திரைப்படம். விக்கிரமாதித்தன், கண்ணகி, சந்திரஹரி என்று பல படங்களில் நடித்தாலும்,'பராசக்தி' இவரை கவனிக்க வைத்தது. அதில் சிவாஜிக்கும், எஸ்.எஸ்.ஆருக்கும் மூத்த அண்ணனாக, நீதிபதியாக நடித்திருப்பார். மர்மயோகி, நல்லதம்பி, குலதெய்வம், போலீஸ்காரன் மகள்,
செல்வம் என்று இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சகஸ்ரநாமம் ஸ்ரீதரின் இயக்கத்தில் எம்.ஜி.ஆருடைய அண்ணனாக நடித்த படம்'உரிமைக்குரல்'.

"1957 ல்'சேவா ஸ்டேஜ் கல்வி நிலையம் 'என்கிற பெயரில் சென்னையில் நடிப்புப் பயிற்சிக்காகவே ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தபோது, அதில்
சேர்ந்தவர்கள் 24 பேர். இதில் ஒருவர் பெண்.
சென்னை அரசாங்கம் அப்போது மூவாயிரம் ரூபாய் அளித்து உதவியது. ஆனால் அதைத் தொடர்ந்து நடத்த பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை. அதையும், நான் நடத்தி வந்த சேவா ஸ்டேஜ் குழுவையும் மூட வேண்டியதாகிவிட்டது.''

குரலில் சலிப்பேறிய நிலையில் உதட்டைப் பிதுக்கியபடியே சொன்னார்.  "இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இத்தனை பாய்ஸ் கம்பெனிகள்.  சங்கரதாஸ் சுவாமிகளைப் போன்று நாடகத்திற்காகவே அவதாரம் எடுத்ததைப் போல எத்தனை பேர்? நடிக்க, தமிழைச் சரியாகப் பேச, பாடவைத்து, ஆட வைத்து, ஊர் ஊராய்ச் சென்று நாடகங்களைப் போட்டுக் கொண்டு அவ்வளவு பெரிய குழுவை நிர்வகித்துக் கொள்வது
 சாதாரணமானதல்ல. மிகச் சாதாரணமான குடும்பத்துப் பிள்ளைகளுக்கு நடிப்புச்சொல்லிக் கொடுத்து வாழவும் வைத்த பாய்ஸ் கம்பெனியின் மகிமையைப் பற்றித் தமிழகத்திலேயே பலருக்கும் தெரியவில்லை.

பி.யு.சின்னப்பா, தியாகராஜ பாகவதர், கலைவாணர், எம்.ஜி.ஆர், சிவாஜி என்று எத்தனையோ நடிகர்களைத் தந்தவை இந்த பாய்ஸ் கம்பெனிகள் தானே. டி.கே.சண்முகம் குழுவை நடத்தியதைப் போல, கலைவாணர் நடத்தியதைப் போல இப்போதெல்லாம் நாடகம் நடத்தமுடியாது. இதில் என்னுடைய பங்கு ரொம்பவும் சின்னது தான்.''

தங்கும் அறைக்குப் போய் படுக்கையில் அமர்ந்தார். பக்கத்தில் இன்னொரு மூத்த கலைஞரான சிவதாணு.

"கல்கத்தாவில் தாகூரோட நூற்றாண்டு விழா நடந்துச்சு. தலைவர் ஜீவாவுடன் அதுக்குப் போயிருந்தேன். தங்களுக்காக வாழ்ந்தவரை வங்காளிகள் எப்படிக் கொண்டாடுறாங்க.. தெரியுமா? கலை மக்களுக்கானதுதான். அந்த மக்களுக்குப் புரியலைன்னா நாம தான் நம்மை மாத்திக்கணும். மக்களைக் குறை சொல்லக்கூடாது. எங்க அனுபவத்திலே நாங்க உணர்ந்தது இதைத்தான்.''

தன்னையே எப்போதும் சுமந்து கொண்டிருக்காத எளிமை தெரிந்தது அந்தப் பேச்சில்.

ஜுன், 2019.