கவிஞர் வாலி ஓவியம் : ஜீவா
சிறப்புக்கட்டுரைகள்

பாட்டுடைத் தலைவன்!

அவர்கள் அவர்களே!-8

ப.திருமாவேலன்

“வாய்யா!'' - என்றார், வாலி!

அப்படி அழைத்தாலே வாய்நிறைய வெற்றிலை மட்டுமல்ல, வாஞ்சையும் வைத்திருக்கிறார் என்று அர்த்தம்.

"நீ தானா அது?'' என்றார், வாலி!

நீ தானா என்று அழைத்தது, எனக்கு அதிகம் பிடித்துவிட்டது. அப்போதெல்லாம் நான் 'சார்' ஆகிவிட்டேன். அந்தநேரத்தில் நம்மை ஒருவர் நீ போட்டது, அதுவும் வாலி போட்டது என்னை இலகுவாக்கியது.

"பெரியோர்களே தாய்மார்களே படிக்கிறேன்... பழசையெல்லாம் ஞாபகப்படுத்துற... ஞாபகப்படுத்த வேண்டியதை மட்டும் ஞாபகப்படுத்துற..வரலாற்றை மறந்துட்டோம், மறந்துட்டோம்னு சிலர்
சொல்வாங்க... மறக்க வேண்டியதை மறந்திடணும். நினைக்க வேண்டியதை நினைத்திடணும்'' என்றவர்...

"அது யாருய்யா... புத்தகன்?'' என்றார்.

'நான் தான்' என்றேன். "அப்படியா? நான்கு நாள் இடைவெளியில் ரெண்டு புத்தகம் படிச்சுட்டு எழுதுறது கஷ்டம்... ஆனா படிக்கணும்...
அடுத்தவன் எழுத்தைப்படிக்காதவனுக்கு சொந்த எழுத்து வாய்க்காது!'' என்றார்.

"கழுகார் பதில்கள்..?'' என்றார். பதில்
சொல்லவில்லை. சிரித்தேன்.

"மிஸ்டர் கழுகு...?'' என்றார். பதில் சொல்ல வில்லை. அவரைப் பார்த்தேன்.

"ஓஹோ! எல்லாமே நீர் தானா?'' என்றார். "எடிட்டர் என்றால் தொகுப்பர் தானே?'' என்றேன், அவர் பாணியில். "பல தொகுப்பர்கள் வெறும் வெறுப்பர்'' என்றார். அதன்பிறகு அவர் காட்டிய உதாரணங்கள் சென்சார் செய்யப்பட வேண்டியது. அவர் மனம்விட்டுப் பேசிய நேரத்திலேயே அவர் மனதில் இடம்பெற்றுவிட்டேன்.

மைபா நாராயணன் தான் என்னை முதலில் வாலியிடம் அழைத்துச் சென்றவர். முதலில் தயக்கம் இருந்தது எனக்கு. தயக்கத்துக்கு என்ன காரணம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், "நீ பேசிப்பார், உனக்கு அவரைப் பிடிக்கும், உன் எழுத்தும் பிடிக்கும்... யாருய்யா அது திருமாவேலன் என்று பல  தடவை கேட்டுவிட்டார்'' என்றார், மைபா. "உங்களை விசாரித்தார் சார்'' என்று, மானா பாஸ்கரும் சொன்னார். விகடனில், 'நினைவு நாடாக்கள்' எழுதிக் கொண்டு இருந்தார், வாலி. அதற்காக புகைப்படம் எடுக்க என் உயிரிணைய கலைஞன் நண்பன் இராஜசேகரன் அவரோடு சென்று விட்டு வந்தபிறகு சொன்ன 'கதைகள்' அந்த மனிதனை உடனடியாகச் சந்தித்து விட வேண்டும் என்ற உந்துதலை எனக்கு ஏற்படுத்தியது. அதைவிட, 'நினைவு நாடாக்கள்' தமிழ்.

உதாரணத்துக்கு ஒன்று..

'நொந்தாரையும், நொந்து நொந்து வெந்தாரையும் பார்த்து...

வாழ்க்கையின் முதல் எழுத்து அழைக்கிறது 'வா' என்று.

முதல் எழுத்தும் இரண்டாம் எழுத்தும் சேர்ந்து 'வாழ்' என்கிறது.

எதை நம்பி என்னும் கேள்விக்கு, நான்காம் எழுத்து நவில்கின்றது விடை 'கை' என்று.

அது மட்டுமல்ல, கைகொண்டு உழைத்தாலும் காக்க வேண்டியது ஒன்று உண்டு என்று சொல்கிறது & முதல் எழுத்தும் மூன்றாம் எழுத்தும் நான்காம் எழுத்தும் சேர்ந்து 'வாக்கை' என்று.

மேற்சொன்ன கருத்தை உள் வாங்கி உழைத்தால் & நீ பெறுவது என்னவென்று முதல் எழுத்தும் நான்காம் எழுத்தும் சேர்ந்து
சொல்கிறது 'வாகை' என்று!

வா
வாழ்

கை
வாக்கை
வாகை

எனும் அய்ந்து சொற்களைத் தன்னுள் சூல் கொண்டு நிற்கும் ஒரே சொல், 'வாழ்க்கை'

& இப்படி அந்தத் தொடர் முழுக்க வாலி தன்னுள் இருந்த மொத்தத் தமிழையும் காலி செய்திருப்பார். 'நாங்கள் இருவரும் இஷ்டப்பட்டுக் கஷ்டப்பட்டோம்' என்பார், ஓரிடத்தில்.

 "விஸ்வநாதனோடும் ராமமூர்த்தியோடும் கண்ணதாசன் சேரும்போது, மெல்லிசை மன்னரும் வில்லிசை மன்னரும் சொல்லிசை மன்னரும் & சேர சோழ பாண்டியனாக செந்தமிழ் நாட்டில் உலா வந்தாற் போலிருக்கும். என்ன வேடிக்கை பாருங்கள், உவமை கருதி நான் சொன்னாலும் உண்மை இதுதான்!

விஸ்வநாதன் & சேர நாட்டைச் சேர்ந்தவர்.
ராமமூர்த்தி & சோழ நாட்டைச் சேர்ந்தவர்.கண்ணதாசன் & பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர்'' & என்பார் மற்றோரிடத்தில்.

வாராவாரம் எங்களுக்கு ஆரவாரம்தான். படித்துவிட்டு அவருக்குப் பேசுவதும், அவர் எனக்குப் பேசுவதும் வாரம் தோறும் டானிக் நேரங்களாக அமையும். மிக நீண்ட நேரம் பேசுவார். 'வேலையா இருக்கியாய்யா?' என்று கேட்டுவிட்டுப் பேசுவார்.

இத்தொடருக்குப் பிறகு அரசியல் கவிதைகளை அதிகம் எழுத ஆரம்பித்தார் வாலி. சென்னை புத்தகக் கண்காட்சியில் அவர் வாசித்த கவிதையில் அளவுக்கு மீறிய அரசியல் நெடி. இதழுக்குக் கவிதை கேட்பதற்காகச் சென்றிருந்த பரக்கத் அலி, அவரிடம் கவிதையைக் கேட்க... 'திருமாவேலனை பேசச் சொல்' என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். அதன்பின் நானே பேசினேன். பரக்கத் அலியையே அனுப்பியும் வைத்தேன். வாலி கவிதைகளை மனப்பாடம் செய்து வைத்திருப்பவர் பரக்கத். அதைச் சொல்லி வாலியை அசத்திவிட்டார். அந்த வார ஜூனியர் விகடன் இதழில் வாலி கவிதை வெளியானது. அந்த மகிழ்ச்சியில் நான் இருக்க, அவர் என்ன சொன்னார் தெரியுமா?
"நான் எப்படி எழுதி அனுப்பினேனோ அப்படியே காற்புள்ளி, அரைப்புள்ளி மாறாமல் அது வெளியானது தான் எனக்கு சந்தோஷம். இந்தக் கவிதையைப் படித்துவிட்டு பலரும்
பேசிக் கொண்டே இருப்பதால் எனக்கு ஜலதோஷம்'' என்றார். அதன் பிறகு எழுதிய அனைத்து அரசியல் கவிதைகளையும் ஜூனியர் விகடனுக்குத் தான் கொடுத்தார்.

எழுதுவார். போன் செய்வார். வாசித்துக் காண்பிப்பார். நான் ரசித்த வரியைச் சொல்வேன். 'இதுதான் உமக்குப் பிடிக்கும் என்பது எமக்குத் தெரியும்' என்பார். உடனே ஆள் அனுப்புவதாகச் சொல்வேன். 'பழநிபாரதியை வரச் சொல்லி இருக்கிறேன்... ஒரு தடவை காட்டிட்டு அனுப்புறேன்.' என்றார் ஒரு முறை. 'முத்துலிங்கத்திடம் சந்தேகம் கேட்டிருக்கிறேன். அவர் ஒப்புதல் கிடைத்ததும் அனுப்பி விடுகிறேன்' என்பார். எத்தகைய மகா கலைஞன். கவிஞன். ஆனாலும் புலவர் முத்துலிங்கத்திடம் கேட்கிறார். பழநிபாரதியிடம் கேட்டுக் கொள்கிறார். கேட்டுக் கொள்வதை விட, நான் கேட்டுக் கொண்டுள்ளேன் என்பதை என்னிடம் சொன்ன பேருள்ளம் தான் வாலி. நமக்குச் சொல்ல வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. அவர் என்ன எழுதினாலும் கவியே. ஆனாலும் அவரை அப்படிக் கேட்க வைத்ததே புலமையின் வலிமை.தனது புலமை மீது அசாத்தியமான நம்பிக்கை இருந்ததால் எவர் வந்தாலும் பயம் இல்லை அவரிடம். மேலும், பலரையும் தன்னோடு சேர்த்து வளர்த்துச் செல்ல நினைத்தார். அவரிடம் பேசும்போதும், அவர் எழுத்தைப் படிக்கும் போதும் பலரைப் பற்றி நல்லவிதமாகச் சொல்லிச் செல்வார். அந்தக் கணிப்புகள் அத்தனையும் உண்மையான ஸ்கேன் ஆக இருக்கும். அவரது கண்ணுக்கும் மூளைக்கும் இதயத்துக்கும் மனிதர்களை அளவிடும் மகத்தான வல்லமை இருந்தது. அவரது தமிழினிமையை விட மனதினிமை தான் வாலியின் வலிமை. அவரை மறைந்திருந்து தாக்கத் தேவையில்லை. நேரடியாகத் தாக்க அழகுத் தமிழும் அப்பழுக்கற்ற மனமும் இருந்தால் போதும். அதனால் தான் பெருங்கூட்டம் அவரை மொய்த்தபடி இருக்கும். சினிமா வர்த்தகம் சார்ந்த மனிதர்களைச் சொல்லவில்லை. அதற்கு அப்பாற்பட்ட பெருங்குழாம் இருக்கும். கோவை கிருஷ்ணகுமார்,கவிஞர் காசிமுத்து மாணிக்கம், நெல்லை ஜெயந்தா.. எனச் சொல்லிக் கொண்டே போகலாம். வாலி குடும்ப பாத்திரங்கள் இராமாயணத்தை விடப் பெரியவை. பல நூறு இலக்குமணர்களைக் கொண்டவர் அவர்.

தான் ஏதோ தனியாக வந்து தன் திறமையால் வளர்ந்தவன் என்று அவர்
சொல்லிக் கொள்ள மாட்டார். 1958ல் சென்னைக்கு வந்தார் பாட்டெழுதும் வாய்ப்பைத் தேடி. தனக்கு உதவியதாக 1958 பேருக்கு மேல் இருக்கிறார்கள் என்பார். ''ஆகாயம் கூட அளவில் சின்னது என்னுடைய கோபாலகிருஷ்ணன் மனது அவ்வளவு பெரியது!'' என்றார் ஒரு முறை. சென்னைக்கு முதன்முதலாக வாலி வந்தபோது திருவல்லிக்கேணியில் அடைக்கலம் கொடுத்தவர் கோபாலகிருஷ்ணன். 'அழகர் மலைக் கள்ளன்' படத்தின் கதை வசனம் பாடல்கள் அனைத்தும் புரட்சி தாசன் அவர்கள். அவர் இவருக்குப் பாடல் எழுதும் வாய்ப்பை வழங்குகிறார். வாலி எழுதிய கவிதையை முதலில் வெளியிட்டது புதுக்கோட்டையில் இருந்து வெளியாகும் 'கலைவாணி' இதழ். இதனை நடத்தியவர், ப.நீலகண்டன். அதேபோல் பொன்னி இதழில் வாலியின் கவிதைகளை வெளியிட்டவர், சாமி. பழனியப்பன். இவர்தான், கவிஞர் பழநிபாரதியின் அப்பா. 'என்னுள் இருக்கும் எள் முனையளவு தமிழும் பழனியப்பனார் பாக்களை என் இளமைக் காலத்தில் படித்ததனாலான பயனே' என்று வாலி எழுதினார். இப்படித் தன் இளமைக்கால மனிதர்கள் எவர் முகத்தையும் எவர் பெயரையும் அவர் மறந்தாரில்லை. அதனால்தான் அவரை மறக்க முடியவில்லை. வாலி மறைந்தாரும் இல்லை. மறைந்து இருக்கிறார், புராண வாலியைப் போல, இந்தப் புலவ வாலியும்!

மாலையில் போனோம். இரவு ஆகிவிட்டது.
''நீங்க சாப்பிடணும், சாப்பாட்டு நேரம் வந்துவிட்டது,'' என்றார் ,உதவியாளர் வாலியிடம். ''எடிட்டருக்கும் சேர்த்து தோசை கொண்டா..'' என்றார். ''மிளகாய் பொடி தூக்கலா,''என்றார். சும்மாவே 'மொளகாப் பொடி' தூக்கலாகத்தான் இருக்கும். அதுவும் கவிஞர் சொல்லிவிட்டதால், இன்னும் தூக்கலாக இருந்தது. மூக்கில் இருந்து தண்ணீர் வடியவில்லை, மூக்கே வடிவது போல ஆகிவிட்டது அன்று. ''சைவம் சாப்பிட்டு முதல் தடவையா என் மூக்கு வேர்த்திருக்கிறது'' என்றேன். ''நான்  பாட்டில் அசைவன்'' என்றார். ''அது எல்லாம் தொழில். பணம் கொடுக்கிறான் எழுதுகிறேன். இது இலக்கியம் அல்ல என்று சிலர் எலும்பு இல்லா நாக்கால் சொல்வதாகக் கேள்வி. அதற்கு இலக்கிய மகுடம் நானே சூட்டுவது இல்லை... மற்றவர் ஏன் சூட்டவேண்டும்?'' என்றார். மிளகாய்ப் பொடியை விட இது உறைத்தது. இரண்டையும் பிரித்துப் பார்த்து வாழ்ந்து கொண்டார் என்பது மட்டுமல்ல, வெளிப்படையாகச் சொல்லியும் கொண்டார். அவரைப் பொருத்தவரை கவிதை வேறு, பாட்டு வேறு. ''படங்களுக்கு பாட்டு எழுதி கோலோச்சுதல் வேறு, கோதறு தமிழில் நூலோச்சுதல் வேறு. முன்னது & இருந்து வாழ்வதற்கு உதவும். பின்னது & இறந்து வாழ்வதற்கு உதவும்'' என்றார் வாலி.

''எப்படி இவ்வளவு தூரம் இலக்கணத் தேர்ச்சி பெற்றீர்கள்?'' என்று கேட்டபோது, ''இலக்கணத் தேர்ச்சியும் இல்லை, தலைக்கனத் தேர்ச்சியும் இல்லை!'' என்று சிரித்தார். ''நான் கற்றது நாலு காசு பெறாது, ஆனால் ஏராளமான காசை எனக்குப் பெற்றுத் தந்துள்ளது...'' என்றார். ''தமிழை எழுத்தெண்ணிப் படித்த பலருக்கு தமிழ் சோறு போடவில்லை, அவர்களை வறுமையில் விட்டு விட்டது. ஆனால் ஓரளவு படித்த என்னைப் போன்றவர்களுக்கு அது நிறையவே சோறு போட்டுள்ளது!'' என்றவர், இதற்கு அதிர்ஷ்டம் அல்ல காரணம் என்றும்
சொன்னார். ''வேர்வையில் விளைவது வாழ்க்கை, வேர்வையை வெல்லுமோ ஊழ்க்கை?'' என்று கேட்ட ஆன்மிகர். பழுத்த ஆத்திகர். கடவுள் நம்பிக்கை தவிர மற்ற மூட நம்பிக்கைகள் இருக்காது. பேச்சில் பகுத்தறிவுதான் இருக்கும். 'காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தெய்வம் அம்மா' என்று தான் எழுதினார். ரஹ்மானுக்காக தெய்வம் என்பதை தேவதை என்று மாற்றிக் கொடுத்தவர். அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்றது வாலியின் பாட்டு. பாட்டா அது? இதயம் பிசைந்த ஈர வரிகள்.'உமக்கு என் பாட்டை விட கவிதைகள் தான் பிடிக்கும். பிடிக்கட்டும்' என்றார்.

என்ன மனசு இது? கண்ணதாசனை பற்றி அவர் எழுதியது அவருக்கே பொருந்தும். 'பேரறிவும் பிள்ளை மனமும் ஒரு சேரப் பிசைந்து வைத்த ஒரு கலவை'. இவரும் தான்.

இறுதிக் காலத்தில் அப்போலோ மருத்துவமனையும் அவருக்கு ரிக்கார்டிங் ஸ்டூடியோக்கள் மாதிரிதான் இருந்தது. ஆஞ்சியோ செய்த பிறகும் அஞ்சாமல் ஜாலியாக இருந்தார் வாலி. பார்த்துக்கொண்டும்
பேசிக் கொண்டும் தனது கவலையை மறந்து கொண்டு இருந்தார். 'உங்களுக்கு சர்க்கரை இருக்கா?' என்று ஆர்.எம்.வீ. கேட்டாராம். அப்போது அருகில் இருந்த கவிஞர் வைரமுத்து, 'மொத்த சர்க்கரையையும் பாட்டில் போட்டுவிட்டாரே' என்றாராம். கலைஞர் தான் முழுமையாக கவனித்துக் கொண்டதாகச் சொன்னார். தனக்கு பேச்சு வராதோ என்று வாலி பயந்தார். 'சில நாட்களில் வந்துவிடும்' என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆருடம் சொன்னதாகவும் அது பலித்தது என்றும் எழுதி இருக்கிறார். இறுதிக்காலத்தில் பேசியவற்றில் தத்துவம் ததும்பி வழிந்தது. 'என்னைப் பிடிக்கா விட்டாலும் என் பாட்டைப் பிடித்தால் போதும், அதுதான் உண்மையான அங்கீகாரம்!' என்றார். தன்னைப் பிடிக்காதவர்களுக்கும் தன் பாட்டைப் பிடிக்க வேண்டும் என்றும் நினைத்தார். அவர் பாட்டு பிடிக்கிறதோ இல்லையோ அவரை அதிகம் பிடிக்கிறது. அதனால்தான் எங்காவது நிறுத்தவிடாமல் வார்த்தைகள் வந்து கொண்டே இருக்கின்றன.

'அடக்கமாகும் வரை அடக்கமாக இரு' என்றார். அப்படி அவர் இருந்தார். அடக்கமான பிறகு அவரது நினைவு நாடாக்கள் நித்தமும் ஓடிக் கொண்டு இருக்கின்றன. வாலிக்கு நான் மாபெரும் கடன்பட்டுள்ளேன். அவர் பற்றி ஐநூறு பக்கம் எழுதினாலும் அந்தக் கடன் தீராது. எம்.ஜி.ஆர்.குறித்து துக்ளக் இதழில் தொடர் எழுதினார் வாலி. அதில் ஒரு கட்டுரையில் தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர்கள் குறித்து எழுதினார்.

''எனக்கும் பத்திரிகையாளர்களுக்கும் ஏழாம் பொருத்தம் என்று இன்றளவும் சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையல்ல. என்னை வளர்த்துவிட்டதில் - ஆரம்ப நாட்களில் -பத்திரிகையாளர்களின் பங்கு நிறைய உண்டு' என்று சொல்லிவிட்டு, மூத்த பத்திரிகையாளர்கள் சிலரை பட்டியல் போடுவார். அதேபோல் இன்றைய பத்திரிகையாளர்களில் சிலர் என் மரியாதைக்குரியவர்கள் என்று பட்டியல் போடுவார். அதில் 'குமுதம்' ப்ரியா கல்யாணராமன், 'விகடன்' ரா.கண்ணன், 'ஜூனியர் விகடன்' ப.திருமாவேலன் என்று எங்கள் மூவரையும் குறிப்பிடுவார்.

'இவர்களெல்லாம் பத்திரிகைத் துறைக்குப் பெருமை சேர்ப்பவர்கள். இவர்கள் என் திரைப்படப் பாடல்களை விமர்சித்து எழுதினால் நான் விசனிக்க மாட்டேன். ஏனென்றால் இவர்கள் பேனா - நடுமுள் நடுங்கா தராசு,' என்று எழுதி இருப்பார், வாலி.

இதைப் படித்த பிறகு தான் அதிக நடுக்கம் வந்தது. போன் செய்தேன். 'என்னய்யா?' என்றார். 'என்ன இப்படி எழுதி விட்டீர்கள்?' என்றேன். 'எழுதல்லய்யா.. இது என்னோட உயில்' என்றார்.உயிலா அது... உயிரல்லவா?

வாலி வாழ்த்தி எழுதமாட்டாரா எனக் காத்திருப்போர் உண்டு. சினிமாவில் அவரே காசுக்காக எழுதியதும் உண்டு. அவராக எழுதியது சில பேரைத் தான் உண்டு. அந்த உயிலுக்கு என்ன  கைமாறு செய்ய இயலும்?

அவருக்குப் பிடித்த தமிழால் இந்தக் கடனை அடைக்கலாம். அவருக்கு முன்னால் நம் தமிழ், அவர் மொழியில் சொல்வதாக இருந்தால், 'பத்மா சுப்பிரமணியத்தின் முன்னால் பாண்டி ஆடுவதாக ஆகிவிடும்'.

அவரது தமிழால் கடனை அடைக்கிறேன்...

‘என் பாட்டுக்கு அவன் தான்  தலைவன் - ஒரு குற்றமில்லாத மனிதன்!

அவன் கோயில் இல்லாத இறைவன்! அவன் ,

தோட்டத்தில் பறவைகள் கூட்டம்;

அவன் சபைகளில் எத்தனை ஆட்டம்!

அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்;

நல்ல கலைஞருக்கெல்லாம் வள்ளல்!‘

-மே, 2019.