என் கிளினிக்குக்குள் அந்த பெண்மணி நுழைந்தார். வரவேற்று அமரவைத்தேன். அவர் கையில் ஒரு பெண் பூனை. அவர் என் மருத்துவமனை வாடிக்கையாளர். வீட்டில் ஏராளமான பூனைகளை வைத்திருந்தார். ஆனால் எதற்கும் கருத்தடை செய்திருக்கவில்லை.
நிறைய எண்ணிக்கையில் பூனைகள் அவர் வீட்டில் பெருகியதால் கருத்தடை செய்துவிட முடிவு செய்து என்னிடம் வந்திருந்தார்.
அவர் கையில் இருந்த பூனை மிக அழகாக இருந்தது. அவருக்கு இந்த பூனைமீது உயிர்.
என் அறையில் மேசை மீது கொண்டுவந்து வைத்தார்கள். அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்துகளை செலுத்தவேண்டும். கதவை மூடினோம். ஏனெனில் பூனைகள் விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். அவை மருத்துவமனையில் இருந்து தப்பித்து ஓடிவிடும். பின் அவற்றைப் பிடிக்க முடியாது. அதன் உரிமையாளர்களுக்கு பெரும் மனக்கஷ்டம் ஏற்படும். அவை பின்னர் கிடைக்காமலே போய்விடும். இதுபோல் தங்கள் பிரியத்துக்குரிய பூனைச் செல்லங்களை இழந்தவர்கள் ஏராளம்.
ஊசியை எடுத்தேன். அந்த பூனைக்கு எங்கள் தோற்றத்தையும் பேச்சையும் பிடிக்கவில்லை. ஊசியை அருகே கொண்டுபோனபோது, சிலிர்த்துக்கொண்டு தாவியது. கதவைத்தான் அடைத்திருந்தோம். ஜன்னல் அருகே இருந்த இன்னொரு சிறு ஓட்டையை அடைக்க மறந்துவிட்டோம். அதன் வழியாக 'எஸ்கேப்'. எங்கே போனதென்றே தெரியவில்லை. என் கிளினிக், சுற்றி இருக்கும் தெருக்கள் எனத் தேடியும் கிடைக்கவில்லை.
அந்த பெண்மணி அன்று இரவு வரை அங்கேயே பூனையைத் தேடி சுற்றிக்கொண்டிருந்தார்.
அன்றிரவு நல்ல மழை. நான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தேன். மணி இரண்டு இருக்கும். போன்
அடித்தது. பூனைக்கார பெண்மணிதான் அழைத்தார்.
‘‘சார்.. நல்ல மழை பெய்யுது..''
‘‘ஆமாங்க''
‘‘அய்யோ இந்த மழையில் என் பூனை என்ன ஆகுமோ...'' அழ ஆரம்பித்துவிட்டார். இரவு மணி இரண்டுக்கு மருத்துவரை போனில் அழைத்து அழுகிறவரின் மனநிலையைப் புரிந்துகொள்ளும் பக்குவம் நிச்சயமாக இத்தொழிலில் இருப்பவர்களுக்கு வேண்டும்.
மறுநாளும் அப்பெண்மணி விடவில்லை. அந்த பூனையின் புகைப்படத்தை ப்ரிண்ட் செய்து என் கிளினிக்கைச் சுற்றி இருக்கும் ஐந்தாறு தெருக்களில் தன் எண்ணுடன் கொடுத்துக்கொண்டிருந்தார்.
அந்த முயற்சிக்குப் பலன் இருந்தது. சில நாட்கள் கழித்து அவருக்கு ஓர் அழைப்பு.
ஓர் வீட்டின் ஓடுகளால் ஆன மேல் கூரைமீது அந்த பூனை இருந்தது. ஏணி வைத்து ஏறி அதைக் காப்பாற்றி வீட்டுக்குக் கொண்டுபோனார் அவர்.
புதிதாக ஒரு கிளினிக் ஆரம்பித்தபோது பூனைக்கென்றே ஓர் அறை செய்ததும், அதில் எந்த ஓட்டையும் இல்லாமல் பார்த்துக்கொண்டதையும் நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
ஒரு வாடிக்கையாளர் அழகான லாப்ரடார் வகை நாயை வளர்த்துவந்தார். என்
கிளினிக்குக்கு அதை ஒரு ஆட்டோ ஓட்டுநர் எப்போதும் அழைத்துவருவார். அவருடன் அந்த நாயும் நன்றாக ஒட்டிக்கொண்டது. இப்படிப் போய்கொண்டிருந்த நிலையில் ஒருநாள் அந்த வாடிக்கையாளர் கவலையுடன் வந்தார்.'' சார்... எங்க நாயக் காணலை!'' என்றார். வாசலில் நின்றபோது யாரோ இதைத் தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள். அவரும் ஊர் முழுக்கத் தேடி வந்தார். கிடைக்கவில்லை.
அந்த ஆட்டோ ஓட்டுநர் இருக்கிறாரே.. அவர் இங்கிருந்து 15 கிமீ தள்ளி ஒரு ஊருக்கு யதேச்சையாகப் போய் இருக்கிறார். அங்கே அந்த நாயை ஒரு வீட்டில் பார்த்திருக்கிறார்.
இது எங்கள் நாய்... அதை கொடுங்கள் என்று அவர் கேட்க, அவர்கள் மறுக்க ஊரே கூடி விட்டது.
‘‘ நான் என் ஆட்டோவைக் கொண்டு வந்து நிறுத்துகிறேன். அது வந்து இதில் ஏறிக்கொண்டால்.. அது எங்கள் நாய்தான்! நீங்கள் விட்டுவிடவேண்டும்'' என பஞ்சாயத்து பேசினார்.
ஆட்டோவைப் பார்த்ததும் நாய் பாசமாக வந்து ஏறிக்கொண்டது.
நேராக என் மருத்துவமனைக்குத்தான் அவர் கொண்டுவந்தார். அதைப் பரிசோதனை செய்தபின்னர் அது வீட்டுக்குக் கொண்டுபோகப்பட்டது! உரிமையாளர்கள் மட்டுமல்ல; ஓட்டுநர்களும் பாசக்கார மனிதர்களே!
நாகர்கோவிலில் சுக்குக் காபி மிகவும் பிரபலம். இதன் விற்பனையாளர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு ஸ்பிட்ஸ் இன நாய் வைத்திருந்தார். அவ்வளவாக வசதிகள் இல்லாதவர். ஆனால் எந்த நிலையிலும் அந்த நாயை விட்டுக்கொடுத்தது இல்லை. அந்த நாய்க்கு ஏழு வயதாக இருந்தபோது மார்பகப் புற்றுநோய் வந்தது. அறுவை சிகிச்சை செய்தேன். சில ஆண்டுகள் கழித்து கருப்பையில் சிக்கல் ஏற்பட அதற்கு அறுவை சிகிச்சை. மீண்டும் மார்பகத்தில் கட்டி வர, அறுவை சிகிச்சை செய்தேன். மூன்று பெரிய அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தபோதும் அவர் ஒருபோதும் சலித்துக்கொண்டதே இல்லை. அது தன் பதினேழாவது வயது வரை உயிர் வாழ்ந்தது. கடைசியில் அதற்கு உண்ணிகளால் வரும் காய்ச்சல் வந்தது. எப்படியாவது காப்பாற்றிவிடுங்கள் என்றார் அவர் கண்ணீர் மல்க.
‘‘அது தன் முழு வாழ்நாளையும் வாழ்ந்துவிட்டது.. இனியும் என்ன செய்யப்போகிறோம்?'' என்று சொல்லிப் பார்த்தேன். ஆனாலும் அவர் இன்னும் கொஞ்சநாள் அது வாழ்ந்துவிடாதா என்று ஆசைப்பட்டதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். அதன் பின்னர் அது இறந்தது.
அந்த சுக்குக் காபி விற்பவரை எப்போது சாலையில் கடந்தாலும் காபி சாப்பிடாமல் என்னை விடமாட்டார். அவரது நாய்க்கு எப்போதும் நான் கட்டணம் பெற்றே சிகிச்சை செய்திருக்கிறேன். ஆனால் ஒருபோதும் சுக்குக் காபிக்கு அவர் காசு வாங்கியதே இல்லை!
பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக என்னிடம் சிகிச்சைக்கு வந்துகொண்டிருந்த ஒரு பாமரெனியனைப் பற்றிச் சொல்ல வேண்டும்.
அது உள்ளே வந்தாலே எல்லோருக்கும் உற்சாகம் பற்றிக்கொள்ளும். அவ்வளவு பீறிடும் சந்தோஷத்துடன் அது வளையவரும். ஏன் அதற்கு என்ன அப்படி ஸ்பெஷல் என்று நீங்கள் கேட்கலாம்.
அது மூன்றுமாதக் குட்டியாக இருக்கும்போது அதற்கு காலில் ஒரு நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதனால் பக்கத்தில் எந்த பயிற்சியும் இன்றி மருத்துவம் பார்த்துவந்த போலி நபர் ஒருவரிடம் காட்டி இருக்கிறார்கள். அவர் அதற்கு அயோடக்ஸ் போடச் சொல்லி பரிந்துரைத்தார். விளைவு? அதன் காலில் தொற்று பரவி கால் அழுகி விட்டது.
என்னிடம் அதைக் கொண்டுவந்தபோது நிலைமை மிக மோசமாகி இருந்தது. வேறு வழியே இல்லாத நிலையில் அறுவை சிகிச்சை செய்து அதன் பாதிக்கப்பட்ட காலை தோள் பட்டை வரைக்குமாக நீக்கிவிட்டேன்.
இப்படி யொரு நிலை மனிதர்களுக்கு ஏற்பட்டால், சோர்ந்து போய்விடுவார்கள்.
தனக்கு ஒரு கால் இல்லாததை அது ஒரு குறையாகவே நினைக்கவில்லை. பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து எல்லோருக்கும் உற்சாகத்தைப் பரிசளித்து சமீபத்தில் மறைந்துவிட்டது! நாம் கற்றுக்கொள்ள அந்த விலங்கு தன் உற்சாக வாழ்வை உதாரணமாக விட்டுச் சென்றிருப்பதாக நினைக்கிறேன்.
(எஸ்.சுப்ரமணியன், நாகர்கோவிலில் வாழும் கால்நடை மருத்துவர். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக விலங்குகள் சிகிச்சையில் அனுபவம் வாய்ந்தவர். நம் செய்தியாளரிடம் கூறியதிலிருந்து)
மார்ச், 2020.