அ வருக்கு (பெயர் வெளியிட விரும்பாதவர்) ஆறு வயது இருக்கையில் தந்தை இறந்துவிட்டார். வலி நிறைந்த வாழ்வை எதிர்கொண்டு மெல்ல மெல்ல ஒரு நிலையை அடைகிறார்.
பொருளாதாரத் தேவைகள் நிறைவேறிய நிலையில், அவருக்கொரு மனம் வாய்க்கிறது. அது தான் போதும் என்கிற மனம். ஆம் அவர் சவுதியில் பணிபுரிகிறார். தென் மாவட்டத்தவர். கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிக்குச் சென்று நிவாரணப் பணிகளைச் செய்தபோது கள நிலவரத்தை எழுதினேன். அவர் என்ன பொருட்கள் அம்மக்களுக்கு உடனடியாக வேண்டுமென்று கேட்டு அவற்றை ஒருங்கிணைத்து அனுப்பினார். அவ்வப்போது மேலும் கள நிலவரங்களைக் கேட்டறிந்தபடி இருப்பார். அதன்பின்னர் நான் அவரிடம் தேவைகளைப் பற்றிச் சொல்வதில்லை. ஒரு தனிமனிதன் செய்யவேண்டிய அளவை அவர் செய்துவிட்டார் என்று உறுதியாக நம்பினேன். அதனால் அவரைத் தவிர்த்தேன்.
சில நாட்கள் போனதும் கல்பேட்டா தொகுதியைச் சேர்ந்த வைத்ரி என்ற பகுதியில் சில இடங்களில் கடும் அரிசித் தட்டுப்பாடு இருப்பதாக சேர்மன் உஷாகுமாரி அலைபேசினார். நான் நேரில் சென்று விசாரித்தேன். அதிகாரிகளிடம் பேசினேன். வைத்ரிக்கு அரிசி இல்லை. மற்ற முகாம்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வந்து அங்கே சேர்க்கவேண்டும் என்கிற நிலை. எம்.எல்.ஏவை அழைத்துப் பேசியபோது மறுநாள் காலை ஏழு மணிக்குள் கொடுத்தால் பல சிரமங்களைத் தடுக்கலாம் என்றார்.
அரிசித்தேவையைப் பற்றி சமூக ஊடகத்தில் எழுதினேன்.இப்போது நான் முதலில் குறிப்பிட்ட சகோதரன் மீண்டும் அழைத்தார். அரிசிக்கு உதவலாமா என்றார். ‘‘இல்லை நண்பர்கள் உதவ இருக்கிறார்கள், நீங்கள் வேண்டாம். நிறைய செய்துவிட்டீர்களே'' என்றேன். ‘‘இப்போது நான் உதவப்போவதில்லை. என் தந்தை உதவப்போகிறார்'' என்றார். அவர் தந்தை உயிரோடில்லையே அவர் எப்படி உதவுவார் என்று குழப்பத்துடன் கேட்டேன். ‘‘ஆம். அவர் குடும்பச் சொத்து பிரிக்கப்பட்டு அவர் பாகத்திற்கான தொகை வந்துள்ளது. அதைப் பயன்படுத்தும் தேவைகள் எங்களுக்கு இல்லை. அவர் இறந்து 36 வருடம் கழித்து வந்துள்ள இந்தத் தொகை சிலரின் பசிக்கு உதவுமானால் அதைவிட அந்தப்பணத்திற்கு என்ன மதிப்பு இருந்துவிடப்போகிறது?'' என்று பணம் அனுப்பி வைத்தார்.
மறுநாள் மெல்ல விடிகையில் அரிசி மளிகைப்பொட்டலங்கள், சிப்பங்கள் அடங்கிய லோடு ஏற்றும் பணி முடிவடைந்து லாரி வந்து சேர்ந்தது.
‘‘செத்தும் கொடுத்தார் சீதக்காதி'' என்கிற வசனம் எங்கள் பகுதியில் பிரபலமானது. சீதக்காதியின் பெயர்கூட அடையாளப்பட்டுவிட்டது. அந்த அடையாளத்தைக்கூட விரும்பாத மகனைப் பெற்ற அந்தத் தந்தை எல்லாப்பருக்கைகளிலும் பெயரானார்!
நான்காவது படிக்கும் ஒரு குழந்தை தனது மேற்படிப்பிற்காக அப்பா அம்மா, தாத்தா பாட்டி கொடுத்த பணத்தை சேமித்து வைத்திருந்தாராம். அதில் ஐம்பத்து இரண்டாயிரம் இருந்ததாம். அனுப்பி வைக்கிறேன் என்றும் கேரள மக்களுக்காக தினமும் பிரார்த்திப்பதாகவும் வாட்சப்பில் குரல் பதிவு அனுப்பி இருந்தது கண்டு நெகிழாத மனமே இருக்க முடியாது.
போன அவசரத்தில் ஒரு விடுதியில் 900 ரூபாய் வாடகைக்கு அறை எடுத்துவிட்டோம். மறு நாள் நான் ஒரு ஆள்தான். கட்டணத்தைக் குறைக்க முடியுமா என்று கேட்டேன். முடியாது என்று சொல்லிவிட்டார் மேலாளர். இவ்வளவு வாடகைக்கு நம்ம பட்ஜெட் தாங்காது என்று வேறு தங்கும் விடுதிகளில் விசாரித்தேன். எழுநூறு ரூபாய்க்கு ஒரு விடுதி கிடைத்தது. காலி செய்வதற்காக என் பழைய விடுதிக்கே திரும்பி வந்தேன். வாசலிலேயே மேலாளர் என்னை நிறுத்தி நான் கொடுத்திருந்த அட்வான்ஸைத் திருப்பிக் கொடுத்தார். ஏன் என்றேன். நீங்கள் எத்தனை நாள் வேண்டுமானாலும் தங்கிக்கொள்ளுங்கள் வாடகை வாங்க வேண்டாம் என்று முதலாளி சொல்லிவிட்டார் என்றார். பிறகுஅவருக்கு போன் செய்யச் சொல்லி, வாடகை குறைவாகவாவது வாங்கிக்கொள்ளுங்கள் என்றேன். எங்கள் மக்களுக்காக வந்திருக்கிறீர்கள்.. சல்லிக்காசு வேண்டாம் என்று மறுத்துவிட்டார். அன்றைய தினமே ஒரு முகாமிற்கு பிஸ்கட்டுகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோவில் புறப்பட்டேன். இறக்கிவிட்டு காசு வாங்க மறுத்துவிட்டார் ஆட்டோ ஓட்டும் தோழர். சாப்பிட்ட ஓட்டல்கள் காசு வாங்க மறுத்தன. பிரட் வாங்கிய ஒரு கடையில் பாதிப்பணம் மட்டும் பில் போட்டு வாங்கிக் கொண்டார் அதன் முதலாளி.
என்.எஸ்.பள்ளி நிவாரணமுகாமுக்குப் பொருட்கள் வழங்க சென்றிருந்தேன். அங்கு மில்மா (நம்ம ஊர் ஆவின் போல) மண்டல இயக்குநர் மதிப்புக் கூட்டப்பட்ட பால் பொருட்களை வழங்க வந்திருந்தார். அவருக்கு தமிழ் நன்றாகத் தெரிந்தது. நான் போட்டிருந்த ஷூ முற்றிலும் நனைந்திருந்ததைப்பார்த்தவர், என் கையைப்பிடித்து அழைத்துச் சென்று காரில் அமர்த்தினார். அப்படியே டவுனுக்கு வண்டியை விட்டார். மறுக்க மறுக்க கேளாமல் எனக்கு முழங்கால் வரையிலான காலணியை வாங்கித் தந்து மீண்டும் முகாமில் அழைத்துவந்து விட்டார்! இதுபோல் எத்தனையோ சம்பவங்களில் மானுடத்தின் உச்சத்தை தரிசித்தேன்.
எனக்கு யாசகத்தில் அனுபவமில்லை, ஆனால் எழுத்தில் அனுபவம் இருந்தது. நாசமாகிவிட்ட வாழ்வைத் தக்கவைக்கப் போராடிக்கொண்டிருக்கும் கைவிடப்பட்ட மனிதர்களுக்காக யாசித்தால் என்ன கெட்டுவிடும்? எழுத்தை யாசகமாக்கி வைத்தேன் சில நாட்கள். பலன் கிடைத்தது. நன்றி எழுத்தறிவித்த எல்லோருக்கும்.
(கவிஞர் ஆன்மன், தமிழகத்தில் இருந்து சென்று கேரள வெள்ள நிவாரணப்பணிகளை மேற்கொண்டவர்களில் ஒருவர்)
செப்டெம்பர், 2018.