சிறப்புக்கட்டுரைகள்

பரமசிவன் ரகசியம்

சொதப்பல் பக்கம்

பாமரன்

கண்ணுகளா.... உங்கள என் பேரப்புள்ளைகளா நெனச்சு

சொல்றேன்.... அந்தப் பழக்கத்த மட்டும் அடியோடு விட்ருங்க’ எனத் துவங்கி அடித்துத் துவைத்துக் காயப்போடும் சேலம் சிவராஜ் சித்த வைத்தியரையே தூக்கிச் சாப்பிட்டுவிடுவார்கள் போலிருக்கிறது நமது எழுத்தாளப் பெருந்தகைகள். எப்படியோ....

ஒருவழியா புத்தகக் கண்காட்சி முடிஞ்சுது. நாம தப்பிச்சோம்.

எங்க திரும்பினாலும் என்னோடது வந்திருக்கு..... என்னோடது இங்க கிடைக்கும்.... சுத்தமா சோல்டு அவுட்..... அவனது தத்தி.... என்னோடதுதான் சூப்பர்..... என இவர்கள் போட்ட கூப்பாடில் இன்னொரு தடவை

சுனாமியே வந்துட்டாதான் என்ன? என்று யோசிக்க வைத்து விட்டது. அப்பவும் சுனாமில

செத்தவனோட கையில என்னோடதுதான் இருந்துச்சு..... படிக்கப் படிக்க பேரலை வந்து தூக்கீட்டுப் போனத

யூ டியூப்ல பாத்தீன்னா புரிஞ்

சுக்குவே.... என்கிற ரீதியில் அளந்தாலும் அளப்பார்கள்.

இதில் எழுத்தாளர்களைவிட பதிப்பாளர்கள் பண்ணும் அலப்பரைக்கு அளவே இல்லை. பாரீஸ் கார்னர் பக்கம் லேகியம் விற்பவரெல்லாம் இவர்களிடம் வந்து டிரெயினிங் எடுக்க வேண்டும்.

ஒரு புத்தகம் விற்பதற்காக செய்யும் அலப்பரைகள் என்ன? சட்ட மன்றத்தையே பிச்சை வாங்க வைக்கும் ‘காரசார’ விவாதங்கள் என்ன? ‘கடும் மோதல்கள்’ என்ன? ‘டாப்டென்’ பட்டியல்கள் என்ன? இவர்களுக்குள் நடத்திக் கொள்ளும் போலி மோதல்கள் என்ன? அரசியல் தலைவர்கள் செத்தார்கள்.

ஒரு எழுத்தாளனின் வாழ்நிலை எவ்வளவு துயரமானது.... ஒரு வேளை சோற்றுக்கே அவன் படும்பாடு எந்தளவிற்கு துன்பம் மிக்கது... தூரத்திலுள்ள தன் துணையைக் காண்பதற்குக்கூட கையில் காசில்லாமல் மாதக்கணக்கில் தவணை

சொல்லி எழுதும் வரிகளில் எத்தனை வலிகள்..... என்பதை புதுமைப்பித்தன் எழுதிய ‘கண்மணி கமலாவுக்கு!’ படித்தால் புரியும். நாற்பதைத் தாண்டிய என்னைப் போன்ற எழுத்தாளர்கள் நாசமாய்ப் போகட்டும். ஆனால் எம் இளைய தலைமுறைத் தம்பிகள் படிக்கட்டும். நிச்சயம் படிப்பார்கள் எனும் நம்பிக்கை எனக்குண்டு. அதிலிருந்து கற்றுக் கொண்டு ஆர்ப்பாட்டமற்ற புதிய கீற்றொன்று நிச்சயம் பிறக்கும்.... அதுவரை........

************

இந்த மாதம் மகிழ்ச்சிக்கும் நெகிழ்ச்சிக்கும் எல்லையற்றுப் போனது. ‘வில்லங்கம் பிடித்தவன்’ என்று தெரிந்திருந்தும் எனக்குப் போய் பெரியார் விருதை அளித்த திராவிடர் கழகத்தவரை என்னென்று சொல்ல....? இத்தனைக்கும் ஓரிரு முறை அவர்களது சில அரசியல் நிலைப்பாடுகளை விமர்சித்து எழுதியிருக்கிறேன். கடுமையாகச் சாடி இருக்கிறேன். அதைப்போலவே அவர்களுக்கும் எமது நிலைப்பாடுகள் சிலவற்றின்  மீது மாறுபாடுகள் உண்டு. ஆயினும் என்னை நேச சக்தியாய் உணர்ந்து  இந்த ஆண்டிற்கான பெரியார் விருதினை அளித்த பண்பு உண்மையிலேயே ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சியினை அளித்தது. மனதில் பட்டதை மேடையில் பேசினேன். அப்புறம் பெரியாரின் திடலில் நின்று கொண்டு உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேச முடியுமா? இது என் தகுதிக்குக் கிடைத்த விருதாகக் கருதவில்லை நான். என் தகுதியை வளர்த்துக் கொள்ளக் கிடைத்த விருதாகவே கருதுகிறேன்.    விருது கொடுத்ததற்காக ஆசிரியர் வீரமணி அவர்களோ.... விருது கிடைத்ததற்காக நானோ மாற்றி மாற்றி பிள்ளைத் தமிழ் பாடிக் கொண்டிருக்கப் போவதில்லை. மாற்றுக் கருத்துக்கள் தோன்றும் போது மனதார விமர்சித்துக் கொள்ளத்தான் போகிறோம். அதுதானே நம் ஈரோட்டுக்கிழவனிடம்  கற்றுக் கொண்ட பாலபாடம்.

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி தோழர்களே.....

திடலில் விருதைப் பெற்ற கையோடு எழும்பூரில் உள்ள அறைக்குள் நுழைந்தவனுக்கு அங்கும் ஒரு மகிழ்ச்சி மலர்ப்பாதை போட்டுக் காத்திருந்தது.

உள்ளே நுழைந்ததும் ‘தலைவா!... தோழர் சித்தானை இதை உங்ககிட்ட குடுக்கச் சொன்னாரு’ என்று ஒரு புத்தகத்தை நீட்டினான் நண்பன் அன்பு.

பார்த்தால்..... அது நமது தொ.ப (தொ.பரமசிவன்) என்னிடம் அளிக்கச் சொல்லி கொடுத்து அனுப்பியிருந்த ‘பரண்’ புத்தகம். அட அற்புதம் என்று சொல்லிக் கொண்டே நூலைப் பிரித்தவனை மேற்கொண்டு பக்கங்களைப் புரட்ட முடியாதவாறு கண்ணீர் கைப்பற்றிக் கொண்டது.

காரணம் அதில் அவர் கைப்பட எழுதியிருந்த ‘அப்பனுடைய பிரதி’ என்கிற இரண்டே இரண்டு வார்த்தைகள்தான்..... தனக்கு வந்ததை இந்த மகனுக்குக் கொடுத்து அனுப்பியிருக்கிறார் தொ.ப. வேறென்ன வேண்டும் இந்த மகனுக்கு?

இருபத்தி இரண்டு வயதில் அப்பனைத் தொலைத்து விட்டு... நாற்பதைக் கடந்து நடுநேர் எடுத்த... கொஞ்சம் கருப்பும் கொஞ்சம் வெள்ளையும் கலந்த முடியோடு ஐந்தடிக்கு மிகாமல் காணும் மனிதர்களிடமெல்லாம் அப்பாவைத் தேடியிருக்கிறேன். அதே உயரமும்.... அதே குறுஞ்சிரிப்பும்..... அடுத்த மனிதர்களை மறந்தும் புண்படுத்தாத அதே பண்பும் கொண்ட தொ.ப.வைக் கண்ட நாளில் இருந்து மண்ணுக்குள் புதைத்த தகப்பனை மீளப்பெற்ற மகிழ்வுதான். நான் பெற்ற பேறு பெரும் பேறு.

மனதின் பேட்டரியில் சார்ஜ் தீரும் போதெல்லாம் புறப்பட்டுப் போகும் ஒரே இடம் பாளையங்கோட்டை தெற்கு பஜார்தான். அங்கு போய் இறங்கி தோழர்களையும் தொ.ப.வையும் பார்த்த பிற்பாடுதான் மனம் சாந்தியையோ ஜெயந்தியையோ அடையும்.

சென்ற முறை சென்றபோது...... ‘பாமரன்.... இந்த முறை சேரன்மாதேவி போயிட்டு அப்படியே தாமிரபரணில குளிச்சிட்டு வரலாம்..... ஆளுக்கு ஒரு ஈரிழைத் துண்ட வாங்கிக்கவுமா ?’ என்றார் தொ.ப. என்னைப் போன்றவர்களுக்கு ஜட்டி அணியும் “ஆடம்பரம்” எல்லாம் கிடையாது என்கிற உண்மையை எப்படிச்

சொல்ல?

அய்யா... துண்டெல்லாம் நமக்கு இடுப்புல நிக்காது.... நான் பர்முடாசே வாங்கிக்கறேன்.... என வழியில் வண்டியை நிறுத்தி வாங்கிக் கொண்டேன். வழியில் வ.வே.சு.ஐயர் நடத்திய குருகுலம்.... அதில் இருந்த

சாதிப்பாகுபாட்டால் எழுந்த பிரச்சனை..... தந்தை பெரியாரின் சீற்றம் .... என எண்ணற்றவற்றை சொல்லிக் கொண்டே வர நாங்கள் இறங்க வேண்டிய இடமும் வந்தது. அது ஏதோ பதினாறாம் நூற்றாண்டு கோயில்.... அதன் சுற்றுப்புற சுவர்களில் பதிக்கப்பட்டிருந்த கல்வெட்டுக்களை வாசித்துக் காட்டி விளக்கிக் கொண்டே வந்தார் தொ.ப.

சமதளமாக இருந்தாலே தண்ணி போட்டமாதிரி தள்ளாடுவேன். அது கொஞ்சம் கரடு முரடான தளம்.... தள்ளாட்டத்திற்குக் கேட்கவா வேண்டும்? காரணம் என் இரண்டு கால்களிலும் உள்ள ஆணி. அதுவும் தலா இரண்டிரண்டு. தள்ளி நின்று எங்களைப் பார்ப்பவர்களுக்கு ஏதோ வயதில் பெரியவரை நான் தான் கைத்தாங்கலாக கூட்டிச் செல்கிறேன் என்பது போலத் தோன்றும். ஆனால் உண்மையில் தொ.ப.தான் என்னை கூட்டிச் சென்று கொண்டிருந்தார். இதுதானா உங்க கால் ரகசியம்? என்றார் நக்கலாக.

அடுத்து நீராடல் படலம் வந்தது. ஈரிழைத் துண்டில் அவரும் பர்முடாசில் நானுமாய் தோழர்களோடு ஆற்றில் இறங்கினோம். முங்கி முடித்து வெளியில் வருவதற்காக அவருடைய துண்டைக் கட்டிக் கொண்டு உள்ளாடையைக் கழற்றி தோளில் போட்டார் தொ.ப.

வலது புறம் நானும் இடது புறம் நண்பனும் அவருடை கைகளைப் பிடித்துக் கொண்டு சில அடிகள் நீரில் எடுத்து வைத்திருப்போம்....‘அய்யோ... அய்யோ...’ என்று சத்தம் தொ.ப.விடம் இருந்து... பதறிப்போய் என்னவென்று பார்த்தால் அவர்கட்டியிருந்த துண்டு ஆற்றோடு போய்க் கொண்டிருக்கிறது. பழனி முருகன் கோலத்தில் தொ.ப.

முருகனிடமாவது கோவணம் இருந்தது.... இங்கு அதுவும் மிஸ்ஸிங். புடிடா துண்டை என்று அலற... போய்க் கொண்டு வந்து சேர்த்தான் நண்பன்.

சிரிப்பை அடக்கியபடி மீண்டும் பாளையங்கோட்டை வந்து சேர மாலை சபை நண்பர்களால் களைகட்டி யிருந்தது. சும்மா இருக்காமல் தொ.ப.தான் ஆரம்பித்தார். ‘உங்குளுக்கு ஒண்ணு தெரியுமா? பாமரன் ஏன் இப்படி நடக்குறாருங்கிற கால் ரகசியத்தை நான் கண்டுபுடிச்

சுட்டேன்’ என்க.... நானாவது அமைதியாக இருந்திருக்கலாம்...... என்னோடதாவது கால் ரகசியம்.... நான் அய்யாவோட “பரமரகசியத்தையே” கண்டுபுடிச்

சிட்டேன் என்று சொல்ல... எங்களுடன் பயணம் வந்த தோழர்கள் மறுபடியும் அந்த ‘அய்யோ... அய்யோ’ பிளாஷ்பேக்கை நினைத்து சிரிக்க ஆரம்பிக்க.... அத்தோடு விடவேண்டுமே நம்ம தொ.ப...... ‘அய்யா.... அது பரமரகசியம் இல்லை..... பரமசிவன் ரகசியம்’ எனப் போட்டுத்தாக்க..... தோழர்களின் சிரிப்பில் தெற்குபஜாரே கதிகலங்கியது.

இப்படிப்பட்ட எண்ணற்ற பொழுதுகள் தொ.ப.வோடு. அவரது கனிவும் அன்பும் கொண்ட உறவுக்கு முன்பாக எளிமையும் நாவடக்கமும் அற்ற நான் எந்தளவிற்கு தகுதியானவன் என்பதை அறியேன்.

**********

ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வந்திருக்கிறது. இன்றா... நாளையா? என கயிற்றில் ஊசலாடிக் கொண்டிருந்த 15 உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன உச்ச நீதி மன்றத் தீர்ப்பின் மூலம். வீரப்பனோடு தொடர்புடையவர்கள் என்று சொல்லப்பட்ட நால்வரும் அடக்கம் இதில்.  ஆனாலும் புதிய ஆதாரங்களைக் கருத்தில் கொள்ள முடியாது..... நீண்டகாலக் காத்திருப்புக்கு மட்டுமே எம்மால் நீதி வழங்க முடியும் என்றிருக்கிறது உச்ச நீதி மன்றம். மரணதண்டனை விதிக்கப்பட்டும் புதிய ஆதாரங்கள் கிடைத்ததை வைத்து நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டவர்கள் ஐரோப்பிய நாடுகளில் அநேகர். முன்னாள் ஐ.பி.எஸ்  அதிகாரி  தியாகராஜன் அவர்களது மனம்திறந்த வாக்குமூலமும் 

சுட்டி நிற்பது அதைத்தான். காலம் கடந்து வந்தாலும் நம் பேரறிவாளன் நிரபராதி என்பதற்கான அற்புதச் சான்று அது.

இந்த இதழ் உங்கள் கைகளில் இருக்கும்போது நம் தம்பிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவர் குறித்த  தீர்ப்பும் வந்திருக்கக் கூடும். ‘மரண தண்டனை வரிசையில் ஆண்டுக்கணக்கில் காக்க வைக்கப் பட்டார்கள்.... அதனால் தண்டனைக் குறைப்பு’ என்பதைக் காட்டிலும் ஜெயின் கமிஷன் முன்னாலும் அது நியமித்த பல்முனை நோக்கு புலன்  விசாரணைக் குழு முன்பாகவும் தீர்க்க வேண்டிய சந்தேகங்கள்.... விசாரிக்கப்பட வேண்டிய மர்ம ‘மனிதர்கள்’  இன்னும் இருக்கிறார்கள் என்பதையும்... தியாகராஜனது பட்டவர்த்தனமான ஒப்புதலையும் மனதில் கொண்டு இந்த அப்பாவிகள் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட வேண்டும். அதுதான் நம் அனைவரது நியாயமான எதிர்பார்ப்பும் ஆசையும்.

வீரப்பனோடு தொடர்புடையவர்கள் என்று சொல்லப்பட்ட நால்வருக்கும் மைசூர் தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்ததைக் குறைக்கக் கோரி அப்பீலுக்குப் போன அவர்களது மனுக்களைத் தள்ளுபடி செய்துவிட்டு... உச்சநீதி மன்றம் தானே முன் வந்து விசாரித்து மரண தண்டனையை அளித்தது அன்று. கொடுத்த தண்டனை போதாது என்று ஆயுள் தண்டனையை தூக்காகவே மாற்றும் இந்நீதிமன்றம்..... அதிகாரி தியாகராஜனுடைய அப்பட்டமான வாக்குமூலத்தையும் தானே முன் வந்து  விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு ஏன் விடுதலையை நோக்கி நகரக் கூடாது? இதுதான் நம்முன் உள்ள நியாயமான கேள்வி.

பிப்ரவரி, 2014.