காந்தி கண்ணதாசன் படம்: ஆம்ரே கார்த்திக்
சிறப்புக்கட்டுரைகள்

“பபாசியின் செயல்பாடுகளில் எனக்கு உடன்பாடு கிடையாது!”

வசந்தன்

கண்ணதாசன் பதிப்பக உரிமையாளர் காந்தி கண்ணதாசன் தமிழ்ப் பதிப்புலகம் குறித்து  அந்திமழையுடன் விரிவாக உரையாடினார். அதிலிருந்து..

 இந்த பதிப்பகம் தொடங்கப்பட்டதன் பின்னணி பற்றி சொல்லுங்களேன்?

1977 - ஆம் ஆண்டு இளங்கலை படிப்பை முடித்தவுடன் ஏதேனும் தொழிலைத் தொடங்க வேண்டுமென்கிற எனது விருப்பத்தை அப்பாவிடம் கூறினேன். பதிப்பகம் தொடங்கும் யோசனையை வழங்கியவர் அப்பாதான். 'அர்த்தமுள்ள இந்துமதம்' 4&வது பாகத்தை நமது முதல் புத்தகமாக வெளியிடலாமென அப்பா கூறினார்.  முதன்முதலில் ஒரு புத்தகத்துக்கு சுவரொட்டி விளம்பரம் செய்யலாம் என்னும் திட்டத்தை இதில் அப்பா செயல்படுத்தினார். ஆனந்த விகடன், குமுதத்தில் அரைப்பக்க விளம்பரம் வெளியிட்டோம்.இப்புத்தகம் ஒரேமாதத்திற்குள் 1, 25,000 பிரதிகள் விற்பனையாகி வியப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு தான் பதிப்புத்துறையில் எனக்கு முழுமையான ஈடுபாடு ஏற்பட்டது.

பிறகு?

1981 - ல் அப்பா மறைந்தபிறகு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பதிப்பகத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. மூன்று ஆண்டுகள் ஒரு நிறுவனத்தின் அதிகாரமட்டத்தில் பணிபுரிந்தேன். அதன்பிறகு 1984 - ல் பதிப்பகம்தான் எனது தொழில் என்கிற தீர்க்கமான முடிவுக்கு என்னால் வரமுடிந்தது. 90 - க்கு பிறகு சில ஆக்கபூர்வமான மாற்றங்களை செய்யத் தொடங்கினேன்.  எனது முயற்சிகள் தமிழ்ப் பதிப்புலகத்துக்கே புதிது. காப் மேயரின் சுயமுன்னேற்ற புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட விரும்பினேன்.  மொழிபெயர்ப்பு புத்தகங்கள் வெளியிடுவதில்
சட்டபூர்வமான வழிமுறைகளை சரியாகப் பின்பற்றி உரிமம் பெற வேண்டுமென உறுதியாக இருந்தேன். இதற்காக காப் மேயருக்கு நான் எழுதிய கடிதத்துக்கு அவர் அளித்த பதில் மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.'தமிழ் மொழியையும், அதன் தொன்மையையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியான மொழியில் எனது புத்தகங்கள் வெளிவருவதில் மிகுந்த மகிழ்ச்சி. எனக்கு ராயல்டி தொகை எதுவும் வேண்டாம்‘ என்று காப் மேயர் எனக்கு பதில் கடிதம் எழுதியிருந்தார்.  இதே பாணியில் சோனி நிறுவனத்தின் நிறுவனர் அகியோ மொரிட்டா போன்றவர்களின் சுயசரிதையை தமிழில் வெளியிட்டோம். இக்காலத்தில் மின்னஞ்சல், கணினி போன்ற தொழில்நுட்ப வளர்ச்சிகளை கண்ணதாசன் பதிப்பகம் இருவகையில் பயன்படுத்தியது. தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலம் கிடைத்திருக்கும் ஆற்றலை எமது வளர்ச்சிக்குப் பயன்படுத்துதல், குறித்த தொழில் நுட்பங்களைப் பற்றிய கல்வி சார்ந்த புத்தகங்களை வெளியிடுதல் என்கிற முறையை மேற்கொண்டேன். புத்தக அச்சு தொழில் நுட்பங்களை முதலில் பயன்படுத்தும் வகையில் தன்னை உருமாற்றிக்கொள்ளும் நிறுவனமாகவும் இருந்தோம்.

தமிழ்ப் பதிப்புலகில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன?

பதிப்பாளர்களுக்கு பக்கபலமாக இருப்பவர்கள் புத்தக விற்பனையாளர்கள்தான். ஆனால், இவர்களுக்கிடையே சிக்கல்கள் எழும்போது பதிப்பகத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. புதிதாக புத்தகத் திருவிழா நடத்துகிறோம் என                   சொல்லி வருபவர்கள் சிலர் ,விற்பனை முடிந்தும், வாங்கிச் சென்ற புத்தகங்களுக்கான தொகையைச் செலுத்துவதில்லை. அரசு வழங்கும் நூலக ஆணை அனைவருக்கும் முறையாகக் கிடைப்பதில்லை. இணைய புத்தகங்களால் விற்பனையிலும் பாதிப்பு ஏற்படுகிறது. இதேபோல் பதிப்பாளர்களாக மாறும் விற்பனையாளர்கள் புதிய படைப்புகளை உருவாக்கினால் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், ஏற்கெனவே பிரபலமாக இருக்கும் புத்தகங்களின் உள்ளடக்கத்தை வேறு பெயரில் வெளியிட்டு பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். இதனால் மூல நூல்களின் பிரதிகள் விற்பனையாகாமல் தேங்கி நிற்கின்றன. இவற்றையெல்லாம் நாங்கள் அனுபவ முதிர்ச்சியோடு கடந்துவந்தாலும், மற்றவர்களுக்கு நிச்சயம் சவாலான சிக்கல்கள்தான்.

உங்கள் புத்தகங்களில் அதிகம் விற்பனையான புத்தகங்கள் எவை?

'அர்த்தமுள்ள இந்துமதம்' வரிசைக்குப் பிறகு எங்களது பதிப்பகத்துக்குத் திருப்புமுனையாக அமைந்தது காப் மேயரின் நூல்கள். அவரது 4 நூல்களையும் படித்துவிட்டால் வாழ்க்கையில் 
நீங்கள் தோற்கவே வாய்ப்பில்லை.  சிக்கல்கள் பல வந்தாலும் அதனைக் கடந்து எப்படி சாதித்தோம் எனச் சொல்வதுதான் அகியோ மொரிட்டா, அக்னிச் சிறகுகள் போன்ற நூல்கள்.  அக்னிச் சிறகுகள் வெளியான காலத்தில் பொக்ரான் அணுகுண்டு சோதனையில் இடம்பெற்ற ஒரு தமிழர் என்கிற அளவிலேயே அப்துல் கலாம் அறியப்பட்டிருந்தார். ஆங்கிலத்தில் அவர் எழுதிய 'Wings of Fire' படித்துவிட்டு நான் வியப்பில் ஆழ்த்தேன். இதனை நிச்சயம் தமிழில் உருவாக்க வேண்டுமென்கிற முனைப்புதான் 'அக்னிச் சிறகுகள்' புத்தகத்தைக் கொடுத்தது. இதன்பிறகு, கண்ணதாசன் பதிப்பகம் ஒரு புத்தகத்தை வெளியிட்டால் அது நிச்சயம்         சிறந்த நூலாக இருக்குமென்கிற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டது. மக்களின் இந்த எண்ணம் தான் எங்களது மிகப்பெரிய பலம். அப்துல் கலாமின் அக்னிச்சிறகுகள் 5 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையானது.

பபாசியின் நிர்வாகப் பொறுப்பில் இருந்த அனுபவம் பற்றி?

மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டியது தற்போதைய அவசியத் தேவையாக இருக்கிறது. அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, பபாசியின் செயல்பாடுகளில் எனக்குப் பெரிய உடன்பாடு கிடையாது. கண்ணதாசன் பதிப்பகம் உருவாக்கிய அளவுக்குக்கூட பபாசி புதிய வாசகர்களை உருவாக்கவில்லை. இந்தத் துறையில் செய்ய வேண்டிய பல்வேறு பணிகளை பபாசி செய்யத் தவறியிருக்கிறது. பபாசியில் நான் மூன்றுமுறை தலைவராக இருந்திருக்கிறேன். ஆனால், செயற்குழு ஒத்துழைப்பு இல்லாமல் தலைவரால் மட்டும் எந்த நகர்வையும் செய்ய முடியாது. செயற்குழு உறுப்பினர்கள் இன்னும் முதலாம் உலகப்போர் காலகட்ட சிந்தனையிலிருந்தே வெளிவரவில்லை. எனவே புதுமையான, ஆக்கபூர்வமான மாற்றங்களுக்கு அவர்கள் ஒத்துழைப்பதில்லை. அறிவுத்தளத்தில் அடுத்த தலைமுறைக்குச் செய்யவேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. கணினி, தொழில்நுட்பமயமாக்கலை கூட அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். இன்னும் பழைய முறையைத் தான் பயன்படுத்துகிறார்கள். புத்தகக் கண்காட்சியை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லவேண்டும். அகில இந்திய அளவிலான பிற
சங்கங்களோடு ஒருங்கிணைந்து செயல்படலாம். அரசாங்கத்தோடு இணைந்து பல்வேறு வேலைத் திட்டங்களை உருவாக்கலாம். நான் தலைவராக இருந்தபோது கலைஞரின் முயற்சியில் புத்தகப் பூங்கா அமைக்கப்பட்டது. பல்வேறு பெயர்களில் இயங்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பதிப்பாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதால் அதுவும் பயனளிக்கவில்லை.பதிப்பாளர் படைப்பாளர் நகர் அமைக்கும் செயல்திட்டத்துக்கும் பபாசி நிர்வாகிகள் முட்டுக்கட்டைபோட்டனர். அரசுடன் இணைந்து ஆக்கபூர்வமாகச் செயல்படாமல் பபாசி இடைவெளியைக் கடைபிடிக்கிறது. இவ்வாறு, களையப்பட வேண்டிய பல்வேறு சிக்கல்கள் பபாசியில் உள்ளன.

உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்ன?

 ‘பொன்னியின் செல்வன்' புத்தகத்தை இன்னும் எளிமையான வடிவத்திற்கு மாற்றி, சமகால வாசகர்கள் விரும்பும்படி, காட்சியை விவரிக்கும்படியான சித்திரங்களோடு வெளியிட வேண்டும்மென்பது எங்களது பெரும் ஆவலாக இருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பதிப்பு மற்றும் புத்தக விற்பனையில் மாற்றங்களைக்  கொண்டுவருகிறோம். இதற்காக எனது மகன் முரளி கண்ணதாசன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

ஜுன், 2019.