சிறப்புக்கட்டுரைகள்

பதிப்புலகின் எதிர்காலம்!

பத்ரி சேஷாத்ரி

பதிப்புத் துறையில் இருந்துகொண்டே அத்துறைபற்றி ஆரூடம் சொல்வதில் சில சிக்கல்கள் உள்ளன. அவரவரது தொழிலின் அப்போதைய நிலையை அப்படியே தொழில்துறையின் நிலையாகக் கருதிவிடும் அபாயம் உள்ளது. முடிந்தவரை விலகி நின்று இந்தக் கட்டுரையை எழுத முற்பட்டுள்ளேன்.

இந்தியாவில் மிக முக்கியமான விஷயங்கள் தொடர்பாகக்கூட புள்ளிவிவரங்கள் கிடைப்பதில்லை. எத்தனை பேர் நாட்டில் வேலையில்லாமல் இருக்கிறார்கள், நாட்டின் மொத்த உற்பத்தி எவ்வளவு? கடந்த சில வருடங்களில்
ரிசர்வ் வங்கி எத்தனை மதிப்புக்கு பணம்
அச்சிட்டு வெளியிட்டுள்ளது போன்ற தகவல்களில் கூடச் சந்தேகங்கள் உள்ளன. இப்படிப்பட்ட நிலையில் புதிதாகத் தமிழ்ப் புத்தகங்கள் ஆண்டுக்கு எத்தனை வெளியாகின்றன? எத்தனை கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகிறது? போன்றவை குறித்து அதிகாரபூர்வத் தகவல்கள் என்று எதுவும் கிடைப்பதில்லை என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. எனவே நான் எண்களைக் கொண்டு எதையுமே விளக்கப்போவதில்லை.

தமிழகத்தில் இன்று பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளே இல்லை. படிப்பறிவு கிட்டத்தட்ட 100% என்பதை நெருங்கிக்கொண்டிருக்கிறது. தமிழ் இல்லாவிட்டால் ஆங்கிலம் என்று ஏதேனும் ஒரு மொழியையாவது ஒருவர் படிக்கத் தெரிந்திருக்கவேண்டும். எண்ணும் எழுத்தும் நன்கு தெரிந்த நம் மக்கள் தொடுதிரை செல்பேசிகளை மிகச் சரளமாகப் புழங்குகிறார்கள். சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் வயதான பாட்டி, தாத்தாக்கள்கூட இவற்றை எளிதாகக் கையாளுகிறார்கள்.

யூனியன் பிரதேசங்களை விடுத்துப் பார்த்தால், இந்தியாவிலேயே அதிகத் தனி நபர் வருமானத்தில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது தமிழகம். கல்லூரி செல்வோர் எண்ணிக்கை என்று பார்த்தால் இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருக்கிறது தமிழகம். ஆக படிப்பறிவிலும் வசதி வாய்ப்பிலும் மிக உயர்ந்த நிலையில் தமிழகம் உள்ளது. ஆனாலும் புத்தகம் வாங்கிப் படிப்பதில் தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது என்று நான் கருதுகிறேன்.

வார மாத இதழ்களையும் பாக்கெட் நாவல்களையும் லட்சக்கணக்கில் வாங்கிப் படித்துவந்த தமிழர்கள் இன்று அவற்றிலிருந்து நகர்ந்துகொண்டே போகிறார்கள். தினசரி செய்தித்தாள்கள் மட்டுமே சமீபகாலங்களில் அதிகரித்திருக்கின்றன. அச்சுப் புத்தகங்கள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளன. பெரும் பெயர் பெற்ற எழுத்தாளர்கள் என்று குறிப்பிட்டுச் சொல்வது கடினமாகியுள்ளது. எழுத்தின்மூலம் வருமானம் பெறமுடியாது என்ற நிலைமை இன்றும் தொடர்கிறது. தீவிர இலக்கிய எழுத்தாளர்கள் அன்றுமுதல் இன்றுவரை மிகக் குறுகிய எண்ணிக்கையிலான வாசகர்களை மட்டுமே நோக்கித் தங்கள் எழுத்தைச் செலுத்திவந்துள்ளனர். ஆனால் பெரும் எண்ணிக்கையில் வாசகர்களை ஈர்க்கும் வணிக எழுத்தாளர்கள் இன்று அருகிப் போய்விட்டனர்.

பெரும்பாலும் பதிப்பாளர்கள் நூலக ஆணையை நம்பிவந்துள்ளனர். ஆனால் தற்காலத்தில், பெரும்பாலும் தரமற்ற புத்தகங்களையே  நூலகங்கள் வாங்கிவருகின்றன. இதனால் நூலகம்
சென்று புத்தகங்களைப் படிப்போர்  எண்ணிக்கை கட்டாயமாகக் குறைந்துள்ளது.

இணையவெளியில் நேரத்தைக் கழிக்க ஃபேஸ்புக், வாட்ஸப் போன்ற செயலிகள்  வந்துவிட்டன. டிக்டாக், யூ ட்யூப் போன்றவை ஆடல்பாடல் காட்சிகளால் மக்களைக்  கவர்கின்றன. இந்நிலையில் தீவிர வாசிப்பையோ, பொழுதுபோக்கு வாசிப்பையோ  எளிதில் யாரும் அணுகுவதில்லை.

நான் இதுகுறித்துப் பேசும்போதும் எழுதும்போதும் உடனடியாக ஆலோசனை கூற ஆயிரம்  பேர் வருகிறார்கள். ஆடியோ புத்தகம், வீடியோ புத்தகம் போட்டால்  பிய்த்துக்கொண்டு விற்பனை நடக்கும் என்று கருத்து கூறுகிறார்கள். ஆனால்  ஆடியோ புத்தகங்களை பத்தாண்டுகளுக்கு முன்பே வெளியிட்டிருக்கிறேன் நான்.  இன்றும் நூறு ஆடியோ புத்தகங்களுக்குமேல் எங்களிடம் உள்ளது. வீடியோ புத்தகம்  என்றால் என்ன என்று எனக்குப் புரியவில்லை. இப்படிப் பேசுபவர்களுக்குப்  புத்தகம் என்றால் என்ன என்றே தெரியவில்லை என்றுதான் சொல்வேன்.

நான் தொழில்நுட்பம் குறித்து நன்கு அறிந்தவன். அமேசான், கூகிள் போன்ற  பெருநிறுவனங்கள் மின்புத்தகங்களை இந்திய மொழிகளில் அறிமுகப்படுத்தியபோது  முதலாவதாகக் களத்தில் இறங்கி எங்கள் அனைத்துப் புத்தகங்களையும் மின்புத்தகங்களாக கிண்டில் மூலம் வெளியிட்டேன். எங்கள் பதிப்பகம்  வெளியிட்டுள்ள மின்புத்தகங்களின் எண்ணிக்கைக்கு அருகில் கூடப் பிறருடைய  எண்ணிக்கை வராது. ஆனால் அதிலிருந்து வரும் வருமானம் அதிகமில்லை. அதற்கு  ஆயிரம் காரணங்கள் சொல்லப்படுகிறது. ஆனால் அவை எவையும் முக்கியமல்ல.  கட்டக்கடைசியாகப் பேசப்போவது வருமானம் மட்டுமே.

ஆங்கில மீடியக் கல்விதான் தமிழ்ப் புத்தகங்களைப் படிப்பது குறையக் காரணம்  என்று
சொல்லப்படுகிறது. இதனால் ஏற்படும் நஷ்டம் யாருக்கு? இணையத்தில்  எண்ணற்ற பல விஷயங்கள் கொட்டிக்கிடப்பதாகச்
சொல்லப்படுகிறது. புத்தகங்கள்  என்பவை இணையத்தில் பக்கம் பக்கமாகக் கிடைக்கும் சில தரவுகளுடன்  ஒப்பிடப்படக்கூடியவை அல்ல. உலகில் ஆங்கிலத்துக்கு இணையாக இணைய தளங்கள்  கிடையாது. ஆனால் அம்மொழியில் புத்தகங்களின் விற்பனை தாழவில்லையே? புத்தகம்  படிப்பதை ஆடியோ பாட்டு கேஸட் கேட்பதோடு ஒப்பிடவே முடியாது. பல நூறு  புத்தகங்களில் நிதானமாகச்
சொல்லப்படும் எந்த எழுத்தையும் ஆடியோ  வடிவாக்கினால் பல மணி நேரம் ஆகும். அப்படிப்பட்ட ஆடியோக்களை யாருமே  கேட்கமாட்டார்கள். இன்று இணையத்தில் அனைத்தையுமே சுருக்கித் தரும் சில  தளங்கள் வந்திருக்கின்றன. புத்தகம் என்பது ஒரு கருத்தை விரித்துத் தருவது;  சுருக்கித் தருவதற்கு நாம் என்ன தேர்வா எழுதப்போகிறோம்?

மொத்தத்தில் புத்தகங்கள் ஓர் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க முயற்சி  செய்கின்றன. 16&ம் நூற்றாண்டில் ஏற்பட்ட இணையற்ற அறிவுப் புரட்சியே  அச்சிடும் இயந்திரம்தான். அதுதான் அறிவியல், தொழில்நுட்பப் பாய்ச்சலுக்கு  வித்திட்டது. ஐரோப்பாவின் மறுமலர்ச்சி யுகத்துக்குக் காரணமானது. குடியாட்சி  முறை நாடுகள்தோறும் பரவியதற்குக் காரணமானது. அடிமை நாடுகள் விடுதலை அடையக்  காரணமானது. இந்தப் புத்தகங்கள் அச்சு வடிவில் தாளில்தான் இருக்கவேண்டும்  என்று நான் கருதவில்லை. ஆனால் புத்தகம் என்ற வடிவம் முக்கியமானது. அது  ஒவ்வொரு மொழியிலும் பல்கிப் பெருகினால்தான் அந்த மொழிபேசும் சமுதாயம்  வளர்ச்சி அடையமுடியும்.

பதிப்பாளர்கள் வெறும் கருவிகளே. முதலீடு செய்யும் தொழிலதிபர்களே. பதிப்புத்  தொழில் கட்டுப்படியாகவில்லை என்றால், அவர்கள் வேறு தொழிலுக்குப்  போய்விடுவார்கள். நஷ்டம் அவர்களுடையதல்ல.

ஜுன், 2019.