சிறப்புக்கட்டுரைகள்

பதிப்பாளர் எழுத்தாளர் ஆகலாமா?

கே.எஸ்.புகழேந்தி

தமிழ்ச்சூழலில் வெளிவரும் நூல்கள் ஆயிரம் பிரதிகள் விற்பனை என்ற எல்லையைக் கடக்க ஓராண்டு ஆகிறது. இதே பெரும் சாதனை என்று பலர் சொல்லக்கேட்டுள்ளேன். ஆனால் என்னைப் பொருத்தவரை வெளியிட்டு ஆறேழு மாதத்தில் ஆயிரம் பிரதிகள் விற்காத எந்தப் புத்தகமும் தோல்விப் புத்தகம்தான். இதை அடிப்படையாகக் கொண்டுதான் எங்கள் பதிப்பகத்தில் வெளியாகும் நூல்களைத் தெரிவு செய்கிறோம்.

விற்பனையாளர்களைத் தொடர்ந்து சந்தித்துவருகிறேன். அவர்களிடமிருந்து எம்மாதிரி நூல்கள் விற்பனை ஆகின்றன என்பதை அறிந்துகொள்கிறேன். ஒருவரின் கடையில் பிரபலமானவர்கள் நூல்கள் குறைவாகவும் புதிதாக எழுதவந்தவர்களில் நூல்கள் அதிகமாகவும் இருந்தன. ஏன் என்று கேட்டேன். பிரபலமானவர்கள் தங்களுக்கென்று ஒரு பிராண்ட்டை உருவாக்கி இருப்பதால் அவர்கள் நூல்கள் தானாகவே விற்கின்றன. ஆனால் புதியவர்களின் நூல்களும் கவர்ந்து இழுக்கும்படி எழுதப்பட்டு இருந்தால் வாசகர் அதைப் புரட்டிப் பார்க்கும்போதே அது அவருக்குப் பிடித்துப் போய்விட்டால் அதை அவர் வாங்கிவிடுகிறார் என்றார் அந்த விற்பனையாளர். வாசகனைக் கவரும்படியாகவும், அவன் எந்தப் பக்கத்தைத் திருப்பினாலும் அந்தப் பக்கம் அவனைக் கவரும்படியாகவும் ஒரு  நூல் வடிவமைக்கப்படவேண்டும் என்பது முக்கியம். இதற்கு நூலை எடிட் செய்வதிலும் மெருகூட்டுவதிலும் அதற்குத் தேவையான நேரத்தை செலவழிக்கவேண்டும்.

விலையை நூறு ரூபாய்க்கு மேல் வைத்தால் விற்காது என்று சில பதிப்பாளர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன்.  ஒரு நூல் முழுமையாக வெளிவர எத்தனை பக்கங்கள் தேவையோ அத்தனை பக்கங்கள் அதற்குக் கொடுக்கப்படவேண்டும். அதுதான் விலையை தீர்மானிக்கிறது. ஆனால் விலைபற்றிய பழைய மனநிலைகள் மாறிவிட்டன. விற்பனையாளர்களும் ஒரு நாளில் விலை குறைவான பல புத்தகங்களை விற்று ஈட்டும் லாபத்தை விட விலை அதிகமுள்ள சில புத்தகங்கள் விற்பதில் கிடைக்கும் லாபம் அதிகம் என்பதால் அதற்குத்தான்  முன்னுரிமை தருகிறார்கள். இவை அதிக இடத்தையும் அடைப்பதில்லை!

பதிப்பாளர்கள் எல்லா புத்தகக் கண்காட்சிகளிலும் விற்பனை ஆகிறதோ இல்லையோ கலந்து கொள்ளவேண்டும். அது நாளடைவில் அதிக விற்பனைக்கு உதவும். சென்னை புத்தகக்காட்சியில் பத்து தலைப்புகளில் மட்டுமே புத்தகங்கள் வைத்திருந்த  ஒருவர் இரண்டு அரங்குகளை வாடகைக்கு எடுத்திருந்தார். ஏன் என்று கேட்டேன். ஒருவர் மூன்று அடி நடந்தாலே ஒரு அரங்கைக் கடந்து சென்று விடலாம். அதற்குப் பதிலாக இரண்டு அரங்குகளை எடுத்தால் அவர் அதைக் கடப்பதற்கு ஆறு அடி தூரம் நடக்கவேண்டும். அதற்குள் எங்கள் கடையில் இருக்கும் புத்தகங்கள் அவர் கண்களில் பட்டுவிடுவதற்கான சாத்தியம் அதிகமல்லவா என்றார்.

நான் பதிப்பித்த கோபிநாத் எழுதிய ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க.. என்ற புத்தகம் ஐந்து லட்சம் பிரதிகள் விற்றது. அவரது அடுத்த புத்தகம் நேர்நேர் தேமா ஒன்றரை லட்சம் பிரதிகள் விற்றது. அவர் பிரபலமாக ஆரம்பித்த நிலையில் எழுதிய நூல்கள் அவை. அவரே தயங்கியபோது ஊக்குவித்து எழுத வைத்தோம். அவை பெரும் வெற்றி பெற்றன. எங்களது பல புத்தகங்கள் 25000-35000 பிரதிகள் சாதாரணமாக விற்றுள்ளன. பெரும்பாலும் நாங்கள் பதிப்பிக்கும் நூல்கள் மறுபதிப்பு கண்டுவிடுகின்றன. இதற்கு நான் ஏற்கெனவே சொன்னபடி நூல்களின் தரத்தில் கவனம் செலுத்தி தேர்வு செய்து பதிப்பிப்பதுதான் காரணம். பத்து புத்தகம் பதிப்பித்த ஒருவருக்கு இரண்டு புத்தகங்கள் சரியாக விற்காவிட்டால் மீது எட்டு நூல்களிலிருந்து கிடைக்கும் சொற்ப லாபமும் கைவிட்டுப்போய்விடும் என்பதே நிலை.

என்னைப் பொருத்தவரை பதிப்புத் துறையில் வியாபார நோக்கம் என்பது முக்கியமானதுதான். ஆனால் அதுமட்டுமே முக்கியமல்ல. பணம் முக்கியம் என்றால் வேறு தொழில்களில் இறங்கியிருக்கலாம். நாங்கள் பதிப்பிக்கும் நூல்களால் ஒருவர் பலன் அடைகிறார் என்பதில்தான் இருக்கிறது எங்கள் வெற்றி. அதனால் சமூக நோக்கையும் முக்கியமானதாகக் கருதுகிறேன்.

இவ்வளவு நூல்களைப் பதிப்பிக்கும் நீங்கள் ஏன் ஒரு நூல் எழுதக்கூடாது என்று கேட்பார்கள். என் தந்தை பூங்கொடி பதிப்பகத்தை நடத்தி வருகிறார். மிகவும் போராடி வெற்றி பெற்றவர். அவர் கதையை எழுதத் திட்டமிட்டு எழுதிவருகிறேன். ஆனால் இது விதிவிலக்கு. என்னைப் பொருத்தவரை எழுத்தாளர் பதிப்பாளர் ஆக நினைக்கக்கூடாது. பதிப்பாளர் எழுத்தாளர் ஆக நினைக்கக்கூடாது!  (கட்டுரையாளர்

சிக்ஸ்த் சென்ஸ் நிறுவன பதிப்பாளர்)

செப்டெம்பர், 2015