1984மார்ச் மாதம், மாலை 5 மணி:
ஸ்கூல் முடியும் பெல் அடித்ததும் பையைத் தூக்கிக்கொண்டு வீடு நோக்கிப் புறப்பட்டேன்.
வடபாதிமங்கலம் அரசினர் உயர் நிலைப் பள்ளியிலிருந்து சந்தைமேடு கொல்லைமேட்டில் உள்ள என் வீட்டிற்கு செல்ல இரண்டு கி.மீ நடக்க வேண்டும். வழியில் ஏரிக்கரை ஏறி இறங்கினால், ஏரியின் ஒரு பகுதியில் சிறிதளவு தேங்கி இருக்கும் தண்ணீர் மறுபுறம் பச்சைப்பசேல் என புல்வெளிகள், கருவேலமரங்கள் என ரம்மியமாக இருக்கும். ஏரி தாண்டி, ரயில்வே ரோடு கிராஸ் பண்ணி வீடு செல்ல வேண்டும்.
நாங்க மொத்தம் பத்து பதினைந்து பேர் ஒன்றாக நடந்து போவோம். அன்றைக்கு ட்ரவுசர் உள் தையல் உராய்ந்து உராய்ந்து தொடை இடுக்கு எரிந்தது. நடக்க நடக்க இன்னும் அதிகம் வலித்தது. ட்ரவுசரை கொஞ்சம் கீழே இறக்கி விட்டு கொண்டு நடந்தேன். அப்பாகிட்ட சொன்னால் திட்டுவார். அம்மா கிட்ட சொல்லி தான் புது ட்ரவுசர் வாங்கித் தரச் சொல்ல வேண்டும். பின்னாடி ரெண்டு பக்கமும் உட்காரும் இடத்தில் கிழியத் தொடங்கி இருந்தது. கூட படிக்கிற வெண்ணிலா கூட இன்று தபால் பெட்டி என்று என்னை கிண்டல் பண்ணினாள்.
பசித்தது. அப்பல்லாம் நான் தினமும் நான்கு வேளை சாப்பிடுவேன். நாலு வேளையும் சோறு தான். காபி டீ எல்லாம் கிடையாது. ரொம்ப வெறுப்பா இருந்தால் காய்ந்த கடலைக்காய் நான்கை உறித்து வாயில் போட்டுக்குவேன். நான் ரொம்ப வீக்கா இருப்பேன், பேன் வார்ற சீப்பு போட்டு தலை வாரினா பேன் நெத்து நெத்தா வரும். விவசாயக் குடும்பம். பத்தாவதாகப் பிறந்தவன் நான். கடைக்குட்டி. எல்லாம் போக நாங்க நாலு பேரு தான் மிச்சம் இருந்தோம். நான் ரெண்டாவது படிக்கும் போது பெரிய அக்காவுக்கும், ஆறாவது படிக்கும் போது சின்ன அக்காவுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. வீட்ல எல்லாருக்கும் எப்பவும் எதாவது வேலை இருந்துகிட்டே இருக்கும். எங்க வீட்ல பத்து மாடு இருந்தது. எல்லாத்தையும் பிடிச்சு வெளிய கட்டிட்டு சாணி வாரி கொட்டணும். அப்புறம் வந்து அம்மாவுக்கு கூட மாட பாத்திரம் தேய்க்கணும்; தண்ணீர் சேந்தி ஊத்தணும். வீட்டுக் கெணத்துல தண்ணி வத்திடுச்சுனா விவசாய கிணத்துல இருந்து தண்ணி எடுத்து வரணும். இதுல என்னை கவனிக்கறதுக்கு யாருக்கும் நேரம் இல்லை.
நானே மஞ்சள் கரிசலாங்கண்ணி, இல்லனா வேப்பங்குச்சியில பல் தேய்க்கிறேன்னு பேர் பண்ணிட்டு காக்கா குளியல் போட்டுட்டு நானே துவைத்த ட்ரவுசர் சொக்காய மாட்டிட்டு ஸ்கூல் போகணும்..
வீடு நெருங்கி விட்டது. போனதும்
சாப்பிடணும் எது எப்படி இருந்தாலும் எனக்குன்னு எங்க அம்மா கொஞ்சமாவது சோறு வச்சிருக்கும்.
‘அம்மா..., அம்மா'
வீட்டில் யாரும் இல்லை. ஸ்கூல் பையை ஒருபக்கம் வெச்சிட்டு சாப்பிடலாம்னு கதவை தொறந்த போது பின்னால் ஏதோ சத்தம் கேட்டது. என்னன்னு பாக்க பின்பக்கம் போனேன்.
அம்மா தேம்பித்தேம்பி அழுதுட்டு இருந்தாங்க. கவனம் முழுக்க அம்மா மேலயே இருந்தது.
‘ ஏம்மா அழுகிற...?'
‘வந்துட்டான் பாரு. இவனாலதான் எல்லாம்,' என்றபடி எங்கிருந்தோ கோபமாக வந்த அப்பா என் முதுகில்
சரமாரியாக அடித்தார். வலி தாங்காமல் அழுதேன்.
‘என்னை ஏன் அடிக்கிறீங்க? நா என்ன பண்ணேன்?''
‘பிள்ள பசு செத்துப்போச்சுடா'
அம்மா முதன்முதலாக வாயை திறந்தார்.
அப்போதுதான் பக்கத்து காணியில் பசு இறந்து விழுந்து கிடந்ததைப் பாத்தேன். அலறி அடித்துக்கொண்டு பசுவிடம் ஓடினேன்.
அப்பாவும் ஆள்காரங்க எலியானும்,
சிவலிங்கமும் கடப்பாரை மம்முட்டியோடு பெரிய பள்ளம் தோண்டி கொண்டிருந்தனர். எலியானிடம் சென்று ‘ஏன் ? எப்படி செத்துச்சு?' என்றேன்.
‘நீ தான் காலையில மாட்ட அடிச்சியாமே'
‘ நானா? இல்லையே, காலையில அவுத்து கட்டும்போது மெதுவா நடந்துச்சு, அதனால கயித்தால கால்ல தட்டினேன் அவளோதான்'
‘ இல்ல நீ தான் கல் எடுத்து அடிச்சியாம், மாடு ரத்த ரத்தமா மூத்திரம் போய் செத்துடுச்சு'
அப்பா திரும்பவும் என்ன அடிக்க வந்தார்.
‘ சுப்ரு தான் சொன்னானே, நீ தான் காலையில கல் எடுத்து அடிச்சியாமே. படாத எடத்துல பட்டு மாடு இப்படி செத்து போச்சு'
அழுதுகொண்டே அம்மாவிடம் ஓடினேன்
‘அம்மா நான் அடிக்கல மா'
‘போடா' என்று என்னைப் பிடித்து தள்ளினார்கள்.
மாடு செத்த சோகமும் செய்யாத தப்புக்கு தண்டனையும் மனதையும் வாட்ட வரப்பில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தேன்.
நல்ல மாடு அது. லீவு நாட்களில் மாட்டை பிடித்துக்கொண்டு வரப்புகளில் மேய்ப்பது என் வேலை. வரப்புல புல் நன்றாக வளர்ந்திருக்கும். நான் எப்பவும் எதனா படிச்சிக்கிட்டே இருப்பேன். மாட்டு கயித்து நுனிய பிடிச்சிட்டு வரப்பில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பேன். மாடு இந்த கடைசியிலிருந்து கயிறு எட்ற வர அந்த கடைசிக்கு போய்ட்டதும் சின்னதா இழுக்கும். நான் எழுந்து போய் அந்தப் பக்கம் உட்கார்ந்துக் குவேன். மாடு வரப்புல புல்ல மேஞ்சிட்டே வரும். ஒரு பயிரைக் கூட கடிக்காது. நல்லா பால் கறக்கும். யார் வேணும்னாலும் பால் கறக்கலாம். உதைக்காது. அதிக பால் கறக்குதுன்னு பால் ஸ்டோர்ல பிரைஸ்லாம் குடுத்தாங்க. பா.உ.கூ.ச. வடமாதிமங்கலம் என்ற பெயர் பொறித்த எவர் சில்வர் செம்பு ரொம்ப நாள் எங்க வீட்ல இருந்தது.
அரை மணி நேரத்துல பள்ளம் தோண்டி, மாட்டை அதுல தள்ளி மண்ணு போட்டு மூடினாங்க. அம்மா வாயிலயும் வயித்துலயும் அடித்துக் கொண்டு அழுதாங்க. அப்பா கண் கலங்கி இருந்தது. நைட் சோறு ஆக்கல. யாரும் சாப்பிடல. அம்மா வந்து ‘ காலையில ஆக்கன சோறு இருக்கு சாப்பிடுடா என்றார்கள். எதுவும் பேசாமால் கவுந்து அடிச்சு படுத்துக் கொண்டு பசியும் மாடு செத்த சோகமும், என் மீது வீண் பழி போடப்பட்ட துக்கமும் சேர, தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தேன்.
நான்கு நாட்கள் நான் யாரிடமும் பேசாமல் இருந்தேன். நான் கல்லால் அடித்ததால் தான் மாடு இறந்ததாக எல்லோருமே நம்பினார்கள். அந்த வலி என்னை விட்டு மறைய ரொம்ப நாள் ஆனது.
1994 மார்ச் மாதம், மாலை 5 மணி:
நாட்றம்பள்ளி கால்நடை உதவி மருத்துவராக முதல் போஸ்டிங். அலுவலகத்தின் பின்புறம் இருந்த குடியிருப்பில் தங்கியிருந்தேன். அம்மா உடன் இருந்தார்கள். வாழ்க்கை முழுதும் உழைத்து உழைத்து வயதான காலத்தில் டாக்டர் அம்மா என்ற பட்டத்தோடு இருந்த காலம்.
அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு போன போது கட்டாரி விஜயாவும் அவுங்க பையன் ராஜாவும் என் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
‘ என்ன ராஜா நல்லா இருக்கியா?' என்றேன்.
‘ எஸ் சார்' என்றான், சிரித்தான்.
‘ சார் வரல்லன்னா... ராஜா கத அவ்வளவுதான். இவன் கல் எடுத்து அடிச்சிதான் மாடு ரத்த ரத்தமா ஒண்ணுக்குப் போய்டுச்சுன்னு இவன் அப்பா இவன போட்டு அடிச்சிட்டாரு. நான் கூட அப்டித்தான் இருக்கும்னு நம்புனேன். சார் வந்துதான் அதெல்லாம் இல்ல இது ஒரு நோய். மாட்ல இருக்குற உண்ணியால பரவுகிற நோய். நோய் தாக்கிய மாடு சில சமயம் டக்குன்னு செத்துடும்னு சொல்லி ஊசி போட்டாரு. மாடு சரி ஆகிடுச்சு,' என்றார் விஜயா.
நான் உள்ளே போய் என் வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன். நீண்ட நேரம் விஜயாவிடம்பேசிக் கொண்டிருந்த பிறகு அம்மா வந்து என் பக்கத்தில் உட்கார்ந்து என் கையைப் பிடித்துக்கொண்டார். அவரது கண்கள் கலங்கி இருந்தன.
(மரு.கே.வி.ராமன், திருவண்ணாமலை மாவட்ட கால்நடைத்துறை துணை இயக்குநர்)
செப்டெம்பர், 2020.