உலகின் மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஒன்றான ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொழிற்சாலையின் செயல்பாடுகள் கடந்த நவம்பர் 1 ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டுவிட்டன.
அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள், நிர்வாகப் பிரிவு ஊழியர்கள் என சுமார் 12,000த்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை இழந்துவிட்டனர். தொழிற்சாலை மூடப்படுவதை அடுத்து கடந்த மே மாதமே பலரும் விருப்ப ஓய்வு பெற்று சில லட்சங்களுடன் விலகிக்கொண்டுவிட்டனர்.
பின்லாந்து கம்பெனியான நோக்கியா தொழிற்சாலைக்கு பல உப கருவிகளைத் தயாரித்து அளிக்கும் வெளிநாட்டு நிறுவன தொழிற்சாலைகளும் அங்கே உருவாகி இருந்தன. பிஒய்டி, பாக்ஸ்கான், ப்ளெக்ஸ்ட்ரானின்ஸ், விண்டெக்ஸ் என பல பன்னாட்டு கம்பெனிகளும் ஆட்குறைப்பு செய்துவிட்டன. பிஒய்டி தைவான் நாட்டு நிறுவனம். அதாவது ஆதடிடூஞீ தூணிதணூ ஈணூஞுச்ட்ண் என்பது இதன் விரிவாக்கம். இந்த நிறுவனம் மட்டுமே சுமார் 4000 பேரை வீட்டுக்கு அனுப்பிவிட்டது. என்னவொரு பெயர்ப்பொருத்தம்? இன்றைக்கு நோக்கியா ஆலை குளறுபடியால் மட்டும் 24,000 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என்று தகவல் தருகிறார் காஞ்சிபுரம் மாவட்ட சிஐடியூ தலைவர் கண்ணன்.
2005-ல் நோக்கியா அன்றைய திமுக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது. 2006-ல் இருந்து செல்போன்கள் உற்பத்தி தொடங்கிவிட்டது. ஸ்ரீபெரும்புதூரில் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஏராளமான சலுகைகளுடன் அமைந்திருந்த நோக்கியா, செயிண்ட் கோபைன், ஹுண்டாய் ஆகிய கம்பெனிகள் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான பாதைகளாகக் காண்பிக்கப்பட்டன. அன்றைக்கு உலகின் செல் போன் சந்தையில் நோக்கியா 60 சதவீத பங்கு வகித்தது. அத்துடன் இந்த நிறுவனத்திற்கு வேலை செய்ய சுற்றிலும் இருந்த மாவட்டங்களில் இருந்து ஏராளமான இளம் பெண்களும் ஆண்களும் சேர்க்கப்பட்டனர். இதை அடுத்து பெரும்பாலானா நோக்கியா குடும்பங்கள் உருவாகின. நல்ல சம்பளமும் வழங்கப்பட்டது. 2009-ல் இங்கிருந்த நோக்கியா தொழிற்சாலையில் உலகின் தேவையில் 11 சதவீத மொபைல் போன்கள் தயாரிக்கப்பட்டன. அந்த அளவுக்கு உற்பத்தி உச்சத்தை எட்டியிருந்தது. நோக்கியா ஆலை சிறப்பாக இயங்கியபோது இந்த தொழிற்சாலையிலும் அதை நம்பி இயங்கிய நிறுவனங்களையுமாக சேர்த்து மொத்தம் 35000- 45000 தொழிலாளர்கள் பணிபுரிந்தனர்.
இந்த பின்னணியில் சம்பள உயர்வு கேட்டு சில தொழிலாளர் போராட்டங்களும் நடத்தப்பட்டன. ஆனால் இந்த ஆண்டுகளுக்குப் பின்னால் நோக்கியா உலக சந்தையில் சரிவை சந்தித்தது. சாம்சங் நோக்கியாவை பின்னுக்குத் தள்ளியது. உலக செல்போன் சந்தையில் 60 சதவீதம் பங்கு வகித்த நோக்கியா இன்று 2.5%தான் பங்கு வகிக்கிறது.
இதற்கிடையில் 2013-ல் வரி ஏய்ப்பு செய்ததாக இந்த ஆலையில் அரசு ஆய்வு செய்தது. வரி முறைகேடு செய்ததாக நோக்கியா மீது நடவடிக்கை எடுக்கபட்டு இந்த ஆலையும் சொத்துகளும் முடக்கப்பட்டன. 21,153 கோடி ரூபாய் கேட்டு வருமான வரித்துறை வழக்குபோட்டது. அதே ஆண்டு நோக்கியா தன் செல்போன் உற்பத்திப் பிரிவை மைக்ரோசாப்ட்டுக்கு விற்றுவிட்டது. வரிப்பிரச்னையால் சென்னை ஆலை இந்த ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை. அரசுடன் மல்லுக்கட்ட விரும்பவில்லை என்று மைக்ரோசாப்ட் கூறிவிட்டதே காரணம். ஒரே இரவில் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை தனிமைப்படுத்தப்பட்டது. இப்பிரச்னையை மத்திய அரசு சரியாகக் கையாண்டிருந்தால் இந்த ஆலையும் மைக்ரோசாப்ட் வசம் சென்றிருக்கும். ஓரளவுக்கு இது இயங்கிக் கொண்டாவது இருந்திருக்கும்.
மைக்ரோசாப்டும் இந்த ஆலையைக் கைவிட்டது. நோக்கியாவும் கைவிட்டது. இந்திய வருமான வரித்துறைக்கும் ஒரு பைசாவும் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்டிருப்பதென்னவோ நோக்கியா தொழிலாளர்கள்தான். கடைசியாக மிச்சம் இருந்த 851 தொழிலாளர்களில் 90 பேர் தவிர மீதிப்பேரும் செட்டில்மெண்ட் வாங்கிக்கொண்டு விலகிவிட்டனர். கடைசி 90 பேர் தொழிலாளர் துறையில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதுதான் கடைசி நிலவரம்.
- செல்வம்
டிசம்பர், 2014.