சிறப்புக்கட்டுரைகள்

'நோ’ என்றால் 'நோ’தான்! (திருமணத்துக்கு)

மு.வி.நந்தினி

அ-ண்மையில் நடிகை வரலட்சுமி தன்னுடைய படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ‘என்னுடைய வாழ்க்கையில் நான் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை' என சொன்னார். காரணம் கேட்டபோது, திருமண அமைப்பின் மீது தனக்கு விருப்பமில்லை என்றார் !

பெண்ணியம் பேசுபவர், உறுதிமிக்கவர் என்கிற பிம்பமுள்ள வரலட்சுமி மட்டும், திருமணம் வேண்டாம் என நினைக்கவில்லை. படித்து, தன்னுடைய சுயத்தில் வாழும் பல பெண்கள், சில ஆண்களும்கூட திருமணம் வேண்டாம் என
சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். இது நல்லதா கெட்டதா? அல்லது 'கலாச்சார சீரழிவா'? இதன் பின்னால் உள்ள சமூக & உளவியல் காரணங்கள் என்ன?

இருபத்தைந்து வயதுள்ள பெண் அவர். தமிழகத்தின் வட மாவட்டம் ஒன்றிலிருந்து சென்னை வந்தவர். வழக்கமான கட்டுப்பெட்டித்தனமான பின்னணிதான் அவருடையதும். சொல்லப்போனால் சென்னை வந்த பிறகுதான், அவருக்கு தனியாக பேருந்து பயணம் செய்யும் 'சுதந்திரம்' கிடைத்திருக்கிறது. சதா சர்வ காலமும் அதைச் செய்யாதே, அப்படி பேசாதே, அங்கே போகாதே என பெற்றோர் அல்லது உறவினர்களின் கண்காணிப்புக்குள் இருந்தவருக்கு, பணி நிமித்தமாக சென்னை வந்தவுடன் மூச்சுமூட்டும் சூழலிலிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது.

தன் விருப்பத்தின் பேரில் அனைத்தையும் செய்யும் சுதந்திரத்தை 'திருமணம்' பறித்துக்கொள்ளும் என்கிற பயம் அவருக்கு உண்டாகத் தொடங்கியிருக்கிறது. ''நான் ஒருத்தரை விரும்பினேன். ஆனா, அது மேரேஜ் வரைக்கும் போகலை. வீட்ல கல்யாண வயசாயிடுச்சின்னு ஒரே தொல்லை. ரிலேஷன்ஷிப் மேல பயமும் இருக்கு, அதே சமயம் நிர்ப்பந்தமும் இருக்கு. மேரேஜ் என்னோட சுதந்திரத்தை பறிச்சிடும்ங்கிற கவலையும் இருக்கு'' என்கிறார் அவர்.

சமீபத்தில் சென்னை தினம் கொண்டாடப்பட்டது. வெளி மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு பணி நிமித்தமாக வந்து வாழும் பல திருமணமாகாத பெண்களின் முகநூல் பதிவுகளில் மேற்கண்ட அனுபவத்தின் சாயலைப் பார்க்க முடிந்தது.
சென்னை போன்ற பெருநகரங்களில் கிடைக்கும் சுதந்திரம் பெண்களுக்குப் பிடித்திருக்கிறது. குறிப்பாக, முதல் தலைமுறையாக படித்து, பணிக்கு வரும் பெண்களுக்கு நகரத்தின் சூழல் புதிய திறப்பைக் கொடுக்கிறது. அவர்கள் இந்த வாழ்க்கையை தொடர விரும்புகிறார்கள். ஆனால், சமூக அழுத்தம் அந்த வாழ்க்கைக்கு இடையூறாக உள்ளது. காலாகாலத்தில் தங்கள் சாதிக்கார பையனை அல்லது பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை நிர்பந்திக்கிறார்கள்.

பிள்ளைகள் சுதந்திரமாக தங்களை இணைகளை தேர்ந்தெடுத்து, தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற சூழலில் வாழ விரும்புகிறார்கள். பல பெற்றோர் தங்களுடைய சாதி அல்லது அந்தஸ்து குறித்த பெருமிதங்களை கைவிடத்தயாராக இல்லை. தலைமுறை இடைவெளி காரணமாக பலர் திருமணமே வேண்டாம் என முடிவெடுக்கிறார்கள். இந்திய சமூகத்தில் திருமணம் வேண்டாம் எனச் சொல்லுகிறவர்கள்
கூறும் முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று.

''வேறு சாதி பெண்ணும் நானும் கிட்டத் தட்ட பத்தாண்டுகள் காதலித்தோம். என் வீட்டில் வேறு சாதி பெண்ணை ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இல்லை. எவ்வளவோ கன்வின்ஸ் செய்து பார்த்தேன்; முடியவில்லை. நிர்ப்பந்தம் காரணமாக நான் காதலித்தவர் திருமணம் செய்துகொண்டார். எனக்கு திருமணத்தின் மீதே வெறுப்பு வந்துவிட்டது. குடும்பத்தாரின் வற்புறுத்தல்கள் இருந்தும் பிடிவாதமாக இருந்துவிட்டேன்'' என்கிறார் நாற்பதுகளைக் கடந்துவிட்ட, ஊடகத்தில் பணியாற்றும் ஒருவர்.

தபு

திருமணம் இல்லாமல், சேர்ந்து வாழும் லிவிங் டுகெதர் வாழ்க்கை முறை பெரு நகரங்களில் சாத்தியமாகியிருப்பதும் திருமண அமைப்பு வேண்டாம் என்கிறவர்களுக்கு ஒரு சாதகமான விசயமே. கலை - இலக்கியம் - சினிமா துறையைச் சார்ந்த இளைஞர்கள் பலர் இந்த வாழ்க்கை முறை தங்களுடைய கலை செயல்பாடுகளுக்கு துணையாக இருப்பதாகக் கூறி திருமணத்துக்கு மாற்றான வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொள்கிறார்கள். இது ஐடி துறை சார்ந்தவர்களும் இப்படியான வழியைத் தேடிக் கொள்கிறார்கள்.

சினிமா எடிட்டிங் பிரிவில் பணியாற்றும் சந்தியா திருமண வாழ்க்கை வேண்டாம் என்பதில் அத்தனை உறுதியாக இருக்கிறார்.

''திருமண வாழ்க்கை வேண்டாம் என்று சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்த காலக்கட்டத்திலேயே முடிவு செய்துவிட்டேன். என் துறை சார்ந்த பணிக்கு திருமண அமைப்பில் நான் இருப்பது சரியாக இருக்காது. ஒன்று என்னுடைய லட்சியங்களை விட வேண்டும். அல்லது கட்டுப் பெட்டித்தனமான குடும்ப அமைப்பு என்னும் ஜோதிக் குள் கலந்து விட வேண்டும். எனக்கு லட்சியம்தான் பெரிது.

என்னுடைய விருப்பத்துக்கேற்றதுபோல டேனியல் கிடைத்தார். குழந்தை வேண்டாம் என அவரே சொல்லிவிட்டார். 12 ஆண்டுகளுக்கும் மேலாக சேர்ந்து வாழ்கிறோம். எங்களுடைய இரு வீட்டாருக்கும் இந்த விசயம் தெரியும். ஆரம்பக்கட்டத்தில் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார்கள். நாங்கள் திருமணமே செய்து கொள்ளக்கூடாது என உறுதியாக நின்றோம். திருமண அமைப்பில் இருக்கும் அனைத்து விசயங்களையும் நாங்கள் உடைத்தெறிந்து விட்டோம்'' என்கிறார் அவர்.

திருமணம் வேண்டாம் என மறுக்கிற பெரும்பாலான பெண்கள் சொல்கிற காரணம் திருமண அமைப்பில் இருக்கிற ஆணாதிக்க அழுத்தங்கள். பணிபுரியும் பெண்களுக்கு வீட்டிலும் வேலை செய்ய வேண்டி இருக்கிறது. இது இரட்டை சுமையாகிவிடுவதாக பெண்கள் கருதுகிறார்கள்.  'கணவரைப்போல உயர் பதவியில் இருக்கிறேன். அவரைப் போல சம்பாதிக்கிறேன். ஆனால் வீட்டில் கணவர் ஓய்வெடுப்பார். நான் மட்டும் மாங்கு மாங்கென்று வேலை செய்ய வேண்டும்' என்பது பணிக்குச் செல்லும் இன்றைய பெரு நகர பெண்களின் பொதுவான புகாராக இருக்கிறது.

நக்மா

ஆனால், லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வீட்டுப்பராமரிப்பு பணிகளை, சமையல் வேலைகளைக்கூட பகிர்ந்து செய்கிற சூழல் இருக்கிறது என்கிறார் சந்தியா.

 திருமணம் என்பது மிகப் பெரிய பொறுப்பு. அந்தப் பொறுப்பை சரியாக நிறைவேற்றக்கூடிய பொருளாதார சூழல் வரும்வரை திருமணம் வேண்டாம் என ஒத்திப்போடுகிற ஆண்களும் இருக்கிறார்கள். திருமணம் செய்துகொண்டு பொருளாதாரத்தின் பின்னால் சென்றுவிட்டால் தங்களுடைய கனவுகளை துரத்த முடியாது என சொல்கிறவர்களும் இருக்கிறார்கள்.

எழுத்தாளர் தமயந்தி திருமணங்களை வேண்டாம் என ஒதுக்குவதில் உள்ள சமூக மனச்சிக்கல்கள் பற்றி பகிர்ந்துகொண்டார்.

''திருமண அமைப்பில் பிரச்சினை உள்ளது. இந்திய திருமணத்தில் ஏன் பிரச்னை வருகிறதெனில் நீங்கள் காதலிக்கக்கூடாது என்கிறீர்கள், சாதி மாறி திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்கிறீர்கள், எவரென்றே தெரியாத ஒருவருடன் திருமணம் செய்து வாழுங்கள் என்கிறீர்கள். காதல் திருமணத்திலாவது புரிதல் இருக்கும். ஆனால், பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் என்பதில் இந்த புரிதல் வருமா?

சுஷ்மிதா

முன்பெல்லாம், உதாரணத்துக்கு 60களில் இருந்த பெண்கள் என்ன நினைத்தார்கள் என்பது பற்றிய மனம் சார்ந்த பதிவுகள் இல்லை. இப்போது மனம் சார்ந்து பெண்கள் இயங்க ஆரம்பித்துவிட்டார்கள். மனம் சார்ந்து முடிவெடுக்கிறார்கள். திருமண அமைப்பை கேள்வி கேட்கிறார்கள். தேர்வு செய்கிற உரிமை கிடைத்திருக்கிறது.

அதுபோல, பெண்கள் உடலைக் கொண்டாடுவதும் தொடங்கியிருக்கிறது. நான் படித்த காலத்தில் இந்த உடைதான் அணிய வேண்டும் என்கிற கட்டுப்பாடு நிறைய இருந்தது. இப்போது இலகுவாக உடலை சுமந்துபோகிறார்கள்.

திருமணங்களில்தான் உறவு நிலைத்திருக்கிறது என்பதும் உண்மையல்ல.  திருமணங்களில் உள்ள மவுனங்களை கிழித்தெறிவது முக்கியம். திருமணம் வேண்டாம் என்பதும் அது போன்றதுதான். திருமண உறவும் பிரிவும் அத்தனை சுலபமாக இல்லை. வருத்தங்கள், கசப்புகள் இருந்தாலும் உறவும் பிரிவும் பூ மலர்வதைப் போல இருக்க வேண்டும்.  திருமண உறவுக்கு மாற்றாக வைக்கப்படுகிற சேர்ந்து வாழுதல், மனமொத்து வாழுதல் போன்றவை அங்கீகரிக்கப்பட வேண்டும்,'' என்கிறார் அவர்.

கரன்ஜோஹர்
சல்மான் கான்

தங்களைப் பொருத்தவரை திருமணம் வேண்டாம் என்பதற்கு சொல்லும் காரணம் பொருத்தமாக இருப்பதாகவே அவர்கள் நினைக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினரின் இந்தத் தேர்வை பொதுவாக்கி முடியாது என்றாலும் திருமண அமைப்பில் இருக்கிற காலாவதியான விசயங்கள் பற்றியும் நாம் பேசித்தான் ஆக வேண்டும்.

  • முந்தைய தலைமுறைப் பெண்களைப் போல, இந்தத் தலைமுறை பெண்களின் வாழ்க்கை முறை இல்லை. எனவே, அவர்கள் மீது திணிக்கப்படும் வீட்டு வேலை என்னும் எக்ஸ்ட்ரா லக்கேஜை ஆண்களும் பகிர்ந்துகொள்ள தயாராக வேண்டும். அதை குடும்பத்தின் பெரியோர்களும் அங்கீகரிக்க வேண்டும். 'ஆம்பள இந்த வேலை செய்யலாமா' என பேசினால் உங்கள் வீட்டு ஆண்கள் இனி தனித்தே இருக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படலாம்.

  • பெரு நகரத்தில் செட்டிலாகிவிட்ட பிள்ளைகளின் விருப்பங்களுக்கு பெற்றோர் மதிப்பு தர வேண்டும். இனியும் சாதி, சனம் என பேசிக் கொண்டிருப்பது வேலைக்கு ஆகாது.

  • விரும்பினால் யாரும் யாருடனும் சேர்ந்து வாழலாம் என்பது திருமண அமைப்புக்கு மாற்றாகிவிடாது. திருமண அமைப்பில் இருக்கிற அத்தனை எதிர்மறையான விசயங்களும் இந்த உறவுகளில் நிகழ வாய்ப்புண்டு. எல்லோரும் இதே சமூகத்திலிருந்து வருகிறவர்கள்தான்; உங்களுக்கு அமைகிற இணை உங்களைப் போன்ற சிந்தனை உடையவராக இருப்பார் என நூறு சதவீதம் சொல்லிவிட முடியாது. எனவே, குறைந்தபட்ச சட்டப் பாதுகாப்பை வழங்குகிற திருமண அமைப்பு அதைவிட சிறந்ததே என்கிற கருத்தும் உள்ளது.

  • திருமண வாழ்க்கை சில நேரங்களில் கசப்பாக முடியலாம். கசப்பும் வாழ்க்கையில் இயல்பானதே. சினிமாக்கள் திருமணத்தில் முடிவதுபோல, வாழ்க்கையில் திருமணம் என்பது முடிவல்ல. அதுவொரு ஆரம்பம். இந்த ஆரம்பத்தின் முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். தோல்வியை ஏற்றுக்கொள்ளுங்கள். 

வரலட்சுமி மட்டுமல்ல, திருமணமே வேண்டாம் என பல சினிமா பிரபலங்கள் வாழ்ந்தே காட்டியிருக்கிறார்கள்.

அந்தக் காலத்து ஜெ. ஜெயலலிதா, 'வெண்ணிற ஆடை’ நிர்மலா,  லதா முதல் கோவை சரளா வரை பலர் திருமணமே செய்யாமல் வாழ்ந்திருக்கிறார்கள்.

பாலிவுட்டில் அந்த காலத்து ஆஷா பரேக்,  நந்தா, சுரையா, சுலோச்சனா பண்டிட் முதல் இந்தக் காலத்து சுஷ்மிதா சென், தபு, நக்மா, ஏக்தா கபூர் வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பவர்கள் லிஸ்ட் கொஞ்சம் பெரியது.

ஆண்களில் இயக்குநர் கரண் ஜோகர் திருமணம் செய்துகொள்ளவில்லை. பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சல்மான் கானும் நாற்பதுகளைக் கடந்துவிட்ட பின்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

செப்டெம்பர், 2019.