நெடுவாசலை அடுத்து கதிராமங்கலம்... தமிழ்நாட்டில் கொதிக்கும் கிராமங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகும் போலிருக்கிறது. இங்கெல்லாம் உள்ளூர் மக்களின் குரல் புறக்கணிக்கப்பட்டு அரசுத் தலையீட்டில் உருவாகும் திட்டங்கள் எதிர்ப்புக்குள்ளாகின்றன. இது ஒரு புறம் இருக்க, மீண்டும் டெல்லியில் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள். இந்தப் போராட்டங்களுக்கெல்லாம் தாத்தாவாக எளிய மீனவ மக்களால் முன்னெடுக்கப்பட்ட கூடங்குளம் போராட்டம் இன்னும் புகைந்துகொண்டே இருக்கிறது. இதற்கிடையில் தேனி மாவட்டத்தில் கொண்டுவரப்படுவதாக இருந்த நியூட்ரினோ ஆய்வுத்திட்டமும் கடும் எதிர்ப்புக்குள்ளானது.
ஏன்? இவையெல்லாம் அவ்வப்போது நடக்கும் சாதாரணமான போராட்டங்கள்தான் என்று சொல்லிவிட்டு நகரக்கூடியவையா? 2015-ல் நாட்டிலேயே அதிகமாக போராட்டங்கள் நடத்தப்பட்டது தமிழ்நாட்டில்தான் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் கதிராமங்கலத்தில் வில்லனாக எழுந்திருப்பது ஓ.என்.ஜி.சி நிறுவனம். பல ஆண்டுகளாக காவிரி டெல்டாப் பகுதியில் எதிர்ப்பார் இன்றி அசுரபலத்துடன் இயங்கிவரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் இன்று கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி உள்ளது. கதிராமங்கலம் பிரச்சினை தொடர்பாக அங்கு சென்று உண்மை அறியும் குழு விசாரணை அறிக்கை வெளியிட்டிருக்கிறார் பேராசிரியர் அ. மார்க்ஸ்.
“ கதிராமங்கலத்தில் ஒ.என்.ஜி.சி. பூமிக்கு அடியில் ஆழ்துளையிட்டு பெட்ரோல் எடுத்து குழாய்கள் மூலம் சுத்திகரிக்க அனுப்புகிறது. இது அந்தப் பகுதி நிலத்தடி நீரை பாழாக்குகிறது. இதனால் பெரிய அளவில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது திடீர் தீ விபத்துக்களும் ஏற்படுகின்றன. எண்ணைக்கசிவால் கடுமையான துர்நாற்றமும் வீசுகிறது. மக்கள் ஒரு ஆரோக்கியமற்ற ஆபத்தான சூழலில் வசிக் கும்படி நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.
ஆனால் ஒஎன்ஜிசி தரப்போ மக்கள் எல்லாவற்றையும் மிகைப்படுத்துகிறார்கள் என்றே சொல்கிறார்கள். நிலத்தடி நீர் மாசு குறித்து அறிவியல் சார்ந்த ஒரு பார்வை அவர்களிடம் இல்லை. அவர்கள் குருட்டுத்தனமாக அரச விசுவாசத்துடன் இருப்பதையே பார்க்க முடிகிறது. இதுவே பிரச்சினை” என்கிறார் அவர்.
2011 ஆம் ஆண்டு விளமல் என்ற ஊரில் ஒ.என்.ஜி.சி. அமைத்த இரும்பு பைப் பூமிக்கு மேலேயே கிடந்தது. அது சரியாக பூமிக்கு அடியில் புதைக்கப்படவில்லை. அதைப் பார்க்காத லாரி டிரைவர் அந்தப் பைப்பின் மேல் லாரியை ஏற்ற பைப் உடைந்து லாரி தீப்பற்றி எரிந்தது. லாரி டிரைவர், கிளீனர் உட்பட மூன்று பேர் இறந்து போனார்கள். ஒஎன்ஜிசி அந்த விபத்தில் பாதிக்கப்பட்ட ஜெயலட்சுமி என்ற பெண்ணுக்கு 75000 ஆயிரம் நஷ்ட ஈடு கொடுத்தது. இந்தச் சம்பவத்தைக் சுட்சிக்காட்டும் மார்க்ஸ்,
“ ஒ.என்.ஜி.சி. யின் பொறுப்பற்றத்தனம்தான் இதைப்போலான விபத்துக்களுக்குக் காரணம்.. மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைப்பு ஒ.என்.ஜி.சி. யின் திட்ட செயல்படுத்தலில் உள்ள குறைகளைச் சுட்டிக் காண்பித்ததும் நடந்தது. ஆனால் அதெல்லாம் மீடியா வெளிச்சத்துக்கு வரவில்லை. 300 புதிய எண்ணெய்க் கிணறுகள் அமைக்க மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. மக்கள் புதிதாக கிணறுகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற மக்களின் ஒப்புதலும் தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு நிறுவனத்தின் அனுமதியும் வேண்டும். ஆனால் அவசர அவசரமாக தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு நிறுவனத்தின் அனுமதியை மட்டும் பெற்று புதிதாக திட்டத்துக்கு நிபுணர் குழு ஒப்புதலுடன் ஒ.என்.ஜி.சி. அனுமதி வாங்கிவிட்டது. மக்களின் குரல் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது,” என்கிறார் பேராசிரியர் அ.மார்க்ஸ்.
“ஒ.என்.ஜி.சி நிறுவனம், நிலத்தினடியில் பதிக்கப்பட்டுள்ள குழாயின் ஆயுட்காலம் 20 ஆண்டுகள் என்கிறார்கள். ஆனால் ஒன்பது ஆண்டுகளிலேயே அந்தக் குழாய்கள் பழுதடைந்து விட்டன. காவிரி டெல்டாப் பகுதிகளில் இதைப் போலான மக்கள் வாழ்வாதரத்தைக் குலைக்கும் திட்டங்கள் தேவையா என்பது முதன்மையான கேள்வி. அமெரிக்காவில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 34 பேர் வசிக் கிறார்கள். அமெரிக்காவிலேயே இதைப் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில்லை. ஆனால் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 555 பேர் வசிக்கும் தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகளில் ஒ.என்.ஜி.சி நிறுவனம் செல்படுத்தும் திட்டங்கள் உள்நோக்கம் கொண்டவையாக உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. இனியேனும் இது போன்ற திட்டங்கள் தொடராமல் இருக்க அரசு காவிரிப் படுகையை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிப்பது அல்லது நம் அண்டை மாநிலமான கேரளத்தில் செய்ததுபோல் விளைநிலப் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவருவது ஆகிய இரண்டில் ஒன்றே இப்பகுதிக்கு நிரந்தரத் தீர்வைத் தரும்” என்கிறார் சூழலியல் எழுத்தாளரான நக்கீரன்.
நெடுவாசலைப் பொறுத்தவரை அம்மக்கள் நிகழ்த்திக்காட்டிய போராட்டம் சமீப காலத்தில் மிகப்பிரம்மாண்டமாக அமைந்தது. பூமிக்கடியிலிருந்து ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான திட்டத்தை எதிர்த்த போராட்டம் அது. இதற்கு முன்பாக நடந்த கூடங்குளம் போராட்டமோ நியூட்ரினொ போராட்டமோ சரி, இவை அனைத்துமே மக்கள் போராட்டங்களாக நடந்தன. தமிழகத்தின் பெரிய கட்சிகள் எதுவும் இதுபோன்ற போராட்டங்களின் பின்னால் இருக்கவில்லை. குறிப்பாகச் சொல்வதென்றால் இந்த போராட்டங்களுக்கான காரணமாக அமைந்த திட்டங்களை வளர்ச்சி என்ற பெயரில் அவை ஆதரித்தன. அத்திட்டங்களைக் கொண்டுவரவும் செய்தன. ஆனால் நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்களுக்கு ஆளுங்கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளுமே ஆதரவு தெரிவிக்கும் நிலையையே முன்னெடுக்க வேண்டியிருக்கிறது.
“தமிழ்நாடு எப்போதுமே தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் மாநிலம். தொழிற் சாலைகளின் வளர்ச்சி அதிகமும் சுற்றுச்சூழலைச் சூறையாடிவிட்டது. ஆறுகள் பாழாகிவிட்டன. நிலத்தடி நீர் அதல பாதாளத்துக் குப் போய்விட்டது. மாசில்லாத குடிநீரும் நஞ்சில்லாத உணவும் இப்போது பணம் படைத்தவர்களுக்கானதாக மாறிவருகிறது.
மக்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதை கண்முன்னே பார்த்துவிட்டார்கள். இதுவரை அரசியல் கவர்ச்சியிலும், தொழில் முன்னேற்றம், வளர்ச்சி எனவும் கண் மூடிக்கிடந்தவர்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புணர்வு அடைந்திருக்கிறார்கள். இழந்து போன தன் உரிமைகளை மீட்டெடுக்கப் போராடத் துணிந்து விட்டார்கள்” என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தரராஜன்.
“ நாட்டில் சமீபத்திய வருடங்களில் நடக்கும் போராட்டங்கள் திருப்தியின்மையின் வெளிப்பாடுதான். அரசின் திட்டங்களால் மக்களுக்கு வரும் பாதிப்புகளை அரசோ அல்லது அதன் நிறுவனங்களோ காதுகொடுத்துக் கேட்கக்கூடத் தயாராக இல்லை என்பது கசப்பான உண்மை. அரசும் அதன் துணை நிறுவனங்களும் மக்களை வெகுவாகச் சுரண்டிவிட்டன. அவர்களின் வாழ்வாதாரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் லாப நோக்கு மட்டுமே அரசிடம் இருந்து வருகிறது. மக்கள் அரசு என்கிற அமைப்பின் மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள். அரசையும் அதன் திட்டங்களையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. எனவே இனியும் தொடர்ந்து ஏமாற்றப்படாமல் இருக்க அவர்கள் போராடத் துவங்கிவிட்டார்கள்,” என விளக்கம் தருகிறார் அ.மார்க்ஸ்.
இந்தப் போராட்ட அதிகரிப்புகளை ஜெயலலிதா என்கிற தலைமையின் மரணம், கருணாநிதியின் உடல்நலக் குறைவு ஆகியவற்றால் ஏற்பட்டிருக்கும் அரசியல் வெற்றிடத்தின் பின்னணியிலும் வைத்துப்பார்க்கலாம்!.
இதற்கிடையில் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 45 கிராமங்களை பெட்ரோகெமிக்கல் மண்டலமாக அறிவிப்பு செய்துள்ளது மாநில அரசு. பெட்ரோலிய சுத்திகரிப்பு தொடர்பான தொழில்கள் இப்பகுதியில் மத்திய அரசு உதவியுடன் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. ஏற்கெனவே ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான பிரச்சினை ஓய்வதற்குள் பெட்ரோகெமிக்கல் மண்டலமா என்று பீதியைக் கிளப்புகிறார்கள்.
கொஞ்சம் ஓய்வு கொடுங்க எஜமான்களே!
ஆகஸ்ட், 2017.