சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தியன் திரைப்படத்தில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் போலீசார் சில பெண்களை நிர்வாணமாகத் தெருவில் ஓடவிடுவதாக ஒரு காட்சி. படம் தணிக்கைக்குச் செல்லும் முன்பாகத் திரைக்குழுவினர் என்னை அணுகி அந்த நிகழ்வு நடந்தது உண்மைதானா, அதை சென்சார் போர்டு ஒத்துக்கொள்ளுமா என்றும் கேட்டனர். நான் அந்த நிகழ்வு நடந்ததற்கான சான்றுகளை இரவோடு இரவாக அவர்களுக்கு அளித்தது ஞாபகம் இருக்கிறது. இந்த ஆகஸ்டில் அந்தப் போராட்டம் நடந்து 75 ஆண்டுகள் ஆகின்றன. காந்தியடிகள் நடத்திய போராட்டங்களில் வெள்ளையனே வெளியேறு போராட்டம் முற்றிலும் மாறுபட்டது. 1942 ஆம் வருடம் ஆகஸ்ட் 8ஆம் தேதி மாலை பம்பாய் நகரில் காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் காந்தியடிகள் உணர்ச்சியுடன் பேசினார். “ வெள்ளையனே இந்தியாவை கடவுளிடமோ அல்லது சட்ட ஒழுங்கற்ற குழப்பத்திலோ விட்டுச் செல். எனக்கு இப்பொழுதே இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டும். சுதந்திரம் இந்த இரவிலேயே கிடைக்க வேண்டும். நான் ஒரு மந்திரத்தைத் தருகிறேன்.- செய் அல்லது செத்துமடி. இந்தியா விடுதலை அடைய வேண்டும் அல்லது நாம் இறக்க வேண்டும். விடுதலை என்பது கோழைகளுக்கு அல்ல.”
நம் நாட்டில் வரலாறு காணாத மிகப்பெரிய போராட்டம் ஆரம்பித்தது. அது வன்முறையாகவும் மாறியது. பூனாவில் காந்தியடிகளை அகா கான் வீட்டில் சிறை வைத்தது. அவர் தன் வாழ்நாளில் மொத்தம் 2338 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். 1942 போராட்டத்தில் அகமது நகர் கோட்டையில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நேரு கைதியாக இருந்தார். ஆகஸ்ட் 9 முதல் இந்தியா பற்றி எரிய ஆரம்பித்தது. அப்போது தமிழ் நாட்டில் நடந்த நிகழ்வுகளை மட்டும் நாம் பார்க்கலாம்.
காமராசர், பக்தவசலம், தேவர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு வேலூர், அமரவாதி, அலிப்பூர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். ராஜாஜி, கம்யூனிஸ்ட் கட்சி, இந்து மகாசபா, முஸ்லிம் லீக், நீதிக் கட்சி போன்ற கட்சிகள் இந்த மாபெரும் போராட்டத்தில் பல்வேறு காரணங்களைக்காட்டிப் பங்கேற்கவில்லை.
தமிழகத்தில் தந்திக்கம்பிகள் அறுக்கப்பட்டன. தபால் நிலையங்கள் எரிக்கப்பட்டன. ஆகஸ்ட் 9 ஆம் தேதியன்றே சென்னையில் போராட்டம் ஆரம்பித்துவிட்டது. மாணவர்கள், தொழிலாளர்கள் பெரும் பங்கேற்றனர். ஆலைகள் மூடப்பட்டன. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் பலி ஆயினர். எட்டுப் போராளிகள் ராணுவ வீரர்களை ஆங்கிலேயருக்குப் பணிபுரிய வேண்டாமென வேண்டினர். அவர்கள் கைது செய்யப்பட்டு சென்னைச் சிறையில் தூக்கிலிடப் பட்டனர்.
அவர்கள் வயது 21 முதல் 25 வரைதான் இருக்கும். மேலும் இந்திய தேசிய ராணுவம் சிங்கப்பூரிலிருந்து அனுப்பிய ஒற்றர்களும் தூக்கிலிடப்பட்டனர். மொத்தம் 18 பேர் வீர மரணம் அடைந்தார்கள். இந்தியாவிலேயே சென்னையில்தான் அதிகம் பேர் தூக்கிலிடப்பட்டனர்.
கோவை மாவட்டத்தில் போராட்டம் தீவிரமானது. ரயில் தண்டவாளங்கள் தகர்க்கப்பட்டன. அதன் விளைவாக கொச்சியிலிருந்து ராணுவத் தளவாடங்கள் ஏற்றி வந்த ரயில் போத்தனூர் அருகே கவிழ்ந்தது.
சூலூரில் உள்ள ராணுவ விமானதளம் தீ மூட்டப்பட்டது. 200 லாரிகள் எரிந்தன.
3 ராணுவத்தினர் கருகினர். ராணுவம் மக்களை நோக்கிச் சுட்டதில் 30 போராளிகள் இறந்தனர். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் தென் தமிழ்நாட்டின் பங்கு நம்மை வியக்க வைக்கும். குலசேகரப்பட்டணத்தில் ‘வந்தே மாதரம்’ முழக்கத்துடன் போராளிகள் உப்பளங்களில் வலம் வந்தனர். அவர்களை லோன் என்கிற ஆங்கிலேயர் சுட வந்தார். விடுதலை வீரர்கள் அவரைக் கத்தியால் குத்திக் கொன்றனர். காவல்துறை 64 பேர்களைக் கைது செய்தது. வழக்குகள் நடந்தன. அதில் ராஜகோபாலன், காசிராஜன் ஆகிய இருவருக்கும் தூக்குத்தண்டனையும் மற்றவர்களுக்கு 74 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும் தரப்பட்டது. பெஞ்சமின் என்பவருக்கு 100 ஆண்டுகள் சிறை. இந்தியா விடுதலை பெற்ற பின்தான் இவர்கள் தண்டனையிலிருந்து தப்பினர்.
தேவக்கோட்டையில் மறியல் நடந்தது. போலீஸ் 50 பேரைச் சுட்டுக் கொன்றனர். திருவாடனையில் உணர்ச்சி வெள்ளம் பற்றி எரிந்தது. பல இடங்களில் நெருப்பு வைக்கப்பட்டது. போராட்டத்தில் பெரும் பங்கெடுத்த தொண்டர் முத்தையாவுக்கு 100 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை தரப்பட்டது.
போலீசார் கற்பழிப்புப் படலத்தை ஆரம்பித்தனர். ஒரு பெண்ணை நிர்வாணமாக்கி 20 சேர்ந்து கற்பழித்துக் கொன்றனர். விளாங்காட்டூர் பகுதியில் 4 பெண்களை மரத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்து கொன்றனர். மதுரையில் வேலை நிறுத்தம் கடையடைப்பு ஊர்வலங்கள் நடந்தன. 6 பேர் போலீசாரின் குண்டுகளுக்குப் பலியானார்கள்.
காந்தி பிறந்தநாளன்று ஊர்வலத்தில் பங்கேற்ற இரு பெண்களை பல மைல்கள் தூரத்திற்கு கொண்டு சென்று நடுரோட்டில் நிர்வாணப்படுத்தினர். பின்னர் இதற்குக் காரணமான விஸ்வநாத நாயர் என்ற காவல் துறை அதிகாரிமேல் போராளிகள் அமிலத்தை வீசினர். நாயரின் முகம் சிதைந்தது. இந்திய அரசு அவருக்கு லண்டனில் மருத்துவ உதவி அளித்தது. சீர்காழி அருகே பாலத்தை வெடிவைத்துத் தகர்க்க முயன்ற தினமணி துணையாசிரியர் முதலிய 8 பேர் மேல் வழக்கு தொடரப்பட்டது. 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை அவர்களுக்குக் கடுங்காவல் தண்டனை தரப்பட்டது.
இதனிடையே பூனாவில் காந்தியடிகள் 21 நாட்கள் உண்ணாவிரதம் ஆரம்பித்தார். ‘காந்தி பசியால் சாக விரும்பினால் சாகட்டும்’ என்றார் சர்ச்சில். பின்னர் தந்தி மூலம்,‘இன்னுமா காந்தி சாகவில்லை?’ என்று வருத்தப்பட்டார். காந்தி இறந்தால் எரிப்பதற்கு சந்தனக் கட்டைகள் கொண்டுவரப்பட்டன. ஆனால் அந்த சந்தனக்கட்டைகள் அன்னை கஸ்தூரிபாயின் உடல் தகனம் செய்யப்பயன்பட்டன. இந்தப் போராட்டத்தில் இந்தியா முழுவதும் 60000 பேர் கைது செய்யப்பட்டனர். 10000 பேர் கொல்லப்பட்டனர்.
தலைவர்கள் அனைவரும் சிறையில் பல ஆண்டுகள் இருந்ததால் ஆகஸ்ட் போராட்டம் வலுவிழந்தது.
ஆகஸ்ட், 2017.