சமீபத்தில் விமானத்தில் ஃபிளைட்டுக்காக காத்திருந்தபோது என் பக்கம் வந்து உட்கார்ந்த வயதான பாட்டி ஒருவர், என்னையே கொஞ்ச நேரம் கூர்ந்து கவனித்தார். என்னுடைய கன்னத்தை மென்மையாகத் தொட்டு, ‘‘நீ சாவித்திரி தானேம்மா?'' என்று கேட்டார்.
"நான் சாவித்திரியில்லே பாட்டி, அவங்க கேரக்டரில் நடித்த கீர்த்தி!'' என்று சொன்னேன்.
"எனக்கென்னவோ நீ சாவித்திரியாகத் தான் தெரியுறே. உன்னை அப்படித்தான் பார்க்கத் தோணுது. நீ கீர்த்தியில்லே'' என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார். அதைக் கேட்டு ஆஸ்கார் வாங்கியது போன்ற ஓர் உணர்வு மேலோங்கி நின்றது. இனி இந்த சாவித்திரி என்ற அடையாளத்தை, முகத்தை விட்டு விடக்கூடாது என்று எனக்குள் முடிவுசெய்து கொண்டேன்...'' நெகிழ்ச்சியோடு சொல்கிறார், கீர்த்தி சுரேஷ்.
நன்றாக நடிக்கவும் கொஞ்சம் கவிதை எழுதவும் தெரிந்த க்யூட் பெண். நடிக்க வந்த ஐந்து வருடத்தில் 20 படங்கள் கடந்து விட்டன. தமிழும் மலையாளமும் படிக்க பேச தெரியும். மூன்று மாநில ரசிகர்களின் செல்லம். கீர்த்தி சுரேஷிடம்பேசினோம்.
"அப்பா சுரேஷ் பிரபல மலையாள தயாரிப்பாளர். அம்மா மேனகா தமிழ். கேரளாவில் அதிகமான படங்களில் அம்மா நடித்துக் கொண்டிருக்கும் போது அப்படியே காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அன்பான ஒரு அக்கா ரேவதி சுரேஷ் அவர் நிறைய திரைக்கதைகள் உருவாக்கி வைத்திருக் கிறார். இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின்
சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் பணி புரிந்திருக்கிறார். அக்காவுடைய ஆசை, லட்சியம் இயக்குநர் ஆகணும் என்பது. அப்பா தயாரித்தால் நான் ஒரு பைசா வாங்காமல் நடிச்சு தர்றேன் என்று
சொல்லியிருக்கிறேன். அதில் அம்மாவும் பாட்டியும்கூட நடிக்கிறோம் என்று
சொல்லியிருக்கிறார்கள். அப்படி அமைந்தால் அது எங்க குடும்பப் படம்!
நான் சென்னையில் பாட்டி (அம்மாவின் அம்மா) வீட்டிலும் கேரளாவிலும் வளர்ந்தவள். அம்மாவின் தாய் மொழியான தமிழும் அப்பாவின் தாய் மொழியான மலையாளமும் நல்லா பேச படிக்க தெரியும். நேற்று வரை தமிழ்நாடு, கேரளம் என இருமாநில ரசிகர்களின் செல்லமாக இருந்த நான், தெலுங்கில் சாவித்திரியம்மா வேடத்தில் நடித்தது முதல், மூன்று மாநிலங்களுக்கும் பிடித்தமான நடிகை என்று ஆகியிருப்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம்.
கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதலோ என்னவோ நடிப்பு சின்னவயதிலேயே எனக்குள் வந்து விட்டது. அப்பா தயாரித்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக மம்முட்டி, திலிப், நெடுமுடிவேணு வரை அத்தனை ஸ்டார்களின் மடியிலும் உட்கார்ந்து நடித்த ஒரே நடிகை நானாகத்தான் இருப்பேன். பிளஸ் டூ முடித்ததும் சினிமாவில் நடிக்கிறேன்னு சொன்னதும், முதலில் படிச்சு ஒரு டிகிரி வாங்கு. படிப்பு ரொம்ப முக்கியம் என்று சொல்லி விட்டதால் கல்லூரியில் சேர்ந்து ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ் படித்தேன். அது பெண்கள் கல்லூரி என்பதால் ஜாலியாக படித்தேன். எனக்கு விளையாட்டில் ஆர்வம். கிரிக்கெட் செமையா
விளையாடுவேன். சச்சின் டெண்டுல்கரின்
ரசிகை நான். எங்கள் கல்லூரியில் பெண்கள் கிரிக்கெட் அணிக்கு நான் தான் கேப்டன். நடிக்க வராதிருந்தால் இந்திய பெண்கள் கிரிக்கெட் டீமில் கலக்கியிருப்பேன். நெசந்தான் நம்புங்க!
எனக்கு நல்லா சமைக்கவும் வரும். உன் சமையல் ருசியாக இருக்கிறது என்று அம்மா சொல்வாங்க. நான் லண்டனிலும் ஸ்காட்லாந்திலும் ஆறு மாசம் இருந்தபோது. அந்த அருமையான தருணத்தை வேஸ்ட் பண்ணாமல் சமைக்கக் கற்றுக் கொண்டேன். என்ன என் சமையலில் காரம் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். மாங்காய் ஊறுகாய், மிளகுரசம், பொரியல் எல்லாம் நல்லா செய்வேன்.
என்ன சைவ அயிட்டங்களாகவே சொல்றேன்னு பார்க்கிறீர்களா? நான் 100 சதவீதம் சுத்த சைவம். அசைவம் சமைக்கவோ சாப்பிடவோ மாட்டேன்.
கஜினி படம் பார்த்தது முதல் சூர்யாவின் ரசிகை. அம்மா சிவகுமார் சாருடன் நடித்தவர். நான் சூர்யா
சார்கூட'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்தேன்.
நான் ஃபேஷன் டிசைனிங் படிச்சதால், ஃபங்ஷ னுக்கு போட்டுக்கிட்டு போற டிரஸ்களை நானே டிசைன் பண்ணிக்குவேன். படங்களில் நான் அணிவது எல்லாம் காஸ்ட்யூமர் தைக்கிறார் என்றாலும் என் கருத்தையும் கேட்டு தான் வடிவமைக்கிறார். என்னுடைய டிரசிங்
சென்ஸ் என்னை ரொம்ப அழகாகக் காட்டுவதாக
சினிமா துறையிலும் வெளியே என் தோழிகளின் வட்டத்திலும் பேசிக்கொள்கிறார்கள்.
என் படங்களில் எனக்கு நான்தான் டப்பிங் பேசுகிறேன். வீட்டில் அம்மா, பாட்டி,அக்காவிடம் தமிழில் தான் பேசுறேன். அப்பாவின்
சொந்தக்காரர்களிடம் மலையாளத்தில் பேசுறேன். தமிழில் ஒரு பாடல் விக்ரம் கூட சேர்ந்து பாடி விட்ட தில் ரொம்ப சந்தோஷம்.
ஆரம்பத்தில் அப்பாகிட்ட நான் நடிக்கிறேன்.
நீங்க படம் தயாரிக்கணும் என்று சொன்னேன்.'அவ்வளவு ரிஸ்க் எல்லாம் எடுக்க முடியாதும்மா' னு சிரிச்சுட்டார். அப்புறம் நான் காலேஜில் மூன்றாம் ஆண்டு படித்து கொண்டிருந்த போது, அப்பாவின் நண்பர் இயக்குநர் பிரியதர்ஷன் அழைத்து,‘கீதாஞ்சலி‘ படத்தில் நடிக்க வாய்ப்பளித்தார். மோகன்லால் உட்பட அந்தப் படத்தில் நடித்த அனைவருமே அப்பாவின் பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ் . அதனால் அப்பா ஓகே சொன்னார். முதல் படத்திலேயே எனக்கு டபுள் ரோல் . ரொம்ப சவாலாக அமைந்த படம் கீதாஞ்சலி.
நான் தமிழ்ப் பெண் என்பதால் தமிழில் குட்டிக் குட்டியாக கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் நிறைய இருக்கிறது. பாடல் கேட்பது கவிதை படிக்கிறது
சின்னவயதில் இருந்தே பிடித்தமான விஷயம்.
சண்டக்கோழி 2 ல நடிக்கும்போது என் கவிதை ஆர்வத்தைத் தெரிந்து கொண்ட டைரக்டர் லிங்குசாமி சார், உன் கவிதைகளையெல்லாம் எங்கிட்ட கொடும்மா, புத்தகமா போட்டுத் தர்றேன். என்றார். அவரும் சூப்பரா கவிதை எழுதுவார். மறுநாள் ,அவர் எழுதிய கவிதைத் தொகுப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார்.
சினிமாவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் எப்படி ஓடியது என்றே தெரியவில்லை. தமிழில் நான் விக்ரம் பிரபுவின் ஜோடியாக அறிமுகமான'இது என்ன மாயம்' படம் வர்த்தக ரீதியாக சரியா ப் போகலைனு கேள்விப்பட்டு ரொம்பவும் அப்செட் ஆகி ஒரு நாள் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தேன்.வெற்றி தோல்வி வாழ்க்கையில் சகஜம். படங்கள் தேர்ந்தெடுத்துச் செய்ய பக்குவம் பெற இது தேவைதான் என்று பின்னர் உணர்ந்து கொண்டேன். அடுத்து தெலுங்கில் நடித்த நேனு சைலஜா, தமிழில் ரஜினி முருகன் இரண்டும் சூப்பர் ஹிட்டானது மகிழ்ச்சியை அள்ளிக்கொட்டியது. தனுஷ் ஜோடியாக தொடரி பிடித்த படம். அதுவும் சரியாகப் போகவில்லை. ஆனாலும் என்னோட பர்ஃபாமன்ஸ் பேசப்பட்டது. அடுத்து, நடிகையர் திலகம் படவாய்ப்பு வந்ததும் ரொம்ப பெருமையாக சந்தோஷமாக இருந்தாலும், உள்ளுக்குள் பதட்டம், பயம். சாவித்திரியம்மா லெவலுக்கு எல்லாம் என்னால் நடிக்க முடியாது என்பதை நடிகையர் திலகமாக நடிக்கும்போது பல தடவை அனுபவத்தில் உணர்ந்தேன். ஆனா அது போன்ற வாய்ப்பு ஒரு இளம் நடிகைக்குக் கிடைப்பது வெகு அபூர்வமான நிகழ்வு. எனக்குக் கிடைத்ததும் சரியாக பயன் படுத்திக்கொண்டேன்.
நான் திரையுலகிற்கு வந்து ஐந்து வருடத்தில் . நடிகையர் திலகம், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சர்கார் போன்ற படங்கள் என்னை கமர்ஷியல் ஹீரோயினாகவும் உயர்த்தி இருக்கின்றன. ஐந்தாண்டில் 20 படங்கள். எனக்கு பிடித்த விஜய் சார் கூட இரண்டு படம் நடித்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. கேரளாவில் அவர் நடித்த போக்கிரி ஷுட்டிங் நடந்த போது கூட்டத்தில் ஒருத்தியாக நின்று பார்த்திருக்கிறேன், அப்போது நான் ஸ்கூல் மாணவி. இப்போது அவருக்கு ஜோடியாக இரண்டு படங்களில் நடித்து விட்டேன். அம்மா தமிழில் 15 படங்களில் மட்டுமே நடித்தார், மலையாளத்தில் 100 படங்கள முடித்துவிட்டார். நான் அம்மாவை விட ஒரு படமாவது கூடுதலாக நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு திறமையான நடிகை என்ற முறையில் அம்மா
சொன்ன அட்வைஸ்:
"படப்பிடிப்பில் யாரையும் காக்க வைக்காதே. யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளாதே. சின்ன நடிகர்,பெரியநடிகை. என்றெல்லாம் பார்க்காமல் எல்லோரையும் சமமாக மதிக்கத் தவறாதே. நீ எப்படி நடந்துக்கொள்கிறாயோ அப்படியே அவர்கள் உன்னுடன் நடந்து கொள்வார் கள்,'' என்று சொன்னதை மறக்காமல் கடைபிடித்து வருகிறேன்.
அடுத்து, என்னை ஹீரோயினாக அறிமுகப்படுத்திய பிரியதர்ஷன் சார் இயக்கத்தில் வரலாற்றுப் படம் ஒன்றில் நடிக்கிறேன். வெள்ளைக் காரர்களை எதிர்த்து முதன் முதலாக போர் புரிந்த‘குஞ்சாலி மரைக்காயர்‘ என்ற மாவீரரின் வரலாறு. அந்தப் படத்தில் எனக்கு ஒரு முக்கியமான கேரக்டர். சீன இளைஞர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்கிறேன். கேரளாவுக்குப் பெருமை சேர்க்கும் மிகப் பிரமாண்டமான அந்தப் படத்தில் நான் இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்,'' சொல்லி முடித்துப் பூவாய்ப் புன்னகைத்தார், கீர்த்தி சுரேஷ்.
ஜுன், 2019.