சிறப்புக்கட்டுரைகள்

நீ உன்னுடைய சகோதரனை கவனித்துக் கொண்டால்!

இரா. கௌதமன்

கேரளாவின் சாலக்குடியிலிருந்து பசுமை போர்த்திய நிலப்பரப்பையும், இடைஇடையே நிமிர்ந்து நிற்கும் கேரள பாணி பிரமாண்ட வீடுகளையும் கடந்து 10 கிலோ மீட்டர் பயணித்தால் கொம்பிடி கிராமத்தை சென்றடையலாம். கொம்பிடியின் அடையாளமே தாம்ஸன் வியாபாரக் குழுமம் தான். கேரளாவின் மிகப்பெரிய இறைச்சிக் கோழி நிறுவனம், மாட்டுப் பண்ணை, பைகள் தயாரிக்கும் பேக்டரி, வாகன உதிரி பாகங்கள் விற்பனை என்று பல தொழில்கள். நிறுவனத்தை நடத்துவது ஆறு சகோதரர்கள். ஜான்சன், தாமஸ், டேவிஸ், வர்கீஸ், ஜோஸ் மற்றும் பென்னி. தங்களுடைய தந்தை புன்னேலிபரம்பில் தாம்ஸன் பெயரில் நடத்தும் இந்த மொத்த நிறுவனங்களையும் அனைத்து சகோதரர்களும் சேர்ந்தே நிர்வகிக்கிறார்கள். நிறுவனத்தை பற்றி மட்டுமில்லாமல் அவர்களின் குடும்பத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள மூத்த சகோதரரான ஜான்சனை அந்திமழைக்காக அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். ஆங்கிலத்தில் பேசத் தொடங்கிய நம்மை சரளமாக தமிழுக்கு மாற்றினார்.

“இன்றைக்கு 2500 பேர் வேலை பார்க்கும் நிறுவனத்தை வளர்க்க ஆரம்ப காலத்தில் நிறைய இடர்களைத் தாண்டியே வந்திருக்கிறோம். தொடக்கத்தில் ஆயில் மில் ஆரம்பித்தபோது கையிலிருந்த பணத்தை வைத்துக் கட்டடத்தை கட்டியாகிவிட்டது. மிஷின்களுக்கும் மற்ற தேவைகளுக்கும் பணம்..? அப்போது எங்கள் மூன்று பேருக்கு கல்யாணம் ஆகியிருந்தது. சீதனமாக வந்த நகைகள் கொஞ்சம் இருந்தது. வங்கியில் அடகு வைத்து பணம் எடுக்கலாம் என்பது பெண்களின் எண்ணம். ஆனால் நம்ம நகையை வங்கியில் வைத்து நாம் வட்டி கட்டுவதா என்பது எங்களின் எண்ணம். நகையை அடகு வைப்பதாக வீட்டில் சொல்லிவிட்டு, விற்று பணமாக்கி வியாபாரத்தில் போட்டோம். வீட்டில் சொல்லவே இல்லை. பணம் சேர்ந்த பிறகு நிறைய நகைகளை வாங்கி கொடுத்து விட்டோம், அது வேற கதை” என்று சிரிக்கிறார் ஜான்ஸன்.

ஆறு ஆணும், மூன்று பெண்ணுமான பெரிய குடும்பம் தாம்ஸனுடையது. கொம்பிடி கிராமத்தில் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த குடும்பம். எல்லா ஊரிலும் விவசாயிகளின் நிலை ஒன்றேதான். தாம்ஸன் மட்டும் விதிவிலக்காக முடியுமா? வறுமையான சூழ்நிலையில் கல்வியை மட்டுமே ஆதுரமாக நினைத்திருக்கிறார் தாம்ஸன். பிள்ளைகள் அனைவரையும் நன்றாக படிக்க வைத்துவிட்டார். மூன்று பெண்களும் ஆசிரியை ஆகிவிட்டார்கள்.

மூத்தவரான ஜான்சன் படித்து முடித்துவிட்டு வெளிநாட்டில் பணம் சம்பாதிக்கலாம் என்று சென்றார். அங்கு அவரால் மனமொன்றி வேலை செய்ய முடியவில்லை. திரும்பவும் கொம்பிடி கிராமம். என்ன செய்வது? விவசாயத்தை மட்டும் நம்பி வாழமுடியாது. என்ன செய்யலாம் என்று சகோதரர்கள் கூடி பேசி 1982-ல் 12000 ரூபாய் முதலீட்டில் வட்டிக்கடை தொடங்கி விட்டார்கள். வியாபாரம் தொடங்கும்போதே சகோதரர்கள் பேசி முடிவு செய்தது, என்ன செய்தாலும் அனைவரும் சேர்ந்தே செய்வோம்; வியாபாரத்தில் நாணயமாக இருப்போம், வாக்கு தவறக்கூடாது என்பதே.

“1989 ல் ஆயில் மில் ஒன்றை தொடங்கினோம். வட்டி வாங்கி பிழைப்பது சரியல்ல என்று மனது உறுத்திக்கொண்டே இருந்ததால் வட்டி தொழிலை விட்டு விட்டோம். தொடக்கத்தில் கையில் பெரிய பணம் இல்லை. வட்டிக்கு பணம் வாங்கித்தான் வியாபாரம் நடத்தினோம். பணம் கொடுக்கல் வாங்கலில் நேர்மையாக இருந்ததால் நல்ல பெயர் கிடைத்தது. வியாபாரமும் வளர்ந்தது.  அதனால் வியாபாரத்தில் எங்கள் முதலீடு என்பது பணமல்ல; நாணயம்தான்” என்கிறார் ஜான்ஸன்.

“அடுத்ததா 100 கோழி வாங்கி முதன் முதலில் கோழித் தொழிலை தொடங்கினோம். பிறகு ஏஜென்சி எடுத்தோம். கறிக்கோழி தொழிலை விரிவுபடுத்தினோம். முதலில் இரண்டு பேரை வேலைக்கு சேர்த்தோம். இப்போது மொத்தமாக அனைத்து தொழிலிலும் சேர்த்து எங்கள் குழுமத்தில் 2500 பேர் வேலை செய்கிறார்கள். எங்களுடைய குழுமத்தில் முக்கியமான கட்டளை யாரும் யாரையும் ‘சார்’ என்று அழைக்கக் கூடாது. பேர் சொல்லித்தான் அழைக்க வேண்டும். பணி இடத்தில் எம்.டி, மேனேஜர், சூப்பர்வைசர் என்ற வேறுபாடு இருக்கும். ஆனால் ஆபிசை விட்டு வெளியே வந்துவிட்டால் அனைவரும் ஒன்றுதான்.

எங்களிடம் தங்கி வேலை பார்ப்பவர்கள் அனைவருக்கும் சாப்பாடு இலவசம். உடுமலைப் பேட்டை பைகள் தயாரிக்கும் பேக்டரியில் 700 பேர் வேலை செய்கிறார்கள். பெரும்பாலும் ஒரிசா மற்றும் பீகாரைச் சேர்ந்தவர்கள். எல்லாருக்கும். வாரம் ஐந்து நாள் அசைவ உணவுதான். சிறு வயதில் சாப்பாட்டிற்காக கஷ்டப்பட்டதில்லை. ஆனால், நல்ல சாப்பாட்டிற்காக ஏங்கியிருக்கிறோம். அதன் அருமை எங்களுக்குத் தெரியும்.” நிறுவனத்தின் சிறப்புகளை ஒவ்வொன்றாக அடுக்குகிறார். நூறு கோழிகளுடன் வியாபாரத்தை தொடங்கிய இவர்களின் நிறுவனம் இன்று வாரத்திற்கு மூன்று லட்சம் கிலோ கறிக் கோழியை உற்பத்தி செய்கிறது.

ஆயில் மில் மற்றும் கறிக்கோழி வியாபாரம் மட்டுமில்லாமல் இவர்களின் மற்ற தொழில்கள் பற்றி பேச்சு திரும்பியது.“கொல்லங்கோடு, மண்ணூத்தியில் கிரஷர்கள் வைத்துள்ளோம். உடுமலையில் வோவன் சேக் பேக்டரி. நிறைய வண்டிகள் இருக்கிறது. அதற்காக இங்கேயே பெட்ரோல் பங்க் வைத்துள்ளோம். வண்டிகளுக்கு தேவையான உதிரி பாகங்களுக்காக இரண்டு கடைகள்.

 இவை எல்லாவற்றையும் செய்தாலும் மனதிற்கு திருப்தியாக இருப்பது விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழிலும் தான். 300 கறவை மாடுகள், 2000 ஆடுகள், மீன் பண்ணை, அதைச் சுற்றி விவசாயம் என்று பெரிய பண்ணை வைத்திருக்கிறோம்.” சிறு விவசாயியான தந்தையின் விருப்பத்தை பெரிதாக பூர்த்தி செய்திருக்கிறார்கள்.

ஆரம்ப கால கட்டத்தைப் பற்றி பேசும் போது, “94 ல் கேரளாவில் இறைச்சிக் கோழிகள் அதிகம் கிடையாது. தமிழ் நாட்டிலிருந்து தான் வரும். பல்லடம் பகுதியில் கோழி வாங்க நாங்கள் அடிக்கடி சென்று வருவோம். அப்போது சாந்தி நிறுவனத்தின் நிறுவனர் திரு. இலட்சுமணன் அவர்களுடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. 21 வருடமாகி விட்டது. இன்றும் அந்த நட்பு தொடர்கிறது. அவர் எங்களுடைய சகோதரர் போல. எங்களுடைய வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் அவர். கோழி தொழிலில் ஏற்றம் இறக்கம் வருவது சாதாரணம். பிரச்னை காலங்களில் எல்லா வகையிலும் அவர் துணை நின்றிருக்கிறார்.”  நன்றியுடன் நினைவு கூருகிறார்.

 அடுத்த தலைமுறை பற்றி கேட்டோம்.“மகன்களில் இரண்டு பேர் டாக்டர்கள். நான்கு பேர் பிடெக் உடன் எம்பிஏ படித்துவிட்டு தொழில்களை கவனித்துக் கொள்கிறார்கள். ஒருவர் வக்கீல். வியாபாரத்தின் சட்டப்பூர்வமான விசயங்களை கவனிக்க  நம் குடும்பத்திலிருந்தே ஒருவர் வேண்டுமென்பதால். இரண்டு பேர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறு வயதிலிருந்தே வியாபார விசயத்தை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தே வளர்த்திருக்கிறோம். எங்களுடைய பெற்றோர் எங்களுக்கு சொல்லி வளர்த்த விசயங்களை அவர்களுக்கு சொல்லியிருக்கிறோம். குடும்பத்தைப் பற்றியும் வியாபாரம் பற்றியும் நன்கு தெரிந்தே வந்திருக்கிறார்கள்”. பேச்சில் எங்கேயும் தன் பிள்ளை தம்பியுடைய பிள்ளை என்ற வார்த்தைகளே இல்லை. எல்லாம் எங்கள் பிள்ளைகள் தாம்.

இவ்வளவு பெரிதாக வளர்ந்த பின்னாலும் பிரச்னை எதுவுமில்லாமல் ஆறு குடும்பங்களும் ஒன்றாக சேர்ந்து இருக்கும் ரகசியம் என்ன?

“ஆறு பேரிடமும் பணப் பெட்டியுடைய சாவி இருக்கிறது. யாருக்கு எப்போது பணம் தேவைப்பட்டாலும் எடுத்துக் கொள்ளலாம். இதுதான் நாங்கள் பின்பற்றும் பழக்கம். யாருக்கும் கிளப், சூதாட்டம் என்ற பழக்கங்கள் எதுவுமில்லை. அதனால் பணம் விரயமாவதற்கு வழியில்லை. திருமணம், வீடு போன்ற செலவுகளுக்கு பொதுவாகவே எடுத்து செலவு செய்கிறோம். இதில் அனைவருக்கும் சந்தோஷம்” ஜான்ஸன் சுலபமாக கூறிவிட்டாலும் சகோதரர்களுக்கு இடையேயான புரிதல் ஆச்சர்யப் படத்தக்க ஒன்றுதான்.

“கேரளாவில் தொழில் செய்ய சாதகமான நிலை இல்லை. சரியான ஆவணங்களை வைத்துக்கொண்டு முறைப்படி முயற்சித்தும் சில சமயங்களில் எதுவும் நடப்பதில்லை. ஆனால் தமிழகத்தில் தொழில் துறையை வளர்க்க நினைக்கிறார்கள்.  எங்களின் உடுமலைப் பேட்டை பேக்டரிக்கு ஒரே மாதத்தில் அனுமதி கிடைத்தது. அதனால் எங்களுடைய எதிர்கால வியாபார விரிவாக்கத்தை தமிழகத்தில் செய்யவே நினைக்கிறோம்”. தமிழகத்தைப் பற்றி அண்டை மாநிலத்தார் சொல்வதைக் கேட்க்க பெருமையாகத்தான் இருக்கிறது.

“நாங்கள் சின்னநிலையில் தொடங்கிய தொழில் கடவுளின் அனுக்கிரகத்தால் இன்று நன்றாக நடக்கிறது. இதை நாங்கள் மட்டும் அனுபவிப்பது சரியல்ல. அதனால் முடிந்த அளவிற்கு இல்லாதவர்களுக்கு உதவி வருகிறோம். எங்களுடைய ஒவ்வொரு குடும்ப திருமணத்தின் போதும் இருபது ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வருகிறோம். அதில்லாமல் எங்களிடம் வேலை பார்ப்பவர்களுக்கு உதவிகள் செய்ய தயங்குவதில்லை. இப்போது இந்த விஷயங்களை நிறுவனத்தின் வழியாகவே செய்தாலும் எதிர்காலத்தில் தனியாக சேவை அமைப்பைத் தொடங்கி அதிகமாக செய்யும் எண்ணமிருக்கிறது.” என்கிற ஜான்ஸன்“நீ உன்னுடய சகோதரனை கவனித்துக்கொண்டால் விண்ணுலகிலிருந்து உனக்கான கிருபை கிட்டும்’என்ற பைபிள் வாசகத்தோடு விடை கொடுக்கிறார்.

அக்டோபர், 2015.