சிறப்புக்கட்டுரைகள்

நிவர்புயல்: தொலைக்காட்சிகள் பீதி ஊட்டினவா?

வசந்தன்

எதற்கெடுத்தாலும் செயற்கையாக பின்னணி இசைபோட்டு நிமிடத்துக்கு நிமிடம் பீதியைக் கிளப்ப பிரேக்கிங் நியூஸ் போட்டு தொலைக்காட்சி சானல்கள் பிழைப்பை ஓட்டுகின்றன. ஆனால் புயல் போன்ற இயற்கை பேரிடர்களிலும் இப்படிச் செய்யலாமா?

ஆர்.ரங்கராஜ், மூத்த பத்திரிகையாளர்

நிவர் புயல் தொடர்பான செய்திப்பதிவில் சென்னைக்கு அதி முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதை விடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இதனை செய்ய காட்சி ஊடகங்கள் தவறியிருந்தன.

கடலூர், புதுச்சேரி, காரைக்கால், நாகை, மரக்காணம், விழுப்புரம் போன்ற மாவட்டங்கள் நிவர் புயலால் பெரிதும் தாக்கத்தை சந்தித்துள்ளன. காட்சி ஊடகங்களின் இந்த அணுகுமுறையால், நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும் அந்த பகுதிகளை தவறவிட வாய்ப்பிருக்கிறது. சென்னையை ஒப்பிடும்போது, பிற மாவட்டங்களில் நிருபர்கள் குறைவாக இருக்கிறார்கள். இந்த இடைவெளி, களப்பணியாளர்கள் இல்லாத பகுதிகளை பாதிப்பு குறைவாகவும், களப்பணியாளர்கள் இருக்கும் பகுதி அதிக பாதிப்புடையதாகவும் சித்திரிக்க வாய்ப்பளிக்கிறது. களத்திற்கு சென்று உண்மையான நிலவரத்தை பதிவு செய்யவேண்டும். இதனால் மக்கள், விவசாயிகள், மீனவர்கள் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை ஆராய வேண்டும்.

ஒரு சம்பவம் கிடைத்துவிட்டால் அதுகுறித்து ஒரு மிகையான தோற்றத்தை உருவாக்குவது தொடர்கதை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்கிற விவாதத்தையும் இவர்களே உருவாக்குவார்கள். பின்னர் அனைத்திற்கும் அவர் கருத்து சொல்ல வேண்டுமென்ற சூழலையும் இவர்களே தோற்றுவிப்பார்கள். இதேபோன்ற அணுகுமுறைதான் நிவர் புயல் போன்ற சூழலிலும் ஊடகங்களால் பின்பற்றப்படுகிறது.

வி.கதிர்வேல், மூத்த பத்திரிகையாளர்

காட்சி ஊடகங்கள் போட்டியை சமாளிப்பதற்காக செயற்கையான பரபரப்பை உருவாக்குவதென்பது தற்போது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. நிவர் புயல் செய்தியை பார்க்கும்போது மக்கள் பீதியடைந்தார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில் மக்கள் இப்போது தெளிவாக இருக்கிறார்கள்.  சமூக வலைதளங்களில் வெளியாகும் மீம்ஸ் இதற்கு சான்று. ‘‘நிவர் புயல் பதற்றத்திலிருந்து விடுபட வேண்டுமா? அது ஒன்றும் பெரிய காரியமல்ல, தொலைக்காட்சியை அணைத்துவிட்டு உட்காருங்கள் போதும்'' என்ற அளவில்தான் மக்கள் இதைக் கையாளுகிறார்கள்.

ஆனால் இதனை வேறொரு கண்ணோட்டத்திலும் பார்க்கலாம். இந்தியாவில் எய்ட்ஸ் நோய் பரவிய காலத்தில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அச்சு ஊடகங்களில் பெரும் பங்காற்றின. அப்போது இந்த நோய் அப்படி ஒன்றும் தீவிரமானது அல்ல. ஊடகங்கள் பெரிதாக சித்திரிக்கின்றன என்றார்கள். அதையும் தாண்டி  விழிப்புணர்வில் அப்போது முக்கிய பங்காற்றியவை நாளிதழ்கள் தான். கொரோனாவில் கூட முதலில் ஊடகங்கள் அளித்த முக்கியத்துவத்தால் மக்கள் முகக்கவசம், தனிமனித இடைவெளி போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒரு கட்டம் வரை சரியாக பின்பற்றினார்கள்.

 வாசகர்கள் நம்மைவிட அறிவாளிகள் என்பதை எப்போதும் கவனத்தில்கொள்வேன். நாம் சரியாக தகவலை சொல்கிறோமா என்பதை படிப்பவர்கள் நிச்சயம் கவனிப்பார்கள். எனவே செய்தியை கவனமாகவும், நெறிமுறையை பின்பற்றியும் தர வேண்டுமென கருதுகிறேன்.

டிசம்பர், 2020.