சிறப்புக்கட்டுரைகள்

நிலவில் மனிதன்

Staff Writer

ஜூலை 21, 1969. நிலவில் மனிதன் கால் வைத்த வரலாற்று நிகழ்வு பற்றிய செய்திக் கட்டுரை  நியூயார்க் டைம்ஸில் முழு பக்க அளவுக்கு வெளியானது. இதை எழுதியவர் ஜான் நோபல் வில்போர்ட். இவருக்கு  புலிட்சர் விருது இரண்டு முறை வழங்கப்பட்டது. இந்த செய்திக் கட்டுரை முக்கிய இதழியல் பாடமாக கருதப்படுகிறது. இதிலிருந்து ஒரு பகுதி மட்டும் தமிழில்:

ஹூஸ்டன், திங்கள் ஜூலை 21: மனிதர்கள் நிலவில் இறங்கி நடந்து விட்டார்கள். அப்பலோ 11 விண்கலத்தின் இரண்டு விண்வெளி வீரர்கள் தங்களுடைய சிறிய நாலு கால் நிலவு வாகனத்தை நேற்று மாலை 4:17:40 மணிக்கு பாதுகாப்பாக இறக்கினார்கள். இங்குள்ள பயண கட்டுப்பாட்டு அறைக்கு 38 வயதான கமாண்டர் நீல் ஆம்ஸ்ட்ராங் ரேடியோ மூலம் இவ்வாறு தெரிவித்தார்; ‘ஹூஸ்டன், ட்ரான்குலிட்டி தளத்திலிருந்து பேசுகிறேன். கழுகு தரை இறங்கிவிட்டது’.

 நிலவுக்குச் சென்ற முதல் மனிதர்களான ஆம்ஸ்ட்ராங், கர்னல் எட்வின் இ.ஆல்ட்ரின் ஜூனியர்  இருவரும் தங்கள் ஓடத்தை நிலவிலுள்ள வறண்ட sea of tranquility என்ற  பகுதியின் தென் மேற்கு கரையில் பாறைகள் பொடிந்த தரையில் இறக்கினார்கள். ஆறரை மணி நேரத்திற்கு பிறகு ஆம்ஸ்ட்ராங் ஓடத்தின் கதவை திறந்து ஏணியில் மெதுவாக இறங்கி, நிலவின் மேல் மனித இனத்தின் முதல் அடியை எடுத்து வைத்து இவ்வாறு அறிவித்தார். ‘இது மனிதன் எடுத்து வைத்த

சிற்றடி. மனித குலத்தின் மிகப் பெரிய பாய்ச்சல்’ இரவு 10:56:20 மணிக்கு அவர் முதல் அடியை எடுத்து வைத்தார். ஓடத்துக்கு வெளியே இருந்த தொலைக்காட்சி காமிரா பூமியில் இருந்த கோடிக்கணக்கான மக்களுக்கு அவரது ஒவ்வொரு அசைவையும் ஒளிபரப்பியது.

19 நிமிடங்கள் கழித்து கர்னல் ஆல்ட்ரின் அவரோடு இணைந்தார். இன்னொரு தொலைக்காட்சி காமிராவை வைத்தார்கள். அமெரிக்க கொடியை நாட்டினர். மணலையும் பாறை மாதிரிகளையும் சேகரித்தனர். நிலவில் தங்கள் இயக்கத்தை பரிசோதிக்க குதித்து சோதித்தனர். எதிர்பார்த்ததை விட இது அவர்களுக்கு எளிதாக இருந்தது. ஆம்ஸ்ட்ராங் மிகவும் இலகுவாக இருப்பதாகக் கூறினார். வெள்ளை மாளிகையிலிருந்து அதிபர் நிக்ஸன் அவர்களிடம் பேசி வாழ்த்து தெரிவித்தார்: ‘இது மிகவும் வரலாற்று சிறப்பு மிக்க தொலைபேசி அழைப்பு. விண்ணுலகம் மானுட உலகின் ஒரு பகுதியாகி விட்டது. உலக மனித வரலாற்றில் இது விலை மதிக்க முடியாத தருணம். உலக மக்கள் அனைவரும் பெருமையிலும்  நீங்கள் பூமிக்கு பாதுகாப்பாக திரும்பவேண்டும் என்ற பிரார்த்தனையிலும் உண்மையிலேயே ஒன்றாகிவிட்டனர்.. ’ என்றதும் ‘அதிபர் அவர்களுக்கு நன்றி, அமெரிக்காவை மட்டுமல்ல எதிர்காலத்துக்கான தொலை நோக்கு கொண்ட மனிதர்கள், ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட மனிதர்கள், அனைத்து நாடுகளையும் சேர்ந்த அமைதி நாடும் மனிதர்கள் ஆகிய அனைவரின் பிரதிநிதியாகவும் இங்கே இருப்பது மிகப்பெரிய கௌரவமும் மதிப்புமாகும்’ என்று ஆம்ஸ்ட்ராங் பதிலளித்தார். ஆம்ஸ்ட்ராங்கும் ஆல்ட்ரினும் இரண்டு மணி 21 நிமிடங்கள் கழித்து அதிகாலை 1:11 நிமிடத்திற்கு தங்கள் ஓடம் திரும்பினர். இந்தக் குழுவின் மூன்றாவது உறுப்பினர் லெப்டினன்ட் கர்னல் மைக்கேல் காலின்ஸ் மேலே விண்கலத்தில் சுற்றியபடி கண்காணித்துக் கொண்டிருந்தார். இந்த இரண்டு நிலவுப் பயணிகளும் உறங்க தயாரானார்கள். அவர்களது ஓடத்துக்கு வெளியே இருண்ட உலகம்.

விடியலுக்கு சற்று முன்பாக அவர்களுக்குப் பின்னால் கிழக்கு தொடுவானில் சூரியன். ஆயிரக்கணக்கான சிறு பள்ளங்கள், தூரத்தில் ஒரு தாழ்ந்த மலை. பல்வேறு வடிவங்கள், கோணங்கள், துகள் தன்மை கொண்ட பாறைகளைப் பார்த்து ஆச்சர்யப்பட்டதாக கர்னல் ஆல்ட்ரின் கூறினார். அவர்கள் ஏற்கெனவே திட்டமிட்ட இடத்திலிருந்து நான்கு மைல்கள் மேற்காக இறங்கியிருந்தனர். ஓடத்தின் வழிகாட்டும் கணினியில் இருந்த  சிறிய தகவல் தவறு இந்த பிசகுக்கு காரணமாகச் சொல்லப்பட்டது. கணினி அவர்களது ஓடத்தை கால் பந்து மைதானமளவுக்கு பெரிய, பாறைகள் நிறைந்த பள்ளத்தை நோக்கி இட்டுச் சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆம்ஸ்ட்ராங் ஓடத்தை தானே இயக்கி பள்ளத்தை தாண்டி சமதளத்தில் பாதுகாப்பாக இறக்கினார். அந்த இறுதி நொடிகளில் ராக்கெட் எஞ்சின் மேகம் போல நிலவில் புழுதியைக் கிளப்பியது.

பிப்ரவரி, 2016.