ஆங்கில மருத்துவம் Vs சித்த மருத்துவம் என்கிற கருத்தாக்கத்திற்குள் போகக் கூடாது. பாரம்பரிய மருத்துவத்தை சிறுமைப்படுத்தும் எண்ணம் எங்களுக்கு துளியும் இல்லை.
நிலவேம்பில் மருத்துவ குணமே இல்லையெனச் சொல்லவில்லை. ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அதேபோல் பக்கவிளைவுகளும் அதில் இருக்கிறது. அதை மறுக்காமல் ஆய்வுக்கு உட்படுத்துங்கள் என வேண்டுகோள் வைக்கிறோம். அதிலுள்ள தேவையான மூலக்கூறுகள் மற்றும் வேதிப் பொருட்களைப் பிரித்தெடுத்து பயன்படுத்த வேண்டும் எனக் கேட்கிறோம்.
சென்னை பல்கலைக்கழகம், மாநில கல்லூரியிலுள்ள ஒரு துறை உள்ளிட்ட மூன்று கல்லூரிகள் நிலவேம்பை ஆராய்ச்சி செய்துள்ளன. அதில், அவர்கள் நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவ் விஷயங்களையும் பட்டியலிட்டு இருக்கிறார்கள்.
எதிர்மறை விஷயங்களாக, திடீரென ரத்த அழுத் தத்தைக் குறைக்கும். ரத்தக்கட்டு உருவாகாமல் தடுக்கும். ரத்தக்கட்டியை கரைக்கிற தன்மை அதில் இருக்கிறது. அபார்ஷன் ஆகும் தன்மை உள்ளது. மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் பொருள் இருக்கிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதுகாப்பற்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அதேபோல் கல்லீரலை பாதுகாக்கும், எச்.ஐ.வி வைரஸ் மற்றும் மலேரியா கிருமியைக் கொல்லும் தன்மை கொண்டது, கேன்சருக்கான மருந்து இருக்கிறது எனப் பல பாசிட்டிவ் பாயிண்ட்டுகளையும் அடுக்கி உள்ளனர். ஆனால், டெங்கு வைரஸைக் கொல்லும் தன்மை இருப்பதாக அதில் குறிப்பிடவில்லை. பொதுவாக, வைரஸ் எதிர்ப்பு இருப்பதாக மட்டுமே கூறியுள்ளனர்.
அதனால், டெங்கு வைரஸை கொல்லும் மூலக்கூறு எதுவெனப் பார்த்து அதைப் பிரித்தெடுத்து கொடுத் தால் டெங்கு வைரஸை கொல்லலாம். மற்ற பக்க விளைவுகளும் வராமல் தடுக்கலாம்தானே. அதைவிடுத்து டெங்கு காய்ச்சல் உள்ளவர்களுக்கு கேன்சர், எச்.ஐ.வி., மலேரியா கிருமிகளைக் கொல்லும் மூலக்கூறை ஏன் கொடுக்க வேண்டும்? என்பதுதான் என் கேள்வி. அதுமட்டுமல்ல. அது என்ன மூலக்கூறு எனப் பார்த்து செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கிவிட்டால் நிலவேம்பை தேடி அலைய வேண்டியதும் நமக்கு இருக்காதுதானே.
அடுத்து, இதை ஆன்டி வைரலாக பயன்படுத்தலாம் என்கிறார்கள். அதாவது, வராமல் தடுக்கும் மருந்தாக பயன்படுத்தலாம் என்பது பொருள். ஆனால், ஐந்து நாட்கள் நிலவேம்பு கொடுக்கச் சொல்கிறார்கள். ஐந்து நாட்களுக்குப் பிறகு, டெங்கு வந்தால் என்ன செய்வது? ஏனெனில், டெங்கு வைரஸ் வீரியம் ஏறிக் கொண்டே செல்கிறது. இன்று, ‘டெங்கு 5’ வைரஸ் வரை வந்துவிட்டது. அது நிலவேம்பு கசாயத்தை எதிர்த்து நிற்கும் ஆற்றல் பெற்றுவிடும். அதனால், எத்தனை நாட்களுக்கு நிலவேம்பு தர வேண்டும் என்பதும் ஆய்வுக்கு உட்பட்ட ஒன்று. ஆனால், பரிசோதனை தேவையில்லை என வாதம் செய்கிறார்கள். எதையும் பகுத்தறிந்து பரிசோதனையின் அடிப்படையில் பார்க்கப்பட வேண்டும் என்பதே நவீன மருத்துவம்.
அதனால் என்னைப் பொறுத்தவரை எந்த நோய்க்கும் தடுப்பு என்பது தடுப்பூசி ஒன்றுதான் சிறந்தாக இருக்கும். பெரியம்மை, சின்னம்மை, காலரா, போலியோ என பல நோய்களை தடுப்பூசி மூலம்தான் ஒழித்திருக்கிறோம். ஒழித்தும் வருகிறோம். ஆனால், நிலவேம்பில் நிரந்தமான பாதுகாப்பு என்பது இல்லை.
இது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்கிறார்கள். எந்த வைரஸையும் பொதுவான நோய் எதிர்ப்பு சக்தி தடுக்காது. உதாரணத்திற்கு, ஆப்ரிக்காவில் இபோலா வைரஸால் நிறைய பேர் இறந்தார்கள். அவர்கள் அனைவரும் நல்ல உடல்வாகு, நோய் எதிர்ப்பு சக்தி உடையவர்கள்தான். தற்போது நம்மூரில் டெங்குவால் இறப்பவர்களும் கூட பொதுவான நோய் எதிர்ப்பு சக்தி உடையவர்கள்தான். ஆனாலும், டெங்கு வைரஸை எதிர்க்கும் ஆற்றல் உடலில் இல்லை. அதற்கு
சிறப்பான நோய் எதிர்ப்பு சக்தி தேவைப்படுகிறது. அதை தடுப்பூசிகளால் மட்டுமே அளிக்க முடியும்.
( ஜி.ஆர்.ரவீந்திரநாத் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர்)
நவம்பர், 2017.