சிறப்புக்கட்டுரைகள்

நிர்வாகவியலின் கடவுள்

உலகம் உன்னுடையது | Moneyதர்கள்

Staff Writer

கோனோசுகி மட்சுஷிடாவை தெரியுமா? எந்த படத்தில் நடித்திருக்கிறார் என்று கேட்காதீர்கள். உலகின் மிகப்பெரிய எலக்ட்ரானிக் நிறுவனமான ஜப்பானின் பேனாசோனிக் நிறுவனத்தை தொடங்கியவர். பெரும்பாலானா ஜப்பானிய தொழிலதிபர்களைப் பொறுத்தவரை இவர் ‘ நிர்வாகவியலின் கடவுள்’.

ஜப்பானின் வக்காயாமா பகுதியில் 1894-ல் வசதியான குடும்பத்தில் பிறந்த மட்சுஷிடாவுக்கு வாழ்க்கை அவ்வளவு எளிதாக இல்லை. தந்தை மிகப்பெரிய விவசாயி. விவசாயம் மட்டுமில்லாமல் அவர் முதலீடு செய்திருந்த தொழில்கள்அனைத்தும் நஷ்டமடைய இருந்த அத்தனையையும் விற்றுவிட்டு பக்கத்து நகரத்துக்கு குடிபெயரவேண்டிய கட்டாயம். சுகாதாரமில்லாத பகுதியில் சாப்பாட்டுக்கே கஷ்டப்படவேண்டிய நிலை. சகோதரர்கள் மூன்றுபேரும் உடல்நலமின்றி இறந்து போகின்றனர். மட்சுஷிடாவின் உடல்நிலையும் மோசமடைகிறது.

குடும்ப நிலை காரணமாக 9 வயதில் பள்ளிப்படிப்பை விட்டு ஹிபாசி நிறுவனத்தில் வேலைக்குப் போகிறார். வேலைக்கு சேர்ந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே நிறுவனம் மூடப்பட மீண்டும் வேலை தேடும் படலம். ஒசாகா எலெக்ரிக் லைட் கம்பெனியில் வேலை கிடைக்கிறது. சில வருடங்களுக்குள்ளாகவே தன்னுடைய திறமையான உழைப்பால் நிறுவனத்தில் பலபடிகள் உயருகிறார்.

1917 ல் ஒசாகா நிறுவனத்தை விட்டு வெளியேறி சொந்தமாக நிறுவனத்தை தொடங்குகிறார் மட்சுஷிடா. மனைவி, மைத்துனர் மற்றும் சில ஆட்களை வேலைக்கு அமர்த்தி வாடகை வீட்டின் கீழ்தளத்திலேயே நிறுவனத்தை தொடங்கிவிட்டார். முதலீட்டுக்கு பணமில்லை, கல்வி அறிவு இல்லை, உற்பத்தி நிறுவனம் பற்றி அனுபவமில்லை, நிறுவனத்தை சீக்கிரமே இழுத்து மூடப்போகிறார்கள் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். வேலைக்கு அமர்த்தப்பட்ட ஆட்களும் நம்பிக்கை இழந்து வெளியேற மனைவி மைத்துனருடன் முயற்சியை தொடர்ந்துகொண்டே இருந்தார். எதிர்பாராமல் 1000 மின்விசிறிகளுக்கான இன்சுலேட்டர் தகடுகளுக்கு ஆர்டர் கிடைத்தது. மார்க்கெட்டில் உள்ள பொருட்களை விட தரமாகவும், விலை குறைவானதாகவும் இருக்கிறது என்ற தகவல் பரவ வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. முதலில்‘ நேஷனல்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனம் ‘பேனாசோனிக்’ என்றானது.

அடுத்த கட்டமாக சைக்கிள்களுக்கான முகப்பு விளக்குகளை தயாரிக்கத் தொடங்கினார் மட்சுஷிடா. 1920 களில் சைக்கிள்களில் மெழுகுவர்த்திகளோ அல்லது எண்ணெய் விளக்குகளோ தான் பயன்படுத்தப்பட்டு வந்தன. இவை நான்கு மணிநேரம் கூட தாக்குப்பிடிக்க முடியாதவை. மட்சுஷிடா தயாரித்த பேட்டரி கொண்டு இயங்கும் விளக்குகள் நீடித்து உழைத்தன. இவற்றை விற்க மட்சுஷிடாவே சைக்கிள் கம்பெனிகள் ஒவ்வொன்றிற்கும் ஏறி இறங்கி இருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் பணநெருக்கடி காரணமாக மனைவியின் பாரம்பரிய உடையை கூட விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். 1950 லிருந்து 1973 வரை பேனாசோனிக் நிறுவனம் உலகின் மிகப்பெரிய மின்சாதனங்களை உற்பத்தி செய்து விற்கும் நிறுவனமாக இருந்தது. 1989 ல் 94 வயதில் மட்சுஷிடா மறைந்தபோது அவர் சொத்து 300 கோடியாகவும் பேனாசோனிக் 4200 கோடி வர்த்தகம் செய்யும் நிறுவனமாகவும் இருந்தது.

ஏப்ரல், 2016.