சிறப்புக்கட்டுரைகள்

நிராகரிப்பில் சுருளாதீர் !

கே.எஸ்.புகழேந்தி

மனதில் ஆறாத வடுவை விட்டுச் சென்றிருக்கிறது சமீபத்திய சென்னை கனமழை. விடாமல் கொட்டித்தீர்த்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரி இரவோடிரவாகத் திறக்கப்பட்டது.சென்னை மூழ்கியது. ஓய்வாகத் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் ஓரிரு மணித் துளிகளில் பரதேசிகளாக்கப்பட்டனர்.  அதேசமயம், மனிதர்களுக்குள்ளே தூங்கிக்கொண்டிருந்த மனிதநேயம் உசுப்பிவிடப்பட்டது.

குடைகளைப் பழுதுபார்க்கும் ஒரு சாமானியன் என்னிடம் சொன்ன சில வார்த்தைகள் இவை: “சார்! நான் குடியிருந்த வீட்டின் தரைத்தளம் மூழ்கிடுச்சு. மொட்டை மாடிக்குப் போயிட்டோம்.

சமைக்க வழியில்ல. பட்டினி எனக்குப் பழக்கமான ஒண்ணுதான். ஆனா என் மகளுக்குப் பரிட்சயமில்லாத விஷயம் அது.  அவ சுருண்டு போயிருந்தா. அதைப்பாத்து என் மனசு துடிச்சு போச்சு. அப்போதான் எங்க பகுதியிலயிருந்த காலேஜ் பொண்ணுங்களும் பையன்களும் படகில  வந்து சாப்பாட்டுப் பொட்டலங்களைக் கொடுத்திட்டுப் போனாங்க. அதைத் தொட மறுத்துட்டா என் மவ. இவளை நன்றாகப் படிக்க வைச்சமே தவிர, உலகம் தெரிந்தவளா வளர்க்கத் தவறிவிட்டோமேன்னு அந்த நொடியில ரொம்பவே வருத்தப்பட்டேன். அதே நேரத்தில வயசுப் பிள்ளைங்க சேவை மனப்பான்மையோட உதவி செய்யக் கிளம்பியிருப்பதைப் பார்த்துச் சந்தோஷமாவும் இருந்திச்சு” என்றவர்  கடைசியாகச் சொன்னார்:

“சார்...அடிமட்டத்தில இருக்கிறவன் கஷ்டப்படும்போது மேல்மட்டத்துல இருக்கிறவங்க நம்மளக் கைவிட மாட்டங்கன்னு ரொம்ப நம்பிக்கையோட இருப்பான். ஆனா அவங்களே நாதியத்து நிற்கறப்போ உலகம் என்னதான் சார் செய்யும். எல்லாருமே கையேந்தி நிற்கும்படி ஆயிடுச்சே! இந்த நிலை இனி எப்போதும் ஏற்படக்கூடாது ஆண்டவா!”

அந்த மனிதர் தன்னைவிட மேல் நிலையில் இருப்பவர்களைப் பார்த்துப் பொறாமைப்படவில்லை. மாறாக, அவர்கள் நன்றாக இருக்க வேண்டுமென்று மனதாரப் பிரார்த்திக்கிறார். இந்த மனப்பான்மை எல்லாருக்குமே இருக்கவேண்டும்.

அவருடைய மகளைப் போன்றவர்களுக்கு ஒரு வார்த்தை. எத்தனை முறை நாம் விழுந்தோம் என்பது முக்கியமில்லை. அத்தனை முறையும் எழுந்தோமே, அதை நினைத்துதான் பெருமைப்பட வேண்டும்.

சமீபத்தில்  Stop Making Excuses என்ற புத்தகத்தைப் படித்தேன். அமெரிக்க  நிறுவனம் ஒன்றில் தினமும் டெலிசேல்ஸ்மேன்களுக்கு ஒரு பந்தயம் வைப்பார்களாம். அவர்களில் யாருக்கு அவர்கள் முயலும் முதல் பத்து அழைப்புகளுக்கும் முகத்திலடித்தாற்போல் பதில் கிடைக்கிறதோ அவர்களுக்கு அங்கே பரிசு உண்டாம்.  அது அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஓர் ஏற்பாடு என்று அதில்

சொல்லப்பட்டிருந்தது.  ஆனால் நம்மில் பலர் ஒருமுறை நிராகரிப்புக்குள்ளானாலே அனிச்சமலர் போல் சுருண்டு போகிறோம்.

இங்கே ஒரு கதை.

ஓர் ஊரில் வெள்ளம். மக்கள் மரங்களையும் வீட்டுக் கூரைகளையும் பற்றிக்கொண்டு, மீட்க யாராவது வருவார்களா என்று மரண பயத்துடன் காத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் தைரியமாக நீந்திச் சென்று அங்கிருந்த மலையின் உச்சிக்குப் போய்விடுகிறான். அவன் கண்ணுக்கு தூரத்திலே ஒரு படகு வருவது தெரிகிறது. அவன் மற்றவர்களைப் பார்த்துக் கத்துகிறான்: மீட்புப் படகு ஒன்று வருகிறது. தயாராக இருங்கள் என்று. படகும் வருகிறது. முடிந்த அளவிற்கு மக்களை ஏற்றிக்கொண்டு செல்கிறது.

சற்று நேரம் கழித்து மலை உச்சியில் நின்றிருப்பவன் மீதியிருப்பவர்களைப் பார்த்துக் கத்துகிறான் : “அந்தப் படகின் பயணம் இன்னும் முடியவில்லை.  அதை நம்பிப் பயனில்லை. கொஞ்சம் சிரமப்பட்டால், பயத்தைவிட்டு முயற்சிசெய்தால், மலையின் மீது நீங்கள் எல்லோருமே ஏறிவிடலாம். இங்கே தின்பதற்குப் பழங்கள் ஏராளமாக இருக்கின்றன. பாதுகாப்பாகவும் இருக்கலாம்.”  ஆனால் மக்கள் யாரும் அதற்குத் தயாராயில்லை. உயரத்தில் இருந்ததால் அவனுக்குக் கிடைத்த விசாலமான பார்வை அதன் அனுகூலம் மற்றவர்களுக்கு வாய்க்கவில்லை. முடிவு.....

எந்த ஒன்று நமக்குத் தயக்கத்தையும்  பயத்தையும் கொடுக்கிறதோ அதைக் கடந்து வர முயற்சியும் பயிற்சியும் செய்யவேண்டும்.

தட்டுங்கள் திறக்கப்படும்; கேளுங்கள் கொடுக்கப்படும் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஏற்கெனவே இருக்கும் பாதையில் பயணம் செய்யச் சுகமாக இருக்கும்தான். ஆனால் கரடுமுரடான வேற்றுப் பாதையில் மேற்கொள்ளப்படும் பயணம் அதிகபட்ச பயன்களைக் கொடுக்கும்.

கடைசியாக ஒரு வார்த்தை...

வெற்றியாளர்கள் வித்தியாசமான காரியங்களைச் செய்வதில்லை. தாங்கள் செய்யும் காரியங்களை வித்தியாசமாகச் செய்கிறார்கள். அனைவரும் வெற்றிபெற வாழ்த்துகள்.

(கட்டுரையாளர் சிக்ஸ்த்சென்ஸ் நிறுவனப் பதிப்பாளர்)

ஜனவரி, 2016.