ரூ. ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்டம் என்ற போது இந்தியாவே திகைத்துப் போய் பார்த்தது. தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கியதில், இந்தத் தொகை நஷ்டம் என்பதுதான் சி.ஏ.ஜி அறிக்கை.
ஆனால் அதுவே ஊழல் செய்யப்பட்டத் தொகை என்ற காட்சியை பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கட்டமைத்தன. அதுவரை கேள்விப்படாத பிரம்மாண்ட தொகையாக இருந்தக் காரணத்தால், எல்லோருக்குமே குழப்பம், அதிர்ச்சி.
வழமையாக மத்திய அரசு புதிதாக அமையும் போது, பெரு நிறுவனங்கள் சில அமைச்சரகங்களைக் குறி வைத்துக் காய் நகர்த்தி, தங்களுக்கு வேண்டிய நபரை அமைச்சராக்க முயலும்.
அப்படி ஒரு முக்கிய இலாக்காவான தொலைத்தொடர்புத் துறையில், ஒரு மாநிலக் கட்சியின் பிரதிநிதி, குறிப்பாக திமுகவை சேந்தவர் அமர்வதைப் பெரு நிறுவனங்கள் விரும்பவில்லை.
அந்த பெரு நிறுவனங்களின் விருப்பத்திற்கு மாறாக, புதிய நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்க முடிவெடுத்தார் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா.
காலம் காலமாக பா.ஜ.க, காங்கிரஸ் அரசுகளால் வழங்கப்பட்ட முறைப்படிதான் அலைக்கற்றை வழங்குதல், ‘முதலில் வருவோர்க்கு முதலில்‘ என்ற அடிப்படையில் வழங்கப்பட்டது. புதிய நிறுவனங்கள் களமிறங்கி அலைக்கற்றை உரிமையைப் பெற்றார்கள்.
இதன் மூலம் குறிப்பிட்ட சில பெரு நிறுவனங்களின் ஏகாதிபத்தியம் அடித்து நொறுக்கப்பட்டது. அலைபேசி கட்டணங்கள் அதிரடியாகக் குறைந்தன.
பெரு நிறுவனங்கள் கூட்டமைப்பு இதனைத் தடுக்க பல்வேறு வழிகளைக் கையாண்டார்கள். அரசுக்கு மனு அளித்தார்கள். நீதிமன்றத்தை நாடினார்கள்.
இதற்கிடையில் 2009 பொதுத்தேர்தல் வந்தது. பெரு நிறுவனங்களின் எண்ணத்திற்கு மாறாக, காங்கிரஸ் கூட்டணி மீண்டும் மத்திய அரசைக் கைப்பற்றியது. அடுத்த முயற்சியாகத் தான் ஆ.ராசாவிற்கு அந்தத் துறை மீண்டும் போகாமல் முயற்சி எடுத்தார்கள். ஆனால் மீண்டும் தொலைத்தொடர்பு துறை அமைச்சரானார் ஆ.ராசா.
தேர்தலில் அடிபட்டிருந்த பா.ஜ.க சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தது. பெரு நிறுவனங்கள் கொடுத்த புகார் சி.ஏ.ஜி பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சி.ஏ.ஜி அறிக்கை தயாரானது. 1.76 லட்சம் கோடி நஷ்டம் என்றார் வினோத் ராய். பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டிய அறிக்கை, பா.ஜ.கவால் வெளியிடப்பட்டது. பா.ஜ.கவிடம் அறிக்கை கொடுத்தது யார் என்ற மர்மம் இன்னும் தீரவில்லை.
பல்வேறு பிரச்சினைகளை அந்த நேரத்தில் சந்தித்து வந்த காங்கிரஸுக்கு இது புதுப் பிரச்சினையாக வந்து சேர்ந்தது. பா.ஜ.க இதற்காகவே காத்திருந்தது போல் பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் முடக்கியது.
சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. உச்சநீதிமன்றம் இதில் அதிக அக்கறை காட்டியது. தன் நேரடி பார்வையில் வழக்கு இருக்கும், விசாரணை நடைபெற வேண்டும் என அறிவித்தது.
ஆ.ராசா அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகினார். சி.பி.ஐ விசாரணை மேற்கொண்டது. 2011 பிப்ரவரி 2ம் நாள் அவரை கைது செய்தார்கள். ஓராண்டு திகார் சிறை வாசம். உடன் கைதானோர் அத்தனை பேருக்கும் பிணை கிடைத்த பிறகே, தனக்குப் பிணை கேட்டார் ஆ.ராசா.
டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆறு ஆண்டுகள் வழக்கு தொடர்ந்து நடந்தது. ஆ.ராசா அமைச்சராக இருந்த போது, அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்காக எடுத்த ஒவ்வொரு நடவடிக்கையும் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், பிரதமர் அலுவலகம் என ஆலோசித்து, ஓப்புதல் பெற்றே செய்தார். ஆனால் அவர் யார் ஒப்புதலும் இல்லாமல் தன்னிச்சையாக அலைக்கற்றையை வழங்கியதாக, வழக்கைப் பதிவு செய்துள்ளனர். அத்தனைக்கும் லட்சக்கணக்கான பக்கங்கள் ஆதாரத்தை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளர் ராசா.
இதற்கெல்லாம் உச்சக்கட்டமாக ஒரு சம்பவம் நீதிமன்றத்தில் நடந்தது. வாதங்களை எல்லாம் முடித்த சி.பி.ஐ வழக்கறிஞர், ‘யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ அவர்களுக்கு வெற்றி கிட்டும்‘ என சொன்னார். அதற்கு ஆ.ராசா, ‘எனக்கு அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை கிடையாது. நான் பகுத்தறிவாளன். நேர்மையின் மீதும், திறமையின் மீதுமே நம்பிக்கை கொண்டவன். அதனை நம்பியே வழக்கை நடத்துகிறேன்’ என்று பதிலளித்தார். வழக்கில் வாய்தா கேட்க வேண்டிய குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா ஒரு நாளும் வாய்தா வாங்கவில்லை. குற்றம் சாட்டிய சி.பி.ஐயும் அதன் வழக்கறிஞர்களும் வாய்தா வாங்கினார்கள். இப்போது வழக்கின் இறுதிக் கட்டத்தில். தீர்ப்பு வரும், நிச்சயம் நியாயம் வெற்றி பெறும் !
நவம்பர், 2017.