சிறப்புக்கட்டுரைகள்

நாராயணரெட்டி - உலக அளவில் போர்னோகிராபி படங்களைப் பார்க்கும் சராசரி வயது 11

ஷங்கர ராம சுப்ரமணியன்

கணிப்பொறியின் முன்பு அமர்ந்து சமூக வலைத்தளங்களிலேயே நேரத்தை செலவிடுவதாலும், இணையங்களில் இருக்கும் பல்வகைப்பட்ட நீலப்படங்களை பார்ப்பதன் மூலமும் இன்றைய தலைமுறை தம்பதிகளிடையே உள்ள தாம்பத்ய உறவு பாதிக்கப்பட்டிருப்பதாக அண்மையில் சில ஆய்வுகள் வெளியிடப்பட்டுள்ளன? அது குறித்து...

இங்கே இரண்டுவிதமாக பிரச்னைகள் உள்ளன. இணையத்தில் வரும் நீலப்படங்களைப் பார்த்து அதிலேயே முழுநேரத்தையும் செலவழித்து, துணையுடன் உடலுறவு கொள்வதில் ஆர்வம் இல்லாமலேயே போய்விடுவது ஒன்று. இன்னொருவகையினர், நீலப்படங்களைப் பார்த்து அதில் செய்யப்படும் முறைகளை தானும் செய்யமுயன்று மனைவியை வற்புறுத்தி சங்கடத்துக்குள்ளாக்குகிறார்கள்.

ஒரு நீலப்படம் பார்த்து அதில் செய்யப்படுவதைப் போல முயற்சிப்பதில் தப்பு கிடையாது. ஆனால் அதில் ஈடுபட விருப்பமில்லாத நிலையில் துணையை வற்புறுத்துவது தான் தப்பு. பெண்களிடமும் பாலுறவு தொடர்பான பழக்கவழக்கங்கள் சார்ந்து பல மனத்தடைகளும், தவறான எண்ணப்போக்குகளும் உள்ளன. ஆணும்,பெண்ணும் ஈடுபடும் உடலுறவு என்பதில் தப்பு,சரி என்ற ஒன்றே முதலில் கிடையாது. இரண்டு பேரும் விரும்பி, நான்கு சுவர்களுக்குள், சந்தோஷமாக எதைச் செய்தாலும் தப்புகிடையாது. அங்கே பலாத்காரம் இருக்கக்கூடாது. அவ்வளவுதான். யாரும் அங்கே துன்புறுத்தப்படக் கூடாது.

இன்றைக்கு வேலைக்குச் சென்றுவிட்டு, வீட்டுக்கு வரும் ஆண்கள், உட்கார்ந்து சாவகாசமாக மனைவியுடன் பேசுவதில்லை. குழந்தைகளுடன் பேசி மகிழ்ச்சியாக இருக்கும் சூழலும் இல்லை. போனவுடன் கணினி முன்னால் உட்கார்வது தான் அதிக வீடுகளில் நடைமுறையில் உள்ளது. கிடைக்கிற ஓய்வுநேரம் முழுக்க கணினி முன்பு கழிக்கும் நிலைமை உள்ளது. சிலபேர் அலுவலகத்தில் கூட நேரம் கிடைத்தால் சோசியல் மீடியா மற்றும் போர்னோ தளங்களுக்குள் போய்விடுகிறார்கள். இம்மாதிரியான சூழ்நிலையில் சமூகவாழ்க்கையை அவர்கள் இழக்கிறார்கள். ஒருவகையில் அவர்கள் தங்கள் குடும்பத்துக்குப் போதிய கவனத்தைக் கொடுக்காமல் குடும்பவாழ்க்கையில் நிம்மதியை இழக்கின்றனர். அடுத்தது, படங்களில் பார்த்து அனுபவிக்கும் இன்பம் அதிகமாகி, மனைவியுடன் உடலுறவில் ஈடுபடுவதில் ஆர்வம் போய்விடுகிறது. மூன்றாவது கவனச்சிதைவு ஏற்பட்டு, அலுவலகம் மற்றும் தொழில்வாழ்க்கையிலும் ஆர்வம் குறைந்துவிடுகிறது. அதனால் தொழிலில் தவறுகள் ஏற்படும். வேலை பறிபோகும். சிலருக்கு இணையத்தில் வரும் பலவிதமான நீலப்படங்களை தொடர்ந்து பார்த்து கிளர்ச்சி மற்றும் விரைப்புத்தன்மையே குறைந்துவிடும் சூழ்நிலைகளும் ஏற்படுகின்றன. மது அடிமைத்தனத்தைப் போன்றது அது.

அத்துடன் இணையத்தில் வரும் இயல்பான உடலுறவுக் காட்சிகள் அவனுக்கு சலித்துப் போகும். விதவிதமான முறைகளில் பாலுறவுக் காட்சிகளை அவன் தேடிப்போகிறான். இயல்புக்கு மீறிய பாலுறவுச் செயல்பாடுகளில் ஈடுபடத் தொடங்குவான். வாய்வழிப் புணர்ச்சி, குதப்புணர்ச்சி என்று தொடங்கி ஒரு ஆண் இரண்டு பெண், கூட்டமாகப் புணர்வது, வன்முறையான பாலுறவுக் காட்சிகள் என எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே போகும். அதைப் பார்த்து திருப்தி அடைவது மட்டுமின்றி, அதை எதார்த்தத்திலும் செய்ய முயற்சிப்பார்கள்.

மது அருந்துபவர்கள் எல்லாரும் மதுவுக்கு அடிமையாவதில்லை. எப்போதாவது குடிப்பவர்கள் இன்றும் இருக்கவே செய்கிறார்கள். மரபணுவில் மதுவுக்கு அடிமையாகும் ஒரு குறைபாடு இருந்தால்தான் அது ஏற்படும். அதேப் போல பாலுறவுக் காட்சிகள் விஷயத்திலும் மூளையில் மிரர் நியூரான்கள் எனப்படுபவை தூண்டப்பட்டு விடும். அந்த நியூரான்கள் தூண்டப்படும் போது, பார்க்கும் காட்சிக்குள்ளேயே மெய்யாகவே போய்விடும் உணர்வு அவர்களுக்கு ஏற்படுகிறது. 

ஆதிகாலத்தில் இருந்து பாலுணர்வைத் தூண்டும் வெவ்வேறு விஷயங்கள் சமூகத்தில் புழக்கத்தில் இருக்கின்றன. தற்போது அது நவீன வடிவில் இணையம் வழியாகக் கிடைக்கிறது..இப்போதைய மாற்றங்களைப் பற்றி கூறுங்கள்..

இணையம் மூலம் காசு அதிகம் சம்பாதிப்பவை போர்னோகிராபி இணையத்தளங்கள் மட்டுமே. இதைத்தவிர எத்தனையோ வழிகளில் பயனுள்ள இணையத்தளங்கள் உள்ளன. ஆனால் அதை கட்டணம் கொடுத்து யாரும் உபயோகிக்க முன்வருவதில்லை.

உலகம் முழுக்க போர்னோகிராபி படங்களை அதிகமாக ஆண்கள் தான் பார்க்கின்றனர். காரணம் அவர்கள் மூளை அமைப்பில்தான் உள்ளது. ஆண் காட்சித் தூண்டுதலால்தான் செக்சுக்கு தூண்டப்படுகிறான். உணர்வு, பேச்சு, சிந்தனை, பழகுதல் வழியாகவே பெண் செக்சுக்குத் தூண்டப்படுபவள். உலகில் நீலப்படங்களை 72 சதவீதம் ஆண்களும், 28 சதவீதம் பெண்களும் பார்க்கின்றனர்.

இணையத்தைப் பயன்படுத்துபவர்களில் 42 சதவீதம் பேர் இதுபோன்ற இணையத்தளங்களைப் பயன்படுத்துபவர்கள். இணையத்தைப் பயன்படுத்தும் பெண்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள்தான் போர்னோகிராபி இணையத் தளங்களைப் பார்க்கிறார்கள். வீடுகள் தொடங்கி இன்டர்நெட் பார்லர் வரை பல இடங்களில் இந்தப் படங்களைப் பார்க்கமுடிகிறது. சின்னக் குழந்தைகள் கூட இப்படங்களைப் பார்க்கும் வாய்ப்புகள் உள்ளன. உலக அளவில் போர்னோகிராபி படங்களைப் பார்க்கத் தொடங்கும் சராசரி வயதாக 11 உள்ளது.

உலகில் போர்னோகிராபி வலைத்தளங்கள் சம்பாதிக்கும் வருவாய் என்பது மைக்ரோசாப்ட், கூகுள், இபே, ஆப்பிள் ஆகிய நிறுவனங்களை விட அதிகம். அமெரிக்காவில் மட்டும் இத்தளங்களுக்குள் சென்று படங்களைப் பார்க்க ஆண்டுதோறும் 15 பில்லியன் டாலர்கள் செலவழிக்கிறார்கள். லாஸ் ஏஞ்சல்சில்தான் தொழில்முறை நீலப்படத் தயாரிப்புகள் நடக்கின்றன. ஆண்டுதோறும் 10 ஆயிரம் படங்கள் வெளியாகின்றன.

தொழில்முறையாக போர்னோகிராபி ஒரு துறையாக உள்ளது. ஆனால் எம்எம்எஸ் ஸ்கேன்டல்ஸ் என்று மெய்காட்சிகளைப் பார்ப்பதும், படம் எடுப்பதும், இந்தியாவிலேயே அதிகரித்திருக்கிறது. அந்தப் படங்களுக்கு வரவேற்பும் அதிகமாக உள்ளது..வீடுகளுக்குள் நடக்கும் உடலுறவுக் காட்சிகளே மனத்தடை இல்லாமல் இணையத்தில் பெருகுகின்றன. இந்தியாவில் பெருகியிருக்கும் தகவல்தொழில் நுட்ப வசதிகள், பாலியல் பழக்கவழக்கங்களில் பெரும்மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதா?

மக்களுடைய அணுகுமுறை மாறியுள்ளது. தப்பு, சரி என்று இதைப் பார்க்கவில்லை. ஆனால் எதிர்மறையான அம்சமாகவே பார்க்கிறேன். எந்த புதிய கண்டுபிடிப்பையும் நல்லவிதமாகப் பயன்படுத்தாமல் அதைத் தவறானதற்கு பயன்படுத்தும் போக்குதான் இது. சாட்டிலைட் தொலைக்காட்சிகளின் வருகைக்குப் பிறகு, தங்களைப் படமெடுத்துப் பார்ப்பதில் அதீத ஈடுபாடு ஏற்பட்டுள்ளது. குக்கிராமங்களில் கூட எல்லாரும் தொலைக்காட்சியில் முகம்காட்ட ஆசைப் படுகின்றனர். ஒரு திருமண நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டால், மகள் அல்லது மகனுக்கு நடக்கும் திருமணத்தில் கூட விருந்தினர்களை வரவேற்பதில் கவனம் செலுத்தாமல் வீடியோ, புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதற்குதான் பெற்றோர்கள் அதிக கவனம் கொடுக்கும் நிலைமை உள்ளது. பெரிது பெரிதாக செல்போன்கள் வந்து, வீடியோ காமிராக்களின் தேவையை இல்லாமல் ஆக்கி விட்டன. அதனால் அவன் படுக்கை அறையிலேயே வீடியோ எடுக்கத் தொடங்கிவிடுகிறான். புதிது புதிதாக செய்து பார்க்கிறார்கள். அதன்மூலம் பெரிதாக லிபரேட் ஆன உணர்வை அடைகின்றனர். தாங்கள் எடுக்கும் காட்சிகள் தங்களுக்கே எதிரானவை என்று அவர்களுக்குத் தெரிவதில்லை.

பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் எல்லா புகைப்படங்களையும் அன்றன்றைக்கே ஏற்றிவிடுகின்றனர். என்னிடம் ஒரு தம்பதி வந்தார்கள். ஒரு நாள் காலையில் அவர்களுக்குள் சண்டை. கணவன் அலுவலகம் கிளம்பிப் போகிறான். அவன் போய் சேருவதற்குள் மனைவி பேஸ்புக்கில் தங்கள் சண்டை பற்றி தகவல் இட்டுவிடுகிறாள். அவன் ஆபிஸ் போய் சேருவதற்குள் அதை அவனது நண்பர்கள் பார்த்து கிண்டல் செய்யும் நிலைக்கு போய்விட்டது. அவனுக்கும், அவளுக்கும் தகராறு முற்றிவிட்டது. ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு சில சௌகரியங்களைக் கொடுக்கிறது. அந்த சௌகரியங்களை தவறாகப் பயன்படுத்தி சிக்கல்களை ஏற்படுத்தும் போக்குகள் தான் அதிகம் இருக்கின்றன. எப்போதுமே புதிதுபுதிதாக ஒன்றைச் செய்துபார்ப்பதில் மலிவான சாகச மகிழ்ச்சி இருக்கும். அதற்குத்தான் இவர்கள் அதிகம் பலியாகின்றனர்.

படைப்பு செயல்பாட்டுக்கான பவித்திரமான காரியமாக செக்ஸ் அக்காலத்தில் கருதப்பட்டது. இப்போது தொழில்நுட்பம் மாறி, சிற்பங்கள், ஓவியங்களின் இடத்தை படச்சுருள்கள் தொடங்கி டிஜிட்டல் வடிவங்கள் மாற்றிவிட்டன. பெண்களும் போர்னோகிராபி துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ப்ளேபாய் இதழின் நிறுவனர் ஹியூக் ஹெப்னர். இன்று அவரது மகள், கிறிஸ்டி ஹெப்னர்தான் அந்தப் பத்திரிகையை தொடர்ந்து நடத்துபவர். அதனால் போர்னோகிராபியின் வடிவங்கள்தான் மாறியிருக்கிறதே தவிர உள்ளடக்கம் மாறவில்லை. இன்று எளிதாக எல்லாருக்கும் கிடைக்கிறது என்பதே மாறுதல்.

போர்னோகிராபியின் சாதகமான அம்சங்களைப் பற்றி கூறுங்கள்..

நமது நாட்டில் ஜனன உறுப்பை எப்படிப் பயன்படுத்துவது, எப்படி செக்ஸ் வைத்துக் கொள்வது என்று தெரியாத நிறைய பேர் இருக்கிறார்கள். கல்யாணம் ஆகி, ஆறு மாதங்கள் ஆனபிறகும், முழுமையாக உடலுறவு வைத்துக்கொள்ளாதவர்கள் இருக்கின்றனர். கல்யாணம் ஆனவர்களில் 30 சதவீதம் பேருக்கு உடலுறவு எப்படி வைத்துக்கொள்வது என்று தெரியாதவர்கள். இதைக் கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இதுதான் உண்மை. அதுபோன்ற நிலைமையில் வரும் தம்பதிகளுக்கு என்னதான் வரைபடங்களைப் போட்டுக் காண்பித்தாலும், வார்த்தைகள் வழியாகச் சொன்னாலும் புரியாது. திரைப்படம் வழியான விளைவு வேறு. ஆனால் மருத்துவர்கள் யாரும் அதைச்செய்ய விதி இல்லை. நாங்கள் அதைக் காண்பிக்க கூடாது. அவர்களுக்கு நிச்சயமாக நீலப்படங்கள் தேவை. ஒரு ஆண் பெண்ணைத் தூண்டிவிடுவதற்கும், பெண் ஆணைத் தூண்டுவதற்கும் என்னென்ன செய்யலாம் என்பதை அவை கற்றுத்தருகின்றன. அவர்கள் இருவரும் சந்தோஷத்தை அடைவதற்கு இது ஒரு வழிமுறைதான்.

இன்னொரு நன்மையையும் சொல்கிறேன். எந்த தம்பதிகளாக இருந்தாலும் சரி, எவ்வளவு மனமொத்த லட்சியத் தம்பதிகளுக்கும் வாழ்வின் ஒருகட்டத்தில் பாலுறவுரீதியான அலுப்பு(போர்டம்) என்பது ஒரு காலகட்டத்தில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இதற்கு இல்லை. ஒரு கணவர் அல்லது ஒரு மனைவியுடன் மட்டுமே தனது உடலுறவு வாழ்க்கையைப் பேணுபவர்களுக்கு ஒரு காலகட்டத்தில் அலுப்பு ஏற்படுவது இயல்புதான். அந்த அலுப்பை அவர்கள் தாண்டுவதற்கு, தங்கள் உடலுறவில் சில புதியவைகளை முயற்சிப்பதற்கு நீலப்படங்கள் உதவுகின்றன.  இதுதான் காமசூத்ராவில் சொல்லப் பட்டுள்ளது. இதை அக்காலத்தில் நாட்டுப்புறப் பாடல்கள் செய்தன. பெண்கள் சேர்ந்து வயலில் வேலை செய்யும்போது, வீட்டுவேலைகளில் ஈடுபடும்போது அவளைத் தூண்டும் பாடல்கள் இருந்தன.

ஆனால் அந்தப் படங்களில் செய்யப்படுபவை அனைத்தையும் நடைமுறையில், நிஜவாழ்க்கையில் செய்யமுடியாது என்பதை பார்ப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சில செயல்கள் மட்டும்தான் சாத்தியம். நமக்குத் தேவையானதை மட்டும் சாதகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்படியான வகையில் ஒருநிலை வரை நீலப்படங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியவைதான். ஒரு கத்தி இருக்கிறது. அதை பழத்தை வெட்டப் பயன்படுத்தலாம். மனிதனைக் கொல்வதற்கும் பயன்படுத்தலாம்.

உலகத்தில் எந்த நாட்டு அரசும் இணையத்தை தடை செய்யமுடியாது. செக்ஸ் தொடர்பான போதுமான கல்வியையும் வழங்குவதன் மூலமே இதன் தீயவிளைவுகளை பார்வையாளர்களே புரிந்துகொண்டு தவிர்க்கும் நிலையை ஏற்படுத்த முடியும். பொதுவான பொழுதுபோக்காக நீலப்படங்களைப் பார்ப்பதால் எந்தப் பிரச்னையும் இல்லை என்றே ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஜனங்களின் மனதில் உள்ள கற்பனை ஆசைக்கான வடிகாலாகவே இவை திகழ்கின்றன. பாலுறவு உள்ளடக்கம் கொண்ட படங்களைப் பார்க்கும்போது, உடலில் வேதிமாற்றங்கள் நடக்கின்றன. அவனை செக்சுக்குத் தூண்டிவிடுகின்றன. அதன்மூலம் அவன் சுய இன்பம் செய்கிறான். மனைவி இருக்கும் நிலையில் அவருடன் உடலுறவு கொள்ளத் தூண்டப்படுகிறான். அல்லது பணம் கொடுத்து ஒரு பாலியல் தொழிலாளியை நாடுகிறான். ஆனால் ஒரு பாலியல் குற்றத்திற்கு அவன் தூண்டப்படுவதில்லை என்றே அறிவியல் ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அது அசாதாரண இயல்பு. போர்னோகிராபிக்கு அடிமையாகும் நிலையில்தான் குற்றங்களுக்கான வாய்ப்புகள் உள்ளன. அது கடைசிக்கட்டமே. 

மே, 2013.