சிறப்புக்கட்டுரைகள்

நான் வேணும்னா படிச்சு ஒரு டாக்டராகவோ, வக்கீலாவோ ஆயிடட்டுமா?

இரா. கௌதமன்

கு ஷி படத்தில், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தொடக்கத்திலேயே அதிரடியாக ‘‘இவர்தான் நாயகன், இவங்கதான் நாயகி, இவங்க ரெண்டுபேரும் எப்படிச் சேர்ந்தாங்கன்னு இந்தப் படத்தில் பாக்கப்போறோம்!'' என்று சொல்லியிருப்பார். ‘பொதுவாக காதல் படங்களின் ஒருவரிக் கதை இதுதான். ஆனால்,  என்னுடைய திரைக்கதையால் உங்களை இரண்டரை மணி நேரம் திரையரங்கில் உட்கார வைக்க முடியும்!' என்ற இயக்குநரின் சவால் இது!

விளையாட்டை மையமாக வைத்துப் படம் எடுக்க நினைப்பவர்களுக்கு முன்னாலுள்ள சவாலும் இது மாதிரியானதுதான். நாயகன் அல்லது அவருடைய அணி, அரசியல், போட்டியாளர்களால் ஏற்படுத்தப்படும் பிரச்னையை எதிர்கொண்டு, அதை முறியடித்து இறுதிக் காட்சியில் முதல் பாதி ஆட்டத்தில் சரிந்து, பின்னர் நாயகனின் உணர்ச்சிகரமான வசனத்திற்குப் பிறகு வெற்றி பெறவேண்டும். இதில் தேவையான அளவு குடும்பம், காதல், நகைச்சுவை சென்டிமென்ட்டை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், ஆதாரப் புள்ளியிலிருந்து விலகிச் செல்ல முடியாது. இந்த வட்டத்திற்குள் சிறப்பாக ஆடிய, சொதப்பிய தமிழ்ப் படங்களைக் கொஞ்சம் பார்க்கலாம்.

தொண்ணூறுகளில் திரைப்படக் கல்லூரி மாணவர்களின் வருகை தமிழ் சினிமாவில் குறிப்பிடத் தக்க மாற்றத்தை உருவாக்கியிருந்தது. இங்கிருந்து வந்த இயக்குநர் எம்.தியாகராஜன், குத்துச்சண்டை வீரனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, ‘வெற்றி மேல் வெற்றி' திரைப்படத்தைக் கொடுத்தார். தெருச் சண்டைக்காரனாக இருக்கும் பிரபு, குத்துச்சண்டை வீரனாக ஆசைப்பட்டு, பயிற்சியாளர் தாராசிங்கிடம் வருகிறார்.

தாராசிங்குக்கும், இந்த விளையாட்டைப் பணம் கொழிக்கும் சூதாட்டமாக மாற்றிய நாசருக்கும் ஏற்கெனவே பகை. பிரபு மூலமாக நாசரை வெற்றி கொள்கிறார், தாராசிங். இதற்கிடையில் பிரபு குடும்பத்தில் நாசர் குழப்பம் விளைவிக்க, உறவுகள் பிரிகிறது. இறுதி சண்டைக் காட்சியில் பிரபு வெல்ல, குடும்பமும் ஒன்றிணைகிறது. வழக்கமான தமிழ் சினிமா குடும்பக் கதையில் குத்துச் சண்டையைப் பொருத்தி எடுக்கப்பட்ட படம். சரியாகப் போகவில்லை.

விஜய்யின் ஆரம்பகால படமான  ‘மாண்புமிகு மாணவன்', கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான குத்துச்சண்டைப் போட்டியில்தான் ஆரம்பிக்கும். தமிழில், ‘பாக்சிங்' பற்றிய படத்திற்கும் ‘கிக் பாக்சிங்' பற்றிய படத்திற்குமான குழப்பம் நிறையவே உண்டு.

இதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு குத்துச்சண்டைப் படமான பத்ரி (2001) தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்தது. (‘தம்புடு' தெலுங்குப் படம், ‘ஜோ ஜீத்தா ஓ சிக்கந்தர்' என்ற இந்திப் படத்தின் தழுவல் என காதைக் கடிக்கிறார், சினிமா நண்பர்). சினிமா இலக்கணப்படி, தண்டமாக ஊர்சுற்றிக் கொண்டிருக்கும் விஜய், அண்ணனின் காலை உடைத்து போட்டியில் பங்கேற்க முடியாமல் செய்த வில்லனைப் பழிவாங்க, குத்துச்சண்டை வீரனாக ஆக முடிவெடுக்கிறார். கராத்தே ஹுசைனியின் கடுமையான (!) பயிற்சியில், ஆறே மாதத்தில் தயாராகி போட்டியில் வெல்வதுதான், பத்ரி. ‘எப்படிப்பா ஆறே மாசத்துல?' என்ற லாஜிக் கேள்வியெல்லாம் கேட்காமல் வெற்றி பெற்றது. விஜய் பயிற்சி எடுக்கும், ‘டிராவலிங் சோல்ஜர்' பாடல் இன்றைக்கும் புத்துணர்ச்சி கொடுக்கும் படத்தொகுப்பு.

விஜய்யின் கில்லி(2004), தெலுங்கு ‘ஒக்கடு'வின் தமிழ்ப் பதிப்பு. ஆனால், இயக்குநர் தரணி சில மாற்றங்களைச் சிறப்பாகச் செய்திருந்தார்.

‘ஒக்கடு'வில், மகேஷ்பாபுவின் அப்பா, மகனின் விளையாட்டு ஆர்வத்தை ஆதரிப்பார். தமிழ் கில்லியில், மகன் விஜய் கபடி விளையாடுவது அவர் அப்பாவிற்குப் பிடிக்காது. இன்று வரைக்கும் விஜய்யின் சிறந்த படமாக அவரின் ரசிகர்கள் கொண்டாடும் படம் இது. விளையாட்டு தொடர்பான படங்களில் அதிகம் நடித்த மாஸ் ஹீரோவாக விஜய்யைச் சொல்லலாம். கில்லி படம் வெளியாகி 15 வருடங்கள் ஆன பிறகும்

‘‘ செமி ஃபைனலில்' தோற்ற அணி எப்படிய்யா  ‘ஃபைனலுக்கு' போச்சு!?'' என்று, இன்னமும் சமூக வலைதளங்களில் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஜெயம் ரவியின் எம்.குமரன் ண்/ணி மகாலட்சுமி (2004) படமும் தெலுங்கு மறுபதிப்புதான். குடும்பத்திலிருந்து பிரிந்த அப்பாவை மகன் புரிந்துகொண்டு, அவரையே பயிற்சியாளராகக் கொண்டு ஜெயிக்கும் குடும்ப சென்டிமென்ட் கலந்த குத்துச்சண்டை படம். ஜெயம் ரவியின் போட்டிக் காட்சிகள், நம்பும்படியாக இருந்தன. 

நகைச்சுவைப் படத்தில் குத்துச் சண்டையை ஊறுகாயாக வைத்த ‘மான் கராத்தே'(2014) படம், இந்த வகையில் சேர்த்தியா என்று தெரியவில்லை. கடைசிவரை போட்டிக்கு சிவகார்த்திகேயன் தயாராகவே மாட்டார். ஆனால் இறுதிக் காட்சியில் போட்டியாளர் வில்லனாக மாறி சிவாவின் காதலியை தவறாகப் பேச, வீறுகொண்டு எழும் நாயகன், போட்டியில் வெற்றி கொள்வார். ‘பத்ரி', ‘மான் கராத்தே' போன்ற படங்களில், பல வருடங்களாகப் பயிற்சி பெற்ற திறமையான போட்டியாளரை, திடீரென நாயகன் ஜெயிக்கும் காட்சிகளைப் பார்க்கும்போது நமக்கு நினைவில் வருவது, ‘தாய்மாமன்' படத்தில் சத்யராஜ், கவுண்டமணி வசனம்தான். படிக்காத சத்யராஜை மீனா உதாசீனப்படுத்திவிட, பாரில் சரக்கடித்துக் கொண்டு சத்யராஜ் சிரிக்காமல் கேட்பார், ‘‘நான் வேணும்னா படிச்சு ஒரு டாக்டராவோ, வக்கீலாவோ ஆயிடட்டுமா..?'' பதிலுக்கு கவுண்டமணியின் ‘‘அதென்ன மாப்ளே வெக்கப்படாம கேட்டுப்புட்ட?'' என்பார். இந்த வசனம், இது போன்ற படங்களைப் பார்த்துதான் வந்ததோ என்னவோ!

சமீபத்தில் இயக்குநர் வெற்றிமாறன், புகைப் பழக்கத்துடனான தனது போராட்டத்தைப் பற்றிக் கூறியிருந்த பதிவில், ‘‘ஒருமுறை சத்யஜித்ரேயிடம்,  ‘நல்ல இயக்குநர் ஆக என்ன தகுதி வேண்டும்?' எனக் கேட்கப்பட்டது. ஒரே இடத்தில் எட்டு மணி நேரம் உங்களால் நிற்க முடியுமானால், மற்ற தகுதிகள் எல்லாம் தானாகவே வந்துவிடும்' என்று அவர் சொன்னதாக, பாலுமகேந்திரா சார் அடிக்கடி சொல்வார்!'' என்று சொல்லியிருந்தார். ஒரு சினிமா இயக்குநருக்கே உடல்வலு என்பது இத்தனை முக்கியமாக இருக்கும்போது, உடலையே மூலதனமாக வைத்திருக்கும் விளையாட்டு வீரனுக்கு அது எவ்வளவு முக்கியம்? ஆனால், தமிழ் சினிமாக்களில் மட்டும் விளையாட்டு வீரனாக வரும் நாயகன் புகைப்பதும்,குடிப்பதும் சர்வ சாதாரணமாக வைக்கப்படுகிறது. (இதையும் கொஞ்சம் மனசுல வையுங்க இயக்குநர்களே!)

கதைக்காக விளையாட்டைத் தொட்டுக்கொண்ட இந்தப் படங்களுக்குப் பிறகு, உண்மையாகவே குத்துச்சண்டை வீரர்களின் வாழ்க்கை, வலி, போராட்டங்களைப் பேசும் படங்களாக, ‘பூலோகம்'(2015), இறுதிச் சுற்று (2016) ஆகிய படங்கள் வந்தன.

வடசென்னையை மையமாகக் கொண்ட ‘பூலோகம்' படம், இரும்பு மனிதர் மற்றும் நாட்டுமருந்து வாத்தியார் பரம்பரை என்ற பரம வைரிகளின் போட்டியில் தொடங்குகிறது. விளையாட்டுப் போட்டிகளின் அரசியலை எஸ்.பி.ஜனநாதன் சிறப்பாக வசனமாக்கி யிருந்தார். வடசென்னை மண்ணின் மணத்துடன் மசானக் கொள்ளை, உணவு முறை என்று அவர்களின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்திருந்தது, இந்தப் படம். ஜெயம் ரவி உடம்பை ஏற்றி நிஜ வீரராகவே சண்டையில் தெரிந்தார்.

சுதா கொங்கராவின்'இறுதிச் சுற்று'(2016), பெண்களின் குத்துச்சண்டைப் போட்டியைப் பற்றிய பதிவு. நாயகியான ரித்திகாசிங், நிஜமாகவே குத்துச்சண்டை வீரர் என்பதோடு அழகாகவும் நடித்திருந்தார். உலகக் குத்துச் சண்டைப் போட்டிகளில் இந்தியப் பெண்கள் அணி பங்கேற்ற ஐந்தே ஆண்டுகளில் பட்டம் வென்றதை பல உண்மைக் கதைகளின் தொகுப்பாக அளித்திருந்தார், இயக்குநர். படத்திற்காகத் தன்னை முற்றிலும் மாற்றிக் கொண்ட மாதவன், சண்டையின் நுணுக்கங்கள் என்று முழுமையான குத்துச் சண்டைப் படமாக வந்திருந்தது இறுதிச் சுற்று.

கூடைப்பந்துப் போட்டிகளை அரிதாகத்தான் தமிழ் சினிமாவில் பார்க்க முடியும். ‘பட்டணத்தில் பூதம்' படத்தில் ஜெய்சங்கர், நாகேஷ் விளையாடும் போட்டியில் ஜீபூம்பா பூதம்,  மந்திர வித்தை காட்டி இவர்களை வெற்றிபெற வைப்பார். ஏறக்குறைய பத்து நிமிடத்திற்கு மேல் வரும் காட்சி அது. இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளுக்கு மட்டும்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது என்ற மற்ற விளையாட்டு வீரர்களின் மனக்குமுறலை பதிவு செய்யும் விதமாக, இயக்குநர் அறிவழகன், ‘வல்லினம்' (2014) படத்தை இயக்கியிருந்தார். கல்லூரி மோதலில் கிரிக்கெட்டா, கூடைப்பந்தா என்ற சவாலில் நாயகன் நகுலின் அணி கூடைப்பந்து போட்டியைத் தேர்வு செய்து வெல்வது கதை. சிறந்த எடிட்டிங்கிற்காக தேசிய விருது பெற்றது. இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் வெளியான இந்தப் படம், வசூல் ரீதியாக வெற்றியடையவில்லை.

தமிழில் விளையாட்டு தொடர்பான படங்களை அதிகம் எடுத்தவர், இயக்குநர் சுசீந்திரன். (நேர்காணல் பார்க்க பக்.72) இவர், தனது அப்பா கபடிக் குழு நடத்தியதால் ஏற்பட்ட அனுபவத்தில் இயக்கிய முதல் படமான  ‘வெண்ணிலா கபடிக்குழு' 2009&ல் வந்தது. கிராமத்து உள்ளூர் கபடிக்குழு, முயற்சிகளாலும் பயிற்சிகளாலும் தடைகள் பல கடந்து மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறுகிறது என்ற கதையை, நகைச்சுவை இழையோட உணர்வுப்பூர்வமாகச் சொன்ன படம். சுசீந்திரனின் படங்களில், அவர் அழுத்தமாகச் சொல்ல நினைக்கும் சாதிப் பாகுபாடும் படத்தோடு இணைந்து வரும். கிரிக்கெட்டில் உட்புகுந்து விளையாடும் அரசியலைச் சொன்ன, ‘ஜீவா' (2014) படமும் நேர்த்தியாகச் சொல்லப்பட்டிருந்தது. நாயகர்கள் விஷ்ணுவும், லட்சுமணனும் உண்மையிலேயே கிரிக்கெட் வீரர்கள் என்பது, படத்தின் பலமாக அமைந்தது. வாய்ப்பு மறுக்கப்பட்ட லட்சுமணன் தற்கொலை செய்துகொள்ள, கிரிக்கெட்டே வேண்டாம் என முடிவெடுக்கும் விஷ்ணுவிற்கு ஐ.பி.எல். புதிய வாசலைத் திறப்பதாக படத்தை முடித்திருப்பார், சுசீந்திரன்.

ஏறக்குறைய இதே கதைக்களத்தில் பயணித்த இன்னொரு படம், பிரபுசாலமன் இயக்கத்தில் சிபிராஜ் நடித்த, ‘லீ' (2007). கால்பந்தையே வாழ்க்கையாக நினைக்கும் கல்லூரி மாணவர்கள். அவர்களின் பயிற்சியாளராக பிரகாஷ் ராஜ். கல்லூரிப் பிரச்னையில் மாணவர்களை வில்லன் வெளியேற்ற, நண்பனின் தற்கொலையால் பழிவாங்கக் கிளம்புகிறார்கள். ‘லீ' படத்தில் பிரச்னைக்கு பதிலடியாக பழிவாங்குவதுபோல் காட்டப்பட்டிருந்ததை, ‘ஜீவா' படத்தில் மற்றொரு வாய்ப்பு திறப்பதாக சுசீந்திரன் மாற்றியிருந்தார்.

சுசீந்திரனின் விளையாட்டு சார்ந்த அடுத்த படம், ‘கென்னடி கிளப்'(2019). ஒட்டன்சத்திரம் பெண்கள் கபடிக்குழுவின் பயிற்சியாளர், பாரதிராஜா. அவரது மாணவர் சசிக்குமார், பெண்கள் கபடிக்குழுவை தேசிய அளவில் வெற்றி பெற வைப்பது கதை. கபடி வீராங்கனைகளாக நடித்த அத்தனை பெண்களும் நிஜமான கபடியாளர்கள் என்பது படத்தின் சிறப்பு. படத்தின் முதல் காட்சியிலேயே விளையாட்டின் விதிமுறைகளைச் சொல்லி ஆரம்பித்து பரபரப்பாக நகரும். ஆனால் ஒட்டன்சத்திரம் அணியும் அதன் பயிற்சியாளருமே தமிழக அணியாகச் செல்வது, அதீத சென்ட்டிமென்ட் காட்சிகள் என்று படம்

சறுக்கியிருந்தது.

சுசீந்திரனின் சமீபத்திய விளையாட்டுப் படம்,

‘சாம்பியன்' ( 2019). வடசென்னை இளைஞர்களின் கால்பந்து ஆர்வத்தைப் பற்றிய படம். இளம் வீரர்களை குற்றச் செயலுக்குப் பயன்படுத்துவது, கதைக்களம். வீரர்கள் கவனம் சிதறக்கூடாது என்பதைச் சொன்னது இந்தப் படம்.

விஜய்யின் ‘பிகில்' (2019), பெண்கள் கால்பந்துப் போட்டியுடன் பெண்மையைப் போற்றுவதாக வந்தது. பெரிய நாயகர்கள் இதுபோன்ற கதைக்களனைத் தேர்ந்தெடுப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால், நாயகன் கடந்த காலத்தில் அவ்வளவு பெரிய வீரனாக இருந்தது, அந்த விளையாட்டை நேசிப்பவர்களுக்குக் கூடவா தெரியாது? அதைக் கூட விடுங்கள்.. கால்பந்து சம்மேளனத்திலிருந்து வரும் அந்தப் பழம் தின்று கொட்டை போட்ட தாத்தாவிற்குமா தெரியாது? படத்தின் போட்டிக் காட்சிகள், ‘வீடியோ கேம்' காட்சிகளைப் போல இருந்தது, சுவாரஸ்யத்தை வெகுவாகக் குறைத்துவிட்டது. படத்தில் யோகிபாபுவின் நகைச்சுவையை விஞ்சுவது, போட்டியில் கலந்துகொள்ள அக்ரஹாரத்திலிருந்து கிளம்பும்போதே அந்தப் பெண் ஷார்ட்ஸ், ஜெர்சி சகிதமாகக் கிளம்பும் காட்சி! உங்க கடமை

உணர்ச்சிக்கு அளவே இல்லையா அட்லி சார்..!

கதிர் நடித்த ‘ஜடா' (2019) படமும் கால்பந்துக் கதைதான். ‘செவன்ஸ்' எனப்படும் விதிமுறைகளற்ற கால்பந்து பற்றிய படத்தில் பேய்க் கதையை இடையில் செருகி.. எவ்வித ஈர்ப்பையும் உண்டாக்காமல் போனது.

இந்திய தேசிய விளையாட்டான ஹாக்கியைப் பற்றி தமிழில் படமே இல்லையா? என்ற ஆதங்கத்திற்கு பதில் சொல்ல வந்தது, ஆதியின் ‘நட்பே துணை' (2019). ஹாக்கி மட்டும்தான் புதுசு. மற்றபடி நண்பனின் தற்கொலையால் விளையாட்டை உதறும் நாயகன், மைதானத்தைக் காப்பாற்ற மீண்டும் களத்தில் இறங்கும் அதே பழைய கதைதான். ஜூனியர் ஹாக்கியை வென்று தந்த ஆதியை வழக்கம்போல யாருக்கும் தெரியாது.

ஓட்டப் பந்தயத்தைப் பற்றி ‘எதிர்நீச்சல்'(2013), ‘ஈட்டி'(2015) ஆகிய இரண்டு படங்கள் வந்திருக்கின்றன. எதிர்நீச்சல் படத்தில் தமிழக வீராங்கனை கதையை சாதுர்யமாக நுழைத்திருப்பார், இயக்குநர். ரசிகர்களுக்கு உத்வேகத்தைத் தரக்கூடிய அளவில் நன்றாக வந்திருந்தது அந்தப் படம். ஈட்டி படத்தில் அதர்வாவின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. ஆனால் படம் பாதியில் விளையாட்டை விட்டு வேறு திசைக்கு நகர்ந்து, கடைசியில் நாயகனின் சாகசப் படமாக முடிந்துவிட்டது.

இந்த வகைமையில் ஜி.என்.ஆர்.குமரவேலின் ‘ஹரிதாஸ்' (2013) முக்கியமான படம். ஆட்டிசத் தினால் பாதிக்கப்பட்ட மகனின் விருப்பம், ஓடுவதுதான் என்பதை அறிந்துகொண்ட கிஷோர், அவனை மாரத்தான் வீரனாக்குவது படத்தின் உபகதை. காவல்துறை அதிகாரி கிஷோர், சமூக விரோதிகளுடன் அவரது போராட்டம் என்ற கதையில், ஆட்டிசம் பாதித்த குழந்தையின் விளையாட்டு ஆர்வத்தை சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருந்தார், இயக்குநர்.

இந்தியாவில் கிரிக்கெட் என்பது மதம்; விளையாட்டல்ல. அப்படிப்பட்ட விளையாட்டைப் பற்றி தமிழில் படங்கள் வராமலா இருக்கும்..! ‘தேனிலவு' (1961) படத்தின் முதல் காட்சியே கிரிக்கெட் போட்டிதான். அங்குதான் ஜெமினி கணேசன், வைஜெயந்திமாலாவை சந்தித்து காதல் கொள்வார். இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக படங்களில் வந்த  கிரிக்கெட்டை, முழுமையாக

‘சென்னை -28' (2007) படத்தில் வீதியோர கிரிக்கெட்டை வைத்து அந்த இளைஞர்களின் வாழ்க்கையை நகைச்சுவை கலந்து சிறப்பாக அளித்திருந்தார், வெங்கட்பிரபு. இந்தியாவின் எந்தப் புள்ளியிலும் இப்படி ஒரு கதை உண்டு, ஆனால் அதைத் திரையில் கொண்டுவந்த விதம், அருமையாக இருந்தது. மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் வந்த ‘1983' படம், வீதியோர கிரிக்கெட் ஆடுபவனின் வாழ்க்கையைப் பற்றிய சிறப்பான படம்.

மாமன் மகளுக்காக, இரண்டு கிராமங்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி. அதற்குப் பயிற்சியாளராக சடகோபன் ரமேஷ் என்று, நகைச்சுவை கிரிக்கெட் படமாக ‘போட்டா போட்டி'(2011) வந்தது. ‘லகான்' படத்தின் பாதிப்பில், அதே போல கிராமத்து ஆட்களைத் தயார் செய்து விளையாட வைக்கும் இந்தப் படத்தை நகைச்சுவைக் காட்சிகளுக்காகப் பார்க்கலாம். பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் வந்த ‘தோனி' (2012) படம், குழந்தைகளை அவர்களின் விருப்பத்திற்கேற்ப வளருங்கள் என்ற அறிவுரையுடன் வந்த குடும்ப உணர்ச்சிகர திரைப்படம். கிரிக்கெட் காட்சிகள் கொஞ்சமாகவே வரும்.

கீர்த்தி சுரேஷ் அறிமுகமான, ‘இது என்ன மாயம்'(2015) படத்தில், கிரிக்கெட் வீரரான விக்ரம் பிரபு, கல்லூரி ஹாக்கி போட்டியில் திடீரென நுழைந்து கிரிக்கெட் ஆடுவது போல ஹாக்கி விளையாடி ஜெயிப்பார். இம்மாதிரியான நகைச்சுவைக் காட்சிகள் தமிழில் நிறைய உள்ளன.

மகளிர் கிரிக்கெட்டைப் பற்றிய ‘கனா' (2018), அருண்ராஜ் காமராஜின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கிரிக்கெட்டையும் விவசாயத்தையும் இணைத்து வந்த படம். வழக்கமான கிரிக்கெட் படத்தில் விவசாயியின் பிரச்னையையும் பேசியது, புத்திசாலித்தனம். அதேபோல, ‘பௌன்சரு'க்கு ‘ஃபீல்டர்'களை நிறுத்திவிட்டு ‘யார்க்கர்' போடுவது, ‘ஆஃப் சைட் போடாதே!' என்று இந்தியில் சொல்வதன் மூலம் மட்டையாளரைக் குழப்புவது என்று எம்.எஸ்.தோனியின் பல விளையாட்டு நுணுக்கங்களை படத்தில் அழகாகப் பயன்படுத்தியிருந்தார், அருண்ராஜ் காமராஜ். நாயகி தனி ஆளாகப் போட்டியை வெல்வது போலெல்லாம் வைக்காமல், விறுவிறுப்பான கிரிகெட் காட்சிகளை அமைத்திருந்தது சிறப்பு!

தமிழில் விளையாட்டு வீரர்களின் உண்மைக் கதைகள் படமாக வந்ததில்லை. பல வீரர்களின் கதைக் கதம்பமாகவே படங்கள் வந்திருக்கின்றன. உண்மையான வீரர்களின் வாழ்க்கைக் கதையை படமாக்குவதன் மூலம் அந்த விளையாட்டைப் பற்றிய ஆர்வத்தையும், இளைஞர்களுக்கு முன்மாதிரிகளையும் உருவாக்க முடியும்.

விளையாட்டு பற்றிய படம்தானே என்று விளையாட்டாக நினைக்காதீர்கள்!

ஜூன், 2020.