சிறப்புக்கட்டுரைகள்

நாடகமான நான்கு சிறுகதைகள்!

Staff Writer

எழுத்தாளர் இமையத்தின் நான்கு சிறுகதைகள் சமீபத்தில் சென்னையில் உள்ள மேடை அரங்கத்தில் நாடக வடிவத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டன. சமீபத்தில் அதிகமாக பேசப்பட்ட அவரது கதைகளில் ஒன்று ‘தாலிமேல சத்தியம்‘. ஊராட்சித் தலைவர் பதவித் தேர்தலில் வாக்குக்காக தலைக்கு 5000 எனப் பணம் கொடுத்தும் தோற்றுப்போனவன் வீடு வீடாக கொடுத்தப் பணத்தைத் திரும்பக் கேட்கும் அபத்தத்தை கதையாக்கி இருப்பார். இதை மூன்றே பாத்திரங்களை வைத்து இடையிடையே கதை சொல்லல் பாணியில் கதையை நகர்த்திச் சென்று அருமையாக வடிவமைத்திருந்தார் நாடக இயக்குநர் பிரஸன்னா ராமசாமி.

 அணையும் நெருப்பு என்பது முழுக்க முழுக்க தன்னை சுற்றி அலையும் விடலைப் பையனை அமரவைத்து ஒரு விதவைப் பெண் தன் துயரக் கதையைச் சொல்லும்விதமாக எழுதப்பட்ட கதை. வாசிப்பில் அசர வைத்த அந்த கதையை நடித்த கீதா கைலாசம் நடிப்பில் மிக அற்புதமாக நிகழ்த்தி இருந்தார். ஆண் பாத்திரம் சும்மா அமர்ந்து கேட்டுக்கொண்டிருக்கும். பேசவே வாய்ப்பில்லை. அதிலும் தன் அமைதியான முகபாவனைகளால் கைதட்டல் வாங்கினார் நடிகர் பிரேம்குமார். மயானத்தில் பயமில்லை என்பது மயானத்தில் குழிவெட்டும் ஒரு பெண்ணும் அங்கே சமாதி கட்டும் வேலைக்கு வந்த சித்தாள் பெண்ணும் தங்கள் கதைகளை மதிய உணவுடன் பகிர்ந்துகொள்ளும் கதை. அதை அரங்க வடிவமைப்பிலும் நாடகமாக்கலிலும் அழகாக அமைத்திருந்தார் இயக்குநர். உக்கிரமான சில கணங்களை அவர்களை நோக்கி மட்டும் விளக்கை ஒளிரவிட்டு மேலும் உணர்வுமயமாக்கியது சிறப்பு. 

இதில் முதலாவதாக அரங்கேற்றப்பட்டது காதில் விழுந்த கதைகள் என்கிற சிறுகதை. அந்திமழையில் வெளியானது இந்த கதை என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். பெண்கள் பொதுவெளியில் செல்போனில் பேசிக்கொண்டே போவதை மட்டும் எழுதி கதையாக்கி இருப்பார். நாடக வடிவத்திலும் காதில் போனை வைத்துக்கொண்டு உரக்கப்பேசி நடித்து கவனம் ஈர்த்தனர். இந்த நான்கு சிறுகதைகளும் வெவ்வேறு தளங்களை கதைக்கருவாகக் கொண்டவை. ஆனாலும் இவற்றில் மையப் பாத்திரங்கள் எளிய கிராமத்துப் பெண்கள்தாம். நடுநாட்டில் பேசப்படும் உச்சரிப்பு மொழியை இந்நாடகங்களில் நடித்த பெண்கள் அசலாகக் கொண்டு வந்திருந்தனர். பார்வையாளர்களும் அவ்வப்போது தம்மை மறந்து கதையின் போக்கில் லயித்திருந்தனர். ஓரு மூத்த ரசிகை அவ்வப்போது தன்னை மறந்து சிரித்துக் கொண்டிருந்ததை நாமும் ரசித்தோம்!