ஆகச்சிறந்த புத்தகங்களை வெளியிட வேண்டுமென்கிற ஆர்வம் கொண்ட பதிப்பாளர்கள் சில விஷயங்களில் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். விரிவான வாசிப்பை மேற்கொள்ள வேண்டும். நல்ல எழுத்துகளையும் எழுத்தாளர்களையும் துல்லியமாக அடையாளம் காண்பதற்கு வாசிப்பு அத்தியாவசியமான ஒன்று.
எல்லா துறைசார் வல்லுநர்களுக்கும் தனக்குத் தெரிந்த தகவல்களை எழுத்தில் வெளிப்படுத்தும் ஆற்றல் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் நல்ல ஆசிரியரால் (Editor) அந்தத் தகவல்களை வாசகர்கள் சுவாரசியமாகப் படிக்கக்கூடிய வகையில் மாற்ற முடியும். ஆக, எழுத்தாளர், ஆசிரியர் என்ற இருவருடைய வெவ்வேறு திறன்களையும் ஒன்றிணைத்தல். அடுத்து வடிவமைப்பு. வாசகர் ஒரு புத்தகத்தைத் தன் மனத்துக்கு நெருக்கமான இடத்தில் வைத்திருக்கவும் மற்றவர்களுக்குப் பரிந்துரைக்கவும் பரிசளிக்கவும் செய்வதற்கு வடிவமைப்பின் பங்களிப்பு அபரிமிதமானது. அதுதான் ஈர்ப்புசக்தி.
அடுத்து புத்தகத்தின் அளவு மற்றும் விலை நிர்ணயம். மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்திருக்கும் இன்றைய சூழலில் புத்தகத்தின் உள்ளடக்கம் செழுமையாக, செலவழிக்கும் பணத்துக்கு மதிப்புள்ளதாக இருக்கும்பட்சத்தில், எவ்வளவு அதிக விலையாக இருந்தாலும் அதை வாங்கிப் படிக்கபெரும்பாலானோர் தயங்குவதில்லை. அதிக எண்ணிக்கையில் புத்தகங்கள் விற்க வேண்டுமென்றால் லாபத்தைக் குறைவாக வைத்து விலை வைக்க வேண்டும். அதற்கு குறிப்பிட்ட புத்தகம் எவ்வளவு விற்கும் என்பதைக் கணிக்கக்கூடிய நுண்ணறிவு இருக்க வேண்டும். அது அனுபவத்தாலும் உள்ளுணர்வின் உந்துதலாலும்தான் கைகூடும். இங்கே லாபத்தை பணத்தால் மட்டும் கணக்கில் கொள்ளாமல், அதனால் கிடைக்கும் நற்பெயரையும் சேர்த்துப் பார்க்கவேண்டும். அது பலதரப்பட்ட புதிய வாசகர்களையும் பிரபல எழுத்தாளர்களையும் பதிப்பாளர்களின் பக்கம் கொண்டுவந்து சேர்க்கும்.
இந்தத் தொழிலால் பெரும் கோடீஸ்வரரான ஒருவர் சொன்னார்: “குறிப்பாக எந்தப் புத்தகம் நன்றாக விற்கிறது, எந்த அரசுத் துறையில் எந்த மாதிரியான புத்தகங்களைத் தேர்வு செய்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வேன். யாரேனும் ஒருவரைப்பிடித்து எழுதச் சொல்வேன். ஒளி அச்சுக்கோர்வை செய்பவரையே புரூஃபையும் பார்க்கச் சொல்லி விடுவேன். புத்தகத்தை அடித்து,‘வாங்கவேண்டிய முறையில்’ ஆர்டரையும் வாங்கி, புத்தகத்தை சப்ளை செய்து பணத்தையும் வாங்கி விடுவேன்.
அச்சிட்டதில் மீதமுள்ள புத்தகம் விற்றுத்தீர்ந்து அடுத்த பதிப்பு வந்தால் நான் நல்ல புத்தகத்தைத்தான் போட்டிருக்கிறேன் என்று நினைத்துக் கொள்வேன். உங்களைப் போல் இவ்வளவு மெனக்கெட மாட்டேன்.”என்றார்.
முதலில் நான் 1998ல் பதிப்பகத்தைத் தொடங்கியபோது கையிருப்பு குறைவாக இருந்ததால் விலை குறைவான ரூ.2லிருந்து 20 ரூபாய் வரையுள்ள புத்தகங்களையே பதிப்பித்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் கையில் பணத்தை வைத்துக்கொண்டுதான் தொழிலில் இறங்கவேண்டும், விலை குறைவான புத்தகங்களை வெளியிட்டால்தான் பெரிய இழப்பில்லாமல் தப்பித்துக்கொள்ளலாம் என்ற இரண்டு தவறான எண்ணங்களிலிருந்தும் விடுபட்டேன். நான் அத்தகைய முடிவுக்கு வருவதற்கு காரணமானவர்கள்:
ரிஸ்க்கே எடுக்கமாட்டேன் என்றிருந்தால் ஒரு பெட்டிக்கடை வைத்துப் பிழைப்பை நடத்திக்கொண்டு போகவேண்டியதுதான். ஹை ரிஸ்க் ஹை ரிட்டன். அதேசமயம், அது கால்குலேட்டட் ரிஸ்க்காக இருக்கவேண்டும் என்று சொன்ன சன் குழுமத்தின் கலாநிதி மாறன்.
தொடர்ந்து இழப்பை சந்தித்துக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் சந்தையிலிருக்கும் ஆயிரமாயிரம் குச்சி ஐஸ் விற்பவர்களில் ஒருவனாக இருப்பதா, அல்லது அந்தத்தொழிலின் உச்சத்திலிருக்கும் அமுல், வாடிலால், குவாலிட்டி, தாசப்பிரகாஷ் இவர்கள் வரிசையில் இடம் பிடிப்பதா என்ற கேள்வி என்னைக் குடைந்தெடுத்தபோது, நான் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தேன். அதனால்தான் இன்று இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன் என்று குறிப்பிடும் அருண் ஐஸ் கிரீம் சந்திரமோகன்.
வானத்தையே வில்லாக வளைக்க முடியும் என்கிறபோது தரையில் கிடக்கும் கூழாங்கற்களின்மீது நாம் ஏன் கவனத்தை செலுத்த வேண்டும் என்று சொன்ன திருபாய் அம்பானி.
இவர்களின் வாக்கியங்கள் ஏற்படுத்திய தாக்கம் என் தொழிலில் சில முக்கிய முடிவுகளை எடுக்கத் தூண்டியது. அதை அடுத்த இதழில் சொல்கிறேன்.
(கட்டுரையாளர் சிக்ஸ்த்சென்ஸ் நிறுவன பதிப்பாளர்)
அக்டோபர், 2015.