ஓவியம் ஜீவா
சிறப்புக்கட்டுரைகள்

நம்ம மருத்துவர்

ப.திருமாவேலன்

கெடும் இடராய எல்லாம் கேசவா என நாளும்' என்று திருவாய்மொழியில் நம்மாழ்வார் சொல்லிய வரி ஒன்று உண்டு. அதாவது துன்பம் நேர்ந்த நேரத்தில் ‘கேசவா' என்று சொன்னால் அந்தத் துன்பம் போகும் என்பது இதன் கருத்து!

அரை நூற்றாண்டுகால கோவில்பட்டிக்கும் அதனைச் சுற்றி உள்ள கிராமத்து மக்களுக்கும் 'சென்னகேசவன்' என்ற சொல் அப்படித்தான் இருந்தது.

மருத்துவர் சென்னகேசவன் அவர்களது  பெயரை நினைக்கும் போது முப்பது ஆண்டுகள் பின்னோக்கிப் போய் யோசித்தால், முதலில் அந்த ‘மிக்சர்' நாவில் இனிக்கிறது. அந்த மணத்தை மூக்கு தேடுகிறது. அந்தக் காலத்தில் காய்ச்சல் இருக்கிறதோ இல்லையோ மருத்துவமனைக்கு நுழையும்

சின்னஞ்சிறுசுகள் அனைவரும் அந்த மிக்சர் கிடைக் காதா என்ற ஏக்கத்தோடு இருந்திருப்போம். அதில் ஏதோ ஒரு மந்திரத்தன்மை இருந்தது. அது மருத்துவர் சென்னகேசவனின் நல்ல மனம், குணமாகக் கூட இருக்கலாம்!

எனது பள்ளிக் காலத்தில் காக்கும் கடவுள் என்றால் அவர் தான். எனக்கு மட்டுமல்ல, கோவில்பட்டிக்கும் அதன் சுற்றுவட்டாரத்து மக்களுக்கும்!

கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் வந்து இறங்கி, குதிரை வண்டிக்காரரிடம் சென்று, ‘ஆஸ்பத்திரிக்கு போகணும்' என்று சொன்னால் போதும், குதிரையே சென்னகேசவன் மருத்துவமனைக்குத்தான் போகும். வண்டிக்காரர் வேறு இடம் போனாலும் குதிரை போகாது. அந்தளவுக்கு ஈர்ப்பு சக்தி உள்ள மருத்துவர் அவர்.

2013ம் ஆண்டு ஒரு நாள் மதிய வேளையில் மருத்துவர் சென்னகேசவன் அவர்களின் இளைய மகனும் என்னுடைய பால்ய காலப் பள்ளித் தோழனுமான சீனிவாசன், ‘அப்பாவின் மருத்துவமனை தொடங்கி ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்காக ஒரு மலர் வெளியிடுகிறோம்' என்று சொன்னபோது, ‘இன்று காலையில் தான் உன் அப்பா பற்றி நானும் என் அக்காவும் பேசிக் கொண்டு இருந்தோம். டாக்டரைப் பற்றி என் மகள்களுக்கு

சொல்லிக் கொண்டிருந்தோம்' என்று நான்

சொன்னேன். அந்த அளவுக்கு என் வாழ்க்கையில் எங்கள் குடும்பத்தில் மறக்கமுடியாத மாமனிதராக வாழ்ந்தவர் அவர்.

ஆண் மருத்துவர்களில் சென்னகேசவனும் பெண் மருத்துவர்களில் சௌந்தரவல்லி அவர்களும் கோலோச்சிய காலம் அது. இரண்டு பேரையும் பார்த்தால் பயமாகவும் இருக்கும், பாசமாகவும் இருக்கும்!  ரொம்பவும் ‘நோஞ்சானாக' இருந்த எனக்கு ஊட்டச்சத்து சிகிச்சை அளித்தவர் மருத்துவர் சௌந்தரவல்லி. அவரது கணவரும் கண் மருத்துவருமான டாக்டர் சீனிவாசன் அவர்கள் ஹீரோ மாதிரி இருப்பார். ‘எனக்கு பியட் கார் பிடிக்கும்' என்று சின்ன வயதில் சொல்லிக் கொண்டு இருந்தது சீனிவாசனின் கார் ஓட்டும் ஸ்டைல் பார்த்துத்தான். ஆசிரியர்களும் மருத்துவர்களும் தான் அந்தக் காலத்து இளைஞர்களின் உலகம். எப்படி எல்லாமோ இருந்திருக்கிறது உலகம்!

ஒரு நாள் என்னுடைய தாத்தா ப.ரா.முத்தையா அவர்கள் கடுமையான காய்ச்சல் காரணமாக கிராமத்தில் இருந்து கோவில்பட்டிக்கு வந்துவிட்டார்கள். எங்கள் சொந்த ஊரான வாழவந்தாள்புரத்திற்கு பத்து கிலோமீட்டர் தூரத்தில்தான் இராசபாளையம் இருக்கிறது. அங்கு போய் உடனடியாக சிகிச்சை பெற்றிருக்கலாம். ‘அங்கயே பக்கத்துல காட்டியிருக்கலாமே?' என்று என்னுடைய தந்தையார் புலவர் படிக்கராமு அவர்கள் சொன்னார்கள்.

‘நம்ம சென்னகேசவனைப் பார்த்தாலே எனக்குச் சரியா போயிடும். அதுனால தான் வந்துட்டேன்' என்று என்னுடைய தாத்தா சொன்னார்கள். இதுதான் இந்த வட்டாரத்து மக்களின் பொதுக் கருத்தாக இருந்தது. 'என்ன செய்யுது' என்று கேட்டு சும்மா ஸ்டெத்தாஸ்கோப் வைத்தால் போதும், ‘உடம்பு சரியாகிவிட்டது' என்ற உற்சாகத்துடன் மருத்துவமனையைவிட்டு வெளியே வருபவர்களை நான் பார்த்திருக்கிறேன்.

சாத்தூருக்குப் பக்கத்தில் அப்பைய நாயக்கன் பட்டி தான் சென்னகேசவன் பிறந்த ஊர். சிறுவயதிலேயே அப்பா இறந்துவிட்டார். பிள்ளைகள் மூவரையும் படிக்க வைத்தவர் அவரது அம்மா மட்டுமே. நடந்து போய் பள்ளிப்படிப்பை படித்தவர். பாளையங்கோட்டை, விருதுநகர் எனப் படித்துவிட்டு மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் முடித்தார். சாத்தூர்

சட்டமன்ற உறுப்பினராக இருந்த ராமசாமி அவர்கள் பெற்றுத்தந்த அரசு உதவித்தொகையால் தான் படித்தார். 1963ம் ஆண்டு கோவில்பட்டியில் மருத்துவமனை தொடங்கினார். ‘ஜீவா கிளினிக்' என்பது பெயர். அவரது அண்ணன் மகள் பெயர் அது. ஜீவா கிளினிக் என்று பெயர் இருந்தாலும் ‘சென்னகேசவன் ஆஸ்பத்திரி' என்றால்தான் அனைவரும் அறிவார்கள்.

நோயாளியைப் பார்த்ததும் அவருக்கு இன்ன நோய் என்பதைச்

சொல்லி விடுவார். பெரிய செலவு ஏற்படுத்தாத எளிய சோதனைகளைத் தான் செய்வார். தன்னால் முடியாதது என்று நினைத்தால் உடனே வேறு எந்த மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்பதை உடனடியாகச் சொல்லிவிடுவார். காலையில் 8 மணிக்கு வருவார். மதியம் வீட்டுக்குச் சென்றுவிட்டு மாலை 4 மணிக்கு வருவார். இரண்டு நேரத்திலும் உங்கள் கடிகாரத்தைச் சரிசெய்து கொள்ளலாம். அந்தளவுக்கு நேர ஒழுங்கைக் கடைப்பிடித்தவர்.

நோயாளிகள் உள்ளே வரிசையாக உட்கார்ந்து இருப்பார்கள். அவர்களை வரிசையாக சோதனை செய்து விட்டு வந்து, தனது இருக்கையில் உட்கார்ந்து அனைவருக்கும் தனித்தனியாக சரியாக நினைவில் வைத்து மாத்திரை, மருந்து எழுதுவார். எத்தகைய நினைவாற்றல் இது. மருத்துவ அஷ்டாவதானி அவர்.

அவரைச் சுற்றிலும்  கூட்டமாக நோயாளிகள் மொத்தமாக  நிற்பார்கள். ஒருவரைப் பார்த்துக் கொண்டு இருக்கும் போது இன்னொருவர் நுழைந்துவிட்டால் சில மருத்துவர்கள் ‘சாமி' ஆடுவார்களே அதுபோல ஆட மாட்டார். அவரது அறை முழுக்கவே நோயாளிகள் நிரம்பி வழிவார்கள். தெரிந்தவர், தெரியாதவர், வேண்டியவர், வேண்டாதவர், முன்னே வந்தவர், வராதவர், ரொம்ப நாட்களாக வராதவர், பணக்காரர், ஏழை எல்லாரும் சென்னகேசவன் கண்ணுக்கு ஒன்று தான். ‘நம்மைத் தேடி வந்தவர்' அவ்வளவு தான்.

நான் பார்த்த காலத்தில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் தான் வாங்குவார். அதையும் கேட்க மாட்டார். கொடுக்காமல் போனவர்களை மறித்தது இல்லை. அவர்களே மறுதடவை வரும்போது மதிக்காமல் இருந்ததும் இல்லை. அதனால் தான் இத்தனை ஆண்டுகள் கழித்தும் நினைக்கக்கூடியவராக மருத்துவர் சென்னகேசவன் அவர்கள் இருக்கிறார்கள்.

மருத்துவத்தை ஏதோ தன்னுடைய தொழிலாக, வருமானம் பார்க்கும் வழியாகக் கருதாமல்

சேவை மனத்துடன் செய்தவர் அவர். அதற்காக இந்தப் பொதுமக்களுக்கு சேவை செய்கிறோம் என்று அவர் நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டதும் இல்லை. அதனைத் தன்னுடைய கடமையாக அவர் நினைத்தார்.

1980 காலகட்டத்தில் சிறுவர்களுக்கு அதிகமான அளவில் புண், கொப்புளங்கள் பரவியது. ‘செறங்கு' என்பார்கள்.சொல்லும் போதே அருவெறுப்பு ஏற்படும்.  அதனைச் சுத்தம் செய்து சிகிச்சை செய்வதற்கே ஒரு சகிப்புத்தனம் வேண்டும்.

ஆனால், சென்னகேசவன் முகத்தில் அருவெறுப்பே இருக்காது. ‘சொந்தப் புண்'ணை துடைப்பது போலத் துடைப்பார். அவரோடு இருந்த கம்பவுண்டர் லட்சுமணன் அண்ணன், அதைவிட அக்கறையோடு இருப்பார்.

இன்றைக்கு ஒவ்வொரு நோய்க்கும் சிறப்பு மருத்துவர்கள் வந்துவிட்டார்கள். ஆனால் சிறப்பு மருத்துவர் என்று சொல்லிக் கொள்ளாமலேயே அனைத்துக்கும் சிறப்பான மருத்துவராக இருந்தவர். பெரிய மருத்துவமனைகளில் வேலை பார்த்தவர் இல்லை. உலகக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டவரும் இல்லை. புகழ்வாய்ந்த பட்டங்கள் பெற்றவர் இல்லை. ஆனால் பயன்பெற்ற மக்கள் அனைவரும் ‘நம்ம டாக்டர்', ‘எங்க டாக்டர்' என்று சொல்ல வைத்தவர் இவர்.

ஒரு சிறு நகரில் இருந்ததால் அவர் பெயர் வெளி உலகத்துக்குத் தெரியவில்லை.  சென்னையில் இருந்திருந்தால் பொதுமருத்துவமனை வாசலில் வைக்கப்பட்ட டாக்டர் ரங்காச்சாரி சிலைக்குப் பக்கத் தில் சிலையாக வைக்கப்பட்டு இருப்பார்.

மார்ச், 2020.