சிறப்புக்கட்டுரைகள்

நமஸ்தே ட்ரம்ப்

செல்வன்

சுமார் இருபதாயிரம் கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தங்கள், இந்தியாவுடனான நல்லுறவு மேம்பாடு ஆகிய நிகழ்வுகளுடன் திரும்பிச் சென்றுள்ளார் அமெரிக்க அதிபர் மோடி.

2000-வது ஆண்டுக்கு முன்பாக இந்தியாவுக்கு மூன்றே மூன்று அமெரிக்க அதிபர்கள்தான் வந்திருக்கின்றனர். பனிப்போர் காலத்தில் பாகிஸ்தானுடன் மட்டுமே அமெரிக்கா நல்லுறவு வைத்திருந்தது. ரஷ்யா சிதறியது, இந்தியா தன் சந்தையை உலகுக்குத் திறந்துவிட்டது ஆகியவற்றுக்குப் பிறகு அமெரிக்கா தன் பார்வையை இந்தியா நோக்கித் திருப்பியது. பில் கிளிண்டன், ஜார்ஜ்புஷ் ஆகியோர்  வந்தார்கள்.  பிறகு பாரக் ஒபாமா இரண்டு முறை வந்தார். முதல் முறை வந்தபோது நேரே மும்பையில் வந்து இறங்கினார். இரண்டாம் முறை வந்தபோது மோடி பிரதமர். ‘பாரக்  என் நண்பர்' என்று மோடி பெருமையாக சொல்லிக்கொண்டார். அதன் பின்னர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க அதிபர் ஆனபோது, அவரைப் போன்ற வலதுசாரிக்கும் இந்தியாவில் எழுச்சி பெற்றிருந்த மோடிக்கும் இடையே உறவு மேலும் வலுப்பெற்றது. மோடிக்கும் ட்ரம்புக்கும் இடையிலான சந்திப்புகளில் மிகுந்த நட்புறவு இருப்பது உடல்மொழியில் தெரியுமாறு நடந்துகொண்டார்கள். மோடிக்கு அமெரிக்காவில் ‘ஹவ்டிமோடி' என வரவேற்புக் கொடுத்தார்கள். இங்கே அகமதாபாத்தில் அவருக்கு ‘நமஸ்தே ட்ரம்ப்' என்ற பெயரில் லட்சக்கணக்கான பேரை அழைத்து வரவேற்புக் கொடுத்தார் மோடி.

பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி,' ட்ரம்ப் வருகையால் இந்தியாவுக்குப் பலன் ஏதும் இல்லை.அமெரிக்க நலன்களுக்காகத்தான் அவர் வருகிறார்' என்று விமர்சித்துள்ளார்.

இந்த வருகையின்போது சுமார் இருபதாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அமெரிக்க அபாச்சி, ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்பதற்கான ஒப்பந்தங்களை ட்ரம்ப் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து ராணுவ ஒத்துழைப்பு, கூட்டுச் செயல்பாடு ஆகியவற்றில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. சில ஆண்டுகளாக ஏற்பட்டிருக்கும் உரசல் அப்படியே உள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி ஆகும் இரும்பு, அலுமினியத்துக்கான வரிகளை அமெரிக்கா 2018-ல் உயர்த்தியது. பதிலுக்கு இந்தியா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி ஆகும் பல பொருட்களுக்கு வரிகளை உயர்த்தி பதிலடி கொடுத்தது. இந்தியாவை வளர்ந்த நாடு என்ற பட்டியலுக்கு அமெரிக்கா வம்படியாக மாற்றி, சில சலுகைகளையும் பறித்துக் கொண்டிருக்கிறது. இந்த வர்த்தக உரசல்களை  மோடி - ட்ரம்ப் இடையிலான நட்புறவு சரி செய்வதாகத் தெரியவில்லை என்ற தொழில்துறையினரின் கவலை நீங்கவில்லை!

மார்ச், 2020.