சிறப்புக்கட்டுரைகள்

நண்பனானேன்

தாமிரா

அன்புடன் இயக்குநர் திரு.பாலச்சந்தர்  அவர்களுக்கு...

இது உங்களைப் பற்றிய கட்டுரை இல்லை. உங்களுக்கு எழுதும் கடிதம்.

கண்ணாடிப் பேழையில் உங்களை வைத்து, வீட்டிற்கு எடுத்து வந்த பிறகு சகோதரி புஷ்பா, மெல்ல உங்கள் செவியருகே குனிந்து அப்பா யாரு வந்திருக்கறா பாரு என ஒவ்வொரு உறவையும் நட்பையும் உங்களுக்குச் சொல்லிக் கொண்டே இருந்தார். அவர் முகத்தில் நீங்கள் எல்லாவற்றையும் கேட்பீர்கள் என்கிற நம்பிக்கை இருந்தது. எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கிறது.

உலகம் உங்களைப் பார்த்த பார்வையிலிருந்து, ஒரு நூல் உங்களை இன்னும் நுட்பமாக நெருக்கமாகப் பார்த்தவன் என்கிற முறையில் இதை எழுதுகிறேன்.

ஒரு ரகசியத்தைப் போல இருந்தது உங்களுக்கும் எனக்குமான அன்பு. யாருக்கு என்னை அறிமுகம் செய்து வைப்பதானாலும் என் நண்பன் என்று தான் அறிமுகம் செய்து வைப்பீர்கள். நான் எப்படி உங்களுக்கு நண்பனானேன் என இதுவரை எனக்குத் தெரியவில்லை.

எனக்கு உன் எழுத்து பிடிக்கும்யா.. எனக்கு என்ன வேணுமோ அதை எழுதி குடுத்திர்றீரு.. நமக்குள்ள ஒரு நல்ல வேவ்லெங்த் இருக்கு.. என்றீர்கள். வெளில வேறமாதிரி சொல்றாங்க சார்.. ஒரு துலுக்கன் உங்க கூட இருந்தா ராசி அதனால தான் தாமிராவை டைரக்டர் கூட வச்சிருக்கறாருன்னு சொல்றாங்க என்றபோது பெரிதாக சிரித்தீர்கள். அந்த சிரிப்பு இன்னும் எனக்குள் இருக்கிறது. ‘நா சாதிமதம் பாக்கறதில்ல என் படைப்புக்குத்தான் எல்லாரும் பூணூல் போட்டுப் பாக்கறாங்க’.. உங்களது அந்த சொல் பொய் இல்லை என ஒரு மழை நாள் நிரூபித்தது.

அன்று...!                       

என்னை வரச்சொல்லி அழைக்கிறீர்கள்.

நான் ‘இல்ல சார் மழை பெய்யுது இப்ப வர இயலாது‘ என்கிறேன்.

‘அது என்னய்யா மயிலாப்பூர்ல இல்லாதமழை வடபழநில பெய்யுதா? வர முடியலன்னா வரமுடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே.. எதுக்குப் பொய் சொல்றே’ என்ற உங்கள் நம்பிக்கை இன்மைக்காக அன்றைய மழையில் நான் நனைந்தேன்.

தெப்பலாக நனைந்து வந்த என்னைப் பார்த்து ‘அட என்னய்யா நீ இப்படியா வருவே.. நாளைக்கு வரவேண்டியதுதானே” எனச் சொல்கிறீர்கள். அலுவலகத்தில் உங்களுக்காக எடுத்து வைக்கப் பட்டிருக்கும் வேட்டியையும் துண்டையும் எனக்குத் தருகிறார் மோகன். ஒரு சூடான தேநீர் பருகியபடி மழையை ரசித்துக் கொண்டே வாசலில் நின்று பேசிக் கொண்டிருக்கிறோம். எனது ஆடைகள் உலரும்வரை ஒரு தோழனைப்போல தோளில் கைப்போட்டபடி கதையாக இல்லாமல் சில நினைவு களை பகிர்ந்து கொள்கிறோம். செய்தி இதுவல்ல..

மறுநாள்.. நீங்கள் முகம் கழுவி வெளியே புறப்பட ஆயத்தமாகும் போது அந்த வேட்டி சட்டை எடு மோகன் என சொல்கிறீர்கள்.மோகன் இல்ல சார் வீட்ல போய் எடுத்துட்டு வர்றேன். இங்க நேத்து தாமிராகட்டின வேட்டிதான் இருக்கு என்றுசொல்ல.. நம்ம தாமிராதானடா குடு என அந்த வேட்டியை வாங்கிக் கட்டிக்கொள்கிறீர்கள்.. அங்கு ஒரு மதமும், மார்க்கமும் கைகுலுக்கிக் கொண்டது.

இந்தத் தகவலை மோகன் என்னிடம் சொன்னபோது நான் அந்த அன்பின் முன்னால் தோற்றுப் போனேன்.

ஒரு கிண்ணத்தில் இருக்கும் மிக்சரை எடுத்து சாப்பிட்டபடி நாம் எவ்வளவோ விவாதித்து இருக்கி றோம். சார் அது என் கப்பு சார் என்று சொல்லும் போது, அட தெரியும்யா இந்த மோகன் பய எனக்கு முந்திரி பக்கோடாவை கம்மியா வைக்கறான் என குழந்தைத்தனமாக சொல்வீர்கள். உங்களுக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பார்த்து, சிலர் துவக்க காலங்களில் என்னை ‘பிராமினா’ எனக் கேட்டிருக்கிறார்கள். நான் இல்லை என்று மறுக்க பின் எப்படி இவ்வளவு குளோசா உங்க கிட்ட மூவ் பண்றாரு என கேட்கப்பட்டிருக்கிறேன். இப்போதாவது உங்களுக்குள் பிராமணியம் தாண்டிய ஒரு தோழமையும் சகோதரத்துவமும் இருந்தது என்பதை பதிவு பண்ண வேண்டும் என்பதற்காகவே நான் இதைச் சொல்கிறேன்.

ஒரு நள்ளிரவில் நான் ‘அண்ணி’ சீரியலுக்கான வசனத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன் உறக்கம் கலைந்து எழும் எனது தந்தை, ‘உண்மையைச் சொல்லு, நீ பாலச்சந்தர்கிட்ட வேலை பாக்கறியா? இல்லை அவர் கம்பெனில வேலை பாக்கறியா? பாலச்சந்தரோட நீ சரி சமமா இருந்து பேசறத என்னால நினைச்சு பாக்க முடியல.. எம்புள்ள அவ்வளவு திறமைசாலியா? பாம்பே கமலா மில்லுல வேலை செய்யறப்ப  பாலச்சந்தர் படம் ரிலீஸானா உடம்பு சரியில்லன்னு பொய் சொல்லி லீவு போட்டுட்டு படம் பாக்கப்போவோம். சமயங்கள்ல சம்பளத்தில கூட பிடிச்சிக்குவாங்க அப்படி இருந்தாலும் பரவால்லன்னு லீவு போட்டுட்டு படம் பாப்போம்.. அப்பல்லாம் நீ பொறக்கவே இல்லடா’ என்றார். மறுநாள் வாங்க ஒரு  இடத்துக்கு போயிட்டு வரலாம் என உங்களிடம் சர்ப்ரைஸாக அழைத்து வருகிறேன்.. கதவு திறந்து அலுவலக அறைக்குள் வந்தவர் உங்களைப் பார்த்து ஸ்தம்பித்து நிற்கிறார். அன்று நீங்கள் என் தந்தைக்குக் கொடுத்த நம்பிக்கைதான் உறவுகளுக்கு மத்தியில் என்னை சிகரத்தில் அமர்த்தியது.

ஒருமுறை என்னிடம் புஷ்பா கேட்டார்கள்.. ‘எங்கள விட டைரக்டருக்கு நீங்க அவ்வளவு முக்கியமா? ‘குசேலன்’ படத்துல  ஒரு கேரக்டர் இருக்குப்பா அதை நீயே நடிச்சிருன்னு சொன்னேன்.. தாமிரா படத்துல நா நடிக்கறேன்னு வாக்கு குடுத்துட்டேன்.. அதுக்கு முன்னால வேற எந்த படத்திலயும் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டார்’ என்றார்கள். அந்தச் சொல்லில் ஒரு வாஞ்சையான சகோதரத்துவம் கலந்த ஒரு சின்ன பொறாமை இருந்தது. சிரித்தபடியே ‘ஆமா எனக்கு கொஞ்சம் ஜெலஸியாத் தான் இருக்கு’ என்று புஷ்பா சொன்னபோது உறவுகளைத் தாண்டிய நம் அன்பு அத்தனை உயர்வாக இருந்தது.

ரெட்டச்சுழியின் வணிகரீதியான வெற்றி தோல்விகளைத் தாண்டி அது எனக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் ஒரு பெருமிதமான திரைப்படம். ரெட்டச்சுழியில் நீங்கள் சம்பளம் இல்லாமல் நடிக்க வேண்டிய சூழ்நிலை வந்த போது அது என்னை தர்ம சங்கடப்படுத்தியது. என் நண்பன் முதல் முதலா படம் பண்ணப் போறேன் நீங்க என் கூட வந்து ஒரு இருபத்தஞ்சு நாள் இருக்கணும்னு சொன்னா, நா கூட இருக்க மாட்டேனாடா அது மாதிரி நினைச்சிட்டுப் போறேன். என்ன ஒன்னு நண்பனா வந்தா மேக்கப் போட மாட்டேன் கேமராவுக்கு பின்னால் நிப்பேன். இப்ப மேக்கப் போட்டுட்டு கேமராவுக்கு முன்னால நிக்கப்போறேன் அவ்வளவு தான.. போய் ஆக வேண்டிய வேலையைப் பாரு. என்று சொன்னீர்கள். இந்தச் சொல்தான் ரெட்டச்சுழி படத்தின் துவக்கப் புள்ளி.

இன்னும் சொல்ல அநேகம் இருக்கிறது.

அழுந்தப் பற்றிக்கொள்ளும் உங்கள் விரல்களின் ஸ்பரிசம் இன்னும் என் கூடவே இருக்கிறது. நீ நல்லா வருவேய்யா.. எனக்கு ஒம்மேல நம்பிக்கை இருக்கு.. இதெல்லாம் தோல்வியே இல்ல.. சீக்கிரமா ஒரு கதை பண்ணி சக்ஸஸ் குடு என்கிற உங்கள் வார்த்தை என்னுள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. உங்கள் தாய்மையின் அக்கறை நிழல் என்னை விட்டு விலகவே இல்லை. விடைபெறும் தருணத்தில் கைகளைப் பிடித்துக் கொண்டு இன்னும் ஏதாவது சொல்ல விடுபட்டுப் போயிருக்கிறதா என சில கணம் யோசித்து விட்டு விடைபெறுவீர்களே.. அப்படியான ஒரு யோசனைக் கணம் போலதான் இருக்கிறது.. இப்போதைய உங்கள் இல்லாமை..

எல்லா சகாப்தங்களும் சாம்பலில் கரைந்துவிடுமா என்ன...?

ஜனவரி, 2015.