சிறப்புக்கட்டுரைகள்

நடை பாதைகளில் ஏன் மரம் நடுகிறீர்கள்?

ச. முகமது அலி

நமது காலகட்டம் குழப்பமானதொரு சூழலில் தடுமாறுகிறது. எழுதத்தெரிந்த எல்லோருமே தன்னளவில் சுற்றுச்சூழல் நூல் ஒன்று எழுதிவிடும் அளவுக்கு தகவல் ஊடகங்கள் வழிசெய்து விட்டன. புத்தகங்களே புதியதொரு மாசாக உருவெடுத்துவிட்ட நிலையில் மற்ற மாசுகள் மாசாகவே இருக்கிறது மாறாமல்.

எவ்வளவுதான் மேலைத்துவ அறிவியல் நமக்கு வசதிகள்  - வாய்ப்புகளை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தாலும் அதைச் சிறிதும் நினைத்துப் பார்க்காமல் சுற்றுச்சூழல் என்ற விஞ்ஞானத்திலும் ‘இந்தியவியல்’ ஊடுருவுகிறது பாரம்பரியம் என்ற பெயரில். இதன் ஒரு பகுதிதான் சமஸ்கிருதமயமாக்கல், வட இந்தியமாக்கல், அரபியமாக்கல் மற்றும் பசுமை மயமாக்கல் ஏனையவை.

நம் சு.சூ போற்றிகளுடைய மெய்யியல்களின் குழப்பமான நிலைப்பாடுகளைக் காணும்போது, இவர்கள் கம்யூனிஸ்டுகளா, தனித்தமிழ்வாதிகளா, இந்துத்துவ பரிவாரங்களா, அல்லது பாரம்பரியவாதிகளா என்பதில் பெரும் குழப்பம்தான். இவற்றின் அடிப்படையில்தான் “தனித்துவமிக்க” நவீன சு.சூ.வாதிகள் புதிது புதிதாக முளைக்கின்றனர். இந்த அரங்கேற்றத்தில் கவிஞர் வைரமுத்து முதல் கடைசி காநா கூநா வரை ஒரே நகைச்சுவைதான். இதன் புதியவர்கள் ஒன்று மரம் நடுகிறார்கள் அல்லது பாம்பு பிடிக்கிறார்கள் அல்லது வனவிலங்குகளை போட்டோ பிடிக்கிறார்கள். இதைச் செய்தவுடன் இம்மாபெரும் துறையே கைவசமானதாக கனவுகண்டு புதிய சீருடைகளில் புதிய புதிய பொருள் நுகர்வுடன் புதிய கோணங்களில் போட்டோ எடுத்துக் கொண்டு முகநூல், வாட்ஸ் அப் சகிதம் உலக உலா வந்துவிடமுடிகிறது.

காடுகள் அதிகரிக்கப்படல் வேண்டும். ஆண்டுக்கு இத்தனை ஏக்கர் காடுகள் உருவாக்கப்படல் வேண்டும் என்ற கொள்கையோ, அறிவோ யாருக்கும் இல்லை. அரசுக்கு வனப்பாதுகாப்பு என்பது மக்களை அந்நியப்படுத்தி இருப்பதைப் பூட்டிப் பூட்டி வைத்துக்கொள்வது மட்டுமே. விழிப்புணர்வு அளிப்பதல்ல.  ஆனால் காடு - காடு, மரம் - மரம் என்ற ஆவர்த்தனங்களுக்கு மட்டும் குறைவேயில்லை.

சாலையோரங்கள், தெருக்கள், இரும்புப் பாதைகள் மற்றும் ஊர்ப்பொதுவிடங்களில் மரம் நடுவதை உடனே தடை செய்ய வேண்டும். ஏனென்றால் பசுமை என்ற பெயரில் இவர்கள் மரம் நடுவது அரசு நிலத்தில் அல்லது நடைபாதைகளில் மட்டுமே. நடைபாதையில் இருக்கும் மரம் ஒன்றில் காக்கை கூடு கட்டுகிறதோ இல்லையோ அதனடியில் பரபரப்பான ஒரு பாணிபூரிக்கடை, இளநீர்க்கடை, சைக்கிள் பஞ்சர் கடை, செருப்புத்தைக்கும் கடை சுற்றுச்சூழல் துறையும் லாபம், விளம்பரம், வெற்றுப்புகழ் தரத்தக்கதாக மாறி வணிகமயமாகியுள்ளது நிதர்சனம். சூழல் பாதுகாப்பு எந்த வகையிலும் மேம்பாடு அடையவில்லை. பேசப்படுவது மட்டுமே பெரிதாக இருக்கிறது.

திட்டமோ, செயலோ எதிர்விளைவுதான். இதுவே பரிமாணத்தின் பாதை. இதன் எடுத்துக்காட்டுதான் சென்னை மழை - வெள்ளம். ஒரு எளிய கணக்கீடு; காடுகள் குறைய குறைய விலங்கினங்கள் பெருகி ஊருக்குள் வரநேர்கிறது. சாக்கடை - வடிகால் வசதிகள் குறைய குறைய மழைவெள்ளம் ஊரை மூழ்கடிக்கிறது. இதைப்பற்றியெல்லாம் அறிவியலாக அறியாமல் சுற்றுச்சூழலும் ஆன்மீக - மயமாக்கப்பட்டு மரங்கள் புனிதமாக்கப்பட்டு மரம் நடுவீர் மழைபெறுவீர் என்பது நவீன மூடநம்பிக்கையாகிப்போனது. ஆமாம், மழைக்கும் மரத்திற்கும் என்ன தொடர்பு? சென்னையில் அவ்வளவு அதிகமாகவா மரங்கள் இருக்கின்றன? மேலும் சாதாரணமாக சமூகத்தில் காணப்படும் குற்றச்செயல், தீவிரவாதங்கள் குறைபாடுகள் கொண்ட மனிதர்களே சுற்றுச்சூழல் துறையில் உள்ளமை, அதற்கேயுரிய அறம், நியதி அல்லது ஒழுக்க மதிப்பீடுகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மரம் வளர்க்கத் தெரிந்துவிட்டது என்பதற்காக பார்த்த இடமெல்லாம் நடவேண்டியதுதானா? அது வாகனப் போக்குவரத்துக்கு மட்டுமல்ல இயற்கையமைப்புக்கே முரணானது என்பது ஏன் புரிந்து கொள்ளப்படவில்லை. இதைத் தெரிந்து கொள்ள ஒரு காட்டிற்குச் சென்று பார்த்திருப்பார்களா இந்த சுதேசிகள்? பாலைவனத்திலும் மரம் வளர்க்க முடியும் என்பதற்காக அந்த Desert System அழிய விடுவது இயற்கைக்கு எதிரான  செயல்.

சிறுமுகை என்ற சிற்றூரில் மான்கறி சமைத்ததாக முருகன் என்ற எளியவனுக்கு நேர்ந்த கொடுமையை, இரண்டாண்டுகட்கு முன் நாளிதழ் ஒன்றில் வந்த செய்தியாகப் படித்து நொந்து போனேன். அவரை உருட்டி எடுத்துவிட்டது நமது வனச்சட்டம். சட்டங்களால் நல்லோரும் பாமரரும் எளிதாக ஏமாற்றப்பட்டு ஒடுக்கப்பட்டு அவர்களது இயற்பியல் விருப்பங்கள் யாவும் முளையிலேயே கிள்ளியெறியப்படுவது இந்தியாவில்தான் சாதாரணம்.

(கட்டுரையாளர் ஓர் இயற்கையியலாளர்)

மார்ச், 2016.