சிறப்புக்கட்டுரைகள்

தொண்டுதான் ஓய்வு

ராவ்

சிந்தனை எல்லாம் தேசத்துக்கு அர்ப்பணித்த தலைவர்களுக்கு மன அழுத்தம் என்பதெல்லாம் எப்படி வரும்?

பதவி ஆசை உட்பட எதன் மீதும் பற்று அற்றவர்கள் அவர்கள். காமராஜ் முதல்வர் பதவியிலிருந்து இறங்கிய அன்று, நிருபர்கள் சந்திப்பு நடந்தது. பேட்டி முடிந்து நிருபர்கள் கிளம்பியபோது, “நானும் கிளம்ப வேண்டியதே” என்று காமராஜர் துண்டை எடுத்து உதறி தோளில் போட்டுக்கொண்டு வெளியே நடந்தார். முகம் முன்பை விட தேஜஸாக இருந்தது.

முதல்வராக அவர் தேர்தலைச் சந்தித்தபோது, தி.மு.க.விற்குப் பெரும் கூட்டம் கூடும். காங்கிரசுக்கு நூறு பேர் இருந்தாலே அதிகம். அப்போதெல்லாம் ஆட்களைக் கொண்டு வந்து இறக்கும் ‘காண்ட்ராக்ட்’ ஆரம்பமாகவில்லை!. காமராஜ் கவலைப்படமாட்டார். ‘கூட்டம் அங்கே, ஓட்டு இங்கே’ என்பார், சிரிப்பார்.

காமராஜருக்குத் தன் பால்ய நண்பர்களுடனும், தன்னுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடனும் பேசுவதுதான் ரிலாக்சேஷன்! திருமலைப் பிள்ளை ரோட்டில் இருந்த அவரது வீட்டு மொட்டை மாடியில், மாலையில் தண்ணீர் ஊற்றி ‘ஜில்’ என்று இருக்கும். சில மரநாற்காலிகள் போடப்பட்டிருக்கும். நண்பர்களுடன் அங்கு அமர்ந்து பேசுவதுதான் அவருக்குச் சிரமபரிகாரம். சின்ன அண்ணாமலை போன்ற பேச்சாளர்கள் தமாஷாகப் பேசினால் வாய்விட்டுச் சிரிப்பார். நகைச்சுவையை நன்றாக ரசித்துச் சிரிக்கத் தவறியதில்லை. சில சமயம் தெ.பொ.மீனாட்சி சுந்தரம், அ.ச.ஞானசம்பந்தம், டி.எஸ்.சொக்கலிங்கம் போன்றோர்களுடன் பேசுவதுண்டு. அது ஒரு நல்ல ஓய்வு நேரமாக அமைந்தால் பாரதி, கம்பன் பற்றி அவர்கள் சொல்ல, ஆர்வத்துடன் பங்கு பெறுவார்.

இவர் முதல்வராக இருந்தபோது சென்னை மாநகராட்சி தி.மு.க வசம் வந்தது. அந்த நாட்களில் ‘மாநகராட்சி தினம்’ என்று கொண்டாடி, கவுன்சிலர்களிடையே விளையாட்டுப் போட்டிகள் நடக்கும். முதல்வர் காமராஜ் அன்று அதைத் துவக்கிவைப்பார். கயிறு இழுக்கும் போட்டியில் கவுன்சிலர்கள் நடத்தும் ’கூத்து’களைப் பார்த்து காமராஜ் விழுந்து விழுந்து சிரித்ததைப் பார்த்திருக்கிறேன்.

எமர்ஜென்சி நாட்களில்தான் காமராஜ் கவலையுள்ள ‘சீரியஸ்’ தலைவராக இருந்தார்.

தனக்குத்தானே வலை பின்னிக்கொள்ளாத தலைவர் ராஜாஜி. அந்த நேரத்தில் மக்களுக்கு எது சரியாக இருக்கும் என்பதை எடை போட்டுச் சொல்லும் அவருக்கு, ‘டென்ஷன்’ என்பது வந்து நிருபர்கள் பார்த்ததே இல்லை. அவருக்கும் இலக்கியம்,

உற்சாகப்படுத்தும் சோலை. டி.கே.சி. கல்கி, நாமக்கல் கவிஞர், மீ.ப.சோமு, ஜஸ்டிஸ் மகாராஜன் என்று அவருக்கு இலக்கிய இன்பத்தை அளித்தவர்கள் நிறைய. ‘குறையொன்றுமில்லை’ என்ற அற்புதமான பாடலை அளித்தவராயிற்றே. இசையையும், இயற்கையையும் ரசித்தவர் என்பதை அவர் நூல்களைப் படித்தால் தெரியும். ஓவியங்களும் அவருக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. எல்லாவற்றையும் விட, சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதரின் உபன்னியாசங்களை, கம்பீர சுலோகங்களைக் கேட்பதில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு. கல்கி தோட்டத்தில் தீட்சிதரின் வால்மீகி ராமாயண உபன்யாசத்தைக் கண்கள் மூடியபடி கேட்பார். 80 வயதுக்கு மேல் சுதந்திரா கட்சி ஆரம்பித்து, சவால்விட்ட அவரை டென்ஷனாக யாரும் பார்த்தது இல்லை.

திறந்த புத்தகமாக இருந்த பெரியார், அரசியலில் ஈடுபட ராஜாஜி அழைத்தவுடன் கணக்கற்ற பதவிப்பொறுப்புகளைத் துறந்துவிட்டுதான் காங்கிரஸில் சேர்ந்தார்! பிறகு ஏது டென்ஷன்? மனதில் சரி என்று பட்டதை, மக்கள் நலனுக்காகச் சொன்னவர். ‘ஜாபாலி’ என்கிற பகுத்தறிவுத் துறவி போல, அச்சம் இல்லாதவராக இருந்தவர். குளிக்க அழைத்தால் மட்டும் வரும் டென்ஷன் அவருக்கு. ‘கெட்டித் தயிரை’ ருசித்துச் சாப்பிடுவது பிடிக்கும். பூதக்கண்ணாடி பிடித்துக்கொண்டு செய்திப் பத்திரிகைகளைப் படிப்பார். சுடச்சுட பதில் எழுவதென்பதும் அவருக்கு உற்சாகம் தரும்.

அறிஞர் அண்ணா, லுங்கி அணிந்தவாறு. சட்டை அணியாமல் தரையில் அமர்ந்து வெற்றிலை போடும் காட்சி அற்புதமானது. இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி அதை படம்பிடித்திருக்கிறது. நண்பர்களுடன் ‘சீட்டு’ ஆடுவது அவருக்கு மன ஓய்வு தரும் விஷயமாக இருந்தது. சி.வி. ராஜகோபால் போன்ற பால்ய நண்பர்கள் பேசும் வேடிக்கைளைச் சிரித்து ரசிப்பார். மூக்குப்பொடி போடுவதும் அவருக்கு உற்சாகம் தருவதாக இருந்தது..

இரவெல்லாம் கண்விழித்து ‘திராவிட நாடு’ இதழுக்கு கட்டுரைகள் எழுதிவிட்டு, பொழுது விடியும் நேரத்தில் தூங்கிவிடுவார் என்று அவரது நண்பர்கள் கூறுவார்கள். அந்த ‘உழைக்குப்பின் உறக்கம்’ அவருக்கு பிடித்தமான ஓய்வு.

கலைஞர் பற்றி சொல்லவும் வேண்டுமா? நண்பர்கள் சூழ இருப்பதே அவருக்கு வேலைப் பளு குறைத்து உற்சாகத்தை அளித்தது. காலையில் சீக்கிரமே எழுந்து பத்திரிகைகள் படிப்பதும், வார இதழ் கட்டுரைகளைப் படித்து திறம்பட எழுதியவர்களை ‘டெலிபோனில்’ அழைத்துப் பாராட்டுவதும் அவருக்கு உற்சாகத்தை மீட்டுத்தரும். முரசொலியில் தொண்டர்களுக்கு எழுதும் கடிதம் அவருக்கு ‘டென்ஷன்’ குறைக்கும். தெம்பூட்டும்.

 உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசாத தலைவர்களுக்கு - அதுவே டென்ஷன் தராத மருந்தாக இருந்தது.

அக்டோபர், 2017.